உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் ஏகாதிபத்திய சக்திகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் போது, உழைக்கும் வர்க்கமானது ஓர் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக மாற முடியாது. இது சோசலிச அரசியலின் முக்கிய பாடங்களில் ஒன்றாகும். பாலஸ்தீனம் தொடர்பான விசயங்களில் இப்பிரச்சனையை தெளிவாக பார்க்கலாம்.
இடதுசாரிகளை பொறுத்த வரை பாலஸ்தீனம் என்பது வெளியுறவுக் கொள்கை பற்றிய கேள்வியோ மனிதாபிமானப் பிரச்சினையோ மட்டும் அல்ல. அது உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை நேரடியாகத் தொடும் ஓர் அரசியல் கேள்வியாகும். காசாவில் நடக்கும் இனப்படுகொலை, பாலஸ்தீனர்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படுவது, மற்றும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு வழங்கும் முழுமையான ராணுவ ஆதரவு ஆகியவை சமகால உலகில் ‘தீவிர ஏகாதிபத்தியம்’ (hyper-imperialism) எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுகின்றன. ஆனால் அதே வேளையில், ஆளும் வர்க்கங்கள் உழைக்கும் வர்க்கத்தினரை அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எவ்வாறு பிரிக்க முயல்கின்றன என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன.
முதலாளித்துவமானது பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே ஆட்சி செய்வதில்லை. தொழிலாளி வர்க்கத்தின் கூட்டு உணர்வைச் சிதறடிக்கும் அரசியல் வடிவங்களும் (political narratives) அதற்குத் தேவைப்படுகின்றன. தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்படும் போது கூட, ‘தங்கள்’ அரசு, ‘தங்கள்’ ஆளும் வர்க்கம் மற்றும் ‘தங்கள்’ புவிசார் அரசியல் நலன்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு தூண்டப்பட வேண்டும். ஏகாதிபத்தியம் இந்த கருத்தியல் செயல்பாட்டையும் தான் சார்ந்துள்ளது. இது இல்லையென்றால், ராணுவ ஆக்கிரமிப்புகள், ஆயுதத் தொழில்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் தொடர்ச்சியான போர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது ஏகாதிபத்தியத்திற்கு மிகவும் கடினமாகிவிடும்.
பாலஸ்தீனம் இந்த முரண்பாட்டை மிகக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது.
மேற்குலக நாடுகள் முழுவதும், மக்களுக்கு வீடு கட்டித் தரவும், நல்ல சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, கல்வி அல்லது கண்ணியமான ஊதியம் கொடுக்க பணம் இல்லை என்று கூறும் அரசுகள், தீடீரென ஆயுதங்கள், ராணுவ உதவி, உளவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் புவிசார் அரசியல் தலையீடுகளை செய்வதற்கு தேவையான வரம்பற்ற நிதியை கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களுக்கு மட்டுமே நிதி வெட்டப்படும், ஆனால் தீவிர ஏகாதிபத்தியப் போர்களுக்கு நிதி வெட்டு என்ற கொள்கை பொருந்தாது.
2026 ஆம் ஆண்டு ஈரான் மீது நடத்தப்படும் போருக்காக அமெரிக்கா சுமார் 35 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. இந்தத் தொகையை பயன்படுத்தி உலக அளவில் பண ரீதியிலான வறுமையில் பாதியை ஒழித்திருக்க முடியும். தொழிலாளர்களுக்கான நல்வாழ்விற்கு நிதி ஒதுக்காமல் வெட்ட வேண்டுமென பிரசங்கம் செய்யும் அதே அரசியல் பிரிவினர், இஸ்ரேலுக்கான பில்லியன் கணக்கிலான ராணுவ நிதிக்கு எந்தத் தயக்கமும் இன்றி ஆதரவு அளிக்கின்றனர். இது முக்கியமான விஷயமாகும் ஏனெனில் ஏகாதிபத்தியம் சமூக முன்னுரிமைகளை வெளியிலும் அதே நேரத்தில் உள்நாட்டிலும் மாற்றுகிறது (எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என எதிர்மறையாக மாற்றுகிறது).
ராணுவமயமாக்கல் உள்நாட்டில் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தை அதிகரிக்கிறது. நாட்டின் வளங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படாமல் (social reproduction) மடை மாற்றப்பட்டு, ஆயுத நிறுவனங்கள், எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகள், உளவுத் துறை அமைப்புகள் மற்றும் காவல் துறையின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலமாக பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக பிளவுகளை அனுபவிக்கும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகளாக அச்சமும் தேசியவாதமும் மாறுகின்றன.
எனவே, பாலஸ்தீனம் பற்றிய கேள்வி நேரடியாக உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கையின் உள்நாட்டு அரசியலுக்குள் நுழைகிறது.
வெளிநாடுகளில் உள்ள ஏகாதிபத்தியத் திட்டங்களுக்கு ஆதரவு தர தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்படும்போது, அதே நேரத்தில் அவர்கள் சொந்த நாட்டிலும் ஒற்றுமையைக் கைவிடவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். வர்க்க அரசியலின் இடத்தை தேசிய வெறி (பிரிவினைவாத அரசியல்-national chauvinism) பிடித்துக்கொள்கிறது. தாழ்த்தபட்டவர்களாக, பிற்போக்கானவர்களாக அல்லது அச்சுறுத்தல்காரர்களாக காட்டப்படும் மக்களுக்கு எதிராக வன்முறை ஏவப்படும்போது, அது தார்மீக ரீதியாக இயல்பாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மாறுகிறது. அப்படி காட்டப்பட்ட மனிதர்களின் ஒட்டுமொத்தப் பிரிவினரும் “தேவையற்றவர்களாக / அழிக்கப்படக்கூடியவர்களாக’ (disposable) மாறுகிறார்கள்.
இந்தக் கருத்தியல் தர்க்கம் பாலஸ்தீனத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது இயல்பான ஒன்றாக மாறியதும், மீண்டும் உள்நாட்டுக்கு (ஒவ்வொருநபரின் சொந்த நாட்டுக்கு) திரும்புகிறது. வெளிநாடுகளில் வரம்பற்ற வன்முறையை நியாயப்படுத்தும் அரசுகள், உள்நாட்டிலும் தங்களின் அடக்குமுறை அதிகாரங்களை எப்போதும் அதிகரிக்கின்றன. கண்காணிப்புகள் அதிகரிக்கின்றன. போராட்டங்கள் குற்றமாக்கப்படுகின்றன. காவல்துறைக்கு அதிகாரங்கள் அதிகரிக்கின்றன. மாற்றுக் கருத்துக்கள் சந்தேகத்திற்குரியதாக மாறுகின்றன.
ஏற்கனவே, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும், பாலஸ்தீனத்துடனான ஒற்றுமை என்பது தணிக்கை, பணிநீக்கம், மாணவர் இயக்கங்கள் மீதான அடக்குமுறை, ஆர்ப்பாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் மீதான தாக்குதல்கள் மூலமே எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்செயலானது அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது ஆளும் வர்க்கத்தின் சட்டப்பூர்வத் தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைகிறது, ஏனெனில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் முதலாளித்துவம், ராணுவவாதம் மற்றும் அரச வன்முறை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை அம்பலப்படுத்துகிறது.
உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, பாலஸ்தீனமானது முதலாளித்துவக் குவியல்/திரட்சியின் (capitalist accumulation) சர்வதேசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த ஆக்கிரமிப்பு வெறும் கருத்தியலால் மட்டும் தக்கவைக்கப்படவில்லை. இது ஆயுத நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தளவாடக் கட்டமைப்புகள் (logistics networks), தூதரகக் கூட்டணிகள் மற்றும் நிதி பகிர்வுகள் மூலம் பொருளாதார லாபத்தின் அடிப்படையில் தக்கவைக்கப்படுகிறது.
காசாவில் பரிசோதனை செய்யப்பட்ட ஆயுதங்கள் உலகளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆக்கிரமிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் சர்வதேச அளவில் புழக்கத்திற்கு வருகின்றன. ராணுவ மற்றும் கார்ப்பரேட் நலன்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றோடொன்று பிணைக்கப்படுகின்றன.
இந்த அர்த்தத்தில், பாலஸ்தீனம் உலகளாவிய முதலாளித்துவத்தின் பரந்த கட்டமைப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. அது அதன் ஒரு தீவிரமான வெளிப்பாடாகும். இதனால்தான் இந்த விஷயம் உலகம் முழுவதும் இவ்வளவு பரவலாக எதிரொலித்தது. பெரும்பாலான மக்கள் பாலஸ்தீனத்தில் ஏற்கனவே தெரிந்த ஆதிக்க கட்டமைப்பைக் புரிந்து கொள்கிறார்கள். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டும், அது நியாயப்படுத்தப்பட்டும், நில அபகரிப்புக்கு உள்ளான, காலனியாதிக்கம், நிறவெறி மற்றும் வெளிநாட்டு தலையீடுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, பாலஸ்தீனத்தின் நிலைமை உடனடியாகப் புரிகிறது. ஏனெனில் அது இன்னும் தீர்க்கப்படாத அம்மக்களின் வரலாற்று அனுபவங்களை ஒத்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவின் பதில் இதைத் தெளிவாக விளக்குகிறது. நிறவெறி தென்னாப்பிரிக்காவிற்கும் இஸ்ரேலின் நிறவெறிக்கும் இடையிலான ஒப்பீடு வெறும் வெற்று முழக்கம் அல்ல. அது வரலாற்று அனுபத்திலிருந்து வெளிப்படுகிறது. பல தென்னாப்பிரிக்கர்கள் இனவாத முதலாளித்துவத்தின் கீழ் தங்களின் சொந்த அனுபவத்தின் ஒரு பகுதியாக இருந்த இனப் பிரிவினை, பிராந்திய பிரிவினை, ராணுவ அடக்குமுறை மற்றும் மனிதநேயமற்ற தன்மை ஆகியவற்றை காண்கிறார்கள்.
எனவே பாலஸ்தீனத்துடனான அவர்களது ஒற்றுமை வெறும் கற்பனையான தார்மீக நோக்கத்திலிருந்து அல்ல, மாறாக அரசியல் அங்கீகாரத்திலிருந்து உருவாகிறது. இது உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் முதலாளித்துவம் இனம், மதம், தேசியம் மற்றும் குடியுரிமை ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்களைத் தொடர்ந்து பிரிக்க முயல்கிறது. ஒரு அரசியல் கேள்வியைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் பாலஸ்தீனம் இந்தப் பிளவுகளைக் குலைக்கிறது. தொழிலாளர்கள் ஆதிக்கக் கட்டமைப்புகளுடன் தங்களை அடையாளப்படுத்துகிறார்களா, அல்லது ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தங்களை அடையாளப்படுத்துகிறார்களா?
இதற்கான பதில் மிகவும் உறுதியானது, ஏனெனில் தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் ஏகாதிபத்திய வன்முறையுடன் அரசியல் ரீதியாகத் தங்களை இணைத்துக் கொள்ளும் வரை எந்தவொரு நிலையான உழைக்கும் வர்க்க இயக்கமும் உருவாக முடியாது. இன்று பாலஸ்தீனர்களின் மனிதநேயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளும் ஒரு உழைக்கும் வர்க்கம், நாளை உள்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், அகதிகள், சிறுபான்மையினர் அல்லது மாற்றுக் கருத்துள்ளவர்களின் மனிதநேயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளவும் தூண்டப்படலாம். ஒற்றுமை என்பது நிபந்தனைக்குட்பட்டதாக மாறும்போது, பிளவு என்பது எல்லா இடங்களிலும் தீவிரமாகிறது.
இதனால்தான் சோசலிச அரசியலுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அடிப்படையானது. இது உள்நாட்டுப் போராட்டத்திலிருந்து தனித்து நிற்கும் ஒரு ‘சர்வதேசப் பிரச்சனை’ அல்ல. இது உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் உருவாக்கத்தையே சார்ந்ததாகும்.
பாலஸ்தீனப் போராட்டமும் சர்வதேச ஒற்றுமையின் முக்கியமான சமகால வடிவங்களை உருவாக்கியுள்ளது. துறைமுகத் தொழிலாளர்கள் ஆயுதக் கப்பல்களைத் தடுக்க முயன்றுள்ளனர். தொழிற்சங்கங்கள் ராணுவ விநியோகச் சங்கிலிகளுடன் கூடிய தளவாட ஒத்துழைப்பை மறுப்பது குறித்து விவாதித்துள்ளன. கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் மாணவர் இயக்கங்கள் முகாம்கள் (encampments) அமைத்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடியுள்ளன. இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை, ஏனெனில் அவை நியாயமாக ஏற்படும் கோபத்தைத் தாண்டிப் நடைமுறையில் சாத்தியமான ஒன்றுபட்ட அரசியல் வடிவங்களை நோக்கி நகர்கின்றன.
அவை மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நிரூபிக்கின்றன. உலகளாவிய சேவை அமைப்புகளுக்குள் தொழிலாளர்கள் முக்கிய இடத்தை கைப்பற்றியுள்ளனர். துறைமுகங்கள், போக்குவரத்து அமைப்புகள், தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு, உற்பத்திச் சங்கிலிகள் மற்றும் தளவாடக் கட்டமைப்புகள் ஆகியவை உழைப்பால் இயக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய அதிகாரம் இறுதியில் சமூக உழைப்பின் அமைப்பையே சார்ந்துள்ளது. இது, சர்வதேச ஒற்றுமையை வெறும் பேச்சிலிருந்து பொருள்சார் இடையூறாக மாறுவதற்கான சாத்தியக்கூறை, குறைந்தபட்சம் உருவாக்குகிறது.
அதே நேரத்தில், பாலஸ்தீனம் சமகால இடதுசாரிகளின் பெரும் பகுதியினரின் பலவீனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. பல முற்போக்கு அமைப்புகள் உள்நாட்டில் நீதியைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால் சர்வதேச அளவில் ஏகாதிபத்திய வன்முறையை எதிர்கொள்ளும்போது தெளிவற்ற நிலைக்குப் பின்வாங்குகின்றன. மற்றவர்கள் ஆக்கிரமிப்பையும் போரையும் தக்கவைக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை எதிர்கொள்ளாமல், ஒற்றுமையை வெறும் தார்மீக நடிப்பாகச் சுருக்குகிறார்கள்.
ஆனால் இந்தப் பிரச்சனையை வெறும் முரண்பாடாக மட்டும் சுருக்கிவிட முடியாது. தீவிரமான பிரச்சனை என்னவென்றால், ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு முதலாளித்துவத்தைப் பற்றிய அரசியல் தெளிவு தேவைப்படுகிறது. ராணுவவாதம், காலனித்துவ ஆதிக்கம், இனவாதம், எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் ஆகியவை இந்த உலக அமைப்பில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட பகுதிகள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். இந்த பகுப்பாய்வு இல்லாமல், போகும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிக்கும் ஒற்றுமையானது ஒன்றுபட்ட அரசியல் போராட்டமாக மாறுவதற்குப் பதிலாக, ஒரு தொடர்பில்லாத மனிதாபிமானக் கவலைகளாக மட்டுமே சிதறிப்போய்விடும்.
உழைக்கும் வர்க்க ஒற்றுமையை வெறும் கற்பனைகளால் மட்டும் கட்டியெழுப்பி விட முடியாது. இது உறுதியான யதார்த்தங்களைச் சுற்றியுள்ள அரசியல் போராட்டத்தின் மூலம் உருவாகிறது. பாலஸ்தீனம் அத்தகைய ஒரு யதார்த்தமாக மாறியுள்ளது. ஏனெனில் அது முதலாளித்துவம், காலனியாதிக்கம், அரசு வன்முறை, இனம், இறையாண்மை மற்றும் சர்வதேச ஒழுங்கு பற்றிய அடிப்படை கேள்விகளை ஒரே மாதிரியாக வெளிப்படும் நெருக்கடியாகக் காட்டுகிறது.
எனவே இடதுசாரிகளுக்குப் பாலஸ்தீனத்தின் முக்கியத்துவம் பாலஸ்தீனர்களுடனான ஒற்றுமையில் மட்டும் இல்லை, இருப்பினும் அது அத்தியாவசியமானது. தற்போதைய வரலாற்று ஒழுங்கைப் பற்றியும், சர்வதேச அளவில் உழைக்கும் வர்க்க அரசியலை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிலைமைகளைப் பற்றியும் இந்தப் போராட்டம் என்ன வெளிப்படுத்துகிறது என்பதில்தான் இதன் முக்கியத்துவம் உள்ளது.
சிதறடிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தால் உலகளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதனத்தை எதிர்கொள்ள முடியாது. ஆனால் ஒற்றுமை உருவாக பொருளாதார நெருக்கடிகள் மட்டுமல்லாது மேலும் சில தேவைப்படுகின்றன. சர்வதேச அளவில் சுரண்டலையும் வன்முறையையும் உருவாக்கும் கட்டமைப்புகளை அடையாளம் காணும் திறனுடைய அரசியல் உணர்வு அதற்குத் தேவை. அதை பாலஸ்தீனம் நமக்கு தெளிவாக கடத்துகிறது. அந்தக் காரணத்திற்காக, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது உழைக்கும் வர்க்க அரசியலுக்குப் புறம்பானது அல்ல. முதலாளித்துவ அதிகாரம் சார்ந்திருக்கும் பிளவுகளை முறியடிப்பதற்கான நிபந்தனைகளில் இதுவும் ஒன்றாகும்.
— விஜய் பிரசாத்.