Tamil Marx

புத்தக விமர்சனம்

தீண்டாத வசந்தம் – புத்தக அறிமுகம் – Dr.வினிஷா

தீண்டாத வசந்தம் – புத்தக அறிமுகம் – Dr.வினிஷா
  • PublishedJune 8, 2026

வசந்தம் என்றாலே அழகானது; தீண்டத் தூண்டுவது; பார்க்கப் பார்க்க சலிப்பு தராதது; ஆனந்தம் அள்ளித் தெளிப்பது. அப்படியான வசந்தம் தீண்டாமல் போனது எதனால்? என்ற கேள்விக்கு பதில் தருகிறது தீண்டாத வசந்தம்.

தமிழில் நாம் படித்திருக்கும் தலித்திய இலக்கியங்களைப் போல, தெலுங்கு தலித் மக்களின் வாழ்வியலை பேசுகின்ற நூலாக இந்நாவல் ஜி. கல்யாண ராவ் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.இதை தமிழில் ஏ. ஜி. எத்திராஜூலு மொழிப் பெயர்ப்பு செய்துள்ளார்.

சமீபத்தில் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு பல இடங்களில் இருந்து பல வாழ்த்துகல் வந்தன. நாம் அனைவரும் அதை பார்த்தோம். அதில் என் கவனத்தை ஈர்த்த ஒரு பதிவை இங்கே தருகிறேன்:

“அடக்குமுறைகளையும் அவமானங்களையும் கலையால் வென்றெடுத்த ஆசான்” என்பது தான்.

அவரின் அரசியல் கொள்கைகளில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் கலையால் அவர் வென்றெடுத்த அடக்குமுறைகளைக் அனைவரும் கவனிக்க வேண்டியது மிக அவசியம்.

ஒரு சாதி இந்துக் கலைஞனுக்கும் தலித் கலைஞனுக்கும் இருக்கும் மிகப் பெரிய வேறுபாடே சாதி தான். இருவரும் ஒரே மாதிரியான உழைப்பை செலுத்தினாலும், தலித் கலைஞன் கூடுதலாக சாதியையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. அப்படியான போராட்டக் கலைஞனின் படைப்புதான் தீண்டாத வசந்தம்.

நிலாத்திண்ணை கிராமம்

எல்லண்ணா என்ற சிறுவன் தனது அத்தை பூதேவியோடு மற்றக் குழந்தைகளைப் போலவே வாழ்ந்து வந்தான். அவர்கள் ஊரில் கூத்து நடக்கும்; அதைப் பார்ப்பதற்கு மருகனைக் (எல்லண்ணாவை) கூட்டிக்கொண்டு அத்தை செல்வாள்.

எல்லாரையும்போல் அவர்களால் முதல் வரிசையில் இடம் பிடிக்க முடியாது. கூத்து நடக்கும் இடத்தின் உள்ளே கூட செல்ல முடியாது. கூத்து நடக்கும் இடத்திலிருந்து தொலைதூரத்தில் இரண்டு மேடுகள் இருக்கும். அதில் ஒன்று பறைச்சேரி மக்களுக்கு, மற்றொன்று சக்கிலியச்சேரி மக்களுக்கு. அங்கு அமர்ந்து தான் அவர்கள் கூத்து பாக்க வேண்டும் என்ற தீண்டாமை இருந்தது.

கூத்து மேடைக்கு முன்னே சமதளத்தில் ரெட்டிமார்களும் ஐயர்களும் அமர்ந்திருப்பார்கள். தொலைவிலிருந்து சரியாகத் தெரியாத கூத்தை எட்டி எட்டிப் பார்ப்பார்கள் சேரி மக்கள்.

பாட்டும் கூத்தும் எல்லண்ணாவிற்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. அப்படித்தான் கூத்துப் போட வந்தவர்களை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கொட்டகைக்கேச் சென்று விட்டான் எல்லண்ணா.

அங்கே இருந்த ஒருவன் கேட்கிறான்: “நீ பறையன்தானே?” — “பிச்சையின் மகன்.” கேட்ட கேள்விக்கான பதிலை எல்லண்ணா சொன்னதும் அவனை பனை மட்டையால் தாக்கத் தொடங்குகிறார்கள்.

அவன் நிர்வாணமாக ஓடுகிறான். கல்லெறிகளை தாங்க முடியாமல், நீந்த தெரியாமல் ஆற்றைக் கடந்து எங்கோ ஓடுகிறான். இரவை உடையாய் அணிந்துகொண்டு அழுகை தாங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறான். ஒரு இடத்தில் பாட்டுச் சத்தம் கேட்கிறது. நிற்கிறான். தாளத்தைக் கேட்கிறான். கால்கள் ஆடுகின்றன, கைகள் ஆடுகின்றன. வலியை மறந்து, பசியை மறந்து, உடலை மறந்து ஆடிக்கொண்டே இருக்கிறான். அங்கு ஒரு கலைஞன் உருவாகிறான்.

அங்கிருந்து பிறக்கிறது இந்த அழகான தீண்டப்படாதவனின் கலைப் பயணம். அங்கு தொடங்கி அவன் கால்கள் பயணிக்கின்றன. சாதி தீண்டாமையை எதிர்த்து. கலையை ஆயுதமாக்கிய கலைஞன் எல்லண்ணா பயணிக்கிறார்.

இந்தக் கதையை ரூபன் தனக்கு சொன்னதை நினைவுகூர்கிறாள் ரூத். தன் தாத்தா எல்லண்ணாவின் கதையை ஒவ்வொரு முறை கூறும்போதும் ரூபனுக்கு கண்கள் கலங்கும்; நிலவைப் பார்த்ததும் பாடிச்செல்கின்ற நிலாக்குருவி ஞாபகத்திற்கு வரும்.

“அப்படியான மண்ணிலிருந்துதான் என் கதை தொடங்குகிறது. மேல் சாதித் தெருவில் நடக்க மறுத்ததை எதிர்த்து மேட்டுப் பகுதியில் வீடு கட்டிய நாரிகான் தாத்தாவும், எங்களின் உழைப்பில் சுரண்டிச் சேர்த்த சொத்தை பட்டினிக் காலங்களில் மக்களுக்கு கொண்டுவந்து தந்த மாத்தையா தாத்தாவும்தான் என் முன்னோர்கள். கழுத்திலே மொந்தையும் இடுப்பிலே பனை ஓலையும் கட்டப்பட்டவர்கள். படிப்பின் வாசனை அறியாத என் தலைமுறைகளில் முதன்முதலாய் பட்டம் பெற்றவன் நான்” என்று ரூபன் சொல்கிறான்.

அதை நினைத்துக்கொண்டிருக்கும்போதே ரூத்தின் கண்களில் நிலாக்குருவி வந்து சென்றது; கூடவே நிலாத்திண்ணையும்.

கர்நாடக சங்கீதம் vs நாட்டுப்புறக் கலைகள்

நமது சமூகத்தில் இலக்கியம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நாடகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவுகள் செய்யத் தொடங்கிவிட்டனர். அந்த முடிவுகளை எடுப்பவர்களில் பெரும்பாலானோர் வேதங்களைப் பின்பற்றுபவர்களே.

நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் யுகயுகங்களாக நாடகமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வலியையும் வாழ்க்கையின் துயரத்தையும் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மகிழ்ச்சியையும் குதூகலங்களையும் தெளித்து வைத்தனர். ஆனால் முடிவுசெய்யும் பெரும்பாலானோருக்கு இது அழகற்ற வடிவமாகவே தெரிந்தது. வேதங்களை முன்னிறுத்தி நடிப்பும் நடனமும் இருக்க வேண்டும், சாதாரண மக்களின் அசைவைப் போல் இருக்கக்கூடாது என்ற முன்முடிவும் செய்திருந்தனர்.

அவர்கள் வீடுகளில் வெண்ணை திருடும் பாலகிருஷ்ணன் வருவதைப் போல், சேரி வீடுகளில் யசோதைகளும் வெண்ணைத் திருடன் கிருஷ்ணனும் இருக்க மாட்டார்கள். அவர்களது அம்மாக்கள் அடுத்த வேளை சோற்றுக்காக வயல்களில் கீரை பறித்துக்கொண்டிருப்பார்கள். இந்த எளிமையை, இம்மக்களின் வாழ்வியலை சொல்வதே நாட்டுப்புறக் கலை.

கலைக்கும் சாதி உண்டு. “நூல் இட்டுக்கொண்டு வா” என்ற கர்நாடக சங்கீதத்திற்கு மத்தியில் மக்களின் கலையான நாட்டுப்புறக் கலைகளை ஆயுதமாகக் கொண்டு போராடிய மக்களின் கதையை நாவல் வழியாகச் சொல்கிறது இப்புத்தகம். கிறிஸ்தவ மிஷனரிகள் மக்களுக்கு கல்வி போதித்ததையும், தொழிலாளி வர்க்கப் புரட்சிப் போராட்டம் மக்கள் வாழ்க்கையில் எப்படி எதிரொலித்தது என்பதையும் எளிய நடையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது தீண்டாத வசந்தம்.

கலையும் சாதியும், வேதமும் மதமும், உழைப்பும் உழைப்புச் சுரண்டலும், மக்களும் மன்னராட்சி முறையும், சுரண்டிக் கொழுத்த பண்ணையார்களும் இத்தனைக்கு மத்தியிலும் பூத்த காதலும் போராட்டமும் என அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி தெலுங்கில் வெளிவந்த முதல் தலித் படைப்பு இந்த நாவல்.

கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். வாசகர்கள் அனைவரும் வாசித்துக் கருத்துகளைப் பகிரவும்.

 

அறிமுகம் செய்தவர்

Dr.வினிஷா மாணிக்கம்,தமுஎகச ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர்.

 

ஆசிரியர் பெயர்: ஜி.கல்யாணராவ்

தமிழில்: ஏ.ஜி. எத்திராஜுலு

விலை: 285/-

வெளியீடு: சிந்தன் புக்ஸ்

பக்கங்கள்: 320

கிடைக்குமிடம்: பனுவல், commonfolks website இல்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *