Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

உய்குர்; வெடிகுண்டுகளின் கொலைக்களம்-அ.பாக்கியம்

உய்குர்; வெடிகுண்டுகளின் கொலைக்களம்-அ.பாக்கியம்
  • PublishedJuly 1, 2026

 

சமுக மாற்றத்தை படைக்கின்ற, முதலாளித்துவத்திற்கு மாற்றுச் சித்தாந்தை ஏற்றுக்கொண்ட ஒரு அரசை படையெடுத்துதான் வீழ்த்த வேண்டும் என்று இல்லை. உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி உருக்கொளைத்து விடலாம். இரண்டாவது வழிமுறைகளைத்தான் மத தீவிரவாதிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும், மேலைநாடுகளும் தேர்ந்தெடுத்தன.  சீர்திருத்தகாலத்திற்கு பிறகு சீனாவின் வளர்ச்சிகண்டு மேற்கண்ட சக்திகள் அச்சமடைந்தன. இதனால் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து ஜின்ஜியாங் மாகாணத்தில் மதத் தீவிரவாத மற்றும் பிரிவினைவாக சக்திகளும் ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

குறிப்பாக 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாத தாக்குதல்கள் ஜின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் முன்னெடுக்கப்பட்டன. ஜின்ஜியாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய மசூதிகளிலும், மசூதிகளில் நடைபெறக்கூடிய கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளுக்குள்ளும் மத மற்றும் பிரிவினைவாத தீவிரவாதிகள் ஊடுருவி அவற்றை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். சீன மக்கள் குடியரசின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக மத வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாகவே பிரிவினைவாத செயல்பாடுகளுக்கு மத முகமூடிகளை அணிந்து கொண்டனர்.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜின்ஜியாங் மாகாணத்தின் காஷ்கர் நகருக்கு அருகில் உள்ள பேரன் என்ற ஊரில் மசூதிகளுக்கான வழிகாட்டுதல்களை மீறி தீவிரவாதிகள் செயல்பட ஆரம்பித்தனர். இவற்றை ஒழுங்குபடுத்த ஆரம்பித்த பொழுது மக்களை தூண்டி விட்டு போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சியில் இரண்டு உயர் அரசு அதிகாரிகளை அனுப்பியது.  அவர்களை அங்கேயே படுகொலை செய்வதனர். இது சீன அரசுக்கு அதிர்ச்சி அளித்தது. சிறிய காவல் படையை அனுப்பிய பொழுதும் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு சேதத்திற்கு உள்ளானார்கள். இந்த அளவிற்கு தீவிரவாதிகள் தாக்குவதற்கு ஆயுதங்களை ஆப்கானிஸ்தான் உட்பட பல இடங்களில் சேகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விளைவாக மக்கள் சீன ராணுவத்தை அனுப்பி கலவரங்களை ஒடுக்கினார்கள்.

தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் பல இடங்களில் இருந்தது. 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாகாண தலைநகர் உரும்கியில் தீவிரவாதிகள் இரண்டு பேருந்துகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பொதுமக்கள் இறந்தனர். இஸ்லாமிய சீர்திருத்த கட்சியின் ஷாக் பிரிகேட் என்ற அமைப்பு இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று மாகாணத்தின் கோட்டான் (Khotan), காஷ்கர் (Kashgar), யினிங் (Yining) போன்ற நகரங்களிலும் மற்ற சிறிய நகரங்களிலும் பல வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இது போன்ற சதி திட்டங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டதையும் கஜகஸ்தானில் உருவாக்கப் பட்ட விடுதலை அமைப்பு காரணம் என்பதையும் அறிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்கினார்கள்.

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி கோட்டான் நகரத்தில் இருந்த மசூதிகளில் இரு மதத் தலைவர்கள் மத வழிபாட்டுத் தலத்தை பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாகவும் எதிர் புரட்சி சக்திகளுக்கு சாதகமான முறையிலும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் இந்த இரு மதத் தலைவர்களையும் அரசு பொறுப்பிலிருந்து நீக்கியது. தீவிரவாதிகள் காவல் நிலையங்களையும் அரசு அலுவலகங் களையும் தாக்கினார்கள்.

1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம  மாகாணத்தின் யினிங்கில் (Yining)  உள்ள மசூதிகளில் தீவிரவாதிகள் கலந்துரையாடல் என்ற பெயரில் ரகசியமாக செயல்பட ஆரம்பித்தனர். இந்த நகரம் மாகாணத்தின் வடக்கு பகுதியில் இருக்கிறது. இங்கு கசாக் இனத்தவர்கள் தான் அதிகமாக வாழ்கிறார்கள். இருந்தும் உய்குர் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இங்கும்  மதப் போர்வையில் நடப்பதால் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, பல தீவிரவாதிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் எதிர்வினையாக நகரங்களின் பல்வேறு இடங்களிலும், பேருந்துகளிலும்  மத தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் ஒன்பதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இறந்தனர்.

மேற்கண்ட தொடர் சம்பவங்கள் அரசு அமைப்புகளில் புதிய விவாதங்களை முன்னெடுத்தது. 1979 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த மிதமான போக்குகளையும், சகிப்புத்தன்மைகளையும் மாற்ற வேண்டும் என்றும், கடுமையான நடவடிக்கைகளை உட்படுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டது. சீன மக்கள் குடியரசு சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்து வந்தததுடன், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டும் தனிமைப்படுத்தி மேற்கொள்ள ஆரம்பித்தது. இந்த நடவடிக்கைகள் சட்டரீதியாகும் அரசியல் ரீதியாகவும் அமைந்தது. அனைத்து எதிர்ப்பாளர்களையும் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தாமல் அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை கருத்தில் கொண்டது. சுற்றுச்சூழல் பாதுகாவலர்களின் கருத்துக்களையும் தனியாக ஆலோசித்தனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் வெளிநாடுகளிலும் செயல்படக்கூடிய தீவிரவாத அமைப்புகளை பற்றிய கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டன. 1997 மற்றும் 99 ஆம் ஆண்டுகளில் 19க்கு மேற்பட்ட குண்டு வெடிப்புகளை நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தனர்.

இந்த தீவிரவாதிகளுக்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் நிதி உதவி அளித்து வந்தனர். உயிகுர் அமெரிக்க காங்கிரஸ் அமைப்பிற்கு நேஷனல் எண்டோவ்மென்ட் ஆப் டெமாக்ரசி என்ற அமைப்பின் மூலம் அமெரிக்கா நிதி உதவி செய்தது. அமெரிக்க நாடாளுமன்றமும் ஏராளமான நிதி உதவி செய்தது. இதன் மூலம் ஆயுதங்களை வாங்குவது, பயிற்சி அளிப்பது போன்றவற்றில் தீவிரவாதிகள் ஈடுபட ஆரம்பித்தார்கள். 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கஜகஸ்தானில் சீன தூதரக அதிகாரி மற்றும் அவருடைய ஓட்டுனர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று சீன அரசு தெரிவித்தது.

2009 உரும்கி “ஜூலை 5” சம்பவம்

2009 ஜூலை 5 ஆம் தேதி, சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உரும்கியில் கடுமையான வன்முறைக் குற்றச் சம்பவம் நிகழ்ந்தது. சீன அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இது வெளிநாட்டுப் பிரிவினைவாத சக்திகளால் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட  சம்பவமாகும. இது அமைதியான போராட்டம் அல்ல, மாறாக பயங்கரவாதத் தன்மை கொண்ட ஒரு வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட கொடூர வன்முறை நிகழ்வு ஆகும். அதாவது நகரத்தின் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்கள் அனைத்தும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்கள், வாகனங்கள், கடைகள் போன்றவற்றை இலக்காக வைத்து நடைபெற்று உள்ளது.

இந்த தாக்குதலில் 197 பேர் உயிரிழந்தார்கள். உயிர் இழந்தவர்களில் உய்குர் மக்கள், ஹுய் முஸ்லிம்கள், மஞ்சுக்கள், ஹான் இனத்தவர்கள் என அனைவரும் அடங்குவார்கள். 1700க்கு மேல் படுகாயம் அடைந்தனர்.  வெளிநாட்டில் செயல்படக்கூடிய உலக உயிகுர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் இந்த கலவரங்களுக்கு காரணம் என்று சீன அரசு கண்டறிந்தது. சீன மக்கள் குடியரசு வன்முறை குற்றங்களில் ஈடுபட்டவர்களை சட்டப்படி கைது செய்து, விசாரணை நடத்தி ஒன்பது பேருக்கு மரண தண்டனை உட்பட 198 பேர்கள் தண்டிக்கப்பட்டனர். இந்த தாக்குதலின் நோக்கம் ஜின்ஜியாங் கின் இன ஒற்றுமையையும், சமூக ஸ்திரத்தன்மையையும் சீர்குலைப்பதே என்றும், குற்றவாளிகளை சட்டப்படி கடுமையாக தண்டிப்பதும் சமூக ஒழுங்கை மீட்டெடுப்பதும் அவசியமானது என்றும் சீன அரசு வலியுறுத்தியது.  ஜீலைமாதம் சம்பவத்திற்கு முன்பு 2009 ஜூன் 25-26 தேதிகளில்  குவாங்டாங்கில் ஷாவோகுவான் என்ற இடத்தில நடத்திய வெடிகுண்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 118 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் ஜூலை 2009 உரும்கி கலவரங்களைத் தூண்டுவதற்கு முன்னோட்டமாக அமைந்தது.

2009-ஆம் ஆண்டு உரும்கி கலவரங்களுக்குப் பிறகும் வன்முறை தொடர்ந்தது. 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அக்சு (Aksu) பகுதியில் உய்குர் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். பதினான்கு பேர் காயமடைந்தனர். 2011-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று, கோட்டான் (Khotan) நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் மீது உய்குர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதே மாதத்தில் காஷ்கர் (Kashgar) நகரிலும் தாக்குதல் நடைபெற்றது. ஜூலை 2011 ஹோட்டான் தாக்குதல் 18 பேர் இறப்பதற்கு வழிவகுத்தது, அவர்களில் 14 பேர் தாக்குதல் நடத்தியவர்கள். தாக்குதல் நடத்தியவர்கள் உய்குர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஹான் மற்றும் உய்குர் ஆகிய இரு இனத்தவரும் பாதிக்கப்பட்டனர். அந்த ஆண்டு, ஆறு உய்குர் இன ஆண்கள் உரும்கிக்குச் செல்லும் ஒரு விமானத்தைக் கடத்த முயற்சி செய்து  தோல்வியுற்றனர். டிசம்பரில் பிஷான் பணயக்கைதிகள் நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 15 உய்குர் இளைஞர்கள் கொண்ட ஒரு குழு, பயிற்சி பெற எல்லையைக் கடக்க முயன்று, வழி தவறியதால் இரண்டு ஆடு மேய்ப்பவர்களைக் கடத்தி திசை காட்டுமாறு கட்டாயப்படுத்தினர். மேய்ப்பவர்கள் உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஐந்து காவலர்கள் பணயக்கைதிகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்திய போது, கடத்தல்காரர்கள் அவர்கள் மீது கத்தியால் தாக்கி, துணை காவலரைக் கொன்றனர். பதிலடியாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர், 4 பேர் காயமடைந்து கைது செய்யப்பட்டனர். இரண்டு பணயக்கைதிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

28 பிப்ரவரி 2012 அன்று, யெச்செங்கில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் இறந்தனர்.இதில் தீவிரவாதிகள் 7பேர் அடங்குவர். 24 ஏப்ரல் 2013 அன்று, காஷ்கருக்கு அருகில் பாச்சுவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதில் 15 காவல்துறையினர், அதிகாரிகள் உட்பட குறைந்தது 21 பேர் இறந்தனர்.

2013 அக்டோபர் 28 –. உஸ்மென் ஹசன் என்ற தீவிரவாதி , தனது தாய் மற்றும் மனைவியுடன் சேர்ந்து, பெய்ஜிங்கின்  தியானன்மென் சதுக்கத்தில் கூட்டத்தின் ஊடாக ஒரு ஜீப்பை ஓட்டிச் சென்று, அந்த வாகனத்திற்குத் தீ வைத்தார். இதில் 5 பேர் இறந்த துடன் 40 பெர் படுகாயம் அடைந்த்னர்.

2014 மார்ச் 1 –  அன்று குன்மிங் ரயில் நிலையத்தில் எட்டு தீவிரவாதிகள் உள்ளே புகுந்து  கண்ணில்பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு கிழக்கு துர்கிஸ்தான் அமைப்பை சேர்ந்த அப்துர் ரஹீம் குர்பான் என்பவன் தலைமையில் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர், 141 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி உட்பட சர்வதேச சமூகம், சீனாவுடன் இணைந்து இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயல் எனக்  கண்டித்துள்ளது .

2014 மே 22 அன்று ஜின்ஜியாங்க தலைநகர் உரும்கியில் தீவிர வாதிகள் இரண்டு  கார்களை மக்கள் கூட்டம் நிறைந்த சந்தைக் குள் ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்தனர். சுற்றியிருந்த கட்டிடங்கள் மீது வெடிபொருட்களை வீசியதில் 39 பேர் கொல்லப் பட்டனர். 94 பேர் காயமடைந்தனர்.

2014 ஜூலை 30  அன்று காலைத் தொழுகைக்குப் பிறகு ஈத் கா மசூதியில் இமாம் ஜுமா தாஹிர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஜுமா தாஹிர், சீனாவின் மிகப்பெரிய மசூதியான ஈத் காவின் இமாமாகவும், தேசிய மக்கள் காங்கிரஸின் உறுப்பினராகவும், சீன இஸ்லாமிய சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். அப்பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், ஜுமா தாஹிர் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் முயற்சியில் இருந்தார்.

2014 ம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று  வியட்நாமில் ஊடுருவிய  உய்குர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 16 பேர்களை அடையாளம் கண்டு சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காகத்  வியட்நாம் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டபோது, ​​வியட்நாமிய எல்லைக் காவலர்களின் துப்பாக்கிகளைப் பறித்து அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் ஐந்து உய்குர்தீவிரவாதிகளும், இரண்டு வியட்நாமியக் காவலர்களும் இறந்தனர்.

2014 மே 22 அன்று, தலைநகர் ஊரும்கி தெருச்சந்தையில் இரண்டு தற்கொலை கார் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்தத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது சின்ஜியாங் மோதலில் இன்றுவரை நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி , ஜூலை 28 அன்று, ஷாச்சே கவுண்டியில் உள்ள எலிக்ஸ்கு மற்றும் ஹுவாங்டி நகரங்களில் கத்திகள் மற்றும் கோடரிகளுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பலால் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

செப்டம்பர் 21 அன்று, பிராந்திய தலைநகரான ஊரும்கியின் தென்மேற்கில் உள்ள லுண்டாய் கவுண்டியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 50 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஆறு பொதுமக்கள், நான்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் 40 கலவரக்காரர்கள் அடங்குவர்.

அக்டோபர் 12 அன்று, கத்திகள் மற்றும் வெடிபொருட்களுடன் ஆயுதம் ஏந்திய நான்கு தீவிரவாதிகள் சின்ஜியாங்கில் உள்ள ஒரு உழவர் சந்தையைத் தாக்கினர். காவல்துறையின் கூற்றுப்படி, 22 பேர் இறந்தனர் நவம்பர் 29 அன்று, ஷாச்சே கவுண்டி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.

செப்டம்பர் 18, 2015 அன்று, அக்ஸுவில், அடையாளம் தெரியாத கத்தி ஏந்திய பயங்கரவாதிகள் குழு ஒன்று நிலக்கரிச் சுரங்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களைத் தாக்கி, 50 பேர் வரை கொன்றுவிட்டு மலைகளுக்குள் தப்பிச் சென்றது. இந்தத் தாக்குதலுக்கு துர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சி பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணியில் 56 நாட்கள் ஈடுபட்டு அப்போது நடைபெற்ற மோதலில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் சரணடைந்தனர்.

தாய்லாந்து நாட்டில்  100 உய்குர் தீவிரவாதிகள் ஊடுருவி இந்தனர். அவர்ளை தாய்லாந்து சீனாவுக்கு நாடு கடத்தியது.இதற்குப் பதிலடியாக, பாங்காக் நகரத்தில்  குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.  ஆகஸ்ட் 30, 2016 அன்று, கிர்கிஸ்தானின் சீனத் தூதரகம் ஒரு உய்குர் தீவிரவாதியால் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் மட்டுமே. உயிரிழந்தவர்களில் கிர்கிஸ் பணியாளர்கள் காயமடைந்தனர்.  2016 டிசம்பர் 28 அன்று கரகாக்ஸில் குண்டுவெடிப்பு நடத்திய 4 தீவிரவாதிகளை போலீசார் கொன்றனர். 14 பிப்ரவரி 2017 அன்று, கத்தியுடன் வந்த மூன்று தாக்குதல்தாரிகள் ஐந்து பேரைக் கொன்றனர், பின்னர் அவர்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர்.

2017ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலுமாக தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்களை வென்றெடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் இந்த பட்டியலை தொடர்ந்து வருகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் செய்திகள் மட்டுமல்ல. ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி  மாகாணத்தில் சீன அரசு மிகக் கொடூரமான முறையில் உய்குர் மக்களை கொன்று குவிக்கிறது என்று அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளும் பிரிவினைவாதிகளும் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அமெரிக்க ஆதரவுடன் செயல்படக்கூடிய தீவிரவாதிகளின் தாக்குதல் எந்த அளவிற்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்குதான் இந்த பட்டியல் போடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, தீவிரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும், எதிர்த்து போராடுவதில் பொதுமக்கள் மட்டுமல்ல நாட்டுப்பற்றுள்ள மதத் தலைவர்களும், உய்குர் இன மக்களும், சீன நாட்டின் காவல்துறையினரும் பெரும் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மோதல்களில் இறந்தவர்கள் தவிர மற்ற அனைத்து தீவிரவாதிகளும் சட்டப்படியான முறையில் கைது செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள் என்ற தரவும் இந்த பட்டியலில் அடங்கியுள்ளது.

.பாக்கியம்

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *