கொதிக்கும் பூமி: எல் நினோ முதல் Eco -சோசலிசம் வரை!-சுதிர்
எல் நினோ என்றால் என்ன?
‘எல் நினோ’ என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் ‘குட்டி இயேசு’ அல்லது ‘ஆண் குழந்தை’ என்று பொருள். டிசம்பர் மாதத்தில், பெரு நாட்டு கடலோரப் பகுதியில் இந்த நிகழ்வு தொடங்குவதால் மீனவர்கள் இப்பெயரிட்டனர்.
அட்லாண்டிக் பெருங்கடலை விமானத்தில் கடக்க 5 முதல் 6 மணி நேரம் ஆகும் என்றால், பசிபிக் கடலைக் கடந்து பறக்க குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஆகும். பூமியின் மிக பிரம்மாண்டமான இந்த நீர்நிலையில் ஏற்படும் மாற்றம்தான் ஒட்டுமொத்த உலக வானிலையையும் தீர்மானிக்கிறது.
சாதாரண ஆண்டுகளில், பசிபிக் கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ‘வர்த்தகக் காற்றுகள்’ (Trade Winds) பலமாக வீசும். இதனால் தென்னமெரிக்காவிலிருந்து வரும் குளிர்ந்த நீர் ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை நோக்கித் தள்ளப்பட்டு, வெப்பமான நீர் அங்கு தேங்கி நிற்கும். ஆனால் எல் நினோ நிகழ்வின் போது, இந்த வர்த்தகக் காற்றுகள் திடீரென பலவீனமடைகின்றன. காற்றுகள் மாறுவதால், அந்த பிரம்மாண்ட வெப்பமான நீர் பசிபிக் பெருங்கடல் முழுவதும் பரவி, தென் அமெரிக்காவின் கடற்கரை வரை சென்றடைகிறது.
இது வளிமண்டலச் சுழற்சியையும், ‘ஜெட் ஸ்ட்ரீம்’ (Jet Stream) எனப்படும் அதிவேகக் காற்றோட்டத்தையும் முற்றிலுமாக மாற்றியமைக்கிறது. பசிபிக் பெருங்கடலில் காற்றுகள் மாறுவதும், நீர் வெப்பமடைவதும் ஏதோ ஒரு பிராந்திய நிகழ்வு அல்ல; இது ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கப் போகும் ஒரு சங்கிலித் தொடர் எதிர்வினை. விஞ்ஞானிகள் இதனை ‘சூப்பர் எல் நினோ’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். ஏனெனில், தற்போதைய அறிகுறிகளின்படி, நாம் எதிர்கொள்ளப் போவது சாதாரண எல் நினோவை அல்ல, இதுவரை நாம் பார்த்திராத ஒரு பயங்கரமான காலநிலை அரக்கனை! இது இந்தியா முதல் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா மற்றும் தெற்கு அமெரிக்கா வரை பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடியது.
எல் நினோ – லா நினோ எதனால் ஏற்படுகிறது?
கடலும் வளிமண்டலமும் இணைந்து உருவாக்கும் ஒரு நிகழ்வுதான் இந்த எல் நினோ மற்றும் லா நினோ. அறிவியலில் இதனை ‘ENSO’ (El Nino-Southern Oscillation – எல் நினோ தெற்கு அலைவு) சுழற்சி என்று அழைக்கிறார்கள். இது பசிபிக் பெருங்கடலின் நீரோட்டங்களும் காற்றுகளும் திசை மாறுவதால் ஏற்படும் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.
நாம் ஏற்கனவே பார்த்தது போல, வர்த்தகக் காற்றுகள் பலவீனமடைந்து வெப்ப நீர் கிழக்கு நோக்கிப் பரவுவது எல் நினோ. இதற்குச் சரியாக நேர் எதிரானதுதான் லா நினோ (La Nina). லா நினோ காலத்தில் என்ன நடக்கும் என்றால், பசிபிக் கடலின் வர்த்தகக் காற்றுகள் வழக்கத்தை விட மிக அதி தீவிரமாக வீசும். இதனால், பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த நீர், வெப்பமான நீரை தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை நோக்கி மிக வலுவாகத் தள்ளும்.
இதன் காரணமாக, வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆசியப் பகுதிகளிலேயே தங்கிவிடுகிறது. அதேநேரம் குளிர்ந்த நீர் பசிபிக் கடல் முழுவதும் பரவுகிறது. லா நினோவும் எல் நினோவைப் போன்றே உலக வானிலையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும், ஆனால் பல சமயங்களில் தலைகீழான விளைவுகளைத் தரும். எல் நினோ வறட்சியைத் தரும் இடத்தில் லா நினோ பெருவெள்ளத்தைத் தரும். எனவே, ஒரு தீவிரமான லா நினோவும் சில நேரங்களில் எல் நினோவைப் போலவே பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த சில ஆண்டுகளாக எல் நினோ மற்றும் லா நினோ ஆகிய இரண்டு நிலைகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் தீவிரமடைந்து வருவதை நாம் காண்கிறோம். பருவநிலை மாற்றம் கடலைத் தொடர்ந்து வெப்பமாக்கி வருகிறது. ஆனால், இந்த வெப்பமாதல் எல்லா இடங்களிலும் சமமாக நடப்பதில்லை. சில கடற்பகுதிகள் மிக வேகமாக வெப்பமடைகின்றன; சில இடங்கள் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாகவே இருக்கின்றன. இந்தச் சமமற்ற வெப்பநிலையே கடலின் ஒட்டுமொத்த இயக்கவியலை மாற்றியமைத்து, ENSO சுழற்சியை அசுர வேகத்தில் தீவிரப்படுத்துகிறது.
இதற்கு முன்பு நிகழ்ந்த எல் நினோவால் ஏற்பட்ட விளைவுகள்?
நாம் எந்த அளவுக்குக் கவலைப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள, கடந்த கால எல் நினோ வின் தாக்கங்களை நாம் பார்க்க வேண்டும். 1998 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நாம் சந்தித்தவை சாதாரண எல் நினோக்கள் அல்ல; அவை “சூப்பர் எல் நினோக்கள்”. இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகளாவிய வெப்பநிலையை விட சுமார் 0.2 முதல் 0.3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தன.
0.2 டிகிரி என்பது பலருக்குப் சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால் அது உலகளவில் குறைந்தபட்சம் 6 கோடி (60 மில்லியன்) மக்களை நேரடியாகப் பாதித்தது. 1998 இல் ஏற்பட்ட எல் நினோ உலகளவில் 22,000க்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலி வாங்கியது. 2016 எல் நினோ உலகையே நிலைகுலையச் செய்தது.
பாதிப்புகளைப் பட்டியலிட்டால், துணை சஹாரா ஆப்பிரிக்காவில் பருவமழை பொய்த்ததால், தெற்கு ஆப்பிரிக்காவில் மட்டும் 2 கோடி மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கு ஆளாயினர். அதேநேரத்தில், கென்யா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு உண்டானது. லத்தீன் அமெரிக்காவில் உள்ள வறண்ட பகுதிகளில் மேலும் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் மில்லியன் கணக்கான மக்களுக்கு உடனடி உணவு உதவி தேவைப்பட்டது. மேலும் அதே காலகட்டத்தில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் வீசிய ‘பாம்’ மற்றும் ‘வின்ஸ்டன்’ போன்ற கடுமையான சூறாவளிகள் அங்கிருந்த உள்ளூர் உள்கட்டமைப்புகளை முற்றிலும் அழித்தன.
மனிதர்களுக்கு அப்பாற்பட்டு, கடல்சார் சுற்றுச்சூழலில் இது ஏற்படுத்திய பாதிப்பு மிகக் கொடூரமானது. ஒவ்வொரு முறையும் இத்தகைய தீவிர எல் நினோ ஏற்படும் போது, கடலின் வெப்பம் தாங்காமல் பவளப்பாறைகள் வெளுத்து போகின்றன(Coral Bleaching). பவளப்பாறைகள் கடலின் பல்லுயிர்ப் பெருக்கத்தின் தொட்டிலாக உள்ள நிலையில் ஒருமுறை இறந்துவிட்டால், எளிதில் மீண்டும் உயிர்பெறுவதில்லை. எல் நினோ ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே நீடித்தாலும், அதனால் அழியும் பவளப்பாறைகள் மீண்டும் வளர்ந்து வர பல நூறு ஆண்டுகள் கூட ஆகும். அல்லது சில சமயங்களில் அவை மீண்டும் வளராமல் முற்றிலும் அழிந்து போய்விடுகின்றன. பொருளாதார இழப்பை விட, மனிதர்கள் மற்றும் ஒட்டுமொத்த உயிரினங்கள் மீதான இதன் தாக்கம் கணக்கிட முடியாதது.
இந்தியாவில் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
உலகளாவிய பாதிப்புகளைப் பார்த்த நாம், இப்போது மிக முக்கியமாக “நம் இந்தியாவில் இந்த எல் நினோ என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது?” என்பதைப் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் தென்மேற்குப் பருவமழையை நம்பியே இருக்கின்றன. இந்த எல் நினோ அந்தப் பருவமழையைத்தான் நேரடியாகத் தாக்குகிறது.
முதலாவதாக, வட இந்தியா மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். பருவமழை பொய்ப்பதால், விவசாய உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடையும். குறிப்பாக நெல், கரும்பு, பருப்பு வகைகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தையில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் நிலை உருவாகலாம். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும்.
இரண்டாவதாக, கோடை காலத்தில் வழக்கத்தை விட மிகக் கொடூரமான வெப்ப அலைகள் (Heatwaves) வீசும். வட மாநிலங்களில் வெப்பநிலை இயல்பை விட பல டிகிரி உயர்ந்து, மனிதர்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்படும். நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும்.
ஆனால், இதில் ஒரு விசித்திரமான மாறுபாடும் நடக்கும். எல் நினோ வட இந்தியாவில் வறட்சியை ஏற்படுத்தினாலும், வளிமண்டலக் காற்று மாறுபாட்டால் தென் இந்தியா, குறிப்பாகத் தமிழகம் மற்றும் அண்டை நாடான இலங்கையில் அக்டோபர் – டிசம்பர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் திடீரென அதீத கனமழையையும், வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, ஒரே காலகட்டத்தில் நாட்டின் ஒரு பகுதியில் கடுமையான வறட்சியையும், மற்றொரு பகுதியில் பேரழிவு வெள்ளத்தையும் உருவாக்கும் இரட்டை முனைக் கத்தியாக இந்த எல் நினோ இந்தியாவுக்கு மாறப் போகிறது. நமது நாட்டின் சிறு விவசாயிகளையும், உழைக்கும் மக்களையும் காக்க அரசாங்கம் இப்போதிருந்தே போர்க்கால அடிப்படையில் திட்டமிட வேண்டியது அவசியமாகும்.
புவி வெப்பமயமாதல் எவ்வாறு உருவாகிறது?
சூரிய ஒளி (Solar Radiation)
│
▼
┌───────────────────────────┐
│ வளிமண்டலம் (Atmosphere) │ ◄─── கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (CO2, Methane)
└───────────────────────────┘ (வெப்பத்தைத் தடுத்து நிறுத்துகிறது)
│
▼
பூமி வெப்பமடைதல்
சரி, இந்த எல் நினோவிற்குப் பின்னால் இருக்கும் மற்றொரு பெரும் காரணியான ‘புவி வெப்பமயமாதல்’ எவ்வாறு உருவாகிறது?. எளிமையாகச் சொன்னால், மனித நடவடிக்கைகளால், குறிப்பாகப் பெருநிறுவனங்களின் லாப வெறியால் வளிமண்டலம் ஒரு கொதிகலனாக மாற்றப்படும் நிகழ்வுதான் இது.
புதைபடிவ எரிபொருட்களை (Fossil Fuels) எரிக்கத் தொடங்கிய 1850-1900 தொழிற்புரட்சி காலத்திற்குப் பிந்தைய மனித நடவடிக்கைகளால் பூமியின் வெப்பநிலை ஏற்கனவே சுமார் 1.0°C முதல் 1.2°C வரை உயர்ந்துள்ளது. நாம் நிலக்கரி, கச்சா எண்ணெய், பெட்ரோல் போன்றவற்றை அள்ளியள்ளி எரிக்கும் போதும், காடுகளை வனாந்தரமாக அழிக்கும் போதும் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் பெருமளவில் குவிகின்றன.
பூமிக்குச் சூரியனிடமிருந்து வரும் வெப்ப கதிர்வீச்சின் ஒரு பகுதி விண்வெளிக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆனால் வளிமண்டலத்தில் போர்த்தப்பட்டுள்ள இந்த கார்பன் வாயுப் போர்வை, பூமியிலிருந்து வெளியேற வேண்டிய அகச்சிவப்பு கதிர்களை விண்வெளிக்குச் செல்லவிடாமல் தடுத்து, வளிமண்டலத்திலேயே சிறைபிடிக்கிறது. இதன் விளைவாகவே பூமியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்கிறது.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான உண்மை ஒன்றுள்ளது. உலகளாவிய சராசரி உயர்வை விட, நாம் வாழும் நிலப்பகுதிகளும் ஆர்க்டிக் போன்ற துருவப் பகுதிகளும் 2 முதல் 3 மடங்கு அதிவேகமாக வெப்பமடைந்து வருகின்றன. தற்போதைய வேகத்திலேயே கார்பன் உமிழ்வு நீடித்தால், வரும் 2030 மற்றும் 2052 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புவி வெப்பநிலை உயர்வு 1.5°C என்ற அபாயகரமான எல்லையைத் தொட்டுவிடும். இது வெறும் இயற்கை நிகழ்வல்ல; மனிதன் உருவாக்கிய பேராசையின் விளைவு.
எல் நினோவிற்கும் புவி வெப்பமயமாதலுக்கும் தொடர்பிருக்கிறதா?
இப்போது மிக முக்கியமான கேள்வி, எல் நினோவிற்கும் புவி வெப்பமயமாதலுக்கும் தொடர்பிருக்கிறதா?. இந்த எல் நினோ முற்றிலும் பருவநிலை மாற்றத்தால்தான் உருவானதா அல்லது அது இயற்கையான பெரிய சுழற்சியின் ஒரு பகுதியா என்பதை நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியாது. ஆனால் எல் நினோ உலகளாவிய வெப்பநிலையில் உண்மையான தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.
அப்படியென்றால், பூமி தொடர்ந்து வெப்பமடைந்தால் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு சிறு முன்னோட்டமாக இந்த சூப்பர் எல் நினோவை நாம் எடுத்துக் கொள்ளலாமா? இதற்கான பதில் ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ ஆகிய இரண்டுமேதான்.
‘ஆம்’ என்று சொல்வதற்குக் காரணம், தீவிரமான பருவநிலை மாற்றம் எப்படி இருக்கும் என்பதையும், அதனால் ஏற்படும் வானிலை சீர்குலைவுகளையும் இந்த எல் நினோ நமக்குக் காட்டுகிறது. ‘இல்லை’ என்று சொல்வதற்குக் காரணம், எல் நினோ என்பது ஒரு குறிப்பிட்ட தனித்துவமான நிகழ்வு. இது பசிபிக் கடலில் ஏற்படும் வெப்ப மற்றும் ஈரப்பத மாற்றத்தால் மட்டுமே இயக்கப்பட்டு, பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளைப் பாதிக்கிறது. ஆனால் பருவநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் வெவ்வேறு புவியியல் வழிகளில் பாதிக்கிறது. எனவே எல் நினோவின் புவியியல் பாதிப்புகளும், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளும் ஒரே மாதிரியாக இருக்காது.
இங்கு ஒரு முக்கிய அரசியல் சூழ்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல் நினோ நிகழ்வுகள் ஏற்படும் போது வெப்பநிலை உச்சத்தை எட்டுகிறது, அதன் பிறகு அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் வெப்பநிலை சற்றே குறைகிறது. அது உண்மையில் பூமி குளிர்ச்சியடைவது அல்ல; ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வரும் சராசரி வெப்பநிலைக்கு அது மீண்டும் திரும்புகிறது, அவ்வளவுதான்!
எனவே வெப்பநிலை ஏறுவதும், சற்று இறங்குவதும், மீண்டும் ஏறுவதுமாகவே இருக்கும். அந்தச் சிறிய இறக்கத்தைக் காட்டி, “பருவநிலை மாற்றம் பொய்” என்று கார்ப்பரேட்டுகளும் சில சுயநலவாதிகளும் வாதிடுகிறார்கள். ஆனால் அவர்கள் முந்தைய எல் நினோவின் உச்ச வெப்பநிலையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள், உண்மையான சராசரி உயர்வைக் கவனிப்பதில்லை. இந்த 2026 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே இரண்டாவது மிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2027 ஆம் ஆண்டு, இந்த எல் நினோவின் தாக்கத்தால், புவி வெப்பமயமாதலின் அளவு 1.5 டிகிரி செல்சியஸை விட மிக அதிகமாக உயரப்போகிறது என்பதுதான் கசப்பான உண்மை.
IPCC அறிக்கையின் தீர்வுகளும் இலக்கும்; உலக நாடுகள் செய்ய வேண்டியவைகளும்
புவி வெப்பமயமாதல் 1.5°C மற்றும் 2°C ஒப்பீட்டு அட்டவணை

பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேசக் குழு (IPCC) 2018 ஆம் ஆண்டில் ‘குளோபல் வார்மிங் 1.5’ (Global Warming 1.5°C) என்ற மிக முக்கியமான சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸாக மாறவிடாமல் 1.5 டிகிரிக்குள்ளாகவே கட்டுப்படுத்தினால் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த அறிக்கை ஒப்பிட்டுக் காட்டியுள்ளது.
பாதிப்புகள் நேரியல் முறையில் இருப்பதில்லை. அதாவது 0.1 டிகிரி வெப்பநிலை உயர்ந்தால் 1% பாதிப்பு ஏற்படும் என்று சாதாரணமாகக் கணக்கிட முடியாது. வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க, அதன் பாதிப்புகள் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும்.
உலக நாடுகள் செய்ய வேண்டிய அவசர நடவடிக்கைகள் என்ன? உலகளாவிய மனித கார்பன் உமிழ்வு (Net CO2 emissions) 2030 ஆம் ஆண்டிற்குள் 2010 இன் அளவிலிருந்து 45% ஆகக் குறைக்கப்பட வேண்டும். மேலும் 2050 ஆம் ஆண்டிற்குள் ‘நிகர பூஜ்ஜியம்’ (Net Zero Emissions) என்ற நிலையை அடைய வேண்டும். 2050க்குள் உலகின் மின்சாரத் தேவையில் 70% முதல் 85% வரை சூரிய ஒளி, காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். நிலக்கரியின் பயன்பாடு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக்கப்பட வேண்டும். காடுகளை வளர்ப்பது மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் வளிமண்டலத்தில் இருக்கும் கூடுதல் கார்பனை நேரடியாக உறிஞ்சி அகற்றும் முறைகளைச் செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் இந்த அறிவியல் கணிப்புகளை ஏற்றுக் கொண்டு, அது எந்தெந்தப் பகுதிகளைப் பாதிக்கும் என்பதை ஆராய வேண்டும். பாதிப்புகளை முற்றிலும் தடுக்க முடியாது, ஆனால் குறைக்க முடியும். கூடுதலான உணவைச் சேமித்து வைப்பது, மக்களுக்கான தங்குமிடங்களை உறுதி செய்வது என அரசாங்கங்கள் போர்க்கால அடிப்படையில் திட்டமிட வேண்டும். புவி வெப்ப உயர்வை 1.5°C ஆகக் கட்டுப்படுத்துவது தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் உலக மக்களின் எண்ணிக்கையை 50% வரை குறைக்க உதவும். இது வெறும் அறிவியல் இலக்கு அல்ல; மனிதகுலத்தின் உயிர் பிழைப்பதற்கான போராட்டம்!
மக்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும்?
அரசாங்கங்களின் கொள்கைகள் ஒருபுறமிருக்க, இந்த எல் நினோ பாதிப்புகளிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?. விஞ்ஞானிகள் நமக்கு 6 முதல் 12 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளதால், வரப்போகும் மிக மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நம்மால் தயாராக முடியும்.
முதலாவதாக, வரப்போகும் தீவிர வானிலை மாற்றங்களை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எல் நினோவினால் கிழக்கு ஆப்பிரிக்கா, வட இந்தியா, வடகிழக்கு பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் கடுமையான வறட்சி ஏற்படும். அதே நேரத்தில், கலிபோர்னியா, தென்னமெரிக்கா, இலங்கை மற்றும் கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவில் வெள்ள பாதிப்புகள் உண்டாகும்.
இதில் மிக முக்கியமான பிரச்சினை உணவுப் பாதுகாப்பு (Food Security). ஏனெனில் நமது உணவில் பாதியாவது சிறு விவசாயிகளால்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இவர்கள் வெளியில் வேலை செய்பவர்கள். கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக இவர்களால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும். இது உணவு உற்பத்தியைப் பாதித்து, உணவின் விலையை உயர்த்தும். எனவே, மக்கள் உள்ளூர் அளவில் கூட்டுறவு உணவுச் சேமிப்பு முறைகளை உருவாக்க வேண்டும். வறட்சியின் போது தேங்கி நிற்கும் சிறிய நீர்நிலைகள் மெதுவாக வற்றத் தொடங்கும்போது, அவை பல கொடிய நோய்களை உருவாக்கும் கிருமிகளின் இருப்பிடமாக மாறும் என்பதால், ஆரோக்கிய விழிப்புணர்வு மற்றும் தூய்மையான குடிநீர் மேலாண்மை மிக அவசியம்.
இதற்கு உலகளவில் பங்களாதேஷ் ஒரு மிகச்சிறந்த உதாரணம். 1970களில் பங்களாதேஷில் புயல்களினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதன் பிறகு அவர்கள் சொந்தமாக ஒரு வானிலை ஆய்வு மையத்தை அமைத்து, புயல் எப்போது தாக்கும் என்பதைக் கணித்தனர். ரேடியோக்கள் மூலமாகவும், மிதிவண்டிகள் மூலமாகவும் கிராமம் கிராமமாகச் சென்று செய்தியைப் பரப்பினர். மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டபோது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. அவர்கள் மக்களுக்கான பாதுகாப்பு முகாம்களையும், வெள்ளத்திலும் அழியாத ‘மிதக்கும் விவசாய முறைகளையும்’ உருவாக்கினர். இதன் விளைவாக, இப்போது அங்கு மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. பங்களாதேஷ் மக்களைப் போல விழிப்புணர்வும், உள்ளூர் சமூகங்களின் கூட்டுப் பொறுப்பும் மக்களுக்கு இன்று தேவை.
இப்பிரச்சனைக்குத் தீர்வு மார்க்சியமே!
இப்போது நாம் இறுதிப் பகுதிக்கு வருகிறோம். அறிவியல் பூர்வமாகப் பல தீர்வுகளையும், பங்களாதேஷ் போன்ற தற்காப்பு உதாரணங்களையும் பேசினாலும், நாம் ஒரு உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். கார்பன் உமிழ்வைக் குறைக்க உலக நாடுகள் தவறுவதற்குக் காரணம் அவர்களின் தொழில்நுட்பக் குறைபாடு அல்ல; மாறாக அவர்களின் ‘முதலாளித்துவ லாப வெறி’. அதனால்தான், இப்பிரச்சனைக்கு இறுதித் தீர்வு மார்க்சியமே என்று நாம் அழுத்தமாகக் கூறுகிறோம்.
கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் மற்றும் சமகால மார்க்சிய அறிஞர் ஜான் பெல்லாமி பாஸ்டர் ஆகியோர் முன்வைத்த ‘எகோ-சோசலிச’ (Eco-Socialism) தத்துவமே இதற்கான வழிகாட்டி.
மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ (Das Kapital) நூலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தைக் குறிப்பிடுகிறார். அதுதான் ‘வளர்சிதை மாற்ற முறிவு‘ (Metabolic Rift). மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே ஒரு சமநிலையான வளர்சிதை மாற்றம் (Metabolism) நிலவ வேண்டும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறை, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. அது நிலத்தையும், உழைப்பையும், கடலையும் அசுரத்தனமாகச் சுரண்டி, இயற்கையின் இந்த வளர்சிதை மாற்றத்தில் ஒரு பெரும் முறிவை ஏற்படுத்துகிறது என்று மார்க்ஸ் அன்றே எச்சரித்தார்.
பிரடெரிக் எங்கெல்ஸ் தனது ‘இயற்கையின் இயக்கவியல்’ (Dialectics of Nature) நூலில் எழுதிய வரிகள் இன்று நமக்கு அப்படியே பொருந்துகின்றன: “இயற்கையின் மீது நாம் பெற்ற வெற்றிக்காக நாம் அதிகமாக மகிழ வேண்டியதில்லை. ஏனெனில், ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மிடம் பழிவாங்குகிறது“. இன்று தீவிரமடையும் சூப்பர் எல் நினோவும், புவி வெப்பமயமாதலும் முதலாளித்துவம் இயற்கையின் மீது தொடுத்த போருக்கான பழிவாங்கல்தான்!
ஜான் பெல்லாமி பாஸ்டர் இதனை விளக்கும்போது, முதலாளித்துவத்தின் ‘முடிவில்லாத வளர்ச்சி’ என்ற பேராசை, ‘முடிவுள்ள’ பூமியின் வளங்களோடு முரண்படுகிறது என்கிறார். பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பது என்பது வெறும் தொழில்நுட்ப மாற்றம் அல்ல; அது சமூக-பொருளாதார அமைப்பின் மாற்றம்.
ஏனெனில், முதலாளித்துவ அமைப்பில் 2050க்குள் ‘நிகர பூஜ்ஜியம்’ கார்பன் உமிழ்வை எட்ட முடியாது. லாபத்தை முதன்மையாகக் கொண்ட முதலாளித்துவத்தை வீழ்த்தி, மனிதனின் தேவையையும் இயற்கையின் சமநிலையையும் முதன்மையாகக் கொண்ட சோசலிச அமைப்பை உருவாக்குவதே இந்த சுற்றுச்சூழல் பேரழிவிலிருந்து ஒட்டுமொத்த மனிதகுலத்தையும், புவியின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் காப்பாற்றுவதற்கான ஒரே நிரந்தரத் தீர்வு! இயற்கையோடு இயைந்த ஒரு சோசலிச உலகைப் படைப்போம். நன்றி!
சுதிர்
1 Comment
Useful information for awareness congratulations…