நிகோலஸ் மதுரோவை நினைவிருக்கிறதா? – சம்சீர்
அமெரிக்க ராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, மார்ச் 26, 2026 அன்று இரண்டாவது முறையாக நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
சர்வதேச சட்டத்தை மீறிய தாக்குதல்
ஜனவரி 3, 2026 இரவு சர்வதேச சட்டங்களை ஒட்டுமொத்தமாக மீறி அமெரிக்க சிறப்புப் படையினர் வெனிசுவேலா தலைநகர் காராகஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு நுழைந்தனர். விமான எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பு வலைகளை முறியடித்து, மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்தே கடத்திச் சென்றனர். இது ஒரு இறையாண்மை நாட்டின் மீது நடத்தப்பட்ட ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு.
முதல் விசாரணை — ஜனவரி 5, 2026
கடத்தப்பட்ட வெறும் இரண்டே நாட்களில், மதுரோவும் புளோரஸும் நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அமெரிக்கா சுமத்திய போதைப்பொருள் பயங்கரவாதம், கோக்கெய்ன் கடத்தல் சதி என்ற குற்றச்சாட்டுகள் யாவும் திட்டமிட்டுப் புனையப்பட்ட பொய்கள் என்று மதுரோ நீதிமன்றத்தில் உரக்கப் பதிலளித்தார். “நான் கடத்தப்பட்டவன். இன்னும் நானே வெனிசுவேலாவின் சட்டப்பூர்வ ஜனாதிபதி” என்று அவர் நீதிமன்றத்தில் தெளிவாக அறிவித்தார்.
விசாரணைக்குப் பிறகு, மதுரோவும் புளோரஸும் புரூக்ளினில் உள்ள மெட்ரோபொலிட்டன் சிறை மையத்தில் (MDC) அடைக்கப்பட்டனர். மோசமான சிறை நிலைமைகளுக்குப் பெயர்போன இந்த மையத்தில் தொடர் சிறைவாசம் மதுரோவின் உடல்நிலையை கடுமையாகப் பாதித்தது. இரண்டாவது விசாரணையில் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவர் வெகுவாக மெலிந்திருந்தார்.
சட்டப்போர் யார் கட்டணம் செலுத்துவது?
வழக்கின் முக்கியமான சர்ச்சை ஒன்று சட்டக் கட்டணம் சார்ந்து எழுந்தது. மதுரோவின் வழக்கறிஞர், கட்டணத்தை வெனிசுவேலா அரசுதான் செலுத்த வேண்டும் என்று கோரினார். அமெரிக்க நிதித் துறை (OFAC) ஆரம்பத்தில் அனுமதி அளித்து, வெறும் மூன்றே மணி நேரத்தில் அதை “நிர்வாகப் பிழை” என்று கூறி திரும்பப் பெற்றுக் கொண்டது. வழக்குத் தொடரும் தரப்போ மதுரோ வெனிசுவேலாவின் பொது நிதியைச் சூறையாடியவர்; அந்த பணத்தை அவரது சட்ட பாதுகாப்பிற்குப் பயன்படுத்தக் கூடாது என வாதிட்டது. பணமில்லை என்றால் அரசு வழங்கும் வழக்கறிஞரை ஏற்றுக்கொள்ளட்டும் என்றும் சொன்னது.
இரண்டாவது விசாரணை — மார்ச் 26, 2026
முதல் விசாரணைக்கும் இரண்டாவது விசாரணைக்கும் இடையே நீட்டப்பட்ட கால இடைவெளியே ஒரு திட்டமிட்ட அவமதிப்பு என்று பலரும் விமர்சிக்கின்றனர். இரண்டாவது விசாரணையில், நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீன் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை நிராகரித்தார். சட்டக் கட்டண சர்ச்சையை அடிப்படையாக வைத்து வழக்கையே ரத்து செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தினார். எனினும், மதுரோவின் சட்ட உரிமையை அமெரிக்க அரசு தடுக்கும் முயற்சி குறித்து நீதிபதி கடுமையான சந்தேகம் தெரிவித்தார். “ஒருவரின் பாதுகாப்பிற்கான உரிமை மிக உயர்ந்தது. வெனிசுவேலாவின் நிதியை மதுரோவின் வழக்கறிஞருக்கு வழங்க மறுப்பது அவரது அரசியலமைப்பு உரிமையை மீறும் செயல்” என நீதிபதி எச்சரித்தார். நீதிமன்றத்திற்கு வெளியே மதுரோ ஆதரவாளர்களும் எதிரிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; இரு தரப்பிடையே சிறிய மோதலும் வெடித்தது.
மகனின் குரல்
மதுரோவின் மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா, தொடர்ந்து சர்வதேச அரங்கில் குரல் எழுப்பி வருகிறார். “அமெரிக்கா என் தந்தையைக் கைது செய்யவில்லை. கடத்திச் சென்றுள்ளது. ஒரு நாட்டுத் தலைவரையே இப்படி கடத்துவதை இயல்பாக்கினால், எந்த நாடும், எந்தத் தலைவரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்” என்று அவர் எச்சரித்தார்.
ஜனவரி 5, 2026 அன்று வெனிசுவேலா தேசிய சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்ட அவர், தந்தைக்கு ஒரு செய்தி அனுப்பினார்: “அப்பா, நீங்கள் எங்களை வலிமையானவர்களாக வளர்த்தீர்கள். நீங்கள் திரும்பும் வரை நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்… விரைவில் வெனிசுவேலாவில் ஒன்று கூடுவோம்.”
மார்ச் 25, 2026 அன்று, இரண்டாவது விசாரணைக்கு முந்தைய நாள், மதுரோ குவேரா ஒரு நேர்காணலில் கூறினார்: “அமெரிக்க சட்ட அமைப்பின் மீது நம்பிக்கை வைக்கிறோம் — ஆனால் இந்த விசாரணை தொடக்கத்திலிருந்தே சட்டவிரோதமானது.” தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற முறையில் மதுரோவுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் “உலகளாவிய விதிவிலக்கு” (diplomatic immunity) உரிமை உண்டு என்று அவர் வலியுறுத்தினார்.
வெனிசுவேலாவில் அதிகாரம்
அமெரிக்கா தற்போது துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸை வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளது. ஆனால் பிப்ரவரி 2026 இல் NBC நியூஸுக்கு அளித்த நேர்காணலில், ரோட்ரிகஸ் தெளிவாகக் கூறினார்: “ஆம், நிக்கோலஸ் மதுரோதான் எங்களின் சட்டப்பூர்வ ஜனாதிபதி. அவரும் சிலியா புளோரஸும் குற்றமற்றவர்கள். மதுரோவை மீட்கும் வரை, அரசியலமைப்பின்படி நானே பதவியை வகிக்கிறேன்.”
மறக்கடிக்கப்படும் தலைவன்
நம் கண் முன்னே ஒரு நாட்டு ஜனாதிபதி படிப்படியாக நினைவிலிருந்து அழிக்கப்படுகிறார். சர்வதேச ஊடகங்கள் அமைதி காக்கின்றன; சட்ட போர்வையில் அவரது உரிமைகள் நசுக்கப்படுகின்றன; சிறையில் அவரது உடல்நலம் சீரழிகிறது. இது வெறும் ஒரு கிரிமினல் வழக்கல்ல இது ஒரு சர்வதேச சட்ட மீறல், ஒரு இறையாண்மை நாட்டின் மீதான அமெரிக்க ஆதிக்கவெறியின் வெளிப்பாடு.
– சம்சீர் அகமது