காலந்தோரும் சென்னையில் வெள்ளம்…
சென்னையின் பல பகுதிகள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற பெருநகரங்களைப் போலவே சென்னையும் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் அது எதிர்கொள்ள போகும் நகர்ப்புற வெள்ளம் தொடர்பான பிரச்சனைகள் எதையும் தீர்க்க இயலாத சூழலே தென்படுகிறது.
சென்னை பெருநகரப் பகுதி (குறிப்பாக நகர மாநகராட்சி) ஒப்பீட்டளவில் சமதளமான நிலப்பரப்பு மற்றும் கடல் மட்டத்திற்கு மிக அருகில் உள்ளது. நகரமயமாக்கலின் விளைவாக தென் சென்னை போன்ற பல இடங்கள் கடல் மட்டத்திற்கு மிக அருகில் உள்ள தாழ்வான பகுதிகள் வரை விரிவடைந்து இருப்பதால் மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
பல வெள்ளப்பெருக்கு சம்பவங்களுக்கு பிறகும், அடையாறு போன்ற ஆறுகளின் நீரோட்ட பாதைகள் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்காக நகர்ப்புறமாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில் பல குடியிருப்புகளை தற்போது காலி செய்வது என்பது இயலாத காரியம்.
இயற்கை நீர்நிலைகள் மற்றும் பள்ளிக்கரணை போன்ற வெள்ளப்பெருக்கின் வேகத்தை கட்டுப்படுத்த கூடிய சதுப்பு நிலப்பகுதிகளில் வெள்ள நீரை எங்கும் செல்ல விடாமல் அரசு அலுவலகங்கள் மறித்து சுற்றிலும் கட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பகுதிகளில் இருக்கும் வேகமான மக்கள் தொகை பெருக்கம் நகரின் அடர்த்தியை அதிகமாகிவிட்டன. நகரத்தின் எதிர்காலத்திற்கு தேவையான பசுமை உள்கட்டமைப்பு வசதிக்கான தேவையைவிட, செயற்கை உள்கட்டமைப்புகள் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தெரு வடிவமைப்புகள், மழைநீர் வடிகால் வடிவமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இவை சென்னை போன்ற பெருநகரத்திற்கு எவ்விதத்திலும் உதவாது.
ஒரு காலத்தில் விவசாய நிலங்களுக்குச் பயன்படுத்தப்பட்ட ஏரிகளை, மீண்டும் வெள்ள நீர் வெளியேறுவதை மட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கி வடிவமைக்கவேண்டும். இருப்பினும், அவற்றில் சில ஏரிகள் மாயமாகி உள்ளன அல்லது சிறு ஒடைகளாக கழிவுநீரால் நிரம்பியிருக்கின்றன.
நகரத்தின் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்த ஒரு முழுமையான திட்டமோ அறிவியல் பூர்வமாக நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளோ அதில் இடம்பெறவில்லை. நகரப் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் (2017) சில வழிமுறைகள்கள் உள்ளன, இருப்பினும் அறிவியல் ரீதியாக விளக்கம் மற்றும் விரிவான செயல் திட்டங்கள் எதுவும் இல்லை.
ஆனால் நகர்ப்புற வெள்ளத்தை நிர்வகித்தல் பொறுப்பு தொழில்நுட்ப விவரங்களில் மட்டுமல்ல, உள்ளாட்சி நிர்வாகத்திடமும் இருக்கிறது. ஆனால் 6 ஆண்டுகளாக, நகரத்திற்கு மேயர் கவுன்சிலர்கள் இல்லை. இதனை கையாளும் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது.
தெரு கழிவுநீர் வடிவமைப்புகள், அறிவியல் பூர்வமான மழைநீர் வடிகால் திட்டங்கள் செயல்படுத்தல் ஆகியவற்றை மறுசீரமைக்க பல கோடிகள் செலவாகும். ஆனால் மாநகராட்சி நிர்வாக உறுப்பினர்கள் இல்லாமல் இவை சாத்தியமில்லை.
இதனால்தான் சென்னை நகரின் வெள்ளப் பிரச்சினை இன்னும் 10 ஆண்டுகளில் தீர்ந்துவிடாது என கருதப்படுகிறது. ஆனால் இனிவரும் காலங்களில் நகரம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகவும், வாழக்கூடியதாகவும் இருக்கும் வகையில், நீண்ட கால செயல்திட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே இந்த பிரச்சனை தீர்க்கப்படும்.
நன்றி: ராஜ் பகத்