கடவுளின் பெயரில் மக்களின் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி-மாவோ
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வரும் இடத்திற்கு மாறாக தர்க்கா பக்கத்தில் தீபம் ஏற்ற வேண்டும். அது இந்துக்கள் பாரம்பரியம் தமிழ் பாரம்பரியம் என்றெல்லாம் கதை அளந்து விடும் அதே இந்துத்துவா கலவரக் கும்பல் தான் உத்தபுரத்தில் பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் விட கூடாது என பிரச்சனை செய்கிறது.
தற்போது திருப்பூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய நிலத்தை கடவுளின் பெயரை சொல்லி ஆக்கிரமித்த நிலத்தை இந்து முன்னணி மக்களுக்கு வழங்க விடாமல் தடுக்கிறது.
இந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் அண்ணாமலை நயினார் நாகேந்திரன் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறன்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு திருட்டு அரசியல் தான் இவர்களது உண்டு முகம்.
திருப்பூரில், ஈட்டிவீரம்பாளையம் அருகே அறிவொளி நகர் பகுதியில், 1994-ஆம் ஆண்டில் 122 ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு அரசு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நிலம் அளந்து தரப்படவில்லை. இந்த நீண்ட காத்திருப்பின் பின்னால், லாப வெறி, சாதி, மதம், மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் மறைந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் க.ச.எண் 544 ல் 1994 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் 122 பேருக்கு அரசு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த மக்களுக்கு நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை. நிலம் அளந்து தரப்படும் என நம்பிக்கையில் சிலர் அங்கு குடிசை அமைத்து குடியிருந்தனர். அவர்களுக்கு குடிநீர், மின் இணைப்பு, கழிநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த வித அடிப்படை கட்டமைப்புகளும் ஏற்படுத்தி தரவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால் நிதி இல்லை. நிதி வந்தவுடன் அடிப்படை வசதிகள் செய்து தரவதாக கூறுயுள்ளனர். அங்கு குடியிருந்த மக்களும் நம் நிலம் எங்கும் போகாது. முறையாக நிலம் அளந்து தந்த பின்பு அங்கு செல்லாம் என காத்திருந்தனர்.
நிலம் கையகப்படுத்த திட்டம்
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி இப்பகுதியில் உள்ள 1.15 ஹெக்டேர் நிலத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் பெருமாநல்லூர் கிராமத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழருக்கு வீடு கட்ட அனுமதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. 2024 செப்டம்பர் மாதம் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்த இடம் கோவில் நிலம் என்று கோரி மனு அளித்தனர். இதையறிந்த ஏற்கனவே நிலப்பட்டா பெற்ற மக்கள் அந்த இடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, முறையாக நிலம் அளந்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதற்கிடையே பட்டா வழங்கிய நிலத்தில், எந்த வழிபாட்டு தலமும் இல்லை என அரசாணையில் குறிப்பிட்டிருக்கும் போதும், சிலர் கோவில் கட்டி, சுற்றி கம்பி வேலி அமைத்து ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்துவிட்டனர்.
நீதிமன்ற வழக்கும், உத்தரவும்
இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இலந்திரையன் 2025 ஆம் ஆண்டு அக்.17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து தர வேண்டும். ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் காவல்துறை உதவியை நாடலாம் என உத்தரவிட்டார். அந்த உத்தவின் பெயரில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது இந்து முன்னணியினர் இடத்தை அளக்க விடாமல் தகராறில் ஈடுபட்டனர். இதில் காவல்துறையினர் 38 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நாடிய பாதிக்கப்பட்ட மக்கள்
நிலம் வழங்கப்பட்டும், அளந்து தராமல் விரக்தியில் இருந்த மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர். இதையடுத்து உடனடியாக நிலத்தை அளந்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் 2024 செப்டம்பர் மாதத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மேலும் பெருமாநல்லூரில் இருந்து நடைபயணம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. மேலும் சட்டப்போராட்டமும் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. மீண்டும் காத்திருப்புப் போராட்டம் என கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியாக உச்சநீதிமன்றம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவிற்கான நிலத்தை அளந்து தர உத்தரவிட்டதை அடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
ரியல் எஸ்டேட் மாபியாக்களின் சதித்திட்டம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், இந்த இடம் நியூ திருப்பூரின் பின்புறம் உள்ளது. 50 க்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகள், கடைகள் என அனைத்து வசதிகளும் கொண்ட பகுதி. இதனால் இங்குள்ள நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. அரசு இலங்கைத் தமிழர் குடியிருப்போ அல்லது பட்டியலின மக்கள் குடிபெயர்ந்தால் நிலத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது என கருதி ரியல் எஸ்டேட் மாபியாக்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்து, இதை மதப் பிரச்சனையாக மாற்ற திட்டமிட்டு அங்கு கோவில் கட்ட வைத்துள்ளனர். இதை இந்து முன்னணி, பாஜக போன்ற அமைப்புகள் தங்கள் அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்தப் பார்கின்றனர் என தெரிவித்தனர்.
நீதி எப்போது
30 ஆண்டுகளாக காத்திருக்கும் இந்த ஏழை மக்கள், தங்கள் உரிமைகளுக்காக இன்னும் போராடுகின்றனர். லாபவெறி, மதம், சாதி, அரசியல் சூழ்ச்சிகள் அனைத்தையும் தாண்டி, இப்போதாவது நீதி கிடைக்க வேண்டும். இந்து முன்னணி மற்றும் பாஜக போன்ற அமைப்புகள், மதப்போர்வையில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பலியிடக் கூடாது. அரசு உடனடியாக நிலத்தை அளந்து தரவேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மதத்தின் பெயரில், சாதியின் பெயரில், ஏழைகளின் உரிமைகளை திருடும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிராக, நீதிக்கான போராட்டம் தொடரும்.
– மாவோ