Tamil Marx

இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக வெல்ல காரணம் என்ன? – சம்சீர் அகமது

மேற்கு வங்கத்தில் பாஜக வெல்ல காரணம் என்ன? – சம்சீர் அகமது
  • PublishedMay 21, 2026

இந்திய அரசியல் வரலாற்றில் மேற்கு வங்காளம் ஒரு தனித்துவமான மாநிலமாக பார்க்கப்படுகிறது. விடுதலைப் போராட்டம், சமூக மறுமலர்ச்சி, தொழிலாளர் இயக்கங்கள், கலை-இலக்கிய வளர்ச்சி, மதச்சார்பற்ற சிந்தனை மற்றும் இடதுசாரி அரசியல் ஆகியவை மிக ஆழமாக வேரூன்றிய மண்ணாக வங்காளம் இருந்தது.

ஒருபுறம், இந்த மண் ரவீந்தரநாத் தாகூர் போன்ற மனிதநேய சிந்தனையாளர்களையும், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தீவிர தேசியவாத தலைவர்களையும் உருவாக்கியது. மற்றொருபுறம், இதே வங்காளம் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் “Divide and Rule” அரசியலின் முக்கிய ஆய்வுகூடமாகவும் மாறியது.

இந்த இரண்டு அரசியல் மரபுகளுக்கிடையேயான முரண்பாடே பின்னர் மேற்கு வங்காளத்தின் அரசியல் திசையை தீர்மானித்தது. ஒரு புறம் சமூக ஒற்றுமை, வர்க்க அரசியல், மதச்சார்பற்ற சிந்தனை; மற்றொரு புறம் மத அடையாள அரசியல் மற்றும் சமூகத்தை மக்களை பிரித்தாள்வது

வங்காள மறுமலர்ச்சியும் முற்போக்கு அரசியலின் அடித்தளமும்

19 ஆம் நூற்றாண்டில் “Bengal Renaissance” என அழைக்கப்படும் சமூக–கலாச்சார மறுமலர்ச்சி வங்காளத்தில் உருவானது. கல்வி, அறிவியல் சிந்தனை, பெண் கல்வி, சாதி–மத மூடநம்பிக்கைகள் மீதான விமர்சனம் என பல முற்போக்கு சிந்தனைகள் வளர்ந்தன.

மனிதநேயம், கலாச்சார ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை ரவீந்தரநாத் தாகூர் வலியுறுத்தினார். அவர் தேசியவாதத்தை மத வெறியுடன் இணைக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.

சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான தேசிய அரசியல், மத அடையாளத்தை விட இந்திய ஒற்றுமையை முன்னிறுத்தியது. இந்திய தேசிய படையில் (INA) இந்து, முஸ்லிம், சிக்ஹ், கிறிஸ்துவர் என பல சமூகங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து போராடினர்.இந்த முற்போக்கு அரசியல் மரபு பின்னர் வங்காளத்தில் தொழிலாளர் இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைந்தது.

“Divide and Rule” அரசியலின் தொடக்கம்

1905ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்டு கர்சன், வங்காளத்தை மத அடிப்படையில் பிரித்தார். மேற்கு பகுதியில் இந்துக்கள் அதிகமாகவும், கிழக்கு பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாகவும் இருந்த சமூக அமைப்பை பயன்படுத்தி, “பிரித்து ஆட்சி செய்” என்ற சூழ்ச்சி அரசியல் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது.

இந்த பிரிவினை வெறும் நிர்வாக ரீதியான மாற்றம் அல்ல. இந்தியாவில் மத அடையாள அரசியலை நிறுவிய முக்கியமான அரசியல் திட்டமாகும். இதன் பின்னர் தான் தனித்தனி வாக்காளர் தொகுதிகள், மத அடிப்படையிலான பிரதிநிதித்துவம், சமுதாய அடையாள அரசியல் போன்ற கொள்கைகள் மூலம் இந்து–முஸ்லிம் பிளவுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கல்கத்தா கலவரம்

பாகிஸ்தானை தனி நாடக அறிவிக்க வேண்டும் என 1946 “Direct Action Day” போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்னணியில் கல்கத்தாவில் பெரிய மத கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான இந்து முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1947 பிரிவினைக்கு பிறகு கோடிக்கணக்கான அகதிகள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு வந்தனர். வேலைவாய்ப்பு, நிலம், உணவு, குடியேற்றம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்தன. சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்கள் உருவானது. இந்த சூழலில் மதவாத அரசியல் வலுப்பெறும் அபாயம் இருந்தபோதிலும், பின்னர் வங்காளம் வேறு அரசியல் பாதையை தேர்வு செய்தது.

இடதுசாரிகளின் எழுச்சி

1960–70 களில் தொழிலாளர் போராட்டங்கள், விவசாயிகள் இயக்கங்கள் மற்றும் மாணவர் எழுச்சிகள் வங்காளத்தில் வலுப்பெற்றன. விடுதலை போராட்ட அனுபவத்தில் இருந்து மதவாத அரசியலை விலக்கி வர்க்க அரசியல் மூலம் தாகூர், சுபாஷ் பிராம்பரியத்தை இடதுசாரிகள் வலுவாக முன்னெடுத்தனர் இதன் தொடர்ச்சியாக 1977ஆம் ஆண்டு Communist Party of India (Marxist) தலைமையிலான இடதுமுன்னணி அரசு ஆட்சிக்கு வந்தது.

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்டகால ஜனநாயக முறையில் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட இடதுசாரி ஆட்சியாக இந்த அரசு திகழ்ந்தது. 1977 முதல் 2011 வரை 34 ஆண்டுகள் இந்த இடதுமுன்னணி ஆட்சி நீடித்தது.

இடதுசாரி அரசின் முக்கிய நடவடிக்கைகள்

i) Operation Barga

“Operation Barga” என்பது 1978ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் Communist Party of India (Marxist) தலைமையிலான இடதுசாரி அரசு தொடங்கிய முக்கிய நிலச் சீர்திருத்த திட்டமாகும். இந்த திட்டம், மற்றவர்களின் நிலத்தில் வேலை செய்து வந்த ஏழை குத்தகைதாரர்களுக்கு (Sharecroppers) சட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு முன்பு, நிலம் இல்லாத ஏழை விவசாயிகள் பெரிய நிலக்கிழார்களின் நிலத்தில் விவசாயம் செய்தாலும், அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நில உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களை வெளியேற்ற முடியும் என்ற நிலையே இருந்தது. மேலும், விவசாயத்தில் கிடைத்த விளைச்சலின் பெரும்பகுதியும் நிலக்கிழார்களுக்கே சென்றது.

இந்த “Operation Barga” திட்டத்தின் மூலம், குத்தகைதாரர்கள் அரசின் பதிவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டனர்.

இதனால் அவர்களை எளிதில் வெளியேற்ற முடியாத நிலை உருவானது. விளைச்சலில் அதிக பங்கு விவசாயிகளுக்கே கிடைக்க சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தியதோடு, விவசாய உற்பத்தியையும் அதிகரிக்க உதவியது.

நிலச் சீர்திருத்தம்

மேற்கு வங்காளத்தில் இடதுசாரி அரசு கொண்டு வந்த மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று நிலச் சீர்திருத்தம். பெரிய நிலக்காரர்களிடம் அதிகமாக இருந்த நிலங்களை கட்டுப்படுத்தி, நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு வழங்கும் முயற்சியே இந்த திட்டத்தின் நோக்கம்.

1977க்கு பிறகு இடதுமுன்னணி அரசு, நில உச்சவரம்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்தியது. சட்ட வரம்பை மீறி வைத்திருந்த நிலங்கள் அரசால் கைப்பற்றப்பட்டு, நிலம் இல்லாத விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் பல லட்சம் ஏழை குடும்பங்கள் முதல் முறையாக நில உரிமை பெற்றனர். இதனால் கிராமப்புறங்களில் பெரிய நிலக்காரர்களின் ஆதிக்கம் குறைந்தது. ஏழை விவசாயிகள் பொருளாதார ரீதியாக முன்னேற ஆரம்பித்தனர்.

நிலச் சீர்திருத்தம் மற்றும் “Operation Barga” ஆகியவை சேர்ந்து, மேற்கு வங்காளத்தில் வர்க்க அரசியலை வலுப்படுத்தியது. “மத அடையாளம்” என்பதற்குப் பதிலாக “உழைக்கும் மக்களின் உரிமை” என்ற அரசியல் எண்ணத்தை வளர்க்க இந்த திட்டங்கள் முக்கிய பங்காற்றின.

மேலும் பஞ்சாயத்து ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் கிராமப்புற அரசியல் பங்கேற்பு, கல்வி மற்றும் கலாச்சார தளங்களில் மதச்சார்பற்ற அணுகுமுறை ஆகியவற்றுடன் “இந்துவும் முஸ்லிமும் அல்ல; உழைக்கும் மக்கள்” என்ற அரசியல் பார்வையை இடதுசாரிகள் வலுப்படுத்தினர். வர்க்க அரசியல், சமூக நீதி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் அரசியலின் மையமாக மாற்றப்பட்டதால் மத அடையாள அரசியல் பலவீனப்படுத்தப்பட்டது.

மத கலவரங்களை கட்டுப்படுத்திய இடதுசாரி அரசியல்

1977–2011 காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் பெரிய அளவிலான மத கலவரங்கள் நடந்தன. ஆனால் மேற்கு வங்காளத்தில் பெரிய அளவிலான நீண்டகால மத வன்முறைகள் நடைபெறவில்லை.

1984 சீக்கியர் எதிர்ப்பு கலவரங்கள் நடந்தன , 1992 பாப்ரி மசூதி இடிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட பதற்றம் கலவரங்கள், 2002 இல் நடந்த குஜராத் கலவரம் இத்தகைய சூழல்களிலும் மேற்கு வங்காளத்தில் சமூக ஒற்றுமை பெரிதும் சிதையாமல் இருந்தது. தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கலாச்சாரம் மதப்பிளவு வாதத்தை கட்டுப்படுத்தும் பணியை செய்தன.

2011-க்கு பிறகு

2011ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி தலைமையிலான All India Trinamool Congress ஆட்சி உருவானது. ஆரம்பத்தில் “Ma, Mati, Manush” என்ற கோஷத்துடன் வளந்தார். இந்த ஆட்சி, பின்னர் அடையாள அரசியல் மற்றும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் அதிக கவனம் செலுத்துவதாக விமர்சிக்கப்பட்டது.

வர்க்க அரசியல் பலவீனமானபோது

ராம நவமி அரசியல் ஊர்வலம், சமூக ஊடகத்தில் மதம் உள்ளிட்ட அடையாள அடைப்படையில் பிளவு, எல்லை மற்றும் குடியேற்ற விவாதங்கள், மத அடையாள அரசியல் அதிக இடம் பிடிக்கத் தொடங்கின.

இந்த மாற்றம் குறித்து பல அரசியல் விமர்சகர்கள், “வர்க்க அரசியலை பலவீனப்படுத்திய இடத்தில், காலனித்துவ Divide and Rule அரசியலின் புதிய வடிவம் மீண்டும் வளரத் தொடங்கியது” என்று குறிப்பிடுகின்றனர்.

பாஜக வளர்ச்சி

2011க்கு முன் அதாவது இடது சாரிங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் பாஜக மேற்கு வங்காளத்தில் மிகச் சிறிய அரசியல் சக்தியாகவே இருந்தது.

2009 மக்களவைத் தேர்தலில் 6% வாக்குகள் பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலில் 17% வாக்குகளும்

2019 மக்களவைத் தேர்தலில் 40% வாக்குகளும், 18 தொகுதிகள் வெற்றியும் பெற்று படிப்படியாக பாஜக வளர்ந்தது. மம்தா முன்னெடுத்த soft இந்துத்துவா அரசியல் பாஜக வளர்வதற்கு நல்ல அடித்தளம் போட்டுக்கொடுத்தது.

குறிப்பாக CAA மற்றும் NRC அரசியல், ராம நவமி ஊர்வலங்கள், வங்கதேசத்தினர் எல்லை கடந்து வந்து விட்டனர் என்பது போன்ற ஆதாரமற்ற குடியேற்ற விவாதங்கள், மத அடையாள அரசியல், மம்தா அரசின் மீது உருவான அதிருப்தி ஆகிய காரணிகளும் பாஜக வளர பெரிதும் உதவின.

BJP, சமூக–பொருளாதார பிரச்சினைகளை மத அடையாள அரசியலுடன் இணைத்து தனது ஆதரவை விரிவுபடுத்தியது.

இந்திய அரசியலுக்கு முக்கிய பாடம்

தாகூரின் மனிதநேயம், சுபாஷ் சந்திரபோஸின் மதச்சார்பற்ற தேசிய அரசியல், பின்னர் இடதுசாரிகளின் வர்க்க ஒற்றுமை அரசியல் இவை அனைத்தும் சேர்ந்து பல தசாப்தங்கள் மேற்கு வங்காளத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாத்தன.

ஆனால் அந்த முற்போக்கு அரசியல் பலவீனமானபோது, அடையாள அரசியல் மற்றும் மதவெறி அரசியல் வேகமாக வளரத் தொடங்கியது.

சமூக நீதி, பொருளாதார சமத்துவம் மற்றும் வர்க்க ஒற்றுமையை மையமாகக் கொண்ட அரசியல் வலுவாக இருக்கும் போது மதவெறி அரசியல் பலவீனமாகும். ஆனால் அந்த அரசியல் பலவீனமானால், “Divide and Rule” அரசியலின் புதிய வடிவங்கள் மீண்டும் சமூகத்தில் வேரூன்றத் தொடங்கும்.

கட்டுரையாளர் :- சம்சீர் அகமது, மாநில செயலாளர் SFI

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *