Tamil Marx

கட்டுரைகள்

ஈரோட்டு பாதையும்! சோசலிச பாதையும்!

ஈரோட்டு பாதையும்! சோசலிச பாதையும்!
  • PublishedSeptember 17, 2022

1931 இல் மேற்கத்திய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களையும் மக்கள் நிலைமைகளையும் கண்டு வந்த பெரியார் சோவியத் யூனியன் சென்று மக்கள் மக்களையும் அரசியல் தலைவர்கள் சந்திக்க விருப்பம் கொண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் சாபூர்ஜி சக்லத்வாலாவை சந்தித்து கடிதம் வாங்கிக் கொண்டு சோவியத் சென்றார்.

சோவியத்தில் அவர் முதலாளி தொழிலாளி என்ற பேதமற்ற சுரண்டலற்ற உயர்ந்த கலாச்சார வாழ்க்கை பெண்களுக்கான சமத்துவம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வது சிறந்த மருத்துவ வசதி கல்வி உள்ளிட்ட பகுத்தறிவு பூர்வமான சமத்துவமான மூட நம்பிக்கைகளே இல்லாத அந்த சோவியத்தின் அரசியல் நிலைமை பெரியாரை பெருமளவு ஈர்த்தது. இவையெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட சோசலிசத்தின் மகத்தான சாதனை என உணர்ந்தார்.

இயக்கத்தின்பால் தோழர்கள்:

1932 இல் இந்தியா திரும்பிய பெரியாரின் சிந்தனையில் ஒரு பெரும் தாக்கம் இருந்தது.சாதி மத பணக்காரன் ஏழை என எந்த ஒரு ஏற்ற தாழ்வும் இல்லாத அந்த சோவியத் பெரியாரை ஒரு முக்கியமான சிந்தனைக்குள் கொண்டு சென்றது அந்த நடவடிக்கையின் விளைவாகவே ஈ வே ராமசாமி என்ற பெரியார் இனி யாரையும் ஒருவருக்கொருவர் அழைக்கும் போது திரு திருவாளர் தலைவர் பெரியார் என்று அழைக்கக்கூடாது.இனிமேல் இயக்க தோழர்களும் நமது அபிமானிகளும் தோழர் என்று பொதுவாக அழைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிக்கையை குடியரசில் வெளியிட்டார்.

மே தினம்:

அதோடு இல்லாமல் சோவியத் குறித்து பல கட்டுரைகளை குடியரசில் வெளியிட்ட பெரியார் மே தினத்தை சம தர்ம பொருளாதார தினமாக சுயமரியாதை இயக்கத்தினர் கொண்டாட வேண்டும் என்பதை அறிவித்தார்

மேலும் அவர் ஜமீன்தார் அல்லாத மாநாடு விவசாயிகள் மாநாடு இளைஞர் மாநாடு தொழிலாளர் மாநாடு என்று சமதர்ம லட்சியத்தை பிரகடனப்படுத்த தமிழகம் முழுவதும் மாநாடுகள் நடத்தினார்.

இதே வேளையில் தோழர் பா ஜீவானந்தம் சிறையில் பகத்சிங் நண்பர்களோடு நட்புறவு கொண்டதன் விளைவாக மார்க்சிய சிந்தனைகளோடு வெளியே வந்தார். ஜீவாவின் பேச்சாற்றலை அறிந்த பெரியார் அவரை தம்மோடு இணைத்துக் கொண்டு பல்வேறு மாநாடுகளை தலைமை ஏற்று பிரச்சாரம் செய்து வந்தனர்.இக் காலகட்டத்தில் லெனின் மதம் குறித்தான கட்டுரைகள் பற்றி தமிழில் பெரியாரும் எஸ்.ராமநாதனும் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மொழிபெயர்ப்பு:

பின் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் மேலை நாடுகளில் தொழிலாளி வர்க்கம், மதத்தின் மூட நம்பிக்கைகள்,சாதி மதத்தின் தோற்றங்கள் குறித்தும் குடியரசு பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதி வந்தார்.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சமதர்மக் கொள்கை என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்து முதலில் வெளியிட்டார் தோழர் பெரியார்.

அப்போதுதான் பெரியார் மனதில் ஒரு மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது சுயமரியாதை இயக்கத்தை ஏன் அரசியல் கட்சியாக மாற்றக்கூடாது? அரசியல் கட்சியாக மாற்றும் போது சமதர்மத்திற்கான நோக்கத்தை நம்மால் முழுமையாக அடைய முடியும் என்று பெரியார் நம்பினார்.

எனவே கட்சிக்கான வேலை திட்டத்தை தோழர் சிங்காரவேலரிடம் எழுதித் தரும்படி பெரியார் வேண்டினார். சிங்காரவேலரும் லட்சியமாக இந்தியாவின் பூர்ண விடுதலையையும் வேலை திட்டமாக தனியார் சொத்துரிமை ஒழிப்பை முன்வைத்தும் ஒரு திட்டத்தை பெரியாருக்கு வகுத்துக் கொடுத்தார் இதுவே ஈரோட்டுப் பாதை என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டமாக இருக்கிறது.

இத்திட்டத்தை விவாதிக்க 1932 ஆம் ஆண்டு ஈரோட்டில் சுயமரியாதை தொண்டர்கள் கூட்டத்தை பெரியார் கூட்டினார்.திட்டத்தை விளக்கி சிங்காரவேலர் உரையாற்றினார் ஆனால் இந்த திட்டத்திற்கு பெரியாரின் நெருங்கிய நண்பரான சாமி சிதம்பரனார் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து சுயமரியாதை இயக்கம் அரசியல் கட்சியாக மாறினால் முழுமையாக சீர்திருத்தங்கள் செய்ய முடியாது என வாதிட்டனர்.இறுதியாக சுயமரியாதை இயக்கத்திற்குள் சமதர்மக் கட்சி செயல்படட்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்து ஈரோடு பாதை திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நீதிக்கட்சி பயணம்:

இதன்பிறகு தீவிரமாக பெரியார் குடியரசு இதலில் ஆங்கிலேய ஆட்சியை விமர்சித்தும் அவர்கள் பொருளாதார சுரண்டலை பகிரங்கப்படுத்தியும் எழுதி வந்தார். இதில் வெறுப்பான ஆங்கிலேயர்கள் ஈவராவையும் குடியரசு ஏட்டையும் முடக்குவதற்காக பெரியாரையும் இதழை நடத்தி வந்த கண்ணம்மாவையும் கைது செய்து ராஜ துரோக வழக்கில் சிறைபடுத்தினர்.

அதன் பிறகு புரட்சி என்ற பெயரிலும் பகுத்தறிவு என்ற பெயரிலும் பத்திரிகைகள் பெயர் மாற்றி இயக்கப்பட்டாலும் அவையும் பல்வேறு அடக்கு முறைகளால் முடக்கப்பட்டது.

பெரியார் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் போது ராஜாஜியும் அங்கிருந்தார்.ராஜாஜிக்கு பெரியாரை காங்கிரஸில் மீண்டும் இணைத்து அரசியலில் ஈடுபட வைக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம் இருந்ததால் அதை பயன்படுத்திக் கொண்ட பெரியார் தான் கொடுக்கும் திட்டத்தை காந்தி ஏற்றுக் கொண்டால் தான் முழுமையாக காங்கிரசுடன் இணைந்து அரசியல் பணி செய்ய தயார் என்று கூறினார்.எண்ணிக்கைக்கு தகுந்தபடி அரசில் பிரதிநிதித்துவமும் வேலை வாய்ப்பும் கொடுக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.ராஜாஜி அதை ஏற்றுக் கொண்டாலும் காந்தி அதை ஏற்றுக் கொள்ளவில்லை எனவே சிறையில் இருந்து வெளிவந்தவுடன் ராஜாஜியிடம் கொடுத்த வேலை திட்டம் மற்றும் சமதர்ம அறிக்கை இரண்டையும் இணைத்து ஒரு திட்டத்தை உருவாக்கி இதை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுடன் முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்று பெரியார் திட்டத்தை காங்கிரஸ் மற்றும் நீதி கட்சிக்கு அனுப்பி வைத்தார் நீதி கட்சி அதை ஏற்றுக் கொண்டதால் அவர் நீதி கட்சிக்கு பிரச்சார பணியாற்றார் செய்தார். நீதிக் கட்சி ஒரு பிற்போக்கான கட்சி ஆங்கிலேயரை ஆதரிக்க கூடிய கட்சி என்று சிங்காரவேலரும் தோழர் ஜீவாவும் பெரியார் எடுத்த முடிவை கடுமையாக விமர்சித்தனர்.

கம்யூனிஸ்ட்டுகள் மீதான அடக்குமுறை:

இந்தியாவில் முளைவிட்டு வந்த இளம் கம்யூனிச இயக்கத்தை முடக்குவதற்காக ஆங்கிலேய அரசு தடை விதித்தது அதே நேரத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்க சமதர்ம இயக்கத்தையும் முடக்க திட்டமிட்டு அவர்களின் அரசியல் புத்தகங்கள் அச்சகம் என எல்லாவற்றையும் முடக்கியது. மேலும் இக்காலகட்டத்தில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ததற்காக தோழர் பா ஜீவானந்தம் மற்றும் பெரியாரின் அண்ணன் ஈவே கிருஷ்ணசாமியையும் பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்தது இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பெரியாரின் வற்புறுத்தலால் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டிய சூழலுக்கு இவர்கள் உள்ளானார்கள் இவ்விபரத்தை தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஜீவானந்தம் குறித்த உரையில் எல்லோரும் அறிந்ததே.

பெரியாரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் அச்சுறுத்தி வந்தது. பெரியார் சிறைக்கு செல்வதற்கு அச்சபட்டவர் கிடையாது.ஆனால் தனது இயக்கம் நிறுத்தப்பட்டு விடக்கூடாது என்று அஞ்சி சம தர்ம சோசலிச பிரச்சாரத்தை கைவிட்டார் ஆங்கிலேய அரசாங்கத்தை ஆதரித்தார்.அதேவேளையில் ஒடுக்குமுறைகளையும் அடைக்குமுறைகளையும் மீறி தடைசெய்யப்பட்ட காலத்திலும் கம்யூனிச இயக்கம் பின் வாங்காமல் மக்கள் ஆதரவோடு வளர்ந்து வந்தது.

பிரிட்டிஷாரை ஆதரித்தார்:

அதைத்தொடர்ந்து, சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்க காங்கிரஸை எதிர்ப்பதும் அதற்காக எவ்வளவு அவசியபட்டாலும் அவ்வளவு அரசாங்கத்தோடும் ஒத்துழைப்பது. சாதி பேதங்களை அகற்றுவதும் மூடநம்பிக்கையை ஒழிப்பதும் பொருளியலில் சம தர்மமே ஆகும். இவற்றைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யவும் அமலுக்கு கொண்டு வருவதற்குமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பது என்னுடைய வெகு நாள் அபிப்பிராயம் என்று மார்ச் 10 அன்று குடியரசு இதழில் அறிக்கையாக வெளியிட்டு ஆங்கிலேய ஆதரவிற்கு நியாயம் கற்பித்தார் பெரியார்.

பிரிட்டிசாரின் சுரண்டல்களையும் அராஜக போக்குகளையும் எழுதிய வந்த பெரியார் அதே குடியரசில் இப்படி திடீரென பிரிட்டிஷ் சாருக்கு ஆதரவாக மாறினார்.இதன் பிறகு “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” புத்தகம் மொழிபெயர்ப்பிற்காக தோழர் ஜீவா மற்றும் தம் சகோதரரை பிரிட்டிஷாருக்கு வருத்தம் தெரிவிக்கும்படி பெரியார் வற்புறுத்தினார். பின் நாளில் அதையும் பின்வருமாறு கூறுகிறார்.

இதன்படி இரு தோழர்களும் வருத்தம் தெரிவித்து விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மை அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த வருத்தம் தெரிவித்ததும் அதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்த வழக்கை பொருத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும் – குடியரசு 31-03-1935

ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததற்கு தானே காரணம் என்று பெரியார் குடியரசில் அறிக்கையையும் வெளியிட்டு தெளிவுபடுத்தினார்.

மாநில சுயாட்சி:

இறுதிவரை சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த பெரியார் திராவிட நாடு கோரி வந்தார்.1952 ல் நடக்க இருந்த தேர்தலுக்கு கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெரியார் திண்டுக்கல் கூட்டத்தில் விளக்கிப் பேசும்போது கம்யூனிஸ்டுகள் கூறும் மாநில சுயாட்சி என்பது ஏ. பாலசுப்பிரமணியம் கூறியது போல இருந்தால் திராவிடர் கழகம் தனி திராவிட நாடு கோராது என்று பகிரங்கமாக அறிவித்தார்.

 

சேதுசிவன் (DYFI திண்டுக்கல் மாவட்ட பொருளாளர்)

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *