இலங்கை வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜேவிபி கட்சியும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியும் (NPP) நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இந்த இடதுசாரி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்றது மட்டுமல்லாமல் இலங்கை சிறுபான்மையினரான தமிழ் மக்களிடம் ஜனாதிபதி தேர்தலை விட குறிப்பிடத்தக்கவகையில் அதிகமான ஆதரவையும் பெற்றுள்ளது. .
இந்த தேர்தல் வெற்றியை தொடர்ந்து தி இந்து ஆங்கில நாளிதலுக்கு பேட்டியளித்துள்ளார் ஜேவிபி கட்சியின் பொது செயலாளர் டில்வின் சில்வா.
பேட்டியில் பேசிய அவர், நீங்கள் நாட்டை வழிநடத்தும் அதிகாரத்திற்கு வர நினைத்தால் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்ததை போலவே மிகப்பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு ( mass support base ) வேண்டும். இந்த தேர்தல் வெற்றி மிகப்பெரிய சாதனை. எங்களால் யாழ்பாணம்,மலையக தமிழகர்கள் உட்பட பல பகுதிகளில் ஆழமாக வேரூன்றி இருந்த பாரம்பரியமான கட்சிகளையும், அரசியலில் ஆதிக்கம் செலுத்திய குடும்பங்களையும் எங்களால் தோற்கடிக்க முடிந்துள்ளளது. இந்த வெற்றி ஒன்றுபட்ட இலங்கையை கட்டமைக்க எங்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது. முன்பு எங்கள் மீது சந்தேகம் கொண்டவர்கள் கூட இலங்கையின் அரசியல் கலாச்சாரம்,பொருளாதாரம் ஆகியவற்றை மீண்டும் கட்டி எழுப்பும் அர்ப்பணிப்பு மிகுந்த பணியில் ஜேவிபி ஈடுபட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள துவங்கியுள்ளனர் என்றார்.
அதிகரிக்கும் அதரவு
ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாங்கள் அதிக மக்களின் நம்பிக்கையை பெற துவங்கினோம். அப்போது ஜேவிபி மூன்றில் 2 பங்கு வெற்றி என்ற கோசத்தை முன்வைக்கவில்லை. இது இலங்கையின் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில்அடைவதற்கு மிகவும் கடினமான ஒன்று. தேர்தல் நாளன்று கூட திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் ஜேவிபிக்கு வலுவான பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று கருதுவதாக தான் தெரிவித்தார். மூன்றில் 2 பங்கு வெற்றியை அவர் கூட எதிர் பார்க்கவில்லை.
நங்கள் மக்களிடம் கேட்காத வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. மக்கள் எங்கள் நம்பினர். அதனால் இந்த அதிகாரத்தை அவர்கள் கொடுத்துள்ளனர் . இந்த அதிகாரத்தை கவனமாக பயன்படுத்துவதே எங்கள் பொறுப்பு மற்றும் அவர்களது நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும் என சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணியானது பல சிறு கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது. இக்கூட்டணி அரசியல் கட்சிகள், இளைஞர்கள் & பெண்கள் கூட்டமைப்பு, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 21 அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டது. இந்த இயக்கத்திற்கு ஜேவிபி தலைமை வகித்தது.
ஜேவிபி கட்சியில் பொதுச்செயலாளராக உள்ள டில்வின் சில்வா தேர்தலில் போட்டியிடாமல் கட்சியை பலப்படுத்தி வழி நடத்துகிற, அரசாங்கத்தில் இருந்து கட்சியை தனி அமைப்பாக வழி நடத்தும் பணியையே மேற்கொண்டார்.
அரசியல் கலாச்சாரமே அழிவின் அடைப்படை
இலங்கையின் அரசியல் பிரச்சனை குறித்து பேசிய போது இலங்கையின் முக்கிய அரசியல் பிரச்சனை என்பது அந்நாட்டின் அரசியல் கலாச்சாரமே. நாம் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டதற்கு காரணமும் அந்த அரசியல் கலாச்சாரம் தான் எனவும் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் அரசின் வளங்களை தங்கள் குடும்ப முன்னேற்றதிற்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள கசப்பான சண்டைகளை செய்தன எனவும் குற்றம் சாட்டினார்.இந்த அரசியல் கலாச்சாரத்தை தான் இத்தனை ஆண்டு காலம் தாங்கள் அனுபவித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசியல் கலாச்சாரத்தை முறியடிக்க வேண்டுமானால் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு இடைவெளி இருக்க வேண்டியது முக்கியம் என்று தாங்கள் உணர்ந்ததாக தெரிவித்தார். அதேபோல தேசிய மக்கள் சக்தி, ஜேவிபி கட்சியின் அரசியல் தலைமைக்குழு, அரசாங்கம் ஆகியவற்றை குறித்து பேசும் போது, வெவ்வேறு அரசியல் குழுக்கள் வெவ்வேறு முடிவுகளை எடுப்பது போல் அல்லாமல் திட்டம் வகுப்பதன் அடிப்படையில் நாங்கள் அனைவரும் இணைந்து ஒரே குழுவாக செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலமும், நிகழ் காலமும்
ஜேவிபி கட்சி கடந்த 50 ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியாக தோன்றிய ஜேவிபி 1971, 1987-89 ஆண்டுகளில் இரண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சிகளை நடத்தியது. தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வை அக்கட்சி எதிர்த்தது. அப்போது அக்கட்சியின் கருத்தியல் மார்க்சியம்,சொத்து மறுபகிர்வு என்பதிலிருந்து சிங்கள பேரினவாதத்திற்கு மாறியது என அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டினர்.
எவ்வாறாயினும் கட்சி தனது கோட்பாட்டை நடைமுறை சூழலுடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சில்வா முனைப்பு காட்டிதாகவும் பல விவாதங்களை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
விமர்சனத்திற்கு பதில்
ஜே.வி.பி தற்போது எதிர்கொண்டு வருகிற கடந்த கால குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், இத்தகைய தவறான கருத்துக்கள் ஜேவிபியை தோற்கடித்து வென்றவர்களால் எழுதப்பட்டது எனவும்,நங்கள் கடந்த காலத்தில் சென்ற பாதை ( ஆயுதம் தாங்கிய போராட்டம் ) விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அது எங்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்டது.
இது ஜேவிபி யின் விருப்பப்பட்ட போராட்ட வடிவம் அல்ல. அரசாங்கம் எங்கள் மீது ஆயுதம் பிரயோகித்த போது எங்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. அதன் காரணமாகே நாங்களும் ஆயுதத்தை கையில் எந்த வேண்டிய கட்டாயம் உருவானது என தெரிவித்துள்ளார்.
சில்வாவின் பார்வையில் இருந்து கூறவேண்டும் என்றால், ஆயுதம் ஏந்தியவர்களை பயங்கரவாதிகளாகக் காட்டாமல் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையின் வரலாற்றையும் மீண்டும் மாற்றி எழுதும் இடத்தைத் கொடுத்துள்ளது என குறிப்பிடலாம் என தி இந்து ஆங்கில நாளிதழின் இலங்கை செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வரலாறை வார்த்தைகளால் அல்ல, எங்கள் செயலால் சொல்ல விரும்புகிறேன் தற்போதைய அரசியல் சூழல் அதைச் செய்வதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளது என சில்வா குறிப்பிட்டுள்ளார்.
*மீரா ஸ்ரீனிவாசன், கொழும்பு பத்திரிக்கையாளர், The hindu.