Tamil Marx

இந்தியா தமிழ் நாடு

பல்கலைக்கழத்தின் வேந்தர் ஆளுநரா? முதல்வரா? – சம்சீர் அகமது

பல்கலைக்கழத்தின் வேந்தர் ஆளுநரா? முதல்வரா? – சம்சீர் அகமது
  • PublishedJune 3, 2026

இந்திய உயர்கல்வி அமைப்பில் இன்று மிக முக்கியமான அரசியல், கல்வி மற்றும் அரசியலமைப்புச் சட்ட விவாதமாக உருவெடுத்திருப்பது: மாநிலப் பல்கலைக்கழகங்களில் ஆளுநர் (Governor) வேந்தராக (Chancellor) தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான்.

இது வெறும் நிர்வாகப் பிரச்சினை அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் தன்மை, கூட்டாட்சியின் எதிர்காலம், மாநில உரிமைகள், கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் அறிவியல் சிந்தனையின் சுதந்திரம் ஆகியவற்றோடு நேரடித் தொடர்புடைய கேள்வியாகும்.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே துணைவேந்தர் நியமனங்கள், செனட் அமைப்புகள், பல்கலைக்கழகச் சட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் கடுமையான மோதல்கள் உருவாகியுள்ளன. இவை ஆளுநர்-வேந்தர் அமைப்பின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

மாணவர் கூட்டமைப்பான Students’ Federation of India (SFI), ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் — ஆளுநர்-வேந்தர் பதவி என்பது காலனித்துவ ஆட்சியிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரு நிர்வாக மரபு என்றும், ஜனநாயக இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் கல்விச் சமூகத்தின் பங்கேற்புடன் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

பல்கலைக்கழகம் என்றால் என்ன?

ஆளுநர்-வேந்தர் விவாதத்தை புரிந்துகொள்ள, முதலில் பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகம் என்பது வெறும் பட்டம் வழங்கும் நிறுவனம் அல்ல. அது அறிவு உருவாக்கும் இடம்; ஆராய்ச்சி நடைபெறும் மையம்; ஒரு விஷயத்தை விமர்சன ரீதியாக அணுகுவதற்கான சிந்தனைகளை வளர்க்கும் தளம்; சமூக மாற்றத்தின் அறிவார்ந்த சக்தி; ஜனநாயக விவாதங்களின் அரங்கம்.

உலக வரலாற்றில் பல்கலைக்கழகங்கள் சமூக முன்னேற்றத்தின் முக்கிய மையங்களாக விளங்கியுள்ளன. ஐரோப்பிய அறிவொளி இயக்கம், காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள், இனவெறி எதிர்ப்புப் போராட்டங்கள், பெண்கள் விடுதலை இயக்கங்கள், தொழிலாளர் இயக்கங்கள் என பல்வேறு சமூக மாற்றங்களுக்கு பல்கலைக்கழகங்கள் அறிவுசார் பங்களிப்பை வழங்கியுள்ளன.

எனவே, பல்கலைக்கழகங்களின் நிர்வாக அமைப்பு என்பது வெறும் தொழில்நுட்பக் கேள்வி அல்ல; அது ஜனநாயகக் கேள்வியாகும்.

ஆளுநர்-வேந்தர் அமைப்பின் வரலாறு

ஆளுநர்-வேந்தர் அமைப்பு இந்தியாவின் பாரம்பரிய கல்வி மரபிலிருந்து உருவானது அல்ல. இதன் தொடக்கம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில்தான் இருக்கிறது.

1857 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், கல்கத்தாப் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் என இந்தியாவில் மூன்று நவீன பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. இம்மூன்றின் வேந்தர்களாகவும் அக்கால பிரிட்டிஷ் கவர்னர்களே நியமிக்கப்பட்டனர்.

இதன் நோக்கம் கல்வி ஜனநாயகத்தை உருவாக்குவதல்ல; மாறாக, கல்வி நிறுவனங்களை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருப்பதுதான். இந்தக் கல்வி நிலையங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்குத் தேவையான எழுத்தர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களை உருவாக்கும் அமைப்பாகவே வடிவமைக்கப்பட்டன.

மெக்காலே கல்விக் கொள்கையும் அதன் தாக்கமும்

1835 ஆம் ஆண்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலே தனது புகழ்பெற்ற கல்விக் குறிப்பில், இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வகை கல்வியை உருவாக்க வேண்டும் என வாதிட்டார். “இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருந்தாலும், சிந்தனையிலும் கருத்துகளிலும் ஆங்கிலேயர்களாக இருக்கும் ஒரு வர்க்கம்” உருவாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டான்.

ஆக, மெக்காலே கல்வி முறை என்பது இந்திய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அல்ல; காலனித்துவ ஆட்சியை நிர்வகிக்க உதவும் இடைநிலை வர்க்கத்தை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக உருவான பல்கலைக்கழக அமைப்புகள் அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டன.

1904 இந்திய பல்கலைக்கழகச் சட்டம்

1904 ஆம் ஆண்டின் Indian Universities Act காலனித்துவ அரசின் கல்விக் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது. இந்தச் சட்டத்தின் மூலம் அரசின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி குறைக்கப்பட்டது; வேந்தர்களின் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டன; நிர்வாக முடிவுகள் மையப்படுத்தப்பட்டன.

அந்தச் சட்டம் அக்கால தேசியவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் அது கல்வியை ஜனநாயகப்படுத்தும் முயற்சியாக இல்லாமல், கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் கருவியாகவே இருந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகும் ஏன் தொடர்ந்தது?

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல காலனித்துவ அமைப்புகள் மாற்றப்பட்டன. ஆனால் சில நிர்வாக மரபுகள் தொடர்ந்தன; அவற்றில் ஒன்றுதான் ஆளுநர்-வேந்தர் அமைப்பு.

பல்கலைக்கழகங்களுக்கு அரசியல் சார்பற்ற தலைமை தேவை; மாநில அரசின் நேரடி அரசியல் தலையீட்டைத் தவிர்க்க வேண்டும்; கல்வியை கட்சி அரசியலிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற காரணங்களால் பிரிட்டிஷ் நடைமுறை தொடரவிடப்பட்டது. ஆனால் காலப்போக்கில் நடைமுறையில் உருவான விளைவுகள் வேறுபட்டன.

அரசியலமைப்பில் வேந்தர் பதவிக்கு இடமில்லை

இந்தப் பிரச்சினையில் மற்றொரு முக்கியமான உண்மை உள்ளது.

இந்திய அரசியலமைப்பில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் பற்றிய பிரிவுகள் உள்ளன. ஆனால் “பல்கலைக்கழக வேந்தர்” என்ற பதவி எங்கும் இல்லை.

அதாவது,

  • ஆளுநர் = அரசியலமைப்புச் சட்டப் பதவி.
  • வேந்தர் = மாநில பல்கலைக்கழகச் சட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கூடுதல் பதவி.

எனவே, ஆளுநரை வேந்தர் பதவியிலிருந்து நீக்குவது அரசியலமைப்புக்கு எதிரான செயல் அல்ல. மாநில சட்டமன்றங்களில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் இந்த அமைப்பை மாற்ற முடியும்.

அரசியலமைப்புச் சபையில் ஆளுநரின் பங்கு குறித்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மிகத் தெளிவாகக் கூறினார் “The Governor has no functions which he can discharge by himself.” இதன் அர்த்தம் , ஆளுநர் தனி அதிகார மையம் அல்ல. அவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் விருப்பத்தை மதிக்க வேண்டும்; அரசியலமைப்பின் நடுநிலை பாதுகாவலராக இருக்க வேண்டும்.

1974 ஆம் ஆண்டு Shamsher Singh vs State of Punjab வழக்கில் உச்சநீதிமன்றம், “Governor is only a constitutional head” என்று தீர்ப்பளித்தது. அதாவது, ஆளுநர் தனது விருப்பப்படி செயல்படும் அதிகாரி அல்ல; மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டியவர். இது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.

சர்க்காரியா ஆணையம்

ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டுமா என்ற இன்றைய விவாதத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, மத்திய-மாநில உறவுகள் குறித்து அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் மற்றும் புஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகளை ஆராய வேண்டியது அவசியமாகிறது. இந்த இரண்டு ஆணையங்களும் நேரடியாக பல்கலைக்கழக வேந்தர் பதவியைப் பற்றி விரிவாக விவாதிக்கவில்லை என்றாலும், ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டப் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கேள்விக்கு அவை அளித்த பதில்கள், இன்றைய விவாதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

1970களின் இறுதியிலும் 1980களின் தொடக்கத்திலும் இந்தியாவில் மத்திய-மாநில உறவுகள் கடுமையான அரசியல் விவாதத்திற்கு உள்ளாகின. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்கள், ஆளுநர் பதவி அரசியலமைப்பின் நடுநிலை அமைப்பாக இல்லாமல் மத்திய அரசின் அரசியல் கருவியாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தன. மாநில அரசுகளை கலைப்பது, சட்டமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் அதிகாரங்களை குறைப்பது போன்ற சர்ச்சைகள் எழுந்தன. இந்தப் பின்னணியில்தான் 1983 ஆம் ஆண்டு நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது.

சர்க்காரியா ஆணையம் இந்திய கூட்டாட்சியின் செயல்பாட்டை விரிவாக ஆய்வு செய்து, ஆளுநர் பதவி குறித்த பல முக்கியமான பரிந்துரைகளை வழங்கியது. ஆணையத்தின் மையக் கருத்து: ஆளுநர் எந்த அரசியல் கட்சியின் பிரதிநிதியாகவும் செயல்படக்கூடாது; மத்திய அரசின் அரசியல் முகவராக இருக்கக்கூடாது; அரசியலமைப்பின் நடுநிலை பாதுகாவலராக இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரங்களை மதிக்க வேண்டும்; மாநில அரசின் எதிர்க்கட்சித் தலைவராக மாறக்கூடாது என்றும் ஆணையம் வலியுறுத்தியது.

இந்தப் பரிந்துரைகள் இன்று பல்கலைக்கழக வேந்தர் விவாதத்தில் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில், ஒரு ஆளுநர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக செயல்படும்போது, அவர் வெறும் அரசியலமைப்புச் சட்டத் தலைவராக மட்டும் இருப்பதில்லை. துணைவேந்தர்களை நியமிப்பது, செனட் உறுப்பினர்களை தேர்வு செய்வது, பல்கலைக்கழக நிர்வாக முடிவுகளில் இறுதி அதிகாரம் செலுத்துவது போன்ற செயல் நிர்வாக அதிகாரங்களை அவர் பயன்படுத்துகிறார். இதன் விளைவாக, அரசியலமைப்பின் நடுநிலைப் பாதுகாவலராக இருக்க வேண்டியவர், கல்வி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார மையமாக மாறுகிறார். சர்க்காரியா ஆணையம் முன்வைத்த அடிப்படை தத்துவத்திற்கே இது முரணானது என்று பல கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

புஞ்சி ஆணையம்

சர்க்காரியா ஆணையத்திற்குப் பிறகும் மத்திய-மாநில உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தன. இதனால் 2007 ஆம் ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையில் புதிய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், மாறிவரும் அரசியல் சூழலை ஆய்வு செய்து ஆளுநர் பதவியின் செயல்பாடுகள் குறித்து புதிய பரிந்துரைகளை வழங்கியது.

குறிப்பாக, ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகள் மற்றும் அரசியலமைப்பிற்கு வெளியே வழங்கப்படும் கூடுதல் அதிகாரங்கள் தெளிவாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.

இந்தக் கருத்து இன்றைய ஆளுநர்-வேந்தர் விவாதத்தில் மிகவும் பொருத்தமானது. அரசியலமைப்பின் கீழ் ஆளுநர் வகிக்கும் பொறுப்புகளும், பல்கலைக்கழக வேந்தர் போன்ற கூடுதல் நிர்வாகப் பொறுப்புகளும் ஒன்றாக கலக்கப்படும்போது அதிகார மோதல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக ஆணையம் எச்சரித்தது. இன்று தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களில் பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக உருவாகியுள்ள மோதல்கள், புஞ்சி ஆணையத்தின் இந்த எச்சரிக்கையை நினைவூட்டுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் பல மாநிலங்களில் ஏற்பட்ட மோதல்களை கவனித்தால், அவற்றில் பெரும்பாலானவை அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினைகள் அல்ல. மாறாக, துணைவேந்தர் நியமனங்கள், செனட் அமைப்புகள், பல்கலைக்கழக நிர்வாக முடிவுகள் மற்றும் கல்விக் கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகளே அதிகமாக காணப்படுகின்றன. இதன் விளைவாக ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் மட்டுமல்லாமல், ராஜ்பவனுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலும் மோதல்கள் உருவாகின்றன.

இந்த விவாதத்தின் மையத்தில் கூட்டாட்சிக் கொள்கை உள்ளது. ஒரு மாநில அரசு பல்கலைக்கழகங்களை நிறுவுகிறது, நிதியளிக்கிறது, கட்டிடங்களை உருவாக்குகிறது, ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குகிறது. ஆனால் இறுதி நிர்வாக அதிகாரம் மாநில அரசிடம் இல்லாமல் ஆளுநரிடம் இருப்பது கூட்டாட்சியின் அடிப்படை ஆவியுடன் முரண்படுகிறது என்று பல அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களிடம் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இறுதி அதிகாரம், மக்களிடம் நேரடியாகப் பொறுப்புக்கூறாத ஒரு நியமன அதிகாரியிடம் இருப்பது ஜனநாயக முரண்பாட்டை உருவாக்குகிறது.

இந்தச் சூழலில் சர்க்காரியா ஆணையமும் புஞ்சி ஆணையமும் ஒரே அடிப்படை உண்மையை வலியுறுத்துகின்றன: ஆளுநர் அதிகார மையமாக அல்ல, அரசியலமைப்பின் நடுநிலை பாதுகாவலராக இருக்க வேண்டும். ஆனால் பல்கலைக்கழக வேந்தர் பதவி ஆளுநரை செயல் நிர்வாக அதிகார மையமாக மாற்றுகிறது. இதன் விளைவாக கூட்டாட்சி பாதிக்கப்படுகிறது, மாநில உரிமைகள் குறைக்கப்படுகின்றன, கல்வி நிர்வாகம் அரசியல் மோதல்களின் அரங்கமாக மாறுகிறது. எனவே ஆளுநர்-வேந்தர் அமைப்பை மறுபரிசீலனை செய்வது வெறும் கல்வி நிர்வாகத் தேவையாக மட்டும் இல்லாமல், இந்திய கூட்டாட்சியையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்தும் அவசியமான நடவடிக்கையாக மாறியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா மற்றும் மாநிலங்களின் அனுபவங்கள்

ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருப்பது தொடர்பான விவாதம் வெறும் கோட்பாட்டு அல்லது அரசியலமைப்புச் சட்ட விவாதம் மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட நடைமுறை அனுபவங்களே இந்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்கள், ஆளுநர்-வேந்தர் அமைப்பின் செயல்திறன் மற்றும் பொருத்தம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த அனுபவங்கள் தனிப்பட்ட மாநிலங்களின் அரசியல் பிரச்சினைகளாக அல்லாமல், இந்திய கூட்டாட்சியின் எதிர்காலம் மற்றும் உயர்கல்வி நிர்வாகத்தின் தன்மை குறித்த பெரிய விவாதமாக மாறியுள்ளன.

தமிழ்நாடு இந்தியாவில் உயர்கல்வி வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். சமூகநீதி, இடஒதுக்கீடு, அரசுப் பல்கலைக்கழகங்களின் விரிவாக்கம் மற்றும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற துறைகளில் தமிழ்நாடு தனித்துவமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியின் பின்னணியில் மாநில அரசுகளின் நீண்டகால கல்விக் கொள்கைகளும் முதலீடுகளும் உள்ளன.

ஆனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இறுதி அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதால், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிர்வாக மற்றும் அரசியல் மோதல்கள் உருவாகின. குறிப்பாக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக தமிழ்நாட்டில் பெரும் விவாதங்கள் எழுந்தன. ஒரு பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகத் திசையை நிர்ணயிப்பதில் துணைவேந்தர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார். எனவே அவரது நியமனம் தொடர்பான முடிவுகள் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கின. பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் அமைப்புகளுக்கான நியமனங்களும் சர்ச்சைக்குரியதாக மாறின. பல கல்வியாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள், இந்த மோதல்கள் பல்கலைக்கழகங்களின் இயல்பான நிர்வாகத்தை பாதித்ததாகக் குறிப்பிட்டனர்.

இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் தமிழ்நாடு சட்டமன்றம் 2022 ஆம் ஆண்டு முக்கியமான சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்றியது. அந்த மசோதாக்களின் அடிப்படை நோக்கம், மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதாகும். இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான அரசியல் வாதத்தை தேசிய அளவில் முன்வைத்தது: பல்கலைக்கழகங்களை நிறுவுவதும், நிதியளிப்பதும், நிர்வகிப்பதும் மாநிலம் என்றால், இறுதி அதிகாரம் ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநரிடம் இருக்க வேண்டும்?

கேரளாவிலும் இதேபோன்ற அனுபவங்கள் உருவாகின. இந்தியாவில் உயர்ந்த கல்வியறிவு கொண்ட மாநிலமாகக் கருதப்படும் கேரளாவில் பல்கலைக்கழக தன்னாட்சி தொடர்பான விவாதங்கள் நீண்டகாலமாக இருந்து வந்தன. கடந்த சில ஆண்டுகளில் ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் இந்த விவாதத்தை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றன. பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக ஆளுநர் எடுத்த நிலைப்பாடுகள், சில துணைவேந்தர்களின் ராஜினாமாவை கோரிய நடவடிக்கைகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அமைப்புகளில் நேரடி தலையீடுகள் ஆகியவை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தின.

கேரள அரசும் இடதுசாரி இயக்கங்களும் இந்த நிலையை கல்வி தன்னாட்சிக்கு எதிரான நடவடிக்கையாக விமர்சித்தன. பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க வேண்டியது கல்வியாளர்களும் கல்விச் சமூகமும்தான்; அரசியல் நியமனப் பதவியில் இருப்பவர்கள் அல்ல என்பது அவர்களின் வாதமாக இருந்தது. இதன் விளைவாக கேரள சட்டமன்றம் ஆளுநரை வேந்தர் பதவியிலிருந்து நீக்கி, அதற்குப் பதிலாக சிறந்த கல்வியாளர்களை நியமிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது. இது இந்தியாவில் ஆளுநர்-வேந்தர் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேற்கு வங்காளத்திலும் இதேபோன்ற நிலை உருவானது. பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள், ஆளுநரின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை மேலும் வலியுறுத்தின. இதனால் ஆளுநர்-வேந்தர் விவாதம் தனிப்பட்ட மாநிலங்களின் பிரச்சினையாக இல்லாமல், தேசிய அளவிலான கூட்டாட்சி விவாதமாக மாறியது.

இந்த அனுபவங்கள் அனைத்தும் ஒரு பொதுவான உண்மையை வெளிப்படுத்துகின்றன: ஆளுநர் வேந்தராக செயல்படும் அமைப்பு, பல நேரங்களில் பல்கலைக்கழக தன்னாட்சியைப் பாதுகாக்கும் கருவியாக அல்லாமல், நிர்வாக மற்றும் அரசியல் மோதல்களின் மூலமாக மாறியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் இரட்டை அதிகார மையங்கள் உருவாகும்போது, அதன் விளைவுகளை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களே சந்திக்க வேண்டியிருக்கிறது. நியமனங்கள் தாமதமாகின்றன; நிர்வாக முடிவுகள் முடங்குகின்றன; நீதிமன்ற வழக்குகள் அதிகரிக்கின்றன; கல்விச் சூழல் பாதிக்கப்படுகிறது.

இந்த அனுபவங்களின் பின்னணியில்தான் மாணவர் இயக்கங்களும் கல்வியாளர்களும் மாற்று மாதிரிகளை முன்வைக்கத் தொடங்கினர். அவர்களின் கருத்துப்படி, பல்கலைக்கழகங்களை வழிநடத்த வேண்டியது அரசியல் நியமன அதிகாரிகள் அல்ல; கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் சிறந்த அனுபவம் கொண்ட கல்வியாளர்கள். பல்கலைக்கழகங்களின் தலைமைப் பொறுப்புகளில் கல்விச் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்; துணைவேந்தர் மற்றும் பிற நிர்வாகப் பதவிகளுக்கான தேர்வு முறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்; மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பணியாளர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களின் அனுபவங்கள் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுக்கின்றன. ஆளுநர்-வேந்தர் அமைப்பு பல்கலைக்கழக தன்னாட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடரப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது பல இடங்களில் அரசியல் மோதல்களின் காரணமாக மாறியுள்ளது. எனவே இந்த அமைப்பை மறுபரிசீலனை செய்து, கல்வி ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் பல்கலைக்கழக தன்னாட்சியை வலுப்படுத்தும் புதிய நிர்வாக மாதிரிகளை உருவாக்குவது காலத்தின் தேவையாக மாறியுள்ளது

கட்டுரையாளர் சம்சீர் அகமது மாநில செயலாளர் SFI

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *