வெனிசுலாவுக்கு எதிராக எத்தனை சர்வதேச சட்டங்களை அமெரிக்காவால் மீற முடியும்-விஜய் பிரசாத்
2026 ஜனவரி 3-ஆம் தேதி அதிகாளையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மோரோஸ் மற்றும் தேசிய சபையின் பிரதிநிதியும் (நாடாளுமன்ற உறுப்பினர்) அவரது மனைவியுமான சிலியா ப்ளோரஸ் ஆகியோரைக் கடத்த அமெரிக்கா தனது இராணுவத்தை வெனிசுலாவிற்குள் அனுப்பியது.
அந்நாட்டு தலைநகர் கராகஸ் முழுவதும் உள்ள பொது மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது குண்டுவீச்சப்பட்டது. மதுரோ, ப்ளோரஸ் ஆகிய இருவர் மீதும் ‘போதைப்பொருள் பயங்கரவாதம்’ மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்தியுள்ளது. அவர்கள் தற்போது நியூயார்க்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்; ஜனவரி 5,அன்று மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் அவர்கள் முதன்முறையாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
உண்மையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் 2026 ஜனவரி 3 அன்று தொடங்கவில்லை. வெனிசுலாவின் ‘பொலிவேரியன் செயல்முறைக்கு’ (Bolivarian process) எதிரான இந்த மறைமுகப்போர் (ராணுவ தாக்குதல் மட்டுமல்லாமல் பொருளாதார தடை உள்ளிட்ட ‘கலப்புப் போர்’-Hybrid war) 2001-லேயே தொடங்கிவிட்டது.
அப்போது அதிபராக இருந்த சாவேஸால் அறிவிக்கப்பட்டு, தேசிய சபையால் 49 சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதில் ஒரு பகுதியாக ‘ஹைட்ரோகார்பன்களின் ஆர்கானிக் சட்டமும்’ (Organic Law of Hydrocarbons) நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு தான் வெனிசுலா மீதான தாக்குதல் தீவிரமடைந்தது. அந்தச் சட்டம், பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களின் சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் தடையாக அமைந்தது. அதேபோல், அந்நாட்டின் எண்ணெய் வருவாயின் பெரும்பகுதியை சமூகத் திட்டங்களுக்கும், நீண்டகால தேசிய வளர்ச்சிக்கும் பயன்படுத்த அரசுக்கு வழிவகை செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த எக்ஸான் மொபில் (ExxonMobil) போன்ற பெரும் எண்ணெய் நிறுவனங்கள், வெனிசுலா அரசை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பொலிவேரியன் செயல்முறையையுமே கவிழ்க்க அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
கடந்த கால் நூற்றாண்டாக வெனிசுலா மக்களின் வாழ்க்கையில் பொருளாதார, அரசியல், தகவல் மற்றும் சமூக ரீதியான ‘கலப்புப் போர்’ ஒரு தொடர்ச்சியான தாக்குதலாக வேண்டும் இருந்து வருகிறது. 2026-ல் வெனிசுலா மீதான இந்தச் சட்டவிரோதத் தாக்குதலும், அதன் அதிபர் மற்றும் நாட்டின் முதல் பெண்மணியின் கடத்தலும், இந்தத் தென் அமெரிக்க நாட்டு உழைக்கும் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்து வரும் நீண்டகாலப் போரின் ஒரு பகுதியே ஆகும்.
வெனிசுலா மீதான தாக்குதலை ஏன் சட்டவிரோதம் என சொல்கிறோம்?
அமெரிக்கா ‘விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு’ (rules-based international order) பற்றிப் பேசிக்கொண்டே, சர்வதேசச் சட்டங்களை முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் அலட்சியப்படுத்தி வருகிறது.
இதைப் பார்க்கும்போது, சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைகளையும், ஜனவரி 3 அன்று வெனிசுலா மீதான தாக்குதலின் மூலம் அமெரிக்கா மீறிய சர்வதேசச் சட்டங்களையும் மறுபரிசீலனை செய்வது அவசியமாகிறது.
முதலாவதாக, நாம் ‘சர்வதேசச் சட்டம்’ என்று கூறும்போது, நாடுகள் (மற்றும் சில சந்தர்ப்பங்களில் சர்வதேச அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்) தங்களுக்கு இடையிலான உறவுகளில் பிணைக்கப்பட்டுள்ளதாக அங்கீகரிக்கும் சட்டபூர்வமான கடமைகளைக் குறிக்கிறோம். இந்த விதிகள் இரண்டு முக்கிய ஆதாரங்களில் இருந்து வருகின்றன:
ஒப்பந்தங்கள் (Treaties):
இவை நாடுகளுக்கு இடையே எழுதப்பட்ட உடன்படிக்கைகள்.
வழக்கமான சர்வதேசச் சட்டம் (Customary International Law): நாடுகளின் தொடர்ச்சியான நடைமுறை மூலம் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிணைப்பு சக்தியாக மாறிய விதிகள்.
ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலமோ அல்லது அதில் இணைவதன் மூலமோ ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட தனது சம்மதத்தை அளிக்க வேண்டும்.
ஆனால், வழக்கமான சர்வதேசச் சட்டம் மற்றும் கட்டாய விதிமுறைகளுக்கு (jus cogens) ஒரு நாடு எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாவிட்டாலும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். உதாரணமாக, இனப்படுகொலை மற்றும் ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தும் முறைக்கு எதிரான தடைகளுக்கு ஒரு நாடு எதிலும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை; ஏனெனில் இவை அனைத்து நாடுகளையும் பிணைக்கும் அடிப்படைச் சட்டங்களாக (peremptory norms) சர்வதேசச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வேறு விதமாகச் சொல்வதானால், சில சட்டங்கள் மிகவும் அடிப்படையானவை, எந்தவொரு நாடும் அவற்றிலிருந்து விலக முடியாது.
நான் கீழே குறிப்பிடப்போகும் கடமைகள் இந்த இரண்டு ஆதாரங்களிலிருந்தும் வருகின்றன: ஐநா சாசனம் போன்ற ஒப்பந்தங்கள் மற்றும் தலையிடாமை கொள்கை, நாட்டின் தலைவருக்கான விலக்குரிமை உள்ளிட்ட வழக்கமான சர்வதேசச் சட்டங்கள். இவை சில நேரங்களில் சர்வதேச நீதிமன்றத்தால் (ICJ – நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைகளைத் தீர்க்கும் ஐ.நாவின் மிக உயர்ந்த நீதிமன்றம்) விளக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சர்வதேசச் சட்டம் நடைமுறையில் எதைக் கோருகிறது என்பதை விளக்குவதில் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சிறப்பு அதிகாரம் கொண்டவை.
1.ஆதிக்கத்தை திணிப்பது அல்லது அச்சுறுத்துதலுக்கான தடை
மற்ற நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா தனது ஆதிக்கத்தை திணிப்பதை கட்டுப்படுத்தும் இரண்டு முக்கிய உடன்படிக்கைகள் உள்ளன:
முதலாவதும் மிக முக்கியமானதுமான 1945-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சாசனம் ஆகும். இதன் பிரிவு 2(4), அனைத்து நாடுகளும் மற்றொரு நாட்டிற்கு எதிராக ‘வலிமையைப் பயன்படுத்துவதையோ (ஆதிக்கத்தை திணிப்பதை) அல்லது அச்சுறுத்துவதையோ’ தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது. இதற்கு மிகக் குறைவான விதிவிலக்குகளே உள்ளன:
ஐநா பாதுகாப்பு கவுன்சில் (ஐநா சாசனத்தின் அத்தியாயம் VII-ன் கீழ்) ஒரு குறிப்பிட்ட சூழலை ‘அமைதிக்கு அச்சுறுத்தல், அமைதி மீறல் அல்லது ஆக்கிரமிப்பு நடவடிக்கை’ என்று தீர்மானித்து, சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் மீட்டெடுக்க வலிமையைப் பயன்படுத்த அங்கீகாரம் அளித்தால் மட்டுமே அது செல்லும்.
அல்லது ஒரு நாடு தனது தற்காப்புக்காக (Self-defence) செயல்படும் போது இது அனுமதிக்கப்படலாம்.
இவை தவிர வேறு விதிவிலக்குகள் இல்லாததால், வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, சர்வதேச அமைப்பின் மிக உயர்ந்த உடன்படிக்கைக் கடமையான ஐநா சாசனத்தை மிகத் தெளிவாக மீறுகிறது.
லத்தீன் அமெரிக்காவில், 1948-ஆம் ஆண்டின் அமெரிக்க நாடுகளின் அமைப்பின் சாசனம் (OAS Charter) நடைமுறையில் உள்ளது. இதன் பிரிவு 21, ஒரு நாட்டின் ‘நிலப்பரப்பு மீற முடியாதது’ என்றும், ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக ‘இராணுவ ஆக்கிரமிப்பு’ அல்லது ‘வலிமையைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை’ மேற்கொள்ள அனுமதி இல்லை என்றும் கூறுகிறது. OAS சாசனம் ஐநா சாசனத்தையே பின்பற்றுகிறது. மேலும், ஐநா சாசனத்தின் பிரிவு 103, உடன்படிக்கைக் கடமைகளுக்கு இடையே முரண்பாடு ஏற்படும் போது, ஐநா சாசனத்தின் கீழ் உள்ள கடமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகளைக் கண்டித்து ஐநா மற்றும் OAS ஆகிய இரண்டிலும் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய தீர்மானங்கள் இல்லாதது, சர்வதேச அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லை; மாறாக அமெரிக்கா உலகில் செலுத்தும் ஒருவிதமான ‘மாஃபியா வகை’ (Mafia-type power) முழு அதிகாரத்தையே இது காட்டுகிறது.
2.ஒரு நாட்டின் உளநாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடாமை
ஐநா சாசனத்தின் பிரிவு 2(7), ஒரு நாட்டின் இறையாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. எந்தவொரு நாட்டின் ‘உள்நாட்டு அதிகார வரம்பிற்குள்’ இருக்கும் விவகாரங்களில் தலையிட ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரம் இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது (அத்தியாயம் VII-ன் கீழ் எடுக்கப்படும் அமலாக்க நடவடிக்கைகள் தவிர). நாடுகள் ஒன்றையொன்று விவகாரங்களில் தலையிடுவதற்கான இந்தத் தடையானது, OAS சாசனத்தின் பிரிவு 19-லும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு விவகாரங்களில் ‘எந்தக் காரணத்திற்காகவும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிட உரிமை இல்லை’ என்று அது கூறுகிறது. இதில் இராணுவ ஊடுருவல் மற்றும் ஒரு நாட்டின் அரசாங்கத் தலைவரைக் கைது செய்தல் உள்ளிட்ட அனைத்து விதமான ‘தலையீடுகளும்’ அடங்கும்.
ஐநா சாசனம் மற்றும் OAS சாசனம் ஆகியவை ஒப்பந்தங்களாகும்; அதே சமயம் ‘வழக்கமான சர்வதேசச் சட்டமும்’ (Customary International Law) இந்த விதிகளை வலுப்படுத்துவதோடு, தலையீடுகளைத் தனிப்பட்ட முறையில் தடை செய்கிறது.
1986-ஆம் ஆண்டு நிக்கராகுவா vs அமெரிக்கா (Nicaragua vs. United States) வழக்கில் — நிக்கராகுவாவின் துறைமுகங்களில் கண்ணிவெடிகளை வைத்தது மற்றும் அங்கு நடந்த ‘கான்ட்ரா’ (Contra) போருக்கு வாஷிங்டன் ஆதரவளித்தது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு — சர்வதேச நீதிமன்றம் (ICJ), தலையிடாமை எனும் வழக்கமான சட்டக் கொள்கையை உறுதிப்படுத்தியது. மேலும், வலிமையைப் பயன்படுத்துதல் மற்றும் தற்காப்பு (அவசியம் மற்றும் விகிதாச்சாரம் உட்பட) தொடர்பான விதிகளையும் அந்த வழக்கில் பயன்படுத்தியது.
2002-ல் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முதல், 2026-ல் அதிபர் மதுரோ மற்றும் சிலியா ப்ளோரஸ் கடத்தப்பட்டது வரை, வெனிசுலா அரசாங்கத்தைப் கவிழ்க்க அமெரிக்கா எடுத்த நேரடி முயற்சிகள் இக்கொள்கைகளைத் தெளிவாக மீறுகின்றன. அதேபோல், வெனிசுலா அரசாங்கத்தைத் தாக்க அமெரிக்கா கூலிப்படைக்கு நிதியளித்த ‘ஆபரேஷன் கிதியோன்’ (Operation Gideon – 2020) போன்ற உள்நாட்டில் கிளர்ச்சியை உருவாக்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதும் அதே அளவிலான சட்ட மீறலாகும்.
3.ஒரு நாட்டின் தலைவரின் பாதுகாப்பை மீறுவது
சர்வதேசச் சட்டத்திற்கு முரணாக, ஒரு நாட்டுத் தலைவர் பதவியில் இருக்கும் போதே இன்னொரு நாடு அவரை கைது செய்வது, வழக்குத் தொடர்வது அல்லது சிறையில் வைப்பது போன்றவை அந்நாட்டுத் தலைவருக்கான பாதுகாப்பை மீறுகிற அல்லது உடைக்கின்ற செயலாகும்.
வெளிநாட்டு நீதிமன்றங்கள் மற்றொரு நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளைக் கைது செய்யாமல் இருப்பதையும், உலக நாடுகள் தங்களுக்குள் சுமூகமான உறவைப் பேணுவதையும் உறுதி செய்யவே இந்த விதி உருவாக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால்: ஒரு நாடு தனது தலைவருக்கான பாதுகாப்பு உரிமையை விட்டுக் கொடுத்தால் ஒழிய, ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் பதவியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரைச் சட்டப்பூர்வமாகக் கைது செய்யவோ அல்லது விசாரிக்கவோ முடியாது.
இந்த பாதுகாப்பு உரிமைக்க ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் விளக்கு அளிப்பதற்கு தனிப்பட்ட உடன்படிக்கை ஏதுமில்லை; இருப்பினும், இது ‘வழக்கமான சர்வதேசச் சட்டத்தில்’ (Customary International Law) உறுதியாக பேசப்படுகிறது.. இது பல சர்வதேச ஆவணங்கள் மற்றும் தீர்ப்புகளிலும் கூட பிரதிபலிக்கிறது:
சிறப்பு தூதரகங்களுக்கான ஐ.நா உடன்படிக்கை (1969): இதன் படி ஒரு சிறப்புத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கும் ஒரு நாட்டின் தலைவர், சர்வதேசச் சட்டம் வழங்கும் அனைத்து சலுகைகளையும் விலக்குரிமைகளையும் பெறுவார்.
சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) தீர்ப்பு (2002): காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் பெல்ஜியத்திற்கு இடையிலான வழக்கில் (Arrest Warrant Case), பதவியில் இருக்கும் ஒரு வெளியுறவு அமைச்சர் சர்வதேசச் சட்டத்தின் கீழ் குற்றவியல் விசாரணையில் இருந்து ‘விலக்குரிமை’ பெறுகிறார் என்றும், பெல்ஜியம் பிறப்பித்த கைது வாரண்ட் அந்த சட்ட விதியை மீறுகிறது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) – விதிவிலக்கு:
சர்வதேச அமைப்பில் இதற்கு ஒரு முக்கிய விதிவிலக்கு உள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ‘ரோம் சட்டத்தின்’ (Rome Statute) பிரிவு 27-ன் படி, ஒரு நபர் ‘நாட்டுத் தலைவர் அல்லது அரசாங்கத் தலைவர்’ என்ற பதவியில் இருப்பது, அவருக்கு அந்தச் சட்டத்தின் கீழ் உள்ள பொறுப்புகளிலிருந்து விலக்கு அளிக்காது. அந்நாட்டின் நீதிமன்றங்கள் செயல்பட முடியாத அல்லது செயல்பட விரும்பாத சூழலில், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் போன்ற மிகக் கடுமையான சர்வதேசக் குற்றங்களுக்காக எவரையும் ICC-யால் விசாரிக்க முடியும். இதனால்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போன்ற தற்போது பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக ICC கைது வாரண்ட் பிறப்பிக்க முடிந்தது.
(குறிப்பு: அமெரிக்கா வெனிசுலாவில் நடத்தியது ஒரு நாட்டின் ‘உள்நாட்டு நீதிமன்ற’ அதாவது அமெரிக்க நீதி மன்றத்தின் உத்தரவு அடிப்படையிலான தாக்குதல் தானே தவிர சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு படி அல்ல.)
அமெரிக்கச் சட்டச் சிக்கல்கள்:
ட்ரம்ப் நடத்திய இந்தத் தாக்குதல் சர்வதேசச் சட்டத்தை மட்டுமல்லாமல், அமெரிக்கச் சட்டங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 1973-ஆம் ஆண்டின் போர் அதிகாரத் தீர்மானம் (War Powers Resolution), அமெரிக்கப் படைகளை மற்றொரு நாட்டுடனான போரில் ஈடுபடுத்துவதற்கு முன்பு, அதிபர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸுடன்) கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுகிறது. அவ்வாறு செய்யத் தவறினால், 48 மணி நேரத்திற்குள் காங்கிரஸிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேசச் சட்டத்தின் மீதான வாஷிங்டனின் அலட்சியம், அவர்களது சொந்த நாட்டுச் சட்டங்களிலும் பிரதிபலிக்கிறது.
ஜனவரி 5 அன்று நடந்த நீதிமன்ற விசாரணையின் போது, “நான் ஒரு போர்க்கைதி” என்று மதுரோ கூறினார். இது முற்றிலும் துல்லியமான கூற்று. மதுரோவும் ப்ளோரஸும் வெறும் அரசியல் நோக்கங்களுக்காகவே சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் – இது உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு (Global South) எதிராக அமெரிக்கா நீண்டகாலமாக நடத்தி வரும் போரின் ஒரு பகுதியாகும்.
அவரை நான் அந்தச் சிறை அறையில் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த முன்னாள் பேருந்து ஓட்டுநர் மற்றும் தொழிற்சங்கவாதி; தனது தொழிற்சங்கவாதி தந்தை மற்றும் கத்தோலிக்க தாயார் மூலம் சமதர்மத்திற்கு (Socialism) வந்த அந்தத் அதிபர் ஒருமுறை என்னிடம் சொன்னார்: “வரலாறு என்னை இந்த அதிபர் நாற்காலியில் அமர வைத்தது யாரையும் திருப்திப்படுத்துவதற்காக அல்ல, மாறாக எனது நாட்டையும் சமதர்மத்தையும் பாதுகாப்பதற்காகவே.”
1992 எழுச்சிக்குப் பிறகு ஹியூகோ சாவேஸைப் பாதுகாக்கவும், 1994-ல் அவரைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் உதவிய அந்த இளம் வழக்கறிஞர் ப்ளோரஸை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். 1977-ல் அலி பிரிமேரா பாடிய, பின்னாளில் ‘சாவிஸ்மோ’வின் (Chavismo) கீதமாக மாறிய அந்தப் பாடலை அவர்கள் முணுமுணுப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது:
வாழ்விற்காக மடிபவர்கள்
வாழ்க்கைக்காக மடிந்தவர்களை
இறந்தவர்கள் என சொல்ல முடியாது
இந்தக் கணம் முதல் அவர்களுக்காக
அழுவது தடைசெய்யப்படுகிறது
ஒவ்வொரு கோபுரத்திலும்
மணி ஓசைகள் அடங்கட்டும்
வா தோழனே – முன்னேறுவோம் –
விடியலை வரவேற்க நமக்கு
கோழிகள் தேவையில்லை,
சேவலின் உரத்த குரலே போதும்.
அவர்கள் நாம் போர்த்திக்கொள்ளும்
வெறும் கொடி அல்ல;
அதை ஏந்த முடியாதவர்கள்
போராட்டத்திலிருந்து விலகிவிடலாம்
இது பின்வாங்குவதற்கான நேரமல்ல
கதைகளில் வாழ்வதற்கான காலமுமல்ல
பாடு, பாடு தோழனே –
உன் குரல் ஒரு துப்பாக்கித் தோட்டாவாகட்டும்
மக்களின் கைகள் இணையும்போது
எந்தப் பாடலும் ஆயுதமாகாமல் போகாது.
பாடு, பாடு தோழா…
பாடு, பாடு தோழா…
பாடு, பாடு தோழா…
உன் பாடல் ஒருபோதும்
மௌனமாகிவிடக் கூடாது
உன்னிடம் வளங்கள் இல்லையென்றால்
உன் இதயம் இருக்கிறதே பயன்படுத்து
அது ஒரு முரசைப் போலத் துடிக்கிறது
மூதாதையரின் திராட்சை ரசம் போன்ற
நிறம் கொண்ட இதயம்
உனது போராட்டத்தின் ‘க்யூகா’ (cueca) நடனம்
தெற்குக் காற்றோடு பயணித்து வருகிறது
பாடு, பாடு தோழா…
பாடு, பாடு தோழா…
பாடு, பாடு தோழா –
உன் குரல் ஒரு துப்பாக்கித் தோட்டாவாகட்டும்
மக்களின் கைகள் இணையும்போது
எந்தப் பாடலும் வெறும் பாடலாக
மட்டுமே இருக்காது.
பாடு, பாடு தோழா…
பாடு, பாடு தோழா…
பாடு, பாடு தோழா…
அன்புடன்,
பேரா. விஜய் பிரசாத்
Tricontinental 2nd news letter (2026)
தமிழில் : அபிராமி