அண்ணாவின் அரசியல் ஓர் பார்வை!
அரசியல் களத்தில் தனிப்பட்ட மனிதர்களின் குணநலன்கள் மாற்றங்களை நிகழ்த்துவதில்லை. எனினும், அண்ணாவின் நேர்மை, எளிய வாழ்க்கை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றும் பாங்கு, போன்ற அவரது சிறந்த பண்புகள் கட்சியின் தாக்கத்தை ஏற்படுத்தியது. கலை, இலக்கியம் என பல துறைகளில் பன்முகத்திறமைகள் கொண்டவராகவும் அவர் வாழ்ந்தார். பிற்காலத்தில் அவரைப் பின்பற்றி, அதிகாரத்தில் வந்தவர்கள் இந்தப் பண்புகளைக் கொண்டவர்களாக இருக்கவில்லை என்பது தமிழகம் அறிந்ததே.
தேர்தலுக்கு(1967) முன்பு கூட இடதுசாரி கொள்கைகள் மீது திமுக தலைமைக்கு நாட்டம் இருந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தனது பிறந்த நாளன்று அண்ணா வெளியிட்ட அறிக்கையில் “காங்கிரஸ் கட்சிக்குள் வலதுசாரி, இடதுசாரி சக்திகள் மோதுகின்றன. அதில் வலதுசாரிகளின் கை மேலோங்காமல் பார்த்துக் கொள்வது நாட்டுக்கு நல்லது” என்று அண்ணா எழுதினார். (அண்ணா பவளவிழா மலர்-1983)
காலனித்துவ எதிர்ப்பல்ல; பிராமணீய எதிர்ப்பு:
திராவிட நாடு கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்காத நிலையில் 1947 ஆகஸ்ட் 15 விடுதலை நாளை துக்க தினமாக கடைபிடிக்க பெரியார் அறைகூவல் விடுத்தார். காங்கிரஸ் கட்சியைப் பிராமண ஆதிக்கத்தின் கட்சியாக கண்டதால் காங்கிரஸ் கையில் நாடு செல்வதை பெரியார் விரும்பவில்லை. அதனால் இந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக, விடுதலை தினத்தை துக்க தினமாக அவர் அறிவித்தார்.
இருநூறு ஆண்டுக்கால கனவாக இருந்த விடுதலை இலட்சியம் நிறைவேறும் அந்த மகத்தான தினத்தை துக்க தினம் என்பதை மக்கள் இயல்பாகவே ஏற்கவில்லை. இதனை உணர்ந்த அண்ணா பெரியாரின் முடிவுடன் முரண்பட்டு நின்றார். விடுதலை நாளினை தயக்கமில்லாமல் கொண்டாட வேண்டும் என்றும், காங்கிரஸ் எதிர்ப்பு என்பது வேறு, அதனை விடுதலைக்கான எதிர்ப்பாக மாற்றி விடக் கூடாது என்றும் அண்ணா கருத்து தெரிவித்தார்.
அண்ணாவின் ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பபு நிலை காலனிய சுரண்டலை மையமாகக் கொண்டது என்று கருத இயலாது. இது பற்றி அவர் அவ்வப்போது எழுதியிருந்தாலும் அந்நிய ஆட்சியின் மக்கள் மீதான கொடூரமான சுரண்டலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆங்கிலேய ஆட்சி என்பது பிராமண ஆதிக்கத்திற்கு இடமளித்தது என்பதுதான் அண்ணா ஆங்கில ஆட்சியை எதிர்த்ததற்கான அடிப்படை.
அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்ட தலைவர்கள் எழுதி வந்த எழுத்துகள் பேசுவதற்கான விஷயங்களை உள்ளூர் மட்ட ஊழியர்களுக்கு வழங்கின.எடுத்துக்காட்டாக, ”தம்பிக்கு” கடிதங்கள் என்று அண்ணா தொடர்ந்து எழுதிய கடிதக் கட்டுரைகள் தற்போது ஏழு தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அந்தக் கடிதங்கள் அனைத்தும், அன்றாட அரசியல் உரையாடலைத் தூண்டுவதற்கான கருவிகளாக பயன்பட்டன
திமுகவின் முதலாளித்துவ பாதை:
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தினைப் பற்றி விவாதிக்க டெல்லியில் மத்திய அரசின் சார்பில் தேசியக் கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டது.அதில் அன்று கேரளாவின் முதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ் .நம்பூதிரிபாட், மேற்கு வங்கத்திலிருந்து ஜோதிபாசு ஆகிய கம்யூனிஸ்ட் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.இருவரும் மத்திய அரசின் திட்ட நகலை எதிர்த்தனர். திட்டம் எப்படி மக்களுக்கு பலன் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டும் வகையில் மாற்று நகல் ஒன்றினை கூட்டத்தில் கேரள முதலமைச்சர் இ.எம்.எஸ்.முன்வைக்கின்றார். அந்த நகலை ஜோதிபாசு ஆதரித்தார்.
ஆனால் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் அண்ணா, மத்திய அரசு ராணுவச் செலவுகளைக் குறைக்க வேண்டும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்; தமிழ்நாட்டிற்கு அதிக தொகை ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்தியதோடு தனது உரையை முடித்துக் கொண்டார். மக்களுக்கு அதிக வரி விதித்து நிதி திரட்டுவது,பெரிய முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளைக் கொண்டுள்ள மத்திய அரசின் திட்ட அடிப்படையை அண்ணா எதிர்க்கவில்லை.
“திமுக சோசலிசத்தைப் பற்றி பிரமாதமாக பேசி வந்தாலும். இந்த நாடு முதலாளித்துவப் பாதையில் போவதை அது எதிர்க்கவில்லை; அந்த முதலாளித்துவ வளர்ச்சியிலே தமிழ்நாட்டிற்கு அதிகப் பங்கு வேண்டும் என்பதே அதன் இலட்சியம்.”என்று பி.ராமமூர்த்தி எழுதியுள்ளார்.
அடுத்த வாரிசு:
திமுக உருவான போது பெரியாருக்காக அதன் தலைமைப் பொறுப்பு நிரந்தரமாகக் காலியாக விடப்படுவதாக ஒருபுறம் அறிவிக்கின்றனர். மறுபுறம் பெரியாரின் கருத்தியல் அம்சங்கள் பலவற்றைக் கைவிடுகின்றனர். இந்த முரண்பாடு அண்ணா இருந்தபோதும், பிறகு அவர் மறைந்தபோதும் தொடர்ந்து நீடித்தது.
அண்ணா தனக்குப் பிறகு யார் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று அறிவிக்கவில்லை. பெரியார் தனக்கு வாரிசு என மணியம்மையை அறிவித்திருந்தார். அது போன்று அண்ணா வாரிசு என்று யாரையும் சுட்டிக் காட்டவில்லை.தனக்குப் பிறகு யார் என்பதை ஜனநாயகப் பூர்வமாக கட்சி முடிவு செய்யும் என்பது அண்ணாவின் எண்ணம் என திராவிட இயக்க ஆய்வாளர்கள் சிலர் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. வாரிசு என்ற பிரச்னையை எழுப்பினால் கட்சிக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டு கட்சி ஒற்றுமை குலைந்து சிதறிடும் என்று அண்ணா அச்சப்பட்டிருக்கலாம்.
எதிர்பார்க்காமல் கிடைத்த வெற்றி:
அண்ணா உட்பட யாரும் எதிர்பார்க்காத வகையில் 1967-தேர்தலில் வெற்றி திமுகவிற்கு கிட்டியது. முந்தைய ஆண்டுகளில் திராவிட இயக்க கொள்கைகளுக்காகப் போராடி வந்த இயக்கப் போராளிகள், திடீரென்று அந்த வாழ்க்கை முறையிலிருந்து மாறி அதிகாரத்தை சுவைக்கும் நிலை உருவானது. ஆட்சி அதிகாரத்திற்கு பதவி போதையை கிளறி விடும் குணம் உண்டு என்பது வரலாற்று அனுபவம். இந்த சூழலில் கட்சியிலும் ஆட்சியிலும் முதன்மை பதவி காலியாகிறது என்றால் இயல்பாகவே பதவிக்கான உக்கிரமான போட்டி நடக்க வாய்ப்புள்ளது. இதனால், வாரிசு என்று ஒருவரை அடையாளம் காட்ட அண்ணா தயங்கியிருக்கலாம். அல்லது, தகுதியானவர் கையில் தலைமைப் பொறுப்பு சென்றடையாத நிலை ஏற்படும் என்றும் கூட அவர் அச்சப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது.
இதனை கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்திக்கும் அண்ணாவிற்கும் இடையே நடந்த உரையாடல் உணர்த்துகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பி உடல்நலம் குன்றிய நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அண்ணா. அந்த நிலையில் அவரை சந்தித்தபோது நீண்ட கால நண்பர் என்ற வகையில் தனது கருத்துக்களை அண்ணா அவரோடு பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன கருத்துக்களை பி.ராமமூர்த்தி தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
“என்னுடைய கட்சி நான் விரும்பியதற்கு முன்பே ஆட்சிக்கு வந்துவிட்டது. நான் இன்னும் சில காலத்திற்குப் பிறகுதான் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய கட்சியில் லஞ்ச ஊழல் பரவி விட்டது. நோய்வாய்ப்பட்டிருக்கும் இதே நிலையில் இதை சீர்படுத்தும் நிலையில் நான் இல்லை. எனவே பணியாற்றிக் கொண்டே உயிர் நீத்து விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். (I am determined to die in harness)” என்று அண்ணா கூறினார்.
அவர் கூறிய இந்தக் கருத்துக்கள்”என்னை திடுக்கிடச்செய்தது” என பி.ராமமூர்த்தி எழுதியுள்ளார். அண்ணாவே கவலையுடன் வருந்துகின்ற அளவில் கட்சிக்குள் நிலைமை மோசமாக இருந்தது. எனவே, வாரிசு என்று யாரையும் அறிவிக்காமல் முடிந்த வரை ஓடட்டும் என்ற மனநிலைக்கு அண்ணா அன்று வந்துவிட்டதாகத் தெரிகிறது.
-என்.குணசேகரன் (திராவிட இயக்கம் மறுவாசிப்பில் நூலாசிரியர்)