Tamil Marx

சர்வதேசம் தியாகிகள் தென் அமெரிக்கா

சிலி கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்க்கபட்டு 50 ஆண்டுகள்

சிலி கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்க்கபட்டு 50 ஆண்டுகள்
  • PublishedSeptember 11, 2023

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1973 செப்டம்பர் 11 அன்று சிலியில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி ஜனாதிபதி சால்வடார் அலெண்டேவின் அரசாங்கத்தை அமெரிக்கா சதி செய்து கவிழ்த்தது. மக்கள் மீது சர்வாதிகாரம் ஏவப்பட்டு ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், தொழிலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் அலெண்டேவை தீவிரமாக ஆதரித்த நபர்கள் அனைவரும் கண்டறிந்து படுகொலை செய்யப்பட்டனர் .அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட நவதாராளவாதக் கொள்கைகளின் அமலாக்கத்துடன் இந்த வன்முறை பயங்கரவாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இந்த சதி இரண்டு வழிகளில் ஏகாதிபத்தியத்திற்கு பயனளித்தது – ஒன்று, கம்யூனிசம் மற்றும் அனைத்து முற்போக்கான அமைப்புக்களின் எதிர்ப்புகளை அமெரிக்கா அழித்தது மற்றொன்று தாராளமய கொள்கைகளை எந்த எதிர்ப்பும் இன்றி சிலியில் அமல்படுத்தி பொருளாதாரத்தை தடையின்றி சுரண்டியது அதாவது தாராளமய கொள்கைகளை உலகம் முழுவதும் அமல்படுத்த சிலியை சோதனை எலியாக பயன்படுத்தியது.

வர்க்க அணி திரட்டலும் தேர்தல் வெற்றியும்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிலி நாட்டில் நிலக்கரி சுரங்கம்,காப்பர் சுரங்கம் மற்றும் ஜவுளி துறையில் இருந்த தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வலுவான தொழிற் சங்கத்தை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி கட்டமைத்து இருந்தது. இத்தகைய போராட்டங்களால்தான் 1930களில் தொழிலாள வர்க்கம் கணிசமான அரசியல் உரிமைகளைப் பெற்றது. இதனை படிப்பினையாக கொண்டு தொழிலாள வர்க்கம் தங்கள் செல்வாக்கையும் அமைப்பையும் விரிவுபடுத்தத் தொடங்கியது.

தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக, 1950களில் அலெண்டே ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டார். அவர் தோற்றாலும், 1960களில் அலெண்டேவுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து அதிகரித்தது. தொழிலாளர் வர்க்கத்துடன், சமூகத்தின் பல பிரிவுகளும், குறிப்பாக விவசாயிகள் போராட்டங்களில் இணைந்தனர். முந்தைய தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் இணையாத சிலியின் கிராமப்புறப் பகுதிகள் , குடிசைப்பகுதி இயக்கம் மற்றும் பல்கலைக்கழகங்களில் சீர்திருத்தம் கோரி மாணவர் இயக்கமும் இந்த காலகட்டத்தில் போராட்டங்களை நடத்தின. இந்த வர்க்க மற்றும் சமூகப் போராட்டங்கள் அனைத்தும் சிலி சமூகத்தை போராட்ட பாதையில் தள்ளி 1970 இல் பாப்புலர் யூனிட்டி ஃப்ரண்டின் வேட்பாளராக போட்டியிட்ட அலெண்டேவை சிலியின் ஜனாதிபதி ஆக்கியது.

சோசலிச கொள்கைகளின் அமலாக்கம்

அலெண்டே வெற்றி பெற்ற பிறகு நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சோஷலிச கொள்கைகளை அமல்படுத்த துவங்கினார்.அதவாது உலகிற்கு சோசலிசத்தை அறிமுகம் செய்யும் பணிகளை செய்தார் என்றே கூறலாம் . அவர் பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, நில குவியலை உடைத்து விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நில சீர்திருத்தங்களை மேற்கொண்டார் ஒரு வருடத்திற்குள், 5 லட்சம் ஹெக்டேர் நிலம் நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் மக்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பொது நலன் சார்ந்த சிந்தனையை ஊக்குவிக்க பண்பாட்டு தளத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தை அரசாங்கம் உருவாக்கியது. ஏற்கனவே இருந்த பல புத்தகங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக விமர்சனரீதியான சிந்தனையை வளர்க்க புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டன.

இதே போல மற்றொரு புறம் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கான கல்வியை உத்தரவாதப்படுத்தவும், பல்கலைக்கழக அளவிலான கல்வியைப் பெற முடியாத பிரிவுகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் தேசிய ஒருங்கிணைந்த பள்ளி (ENU) தொடங்கப்பட்டது.

பணக்காரர்களிடம் குவிந்துள்ள செல்வத்தை மறுபங்கீடு செய்வோம் என்றும், ஏகாதிபத்திய நாடுகள் சிலியின் இயற்கை வளங்கள் மீது கொண்டுள்ள கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவோம், எனவும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பங்கேற்பை உறுதி செய்து ஜனநாயகத்தை ஆழமாக்குவோம் என்றும் வாக்குறுதிகள் கொடுத்து அலெண்டே ஆட்சிக்கு வந்தார்.

அலெண்டே ஆட்சியில் இருந்த முதல் ஆண்டு, சோசலிச கொள்கைகளைத் தொடங்குவதில் வெற்றிகரமாக இருந்தது குறிப்பாக அவரது ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குறை கூற முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது.இரண்டாவது பெரிய சாதனையாக நாட்டின் வங்கிகளை தேச உடமை ஆக்க துவங்கினார். சிலியின் முக்கிய இயற்கை வளமான காப்பர் (செம்பு ) சுரங்கங்களை தேசி உடமை ஆக்கினார். இந்த முடிவிற்கு நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. ஜவுளி நிறுவனங்கள் முதல் பல துறைகளில் சமூக சொத்துக்களை சிலி அரசாங்கம் உருவாக்கியது.

நகராட்சி அளவில் மக்கள் பங்கேற்பை ஊக்குவித்தது. இதன் மூலம் சமூகத்தின் அடிதட்டடில் உள்ள மக்கள் மற்றும் தொழிலாளி வர்க்கம் தங்கள் வாழ்க்கை எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி விவாதிக்க இடமளித்தது அரச.. இதேபோல், தேசியமயமாக்கப்பட்ட தொழில்களில் பஞ்சாலைகள் உருவாக்கப்பட்டன. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆயிரம் நாட்களிலேயே, மக்கள் அரசின் முடிவுகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டனர்.

அலெண்டேவின் ஆட்சியின் கீழ், தேசிய வருமானத்தில் 50 சதவீத ஏழை மக்களின் பங்கு 16.1 சதவீதத்தில் இருந்து 17.6 சதவீதமாகவும், நடுத்தர வகுப்பினர் பங்கு 53.9 சதவீதத்தில் இருந்து 57.7 சதவீதமாகவும் அதிகரித்தது. மறுபுறம், 5 சதவீத பணக்காரர்களின் தேசிய வருமானப் பங்கு 30 சதவீதத்திலிருந்து 24.7 சதவீதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ஏகாதிபத்திய நாடுகளின் கோவம்

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இயற்கையாகவே, ஆளும் வர்க்கங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, இதை அரசின் மீது அவர்கள் செலுத்தும் மேலாதிக்கக் கட்டுப்பாட்டின் மீதான தாக்குதலாகக் கருதினர். 1972 ஆம் ஆண்டு தொடங்கி, பொருளாதாரத்தை முடக்கியும், அத்தியாவசியப் பொருட்களின் செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்கியும், பொருளாதாரத்தை உள்ளிருந்து சிதைக்கும் இயக்கத்தைத் ஆளும் வர்க்கம் தொடங்கியது.

இது முதலாளிகளின் போராட்டம் (‘முதலாளியின் கதவடைப்பு)’ என்று அழைக்கப்பட்டது. இது சிலியின் பொருளாதாரத்தை ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவருவதற்கான அவர்களின் திட்டமாகும். இதேவேளையில், அமெரிக்கா உலக வங்கியில் செல்வாக்கு செலுத்தியது மற்றும் சிலி நாட்டிற்கான அனைத்து கடன்களையும் உலக வங்கியை தரவிடாமல் கட்டுப்படுத்தியது.அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக மொத்தம் 30 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கான திட்டங்கள் சிலியில் முடக்கப்பட்டதாக 1973 ஆம் ஆண்டு தி கார்டியன் இதழ் தெரிவித்திருந்தது.இந்த முறையில் அமெரிக்கா ஆரம்பத்திலிருந்தே அலெண்டேவின் ஆட்சியை கழுத்தை நெரிக்க முயன்றது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கல்வியின் மூலம் அணிதிரட்டப்பட்ட மக்கள்

இவை அனைத்தையும் மீறி, அலெண்டேவுக்கு மக்கள் ஆதரவு அதிகமாகவே இருந்தது. அதற்கு சிறந்த உதாரணம்.

ஒரு பல்பொருள் அங்காடி முன்னால் அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிசை நிற்கிறது. அந்த வரிசையில் ஒரு தொழிலாளி ஒரு பெரிய சுவரொட்டியை வைத்திருந்தார்: “இந்த அரசாங்கத்தின் கீழ், நான் ஒரு வரிசையில் காத்திருக்க வேண்டும், ஆனால் நான் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கிறேன், ஏனென்றால் அது என்னுடையது”. ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஏகாதிபத்திய நாசவேலைகள் குறித்து மக்களுக்கு கல்வி மற்றும் விமர்சன ரீதியிலான சிந்தனை கல்வி கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் மடடுமே இது சாத்தியமானது.

1973 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில், அலெண்டேவின் கட்சி 43. 4 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது, இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் பெற்ற 36 சதவீதத்தை விட மிக அதிகம். மற்றும் பெரும் வணிக நிறுவனங்கள் பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்ட போது அவற்றை திறக்க செய்தது மற்றும் உணவுகளை காசுக்கு விற்பனை செய்த போது பொது வைப்பு மையங்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக கிடைக்க செய்தது ஆகியவற்றின் காரணமாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் அலாண்டேவிற்கு பின்னால் அணி திரண்டனர்.

 

1972 அக்டோபரில் முதலாளிகள் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் வகையில் தூண்டி விட்ட ஒரு லாரி வேலைநிறுத்த முயற்சிகளை தொழிலாளர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இவ்வாறு சிலியில் தொடர்ச்சியாக பல வடிவங்களில் வர்க்கப் போராட்டம் நடத்தப்பட்டது, ஆளும் வர்க்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் ஆகிய இரண்டும் அந்தந்தப் பக்கங்களில் அணிதிரண்டன. அக் காலகட்டத்தில், தலைநகர் சாண்டியாகோவில் உள்ள சுவர்களில் ஆளும் வர்க்க துணை ராணுவப் படைகளால் எழுதப்பட்ட முழக்கம் மூலம் கம்யூனிஸ்ட்களை அழிக்க முதலாளித்துவம் எவ்வளவு வெறியோடு இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்….

இதுதான் அந்த வரிகள் :-

‘ஜகார்த்தா, யா வினே’, அதாவது ‘ஜகார்த்தா வருகிறது’. 1967ல் இந்தோனேசியாவில் ஆளும் வர்க்கங்கள் கம்யூனிஸ்டுகளை கொடூரமாக கொத்து கொத்தாக கொன்று குவித்ததை சோசலிஸ்டுகளுக்கு நினைவூட்ட இந்த வரிகள் எழுதப்பட்டன.

ஆட்சி கவிழ்ப்பும் படுகொலைகளும்

செப்டம்பர் 11 அன்று, அலெண்டேவும் அவரது நிர்வாகமும் தங்கள் மக்கள் சார்பு கொள்கைகளை செயல்படுத்த தங்கள் கரங்களை வலுப்படுத்த ஒரு அரசியலமைப்பு வாக்கெடுப்பை அறிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கையைத் தடுக்கும் வகையில், ஆளும் வர்க்கங்கள், அமெரிக்க ஆதரவுடன் இராணுவத்தில் உள்ள தங்கள் ஆதரவாளர்கள் மூலமாம் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து பயங்கரமான செயல்களை கட்டவிழ்த்து விட்டார்கள். செய்தித்தாள்கள் இதை ‘பயங்கரவாதத்தின் இரவு’ என்று குறிப்பிட்டதன் மூலம் அன்று நடந்த கொடூரத்தை புரிந்து கொள்ள முடியும். மின் சாரம் வெட்டப்பட்டதால் தலைநகர் சாண்டியாகோவிற்கு வெளியே இருந்த மக்கள் (தொழிலாளர் வர்க்க ) சுமார் 2,00,000 பேர் எதுவும் அறிந்து கொள்ள முடியாமல் போயினர். காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே மிக மோசமான அளவில் சண்டைகள் நடந்தன.

கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டு நாட்டின் தேசிய மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டனர், அங்கு அவர்கள் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்டனர். புகழ்பெற்ற பாடலாசிரியர் விக்டர் ஜாரா சிலியின் தேசிய மைதானத்தில் சிறை வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். அமெரிக்க நாளிதழான நியூஸ் வீக், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சாண்டியாகோவில் உள்ள அதன் நிருபரிடம் இருந்து slaughter house in Santiago (சாண்டியாகோவில் உள்ள படுகொலை கூடம்) என்ற தலைப்பில், ஒரு அறிக்கையை வெளியிட்டது, அவர் தனிப்பட்ட முறையில் பிணவறைகளுக்குச் சென்று ஆயிரக்கணக்கான உடல்கள் ஒன்றோடொன்று குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். “அதன் ஊழியர் ஒருவரின் மகளிடமிருந்து சவக்கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த உடல் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை என்னால் பெற முடிந்தது: ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து பதினான்காவது நாளில், சவக்கிடங்கில் 2,796 சடலங்கள் கிடந்தன என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகும் இந்த கொடூரமான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. பினோசேவின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகுதான் அதிகாரப்பூர்வ உண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. 3,200 சிலி குடிமக்கள் சர்வாதிகார ஆட்சியில் தூக்கிலிடப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர், அரசியல் கைதிகளாக தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதையை அனுபவித்தவர்கள் 38,000 பேர் மற்றொரு புறம் 1,00,000 மக்கள் குறுகிய கால தடுப்புக் காவலையும் கம்யூனிஸ்ட்களா என்ற தொடர் சோதனை கொடுமைகளையும் அனுபவித்தனர்.


வன்முறை வெறியாட்டம் ஆடிய ஜெனரல் அகஸ்டோ பினோஷே, “ஒரு தேசத்தை குழப்பத்தில் இருந்து வெளியே எடுக்க ஆயுதப்படைகள் தேசபக்தி உத்வேகத்துடன் செயல்பட்டன, அலெண்டேவின் மார்க்சிஸ்ட் அரசாங்கம் ஏற்படுத்திய பெரும் குழப்பம்” என்று அதை நியாயப்படுத்த பொய்களை வெற்றியுடன் கூறினான்.

சதியில் அமெரிக்க‌ CIA வின் பங்கு

இந்த சதி மற்றும் படுகொலையில் CIA இன் பங்கு, சில ரகசிய கோப்புகள் இப்போது வெளிவந்துள்ளது. ஹென்றி கிஸ்ஸிங்கர் சிலியின் சோசலிசத் தலைவரான சால்வடார் அலெண்டே மீதான கொள்கையை 1970 ஆம் ஆண்டிலேயே கையாளத் தொடங்கினார். ”. “சிலியின் ஜனாதிபதியாக அலெண்டே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இந்த அரைக்கோளத்தில் இதுவரை எதிர்கொண்ட மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாகும்.” என்றார்

1973 செப்டம்பரில் சிலியில் நடந்த இராணுவ சதி, லத்தீன் அமெரிக்காவின் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு இடையே இரகசிய கூட்டுறவை உள்ளடக்கிய ஆபரேஷன் காண்டரின் ஒரு பகுதியாகும், மேலும் சிலிக்கு எதிரான அழுத்தத்தை ஒருங்கிணைப்பதையும் உள்ளடக்கியது. காண்டோர் குழுவில் சிலி, பராகுவே, பிரேசில், உருகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் ரகசிய போலீஸ் படைகளின் பிரதிநிதிகள் இருந்தனர். நான்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் செப்டம்பர் 11 அன்று சிலியின் கடற்கரையில் வந்து சதித் தலைவர்களுடன் நிரந்தரத் தொடர்பைப் பேணியது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னதாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களால் பயிற்சி பெற்ற வலதுசாரி பயங்கரவாதிகள் 250க்கும் மேற்பட்ட நாசவேலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர், அதாவது சதி நடப்பதற்கு முன் மின்சார கம்பிகளை வெட்டியும் மின்மாற்றிகளை வெடிவைத்து தகர்க்கவும் செய்தனர், அரசுக்கு ஆதரவான பொதுமக்களை படுகொலை செய்தனர். அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் காக்ராஃப்ட்டின் கூற்றுப்படி, “சல்வடார் அலெண்டே மற்றும் சிலி மக்களுக்கு எதிரான வேலைநிறுத்தத்திலும் கொலையிலும் CIA பெரும் பங்கு வகித்தது”.

“அலெண்டே ஒரு சதி மூலம் தூக்கியெறியப்பட வேண்டும் என்பது உறுதியான மற்றும் தொடர்ச்சியான கொள்கையாகும். USG (அமெரிக்க அரசாங்கம்) மற்றும் அமெரிக்க கைகள் நன்கு மறைக்கப்படுவதற்கு, இந்த நடவடிக்கைகள் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுத்தப்படுவது கட்டாயமாகும்.என 1970 அக்டோபர் மாத CIA ஆவணத்தில் கூறுகிறது.

அலெண்டேவின் கடைசி வார்த்தைகள்

சதியின் போது தப்பியோடவோ, ராஜினாமா செய்யவோ முடியாது என அலெண்டே தைரியமாக முடிவு செய்தார். அவர் கடைசி வரை தனது ஜனாதிபதி மாளிகையில் இருக்க முடிவு செய்தார். ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அதுவே அவரது கடைசி வார்த்தையாகவும் இருந்தது. சிலியின் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு

நான் உங்களிடம் உரையாற்றும் கடைசி இந்த தருணத்தில், நீங்கள் இந்த பாடத்தை கற்றுக்கொள்ள கொள்ள விரும்புகிறேன் என்றார்.அன்னிய மூலதனம், ஏகாதிபத்தியம், பிற்போக்குத்தனத்துடன் சேர்ந்து, காலநிலை மாற்றத்தை உருவாக்கியது. இராணுவப் படைகள் தங்கள் பாரம்பரியத்தை உடைத்துவிட்டன, ஜெனரல் ஷ்னீடராலும் கமாண்டர் ஆராயாவால் அந்த பாரம்பரியம் உடைக்கப்பட்டது.அவர்கள் இன்று தங்கள் வீடுகளில் வெளிநாடுகளின் (அமெரிக்கா ) உதவியுடன், தங்கள் இலாபங்களையும் சலுகைகளையும் தொடர்ந்து பாதுகாக்க அதிகாரத்தை மீண்டும் பெறுவார்கள் என  நம்புகிறார்கள். நிச்சயமாக இந்த வானொலி நிலையம் மூடப்பட்டு விடும், என் குரல் இனி  உங்களை வந்தடையாது அது முக்கியமில்லை. நீங்கள் அதை தொடர்ந்து கேட்பீர்கள். நான் எப்போதும் உங்கள் அருகில் இருப்பேன். குறைந்த பட்சம் தொழிலாளர்களுக்கு விசுவாசமாக இருந்த கண்ணியம் மிக்க ஒரு மனிதராகவே என் நினைவு இருக்கும்.

“எனது நாட்டின் தொழிலாளர்களே, சிலி மற்றும் அதன் தலைவிதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தேசத்துரோகம் மேலோங்கும் போது மக்கள் இந்த இருண்ட மற்றும் கசப்பான நிகழ்வுகளை வெல்வார்கள்,  மனிதர்கள் சுதந்திரமாக நடக்கும் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க  சிறந்த வழிகள் விரைவில் உருவாக்க முடியும் என்பதை அறிந்து முன்னேறுங்கள்.

சிலி வாழ்க! வாழ்க மக்கள்! தொழிலாளர்கள் வாழ்க!

இவை எனது கடைசி வார்த்தைகள், எனது தியாகம் வீண் போகாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்…”

உண்மையில் அவரது தியாகம் வீண் போகவில்லை, சிலியில் கம்யூனிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள் பலம் பெற்று இப்போது மீண்டும் பதவிக்கு வந்து, அலெண்டேவின் கனவுகளை நனவாக்க முயற்சிக்கின்றனர். நிச்சயமாக, சர்வாதிகார காலத்தில் தாங்கள் பெற்ற பலன்களை  கைவிட்டு விடாமல் இருக்க தங்களால் இயன்றவரை முயற்சிக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக சிலி நாட்டு கம்யூனிஸ்ட்கள் மீண்டும் போராடுகிறார்கள். சிலியில் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

நன்றி

தோழர் அருண்

பீப்புல்ஸ் டெமாக்ரசி வார இதழ்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *