மஞ்சு இனக்குழு: எட்டுப் பதாகைகைகளின் பேரரசு-அ.பாக்கியம்
சீன மக்கள் குடியரசில் இருக்கக்கூடிய 56 இனங்களில் மஞ்சு இனக்குழுவும் ஒன்றாகும். சீன அரசு அங்கீகரித்துள்ள இனச் சிறுபான்மை குழுவில் மஞ்சு இனக்குழுவும் அடங்கும். 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மஞ்சு இன மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சம் ஆகும். சீனாவில் இருக்கக்கூடிய அதிக மக்கள் தொகை கொண்ட இனச் சிறுபான்மை குழுக்களில் இதுவும் ஒன்றாகும். மஞ்சு இன மக்கள் தற்போது சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றார்கள். இவை தவிர லியோனிங், ஜிலின், ஹெய்லோங்ஜியாங் மற்றும் ஹீபெய் மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் வாழ்கின்றனர். பெய்ஜிங் நகரம் மற்றும் உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். குறிப்பாக, மஞ்சு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் லியோனிங் மாகாணத்திலும், ஐந்தில் ஒரு பகுதியினர் ஹீபெய் மாகாணத்திலும் வாழ்கின்றனர்.
பழங்குடியிலிருந்து பேரரசு நோக்கி
சீனாவின் 5000 ஆண்டு வரலாற்றில் கடைசி ஆயிரம் ஆண்டுகளில் 350 ஆண்டுகள் சீன வம்சம் அல்லாதவர்களின் ஆளுகைக்கு சீனா உட்பட்டிருந்தது. 1271 முதல் 1368 வரை சுமார் நூறு ஆண்டுகள் மங்கோலியர்களின் யுவான் வம்ச ஆட்சி நடைபெற்றது. மஞ்சு வம்சத்தினர் 1644 முதல் 1912 ஆம் ஆண்டு வரை மஞ்சு வம்ச ஆட்சி நடைபெற்றது. 1644 ஆம் ஆண்டில், மிங் வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்கள் பெய்ஜிங்கைக் கைப்பற்றி முழு சீனாவையும் ஆட்சி செய்யத் தொடங்கினர். சீனாவுக்கு அருகாமையில் இருந்த மஞ்சு இன அரசு சீனாவின் பெரும்பகுதியை கைப்பற்றி சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். ஒரு சீனர் அல்லாத இனச் சிறுபான்மையின ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். பெய்ஜிங் நகரின் வீதிகளில் மஞ்சு இனத்தவர் திடீரெனத் தோன்றியது எவ்வளவு எதிர்பாராததாக இருந்ததோ, அதைவிட வியக்கத்தக்கதாக அமைந்தது அவர்கள் தங்கள் அதிகாரத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்திய விதமாகும். இந்த வியப்பு அவர்களுக்கே கூட இருந்தது. 1644-ஆம் ஆண்டு துவங்கி, 1912-ஆம் ஆண்டு வரை மஞ்சு பேரரசர்கள் தொடர்ந்து ஆட்சி செய்வார்கள் என்று யாரால் துணிந்து கணித்திருக்க முடியும்? அவர்கள் அவ்வாறு ஆட்சி செய்தது வரலாற்றாசிரியர்களுக்குப் பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பியது. அவற்றில் மிக அடிப்படையான ஒன்று “சிறுபான்மையினர் ஆட்சி குறித்த கேள்வி” ஆகும். அதாவது, சீனர்களை விட எண்ணிக்கையில் சுமார் 350-க்கு 1 என்ற விகிதத்தில் மிகக் குறைவாக இருந்த மஞ்சு இனத்தவர், எவ்வாறு சீனாவைக் கைப்பற்றி, பின்னர் ஏறக்குறைய 250 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடிந்தது என்பது ஒரு நுட்பமான விவகாரமாகும்.
மஞ்சு என்ற சொல் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் உள்ளது. ஜூச்சென்கள் என்பவர்கள் துங்குஸ் (Tungusic) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, வேட்டையாடும்-திரளும் பழக்கத்தைக் கொண்ட ஒரு பழங்குடி இனக்குழு ஆவர். இவர்கள் வடகிழக்கு சீனப் பகுதியான மஞ்சூரியாவின் காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்ந்தனர். “ஜூச்சென்கள்” (Jurchens) தான் பின்னாளில் “மஞ்சு” (Manchu) என்று அழைக்கப்பட்ட இனக்குழுவின் மூதாதையர்கள் ஆவர். தொடக்ககால சீனப் பதிவுகளில் அவர்கள் டோங்ஹுய் அல்லது “கிழக்கத்திய காட்டுமிராண்டிகள்” என்று அழைக்கப்பட்டனர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டில், இவர்கள் கிதான் (Khitan) பழங்குடியினரால் நிறுவப்பட்ட லியாவோ (Liao) பேரரசின் கீழ் இருந்தனர். ஆனால், 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1115), வான்யன் அகுடா (Wanyan Aguda) என்ற தலைவரின் கீழ் இவர்கள் லியாவோவின் ஆதிக்கத்தை உதறித் தள்ளி, வட சீனாவின் பெரும்பகுதியை ஆண்ட “சின்” (Jin) என்ற பேரரசை (கி.பி.1115–1234). நிறுவினர். பின்னர், இவர்கள் மங்கோலியர்களின் தாக்குதலால் கி.பி. 1234 இல் அழிக்கப்பட்டனர்.
மேலும் உயிர் பிழைத்த ஜூச்சென்கள் வடகிழக்கு மஞ்சூரியாவிற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இந்த ஜூச்சென்களின் வழித்தோன்றல்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர், ஆனால் விரைவிலேயே அவர்கள் ஜூச்சென் என்ற பெயரைக் கைவிட்டு மஞ்சு என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினர். 17ஆம் நூற்றாண்டில் நுர்ஹாசி (Nurhaci) என்ற தலைவர் பல நுழென் பழங்குடியினரை ஒன்றிணைத்து, 1636 இல் ‘மஞ்சு’ என்ற பெயரில் சிங் வம்சத்தை நிறுவினார். வரலாற்று ரீதியாக, “மஞ்சு” (Manchu) என்ற பெயர் பின்னர் 1635 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் மஞ்சூரியாவின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்தனர். தெற்கு நோக்கி நகர்ந்து, 1644 ம் ஆண்டு சீனா உள்நாட்டுக் கிளர்ச்சிகளால் பலவீனமடைந்திருந்தபோது பெய்ஜிங்கைக் கைப்பற்றினர்கள்.
வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளம் ஆகியவை சீன மக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் 1680-க்குள் மஞ்சுக்கள், சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையான கட்டுப்பாட்டை நிலைநாட்டினர். மஞ்சுக்கள் சுமார் 1800 வரை ஒரு சிறப்பான மற்றும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை நிர்வகித்து வந்தனர். சீனாவின் கடைசிப் பேரரசு ஆட்சியாளர்களான கிங் (மஞ்சு) வம்சத்தினர் (1644–1912) 1800-ஆம் ஆண்டிற்குள் பேரரசின் அளவை இரட்டிப்பாக்கினர், அதே நேரத்தில் அதன் மக்கள் தொகை ஏறக்குறைய மும்மடங்கானது.
எட்டுப்பதாகை சமூக-அரசியல் அடையாளம்
மஞ்சுக்கள், சீனாவைக் கைப்பற்றுவதற்கு உதவிய சில சீன மற்றும் மங்கோலியக் குழுக்களுடன் கூட்டணிகளை உருவாக்கினர். மஞ்சு ஆட்சி சீனாவின் அரசாங்கத்தையோ அதன் சமூக, கலாச்சார வாழ்க்கையையோ முற்றிலுமாகச் சீர்குலைக்கவில்லை. மாறாக, மஞ்சு ஆட்சியாளர்கள் தாங்கள் கைப்பறிறி பகுதிகளில் சீன வாழ்வின் அம்சங்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்தனர் மற்றும் மாற்றியமைத்துக் கொண்டனர். அவர்கள் தாங்கள் ஆட்சி செய்த பல்லினப் பேரரசுக்கு ஏற்ற ஒரு ஆட்சி முறையை உருவாக்கினர். அதில் சீனர்களே மிகப்பெரிய மக்கள்தொகையாக இருந்தனர். மஞ்சு ஆட்சியாளர்கள் தங்கள் அரசாங்க நடைமுறைகளில் பலவற்றை முந்தைய சீன மிங் பேரரசின் நடைமுறைகளை மாதிரியாகக் கொண்டு அமைத்தனர். உதாரணமாக, சீன அரசாங்க அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக, முந்தைய சீன பேரரசுகள் போலவே அவர்கள் ஒரு குடிமைப் பணித் தேர்வு முறையைப் பயன்படுத்தினர். மஞ்சு பேரரசர்கள் சீன மற்றும் மஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தனர். அதே சமயம், மஞ்சு ஆட்சியாளர்கள் பல மஞ்சு பழக்கவழக்கங்களை அரசவையிலும் பொதுமக்களிடையேயும் பேணி வளர்த்தனர்.
மஞ்சு பேரரசர்கள் பெரும்பான்மையான சீன மக்களை ஆட்சி செய்கிற பொழுது இருவிதமான தன்மைகளையும் கடைபிடித்தனர். சீன அரசியல் நெறிமுறைகளை மஞ்சு இனத்தவர் ஏற்றுக் கொள்வதையும் அவற்றை சீன அறிஞர்கள் அங்கீகரிப்பதையும் சார்ந்து இருந்தது மட்டுமல்ல, மஞ்சு இனத்தவர்களுக்கும் பெரும்பான்மை சீன ஹான் இனத்தவர்களுக்குமான வேறுபாடுகளை தக்க வைக்கும் பணிகளையும் தங்கள் ஆட்சி காலம் முழுவதும் கடைபிடித்தனர். அதாவது கலாச்சார தழுவல் என்பதில் சீன மயமாதல் ஒரு பக்கம் நடைபெறுகிற பொழுது தங்களின் தனித்துவத்தை காப்பாற்றக்கூடிய செயல்களையும் கடைப்பிடித்தனர்.
1601-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘எட்டு கொடிகள்’ அமைப்பு, மஞ்சு இன அடையாளத்தை தனித்துவமாக வெளிப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தது. இது ஒரு இராணுவ அமைப்பாக மட்டுமல்லாமல், மஞ்சு இனத்தின் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் அடையாளத்தின் மைய அச்சாகவும் செயல்பட்டது. “எட்டு கொடிகள்” என்பது வெறும் போர் வீரர்களின் கூட்டம் அல்ல. அது ஒரு முழுமையான தனி சமூக அமைப்பு (suborder of society) . ஒவ்வொரு குடும்பமும் ஒரு கொடியில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த உறுப்பினர் உரிமை மரபுவழியாக தொடரப்பட்டது. இந்த அமைப்பு மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தியது. இராணுவ பயிற்சி முதல், ஊதியம் மற்றும் உணவு விநியோகம், திருமணம், இறப்பு பதிவு, மற்றும் ஓய்வூதியம் வழங்குதல் வரை. இவ்வாறு, கொடி மக்கள் (banner people) என்ற பெயர் மஞ்சு இனத்தின் சமூக அடையாளமாக மாறியது. எட்டு கொடிகள், ஒரு இராணுவ கட்டமைப்பைத் தாண்டி, மஞ்சு இனத்தின் “இன இறையாண்மை” (ethnic sovereignty) மற்றும் தனித்துவமான சமூக-அரசியல் அடையாளத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய கருவியாக அமைந்தது. ஒரு சிறுபான்மை இனமாக இருந்தும், மிகப்பெரிய ஹான் சீன மக்கள்தொகையை 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆள்வதற்கு இந்த அடையாளப் பாதுகாப்பே முக்கிய காரணமாக கருதப்படுகிறது
வரலாற்று ரீதியாக, ஆண்களின் தலைமுடி பாணியில் மஞ்சு மற்றும் ஹான் இனத்தினரிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது. மஞ்சு ஆண்கள் தங்கள் நெற்றிப் பகுதியை மொட்டையடித்து, பின்புறத்தில் உள்ள முடியை நீண்டு, பின்னல் போட்டு வைத்தனர். இது அவர்களின் பாரம்பரியப் பழக்கமாகும். ஹான் சீனர்கள், கன்பூசியஸ் போதனைகளின்படி, முடியை வெட்டாமல், அதை முடிச்சு அல்லது கொண்டை போட்டு வளர்த்தனர். 1644-ல் சிங் வம்சம் ஆட்சிக்கு வந்த பிறகு, மஞ்சு ஆட்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தின் அடையாளமாக ஹான் ஆண்கள் அனைவரும் இந்த ‘கியூ’ சிகையை வளர்க்க வேண்டும் என்ற கட்டாய ஆணையைப் பிறப்பித்தனர். இதற்கு இணங்க மறுத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1912-ல் சிங் வம்சம் வீழ்ச்சியடைந்த பின்னரே இந்தக் கட்டாய சிகை முறை ஒழிக்கப்பட்டது.
ஒரு படகில் மிதக்கும் பொருளாதாரம்
மஞ்ச வம்ச (1644-1912) காலத்துப் பொருளாதாரம், ஒரு படகில் மிதக்கும் வெள்ளப்பெருக்கு போன்றது—சில காலகட்டங்களில் கரைபுரண்டு ஓடியது. வேறு சிலவற்றில், எதிர்பாராத புயல்களையும் சுழிப்புகளையும் சந்தித்தது. இது “கிளாசிக்கல்” வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலின் தொடக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. 18-ஆம் நூற்றாண்டில் உச்சத்தை அடைந்த இந்தப் பொருளாதாரம், பின்னர் உள் நெருக்கடிகள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களால் சீர்குலைந்து, முடிவில் நவீன தொழில்துறை வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது.
ஆரம்பகால மஞ்ச வம்சம், குறிப்பாக காங்ஷி, யோங்ழெங் மற்றும் கியான்லாங் பேரரசர்களின் கீழ், குறிப்பிடத்தக்க பொருளாதார விரிவாக்கத்தைக் கண்டது. இந்தச் சகாப்தம் பெரும்பாலும் “காங்-கியான் பொற்காலம்” என்று குறிப்பிடப்படுகிறது. அரசாங்கம் புதிய நிலங்களைச் சாகுபடி செய்ய ஊக்குவித்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சோளம் போன்ற பயிர்கள், வறண்ட நிலங்களில் பயிரிடப்பட்டு, உணவு உற்பத்தியை வெடிக்கச் செய்தன. நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வரிச்சீர்திருத்தங்கள் விவசாய உற்பத்தியை மேலும் அதிகரித்தன. மேம்பட்ட உணவு விநியோகத்தால், சீனாவின் மக்கள்தொகை 1650-ஆம் ஆண்டில் சுமார் 100-150 மில்லியனில் இருந்து 1800-ஆம் ஆண்டிற்குள் 300 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த மக்கள்தொகை அதிகரிப்பே விரிவாக்கத்திற்கு உந்துதலாகவும், விளைவாகவும் இருந்தது.
வெள்ளி பொருளாதாரத்தின் உயிர்நாடியாக மாறியது. அதன் விநியோகத்தில் ஏற்பட்ட கூர்மையான அதிகரிப்பு, தொலைதூர வர்த்தகத்தையும், பிராந்திய வணிகர் குழுக்களான ஷான்சி (சான்சி) மற்றும் ஹுய் (ஆன்ஹுய்) வணிகர்கள் போன்றவர்களின் எழுச்சியையும் தூண்டியது. பணம் சம்பாதிப்பதற்கான இந்த உத்வேகமே, நாடு முழுவதும் பொருட்களும் அதற்கான கருத்துக்களும் பரவ உதவியது.
உலக வரலாற்றில், இந்தக் காலகட்டத்தில் சீனாவின் பொருளாதார செல்வாக்கு மகத்தானதாக இருந்தது. 1750-ஆம் ஆண்டில், சீனாவின் உற்பத்தித் துறை உலகின் மொத்த உற்பத்தியில் 32.8% ஆக இருந்தது. இது முழு ஐரோப்பாவின் மொத்த உற்பத்தியையும் விட அதிகமாகும்.
இந்தப் பொற்காலம் நீடிக்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டு, பொருளாதார நெருக்கடிகளால் உந்தப்பட்டு, அடிக்கடி ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தது. வெள்ளி விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை, ஜியாகிங் (Jiaqing) மற்றும் டாவோகுவாங் (Daoguang) ஆட்சிக் காலங்களில் தொடர் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுத்தது. இது உணவுப் பொருட்களின் விலையில் கூர்மையான உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.
அந்நிய நாடுகளுடன் செய்யப்பட்ட அடிமைத்தனமான ஒப்பந்தமும் அபினி யுத்தமும் சீன பொருளாதாரத்தை அழிவின் விளிம்புக்கு தள்ளின. வெள்ளிகள் குவிந்திருந்த ஒரு நாட்டில் போதைப் பொருட்களுக்காக வெள்ளிகளை வெளியேற்றினார்கள். அரசாங்க வருவாய் முடங்கியது. அபினி யுத்தத்தில் தோல்வியடைந்த பிறகு மஞ்சு அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பாக துறைமுகங்களையும், வணிகங்களையும் மேற்கத்திய நாடுகளுக்கு திறந்து விட்டது. இதனால் கடும் பாதிப்புகளை சந்தித்தது.
ஒருபுறம் பொருளாதார நெருக்கடியும் மறுபுறத்தில் மேற்கத்திய நாடுகளின் ஊடுருவல் காரணமாக நவீன பொருளாதார அஸ்திவாரங்களும் உருவாக்கப்பட்டது. தைப்பிங் கிளர்ச்சி (Taiping Rebellion, 1850-64) மஞ்ச ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, மைய அரசு உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிக நிதி மற்றும் இராணுவ அதிகாரத்தை வழங்கியது. உள்ளூர் அரசாங்கங்கள் தங்கள் சொந்த இராணுவத்திற்கு நிதியளிக்க லிஜின் (likin) என்ற புதிய உள்நாட்டு வர்த்தக வரியை அறிமுகப்படுத்தின. இது நவீன தொழில்களில் முதலீடு செய்ய பிராந்தியங்களுக்கு ஒரு வழியை உருவாக்கியது. இந்த உள்ளூர் முதலீடு, கப்பல் கட்டுதல், சுரங்கம், மற்றும் ஆயுத உற்பத்தி போன்ற தொழில்களில், “தானாகவே நடக்கும்” தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது. இது அரசால் நடத்தப்படும் “யாங்-வு (ஸ்வான்-வு)” இயக்கத்துடன் இணைந்து, சீன தொழில்மயமாக்கலின் முதல் படிகளைக் குறித்தது. தந்தி இணைப்புகள் மற்றும் இரயில் பாதைகள் கட்டப்பட்டன. 1900-ஆம் ஆண்டிற்குள், முக்கிய நகரங்களில் மின்சார விளக்குகள் மற்றும் தொலைபேசிகள் போன்ற நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. யாங்சே மற்றும் மேற்கு நதிகள் கப்பல் போக்குவரத்திற்கு மேற்கத்திய நாடுகளுக்கு திறக்கப்பட்டன.
மஞ்ச வம்சத்தின் பொருளாதாரம் என்பது உள் செழிப்பு, பின்னர் உள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு எதிரான போராட்டம், இறுதியில் நவீனமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலின் அழுத்தங்களுக்குத் தன்னை மாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளின் கதையாகும்.
மொழியும் பண்பாட்டு அடையாளமும்
மொழியை பொருத்தவரையில், மஞ்சு மக்கள் மஞ்சு மொழியை பேசுகின்றனர். இது துங்கஸ் (Tungus) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. எழுத்துமுறை: 1599 ஆம் ஆண்டு, நுர்ஹாசி மங்கோலிய எழுத்துமுறையைத் தழுவி மஞ்சு மொழிக்கு ஏற்றார். பின்னர் 1632 இல் தஹாய் (Dahai) இதில் புள்ளி மற்றும் வட்டக் குறிகளைச் சேர்த்து நவீன எழுத்துமுறையை உருவாக்கினார். இது மேலிருந்து கீழாகவும், வலமிருந்து இடமாகவும் எழுதப்படும். இருப்பினும், சிங் வம்ச ஆட்சிக் காலத்தில் ஹான் சீனக் கலாச்சாரத்தின் தாக்கத்தால், இன்று பெரும்பாலான மஞ்சு மக்கள் சீன மொழியையே பேசுகின்றனர் .
இவர்களின் பண்பாட்டு அடையாளம் ஹான் சீனர், மங்கோலியர், திபெத்தியர் போன்ற ஏனைய இனக்குழுக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. இவர்கள் மரபுவழி ஷாமனிசம் (Shamanism) நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். பாரம்பரியமாக ‘ஷாமனிசம்’ (Shamanism) எனும் இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டைப் பின்பற்றினர். தேவாலயங்களிலும், கிராமங்களிலும் ஷாமன்கள் மதச் சடங்குகளை நடத்தினர். பின்னர் பௌத்தம், தாவோயிசம் ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தின. மஞ்சு சமூகம் தாய்வழிக் குலச் சமூகத்தின் (Matrilineal Clan Society) பண்புகளைத் தக்கவைத்திருந்தது. இதனால், பெண்களின் குடும்ப மற்றும் சமூக நிலை மிகவும் உயர்வாக இருந்தது. சீனாவில் பெண்கள் அடிமைத்தனத்தின் உச்சமாக பாதம் கட்டும் முறை இருந்தது. ஆனால் மஞ்சு பெண்கள் பாதம் கட்டும் வழக்கத்தை (foot-binding) பின்பற்றவில்லை. வேட்டை, போர் போன்ற சமூகப் பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்களுடன் சேர்ந்து பங்கேற்றனர். சமீபத்திய மரபணு ஆய்வுகள், மஞ்சு மக்கள் தங்கள் பாரம்பரிய தாயகமான வடகிழக்கு சீனாவில் மரபணு ரீதியாக ஒருமித்த தன்மையுடன் காணப்படுவதாகக் கூறுகின்றன.
கிங் வம்சம் ஒருபுறத்தில் உள்நாட்டு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த பொழுது மேற்கத்திய நாடுகள் மிகக் கொடூரமான முறையில் ஒரு தலைபட்சமான ஒப்பந்தங்களில் கையளித்திட வைத்து சீன மக்களை சுரண்டினார்கள். இதன் விளைவாக தேசபக்த இயக்கமும் அந்நிய சக்திகளுக்கு எதிரான எழுச்சியும் ஏற்பட்டது. 1850 முதல் 1864 வரை நடைபெற்ற தாய் பிங்க் விவசாயிகள் கிளர்ச்சி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1853 முதல் 1868 வரை நடைபெற்ற நியான் கிளர்ச்சி, 1796 முதல் 1804 வரை நடைபெற்ற வெள்ளை தாமரை கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகள் கிங் வம்சத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற பாக்சர் கிளர்ச்சி கிங் அரசாங்கத்துக்கு எதிராக இல்லை என்றாலும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தேசியவாத கிளர்ச்சியாக ஆரம்பித்து ஆட்சியாளருக்கு எதிராக மாறியது. இந்தக் கிளர்சிகள் அனைத்தும் ஒரு பொதுவான அம்சத்தை பிரதிபலித்தது.
கிங் வம்சத்தின் பலவீனமான ஆட்சியும் சமூக பொருளாதார நெருக்கடிகளும் இந்த கிளர்ச்சிகளில் பிரதிபலித்தன. இதன் விளைவாக 1911 ஆம் ஆண்டு டாக்டர் டன் யாட் சன் தலைமையில் ஜனநாயக புரட்சி ஏற்பட்டு ஜனநாயக குடியரசு உருவாகியது. 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் புதிய ஜனநாயக புரட்சியின் மூலமாக மக்கள் சீன குடியரசு உருவாக்கப்பட்டது. மக்கள் சீன குடியரசில் இனச் சிறுபான்மை மக்களுக்கான தனித்துவமான கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. இதன் விளைவாக மஞ்சு இனம் சீன மக்கள் குடியரசில் இனச் சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டது.
மற்ற இனங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் சீனாவின் 250 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு இனம் சீன கலாச்சாரத்தில் கலந்து விட்டது. தங்களின் தாய் மொழியை கடந்து பெரும்பாலான மஞ்சு இன மக்கள் சீன மொழியை பேசுகிறார்கள். இருப்பினும் ஒரு தனி இனச் சிறுபான்மையாக அங்கீகரிப்பதற்கான பல்வேறு விதமான தனித்த அடையாளங்கள் நீடிக்கின்றது.இவர்களின் பாரம்பரிய மொழி, எழுத்து, உடை, ஷாமன் மதம், பதாகை அமைப்பு போன்றவை இவர்களை தனித்துவமாகக் காட்டுகின்றன. இன்று, பெரும்பாலான மஞ்சு மக்கள் சீனப் பிரதான கலாச்சாரத்தில் ஒன்றிணைந்தாலும், தங்கள் வரலாற்று அடையாளத்தைத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள்.
சீன மக்கள் குடியரசில் மஞ்சு இன மக்கள்
சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட பிறகு மஞ்சு இன மக்களின் உரிமைகளை இன பிராந்திய தன்னாட்சி சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் பாதுகாக்கிறார்கள். மஞ்சு இன மக்கள் உட்பட சிறுபான்மையினரின் அரசியல் பொருளாதார கலாச்சார துறைகளில் சம உரிமைகளும் தன்னாட்சி உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது மஞ்சு இன மக்களின் பொதுவான செழுமைக்கு வழி வகுக்கிறது. 14வது ஐந்தாண்டு திட்டத்தில் மஞ்சு இன கிராமங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு 94 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஞ்சு மொழி அழியும் நிலையில் இருப்பதால், அரசாங்கமும் கல்வி நிறுவனங்களும் பின்வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஹெய்லோங்ஜியாங் பல்கலைக்கழகத்தின் மஞ்சு ஆய்வு நிறுவனம் போன்றவை, நீண்ட காலமாக மஞ்சு மொழி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆய்வாளர்கள், மஞ்சு மொழி இன்னும் பேசப்படும் சான்ஜியாசி கிராமம் போன்ற இடங்களுக்குச் சென்று, 20 முதியவர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு, முதல் நிலை மொழித் தரவுகளைப் பாதுகாக்கின்றனர்.
“சீன-துங்குசிக் மொழி தரவுத் தளக் கட்டுமானம் மற்றும் ஆராய்ச்சி” என்ற தேசிய சமூக அறிவியல் முக்கியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்முக தரவுத் தளத்தை உருவாக்கி, மஞ்சு, ஹெஜென் போன்ற அழியும் நிலையிலுள்ள மொழிகளை முறையாகப் பாதுகாக்கிறது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் மஞ்சு-சீன இரு மொழி இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்பை Transformer மாதிரியின் அடிப்படையில் உருவாக்கி வருகின்றனர். இது மஞ்சு காப்பக ஆவணங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் மொழித் தகவல் செயலாக்கத்தில் உள்ள தொழில்நுட்ப சவால்களைத் தீர்க்க உதவும்.
மஞ்சு பாரம்பரிய கலைகளான காகித வெட்டு, எம்பிராய்டரி போன்றவை தேசிய மட்ட பண்பாட்டு அல்லாத பொருள் பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டு, பாரம்பரியக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு, படைப்பு கலைப் பொருட்கள் மூலம் அவை உயிர்ப்புடன் வைக்கப்படுகின்றன. மேலும், கிராமங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் தனித்துவமான கலாச்சார நினைவுகள் பாதுகாக்கப்படுகின்றன.
மஞ்சு இன மக்களின் கல்வியறிவு நிலை, சீனாவின் மற்ற இனக்குழுக்களுடன் ஒப்பிடுகையில், வரலாற்று ரீதியாகவும் தற்போதும் சிறப்பாக உள்ளது. கிங் வம்சத்தில் மஞ்சு இன மக்கள் ஆட்சியாளர் இனமாக இருந்த காரணத்தால், மஞ்சு மக்களுக்கு கல்வி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு வாய்ப்புகள் இருந்தன. இந்த கல்வி மரபு தனியார் பள்ளிகள் மூலம் வலுப்படுத்தப்பட்டது. அவை கன்பூசியன் கிளாசிக்ஸ் மற்றும் மஞ்சு மொழி, வில்வித்தை போன்றவற்றில் கல்வி கற்பித்தன.
1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி மஞ்சு இனத்தில், ஒவ்வொரு 10,000 பேரில் 1,652.2 பேர் பல்கலைக்கழக கல்வி பெற்றிருந்தனர். இது தேசிய சராசரியான 139.0 மற்றும் ஹான் சீனர்களின் 143.1 ஐ விட மிக அதிகம். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுத்தறிவு இல்லாதவர்களின் விகிதம் 1.41% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 22.21% மற்றும் ஹான் சீனர்களின் 21.53% ஐ விட மிகக் குறைவு. மஞ்சு இனத்தில் பல்கலைக்கழக கல்வி பெற்றவர்களின் விகிதம் 7.58% ஆகவும், உயர்நிலைப் பள்ளி கல்வி பெற்றவர்கள் 20.35% ஆகவும் இருந்தனர். இவை ஹான் மற்றும் பிற இனக்குழுக்களை விட அதிகம். அவர்களின் கல்வியறிவு இல்லாத விகிதம் மற்ற இனக்குழுக்களை விட குறைவாக இருந்தது.
மஞ்சு கலாச்சாரம் சீன நாகரிகத்தின் முக்கிய பகுதி என்பதை உணர்ந்து, அதன் பாதுகாப்பிற்கு வரலாற்று மற்றும் தற்போதைய முக்கியத்துவம் உண்டு என்பதாகும். முன்னாள் பிரதமர் சௌ என் லாய் குறிப்பிட்டது போல், மஞ்சு இனம் வரலாற்றில் நாட்டின் ஒற்றுமைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. எனவே, புதிய சீனாவில் அனைத்து இனங்களும் செழுமையை நோக்கி நகர வேண்டும்.
அ.பாக்கியம்