IT – தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நவீன ஒடுக்குமுறை
Freshworks என்ற முன்னணி நிறுவனம், 650க்கும் மேற்பட்ட ஊழியர்களை சட்டவிரோதமாக நிர்பந்தித்து ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கி வெளியேற்றியுள்ளது. நவம்பர் 7, அன்று அதன் (CEO – டென்னிஸ் வூட்சைட் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
அராஜகமாக பறிக்கப்பட்ட வேலை
Global Restructuring என்ற பெயரில் சட்டபூர்வமாக வழங்க வேண்டிய முறையான Severance pay/Retrenchment Comp. ஏதுமில்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல் ஒரே நாளில் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டுள்ளார்கள்.
இது நஷ்டத்தினால் ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் அல்ல; வெறும் லாப வெறிக்காக தொழிலாளர்களுக்கு நடப்பட்டிருக்கும் அநீதியாகும்.
இந்தியாவின் தொழிலாளர் உரிமைகள், இந்திய நாட்டின் சட்டம் என எதையும் பொருட்படுத்தாமல் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திமிரில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு வெறும் ‘பணி நீக்கம்’ மட்டும் அல்ல; அது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.
இந்த அதிக எண்ணிக்கையிலான ஆட்குறைப்புக்கு Freshwork நிறுவனம் எந்த அறிவிப்பையும் சுற்றறிக்கையையும் தொழிலாளர் துறைக்கோ / ஒன்றிய / மாநில அரசுகளுக்கோ வழங்கவில்லை. இது சட்டவிரோதமானது. இந்த சட்ட விரோதத்தை மறைக்கவே ஊழியர்களை ராஜினாமா செய்யும்படி நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது.
இந்நிறுவனகள் செய்யும் ஒடுக்குமுறையை ஏற்று “Voluntary Resignation” கொடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை ஊழியர்கள்- நிறுவனம் விதித்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால், அவர்களின் எதிர்கால வேலையும் பாதிக்கப்படும் என மிரட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை பல காலமாக IT துறையில் நீடித்து வருகிறது. மேலும் அமெரிக்கா , இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தொழிலாளர் மீது அக்கறையற்ற அரசு நிர்வாகத்தை கணக்கில் கொண்டு இது போன்ற பணி நீக்க அறிக்கைகள் துணிச்சலாக வெளியிடப்படுகிறது.
கார்ப்பரேட் லாப வெறிக்கு பலியாகும் தொழிலாளர்கள்
400 மில்லியன் டாலர்களை (3,375 ஆயிரம் கோடி ரூபாய்கள் ) புதிதாக முதலீடு செய்துள்ள FRESHWORKS நிறுவனம், அதிக பணப் புழக்கத்தைக் கொண்ட ஒரு நிறுவனமாகவும் இருக்கிறது. இந்நிலையில், தனது லாபத்தைத் தக்கவைக்க பணப்புழக்கத்தை அதிகரிக்க 13% தொழிலாளர்களை தூக்கி எறிந்தது நயவஞ்சகமானது. இதன் பின்னணியில் IT-ஊழியர்களின் திறமை, ஒழுங்கு நடவடிக்கை , PERFORMANCE, UPSKILLING என எதுவும் இல்ல.
இதற்கிடையில் ZOHO ஸ்ரீதர் வேம்பு போன்ற திடீர் யோக்கியர்கள் தங்கள் நிறுவனத்தை Promote செய்ய இந்த சூழலை பயன் படுத்துகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும் வேம்புவிற்கும், Freshworkers முதலாளி கிரிஷ் மத்ருபூதம் ஆகிய இருவருக்கும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பற்றி எந்த கவலையும் இல்லை அவர்களது வணிகப் போட்டி அவர்களுக்கு முக்கியமானதாக உள்ளது.
FRESHWORKS தொழிலாளர்கள் உரிமையை கேட்கவோ அல்லது அணிதிரண்டு சங்கமாக இணையவோ வாய்ப்பில்லாமல் நசுக்கப்பட்டார்கள். குரல் எழுப்பினால் அடுத்த வேலையும் வாய்ப்பு பறிபோகும்,புதிய வேலையை கிடைக்கவிடாமல் செய்து விடுவோம் என துப்பாக்கியை காட்டி மிரட்டுவது போன்று மிரட்டப்பட்டார்கள். இந்த மிரட்டல் எந்த அளவுக்கு சென்றது என்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் Facebook, Insta,twitter போன்ற வற்றில் உள்ள தனகது அந்த சமூக தள பக்கங்களில் கூட தங்கள் பாதிப்புகளை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதையும் மீறி பகிர்ந்தவர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.
உலகமயமாக்கலும், நசுக்கப்படும் தொழிலாளர் உரிமைகள்
“Americanization of Labour” என்று IT-துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை இந்த நிறுவனங்கள் நன்கு பயன்படுத்தி கொள்கின்றன. அரசும் அதுக்கு எடுபுடியாக உள்ளது. HIRE & FIRE, திடீர் ஆட்குறைப்பு, Contract முறை, Perminancy, PF, Medi & Family-Insurance போன்ற Social Security இல்லாத வேலைகள், தொழிற்சங்கத்தை மறுப்பது, அதிகப்படியான வேலை நேரம், அமெரிக்க நிறுவங்கள் சார்ந்த சேவைகள் என பல அம்சங்களில் மோசமான Americanisation நிலைமை தான் இங்கு நீடிக்கிறது.
சமூக நீதி , சுயமரியாதை என வாய் சவடால் விடும் கூட்டங்கள் இதை பற்றி சிறிதளவு கூட மூச்சுவிடுவதில்லை. அவர்களின் அரசியல் உழைக்கும் மக்களுக்கானது அல்ல; சாம்சங் போரட்டம் அதை விரிவாக அம்பலப்படுத்தியது என்றால் தற்போதைய Freshworkers பணிநீக்கம் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.AI மற்றும்
வளர்ந்து வரும் சவால்கள்
FRESHWORKS நிறுவனத்தில் நடந்த அராஜகம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் வேறு ஒரு சவாலும் எழுகிறது. IT துறையில் AI தொழில் நுட்பத்தின் வளர்ச்சி பெரும் மாற்றத்தை உருவாக்கி வருகிறது. இது வரை தொழிலாளர்களை சார்ந்து இருந்த IT-SERVICE துறைகளும், இந்த துறையை சார்ந்து இயங்கக்கூடிய பல துறைகளும் படிப்படியாக AI யால் இயக்கும் நிலைக்கு செல்கிறது.
CRM, SAAS, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற பல IT-SERVICE சார்ந்த வேலைகள்/சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய IT/ITES தகவல் மற்றும் மென்பொருள் தொழில்துறையின் பெரும்பாலானவை அமெரிக்க தொழில்துறையை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் IT துறையில் நடந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சர்வதேச அரசியல் காரணமாக வரும் ஆண்டுகளில் அதிக வேலை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
IT-துறை மட்டுமின்றி பல துறைகளில் இதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இத்தகைய சூழலில் இதை எதிர்கொள்ள எந்த மாற்று வழிகளும் திட்டமும் இல்லாமல் தான் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இருக்கின்றன. காலம் காலமாக தொழிலாளர்கள் மீதும் IT ஊழியர்கள் மீதும் பழி போட்டுவரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து அரசுகளும் சதி செய்கின்றன.
கையாலாகாத மாநில அரசு
சரி இந்த வேலை நீக்கத்தையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. தொழிலாளர் துறை இப்பிரச்னையை விசாரிக்க கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய நாட்டின் சட்டம் , சமூக நீதி, தொழிலாளர் உரிமை எக்கேடு போனால் என்ன? என்று இருக்கிறது தமிழக அரசு.
நடந்திருப்பது அநீதி என்று தெரிந்தும், “பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால் பார்ப்போம்” என்று இங்கு வைக்கப்படும் வாதமெல்லாம் அந்த தொழிலாளர்களின் இயலாமையை பயன்படுத்திகொண்டு நசுக்கும் மேட்டிமைதனத்தின் கோர முகமும் அதிகார வெறியும் தவிர வேறுஒன்றுமில்லை.
சீரழிக்கப்படும் – இளைய தலைமுறை
90 களின் உலகமயமாக்கலுக்குப் பிறகு, கார்ப்பரேட் லாபத்திற்காகவும், மூலதன வளர்ச்சிக்காகவும் இளைஞர்கள் தொழிலாளர்கள் சீரழிக்கப்படுவது தான் இந்திய, தமிழக வரலாறு. வேலை வாய்ப்பு தருகிறோம், முதலீட்டை வரவேற்கிறோம் என்று இங்க நடத்தப்படும் நாடகத்தின் உண்மையான நிலை இதுதான்.
எந்த வித பாதுகாப்புமின்றி தொழிலாளர்களை, இளைஞர்களை சுரண்டி வீதியில் வீசுவது; இதனால் பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பிறகும் எந்த மாநில அரசும், ஒன்றிய அரசும் இதில் முறைப்படி தலையிடுவதில்லை. கடந்த 30 வருடங்களாக இது தான் இந்தியா முழுவதுமான நிலைமையாக உள்ளது.
இதில் தமிழ்நாடு தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை இன்னும் வேதனைக்குரியது. திராவிட மாடலோ தேசிய மாடலோ எல்லாமே கண்கட்டி வித்தை காட்டி தீவிர நவதாராளமய திட்டங்கள் மூலம் ஏமாற்றும் தொழிலாளர்களின் சவக்குழி தான். இந்த ஒடுக்குமுறையான கட்டமைப்பை வளர்ச்சி பாதை என்று பேசுவதெல்லாம் வெட்கக்கேடு. Freshworks பொறுத்தவரை குறைந்தபட்சம் சில முன்னாள் Freshworks ஊழியர்கள் உதவ முன்வந்தனர் அதுவும் சிலரே, வேறு எந்த நேரடி ஆதரவும் இல்லை. அது 600+ ஊழியர்களையும் உதவிட வாய்ப்பில்லை என அனைவரும் அறிந்ததே.
தீர்வு என்ன?
தீர்வுகளை நோக்கி செல்ல வேண்டும் என்றால் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றிணைவதே முதல் படி, அது எளிதல்ல, இன்றைய உழைக்கும் வர்க்கம் பல ஆண்டுகள் போராடி பெற்ற உரிமையை தக்க வைக்கவே பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறது.
ஒருபுறம் நடந்த அநீதியை எதிர்த்து குரல் எழுப்ப முடியாமல் தொழிலாளர்கள் இருக்க, மறுபுறம் வாழ்வாதாரத்தை தக்கவைக்க மாற்று வேலை நோக்கி ஓட வேண்டிய நிலையிலும் அவர்களின் பொருளாதார சூழல் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் சிக்கி உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கவும் இன்றைய இளைஞர்களை தங்கள் தேவைகளுக்கும் சமூகம் சார்ந்து அரசியல்படுத்த வேண்டிய நிலையில் இடதுசாரிகள் உள்ளனர்.
90 களின் உலகமயமாக்கலுக்குப் பிறகு, கல்வியின் தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கல், இங்கு போட்டி — லாபம் ஈட்டுதல் என்ற பெயரில் தொழில்நுட்ப அறிவையும் வேலை திறனையும் முற்றிலும் குறைத்துள்ளது. எனவே, தொழில் நுட்பக் கல்வியை இலவசமாக வழங்குவதும், அரசு நிதியுதவியுடன் கூடிய கல்வி மூலம் இன்றைய இளைஞர்கள், வெகுஜனங்களுக்கு A.I போன்ற துறைகளில் ஊக்குவிப்பதும் மட்டுமே இந்தியா தனது பணியாளர்களை வளரவும் மேம்படுத்தவும் சாத்தியமான ஒரே வழி.
சாதி, மதம் , இனம், மொழி பாலினம் என அனைத்தையும் கடந்து தொழிலாளர்களும் உழைக்கும் மக்கள் அனைவரும் எந்த வித சமூக பாதுகாப்பில்லாமல் பொருளாதார தன்னிறைவில்லாமல் தவிக்கின்றனர் என்பதே நிதர்சனம்.
இத்தகைய சூழலில் பாதிக்கப்படும் தொழிலார்களின் குரல் ஒலிக்க, தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த அரசியல் இயக்கம் தேவை. இதைக் கணக்கில் கொண்டு அரசியல் இயக்கமாக முன்னெடுக்கவும் மாறி வரும் பொருளாதார சூழலில் மனிதன் வாழ மிகவும் அடிப்படையான தொழிலாளர்கள் உரிமையை பாதுகாப்பது அவசியம்.
கட்டுரையாளர், தோழர். ஹிஷாம்