நித்திய நெருப்பின் எழுச்சியும் இணைப்பும்-அ.பாக்கியம்
சீனாவில் இருக்கக்கூடிய 56 இனக்குழுக்களில் ஐந்து இனக் குழுக்கள் வரலாற்று ரீதியாக தனித்தன்மை வாய்ந்தவைகளாகவும் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடைய இனக்குழுக்களாகவும் உள்ளது. சன் யாட் சன் தலைமையிலான குடியரசு ஆட்சி காலத்தில் சீனாவை ஐந்து இனங்களின் ஒன்றியம் என்று அழைத்தார். இவற்றில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஹான் இனம் மற்றும் மங்கோல், மஞ்சு, திபெத்து, ஹய் இனங்கள் ஆகியவையே அந்த ஐந்து இனங்களாகும். இவற்றில் மங்கோலிய இனமும் வரலாற்று ரீதியாகவும் கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாகவும் தனித்தன்மை நிறைந்ததாக இருக்கிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பாகவே உள் மங்கோலியா என்ற தன்னாட்சி பகுதியை அமைத்தார்கள். சீனாவில் உருவாக்கப்பட்ட முதல் தன்னாட்சி பகுதி இதுவாகும். அது மட்டுமல்ல வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம் தேசிய இனங்கள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையும் இதில் வெளிப்பட்டது. 1947 ஆம் ஆண்டு மே 1ம் தேதி உள் மங்கோலியா தன்னாட்சி பிரதேசம் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைப்படி அதன் தலைமையில் நிறுவப்பட்டதாகும். 1940 ஆம் ஆண்டு முற்பகுதியில் சீன ஜப்பானுக்கு இடையிலான இரண்டாம் போர் நடைபெற்றது. அப்போது உள் மங்கோலியா பிரதேசத்தில் பல்வேறு அரசியல் சக்திகள் இயங்கின. ஜப்பான் மங்கோலிய மக்களை இன ரீதியாக சீனர்களுக்கு எதிராக திசை திருப்பும் பணியினை தீவிரமாக செய்து கொண்டிருந்தது.
செங்கிஸ்கான் பாரம்பரியத்தை சீனர்களுக்கு எதிராக ஜப்பான் நிலை நிறுத்தியது. வரலாறு அவ்வாறாக இல்லை. யுவான் வம்சம் அதாவது மங்கோலியர்களின் ஆட்சி காலத்தில் ஒட்டுமொத்த சீனாவுடன் மங்கோலியா இணைந்து இயங்கி வந்தது. இந்தச் சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தோழர் மாசேதுங்கும் அன்றைக்கு யுத்தத்தில் இணைந்து செயல்பட்ட கோமிங்தாங்க் கட்சியுடன் இணைந்து செங்கிஸ்கானின் நினைவிடத்தை தன்மயம் ஆக்கியது. இந்தப் பின்னணியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மங்கோலிய இன மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரித்து அவர்களையும் ஒருங்கிணைத்து சீனப் புரட்சியின் ஒரு பகுதியாக மாற்றுகின்ற கொள்கையை உருவாக்கி அமலாக்கியது.
1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் மே 1 வரை, உள் மங்கோலியாவின் வாங்யேமியோ (இன்றைய உலான்ஹோட் நகரம்) இல் தன்னாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலுடன், மங்கோலிய, ஹான், மஞ்சு, ஹுய், தாங்சியாங், ஓரோச்சென் உள்ளிட்ட பல இனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தன்னாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர். இந்தத் தீர்மானத்தை மாசேதுங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு முழுமையாக ஆதரித்து செயல் வடிவம் கொடுத்தார்கள். இதன்படி 1947 மே ஒன்றாம் தேதி தன்னாட்சி பிரதேச அரசாங்கம் முறையாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முழுமையாக ஆதரித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் தோழர் மாசேதுங்கும் செயல்பட்டார்கள். இதன்படிதான் 1947 அன்று மே 1ஆம் தேதி உள் மங்கோலியா தன்னாட்சி அரசாங்கம் முறையாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இன சமத்துவம் மற்றும் பிராந்திய தன்னாட்சிக் கொள்கையின் முதல் நடைமுறை செயல்பாடாகும் என்பதை சீன மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. 1949 இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதி அதிகாரப்பூர்வமாக மாகாண நிலை நிர்வாகப் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டு இன்றுவரை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது.
உள் மங்கோலியா என்ற தன்னாட்சிப் பிரதேச நிறுவப்பட்டது மட்ட மல்ல இதர மாகாணங்களில் அதிகமாக வாழக்கூடிய மங்கோலிய மக்களுக்கான தன்னாட்சி பிராந்தியங்களும், தன்னாட்சி மாவட்டங்களும் அந்த மாகாண அதிகாரத்துக்கு உட்பட்டு அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட பிராந்தியம் மற்றும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்கது , சின்ஜியாங்கில் உள்ள போர்டாலா மற்றும் பாயிங்குவோலெங் ஆகிய இரண்டு மங்கோலிய தன்னாட்சிப் பிராந்தியங்களும், கிங்ஹாயில் உள்ள மங்கோலிய மற்றும் கசாக் தன்னாட்சிப் பிராந்தியமும், சின்ஜியாங், கிங்ஹாய், கான்சு, ஹெய்லாங்ஜியாங், ஜிலின் மற்றும் லியோனிங் ஆகிய மாகாணங்களில் உள்ள ஏழு தன்னாட்சி மாவட்டங்களும் அடங்கும். சீனாவில் உள்ள மற்ற அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமைகளை அனுபவித்து வரும் மங்கோலியர்கள், நாட்டின் உண்மையான எஜமானர்களாக அவர்களுடன் இணைந்து நாட்டை நிர்வகித்து வருகின்றனர்.
இத்துடன் மங்கோலிய இன வரலாற்றையும் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. மங்கோல் என்பது ஆரம்ப காலத்தில் எர்குணா நதிக்கரையில் சுற்றித்திரிந்த ஒரு பழங்குடி இன மக்களின் பெயராக இருந்தது. இவர்களின் குடியேற்றம் மேற்கு பகுதி மற்றும் கிழக்குப் பகுதியை நோக்கி மாறிக் கொண்டிருந்தது. 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மங்கோலியப் பழங்குடியைச் சேர்ந்த தெமுஜின், இந்தப் பழங்குடியினர் அனைவரையும் ஒன்றிணைத்து, மங்கோல் என்றழைக்கப்பட்ட ஒரு புதிய தேசிய சமூகத்தை உருவாக்கினார்.
மங்கோலிய இனத்தின் வரலாறு பழமையானது. அவர்கள் “நித்திய நெருப்பு” என்று பொருள்படும் “மங்கோல்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு பாரம்பரிய நாடோடி இனமாகும். 1206 ஆம் ஆண்டு தெமுஜின் (Temujin) ஓனோன் நதிக்கரையில் ஒரு குல மாநாட்டை நடத்தினார். அதில் தெமுஜினுக்கு செங்கிஸ்கான் என்ற பட்டம் சூட்டப்பட்டது. கான் என்பது அரசன் அல்லது தலைவன் என்று பொருள்படும். செங்கிஸ் என்பது பெருங்கடல் அல்லது அகண்ட விரிந்த எனப் பொருள்படும். ‘தெங்கிஸ்’ எனும் மங்கோலிய வார்த்தையிலிருந்து உருவானது. அனைத்து மங்கோலிய இனக்குழுக்களின் மாபெரும் கானாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, பிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஒரு மையப்படுத்தப்பட்ட நிலப்பிரபுத்துவ கானேட் நிறுவப்பட்டது. இது மங்கோலிய சமூகத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தது. தெமுஜின் அரியணை ஏறிய உடனேயே பெரிய அளவிலான இராணுவ வெற்றிகள் தொடர்ந்தன. 1211 மற்றும் 1215 ஆம் ஆண்டுகளில், அவர் கின் அரசுக்கு (1115-1234) எதிராக பெரும் தாக்குதல்களைத் தொடுத்து, சோங்டுவைக் (இன்றைய பெய்ஜிங்) கைப்பற்றினார். 1219 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் மேற்கத்தியப் படையெடுப்பைத் தொடங்கி, மத்திய ஆசியா மற்றும் தெற்கு ரஷ்யா வரை தனது அதிகார வரம்பை விரிவுபடுத்தினார். அவர் 1227 இல் இறந்தார். மங்கோலியப் படையினர் சிறுவயது முதலே குதிரை ஏற்றத்திலும், குதிரையின் மீதிருந்து அம்பு எய்வதிலும் வல்லவர்கள். செங்கிஸ்கான் தனது படையினரைப் பயன்படுத்திய தந்திரங்கள் மிகவும் புகழ்பெற்றவை. எடுத்துக்காட்டாக, விரட்டும் எதிரிகள் மீது பின்னோக்கித் திரும்பி அம்பு எய்யும் உத்தி மூலம் பல ஐரோப்பியப் படைகளை வீழ்த்தினார். வெறும் 90,000 படைகளைக் கொண்டு, 10 லட்சம் வீரர்களைக் கொண்ட சீனப் படையைத் தோற்கடித்தார். உலகின் முதல் தபால் துறையை நிறுவியவர். தனது பேரரசில் மத நல்லிணக்கத்தைப் பேணினார். மேலும், ஏழைகளுக்கு வரி விலக்கு அளித்த முதல் அரசர்களில் ஒருவராவார்.
1260-ல், குப்லாய் கான் (1215-1294) மாபெரும் கான் ஆனார். அவர் தனது தலைநகரை கோபி பாலைவனத்திற்கு வடக்கே இருந்த ஹெலினிலிருந்து யான்ஜிங்கிற்கு மாற்றினார், அது பின்னர் தாது (மாபெரும் தலைநகரம்) எனப் பெயர் மாற்றப்பட்டது. 1272-ல் அவர் யுவான் வம்சத்தை (1206-1368) நிறுவினார். 1279-ல் தெற்கு சாங் வம்சத்தை (1127-1279) அடக்கி, சீனா முழுவதையும் தனது மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
1360 ஆம் ஆண்டுகளில் மங்கோலியர்களின் யுவான் வம்சம் வீழ்ச்சி அடைந்து மிங் வம்சம் வெற்றி பெற்று மங்கோலியாவை தனது ஆட்சிக்கு உட்பட்டதாக மாற்றியது. இதைத்தொடர்ந்து 1644 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிங் அதாவது மஞ்சு வம்சம் ஒட்டுமொத்த மங்கோலியாவையும் மத்திய அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து ஒன்றிணைத்தது.
தற்போது இருக்கிற உள் மங்கோலியா சீன நாட்டின் தன்னாட்சி பிரதேசமாகவும் வெளி மங்கோலியா தனி நாடாகவும் இருப்பதன் பின்னணி என்ன என்று கேள்வி எழுகிறது. உள் மங்கோலியா 1635 ஆம் ஆண்டில், மங்கோலியத் தலைவர் லிக்டன் கானின் மகன் எஜெய் கான், மஞ்சுக்குப் பேரரசரிடம் சரணடைந்தார். இதனுடன் உள் மங்கோலியப் பகுதி மஞ்சு ஆட்சியின் கீழ் வந்தது. இவர்கள் ஒப்பீட்டளவில் முன்னதாகவே கீழ்ப்படிந்ததால், “உள்” மங்கோலியா என்று அழைக்கப்பட்டனர்.
வெளி மங்கோலியா கல்கா (Khalkha) மங்கோலியர்கள் என்று அழைக்கப்பட்ட வெளி மங்கோலியப் பகுதி, மேற்கு மங்கோலியர்களான ஜுங்கர்களின் (Dzungars) அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, 1691 ஆம் ஆண்டில் மஞ்சு பேரரசரிடம் சரணடைந்தது. இவர்கள் பின்னர் கீழ்ப்படிந்ததால், “வெளி” மங்கோலியா என்று அழைக்கப்பட்டனர். கிங் வம்சம் இவ்விரு பகுதிகளையும் வெவ்வேறு நிர்வாக அமைப்புகளின் கீழ் இணைத்து, இரு மங்கோலியாக்களுக்கும் இடையிலான பிரிவை நிலைநிறுத்தியது.
பல நூற்றாண்டுகள் தனித்தனி அரசியல் ஆட்சியின் கீழ் இருந்ததால், அவர்களுக்கு இடையே சில வேறுபாடுகள் உருவாகியுள்ளன. சீனாவின் ஒரு தன்னாட்சிப் பகுதியாக உள்ள உள் மங்கோலியாவில், பல நூற்றாண்டுகளாக ஹான் சீனர்களின் குடியேற்றமும், கலப்புத் திருமணங்களும் அதிகரித்ததால், அங்கு “சீனமயமாக்கல்” (Sinicization) ஒரு முக்கிய பண்பாடாக உருவெடுத்துள்ளது.
உள் மங்கோலியா இன்னும் பாரம்பரிய மங்கோலிய எழுத்து முறையைப் பயன்படுத்துகிறது. ஆனால், மங்கோலிய நாடு, சோவியத் தாக்கத்தின் காரணமாக, சிரில்லிக் (Cyrillic) எழுத்து முறையைப் பயன்படுத்துகிறது. அல்டாயிக் மொழிக்குடும்பத்தின் மங்கோலியக் குழுவைச் சேர்ந்த, தங்களுக்கென சொந்தமான பேச்சு மற்றும் எழுத்து மொழியைக் கொண்டுள்ள மங்கோலியர்கள், உள் மங்கோலியன், பராக்-புர்யாட் மற்றும் உயிர்அத் ஆகிய மூன்று வட்டார மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். மங்கோலிய எழுத்துமுறையானது, 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹுய்ஹு அல்லது பண்டைய உய்குர் எழுத்துமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு திருத்தப்பட்டு, இன்றுவரை பயன்படுத்தப்படும் வடிவமாக மேம்படுத்தப்பட்டது.
மங்கோலியர்கள் ஒரு சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் சீனாவிற்கு கலாச்சாரம் மற்றும் அறிவியலில் அழியாத பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் 13 ஆம் நூற்றாண்டில் தங்கள் எழுத்துமுறையை உருவாக்கினர், பின்னர் பல சிறந்த வரலாற்று மற்றும் இலக்கியப் படைப்புகளை உருவாக்கினர். ‘டா யுவான் யி டோங் ஷி’ (மாபெரும் யுவான் வம்சத்தின் கீழ் சீனாவின் ஒருங்கிணைப்பு) என்பது யுவான் அரசவையின் ஆதரவின் கீழ் தொகுக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற புவியியல் ஆய்வுப் படைப்பாகும். அக்காலத்தில் நகரங்கள் மற்றும் குறிப்பாக அரண்மனைகளின் கட்டுமானத்தில் மங்கோலியக் கட்டிடக்கலையும் தனித்துவமாக இருந்தது.மிங் வம்ச காலத்தில் மங்கோலியர்களால் பண்பாட்டில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
மருத்துவ அறிவியல், வானியல் மற்றும் நாட்காட்டி ஆகியவற்றில் மங்கோலியர்களின் சாதனைகளுக்கு ஹான் மற்றும் திபெத்தியர்களின் செல்வாக்கே காரணமாகும். மங்கோலிய மருத்துவம் அதன் லாமாயிச சிகிச்சைக்காக மிகவும் அறியப்படுகிறது; இது காய அறுவை சிகிச்சைக்கும், எலும்பு முறிவுகளைச் சரிசெய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் மருத்துவ அறிவியலை மேலும் மேம்படுத்துவதற்காக, மங்கோலியர்கள் பல ஹான் மற்றும் திபெத்திய மருத்துவப் படைப்புகளை மங்கோலிய மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.
கணிதம் மற்றும் நாட்காட்டித் துறையில், முன்னேறியதற்கான பெருமை மங்கோலிய வானியலாளரும் கணிதவியலாளருமான மிங் அந்துவுக்கு சேரும். வட்டத்துண்டுகளின் பரப்பளவைக் கண்டறிவதற்கான விரைவான முறை மற்றும் ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதத்தை மதிப்பிடுதல் என்ற அவரது படைப்பும் (அவரது மகனாலும் மாணவர்களாலும் முடிக்கப்பட்டது), சீனாவின் கணித வளர்ச்சிக்கு ஒரு பங்களிப்பாகும்.சின்ஜியாங்கில் அவர் மேற்கொண்ட புவியியல் ஆய்வுகளின் காரணமாகவே, அறிவியல் முறைகளில் வரையப்பட்ட சீனாவின் முதல் நிலப்படத் தொகுப்பான ‘பேரரசின் முழுமையான நிலப்படத் தொகுப்பு’ முடிக்கப்பட்டது.
திபெத்திய பௌத்தம் (லாமாயிசம்) இங்குள்ள மங்கோலிய இனத்தவர்கள் பெரும்பாலும் பின்பற்றும் மதமாகும். பௌத்தம் மங்கோலியர்களிடம் யுவான் வம்சத்தின் போது அறிமுகமானது, ஆனால் மிங் மற்றும் கிங் வம்சங்கள் இதைப் பரப்புவதில் தீவிர முயற்சி எடுத்தன. அப்போதைய சீன அதிகாரிகளின் பார்வையில், “பௌத்தம் இரத்தப்பாதிப்பைத் தடுக்கும்” என்பதால், இது போர்க்குணமிக்க மங்கோலியர்களை அடக்கும் ஒரு அரசியல் கருவியாகவே பார்க்கப்பட்டது. வரலாற்றில் இது “மங்கோலியாவின் அரச மதமாக” இருந்தது. தற்போதும் இங்கு பல பிரபலமான லாமா மடங்கள் உள்ளன. சீன மற்றும் மங்கோலிய நாட்டுப்புற மதங்கள் பௌத்தத்தை விட அதிகமானோர் பின்பற்றுவதாக மதிப்பிடப்பட்டாலும், இவை பெரும்பாலும் பாரம்பரிய சாமனிய நம்பிக்கைகள், மூதாதையர் வழிபாடு மற்றும் இயற்கை வழிபாடு போன்ற உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் கலந்தவையாகும். உள் மங்கோலியா பல மதங்கள் ஒருங்கிணையும் ஒரு பகுதி. திபெத்திய பௌதம் மங்கோலியர்களின் முக்கிய மதமாகத் தொடர்ந்தாலும், இப்பகுதியில் பல்வேறு மதங்களின் தாக்கமும் உள்ளது.
சீனாவில் சீர்திருத்தம் மற்றும் திறப்பு கொள்கை அறிவிக்கப்பட்ட பிறகு உள் மங்கோலியாவின் பொருளாதார மிகப் பெரிய வளர்ச்சியை கண்டது. மக்களின் வறுமை முழுமையாக துடைத்தெறியப்பட்டது.1978-ஆம் ஆண்டு முதல், கால்நடை மேய்ப்பர்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் அவர்கள் செய்யும் வேலையின் அளவைப் பொறுத்து அமையும் ‘பணிப் பொறுப்பு முறை’ இப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது மங்கோலிய மக்களின் உற்சாகத்தை மேலும் தூண்டியுள்ளது.
இவையெல்லாம் மங்கோலிய மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. முற்காலத்தில், அவர்களில் பெரும்பாலோர் பழைய கூடாரம் போன்ற வாழ்க்கையின் அத்தியாவசிய வசதிகள் இன்றி, பட்டினியில் வாழ்ந்தனர். இன்று அவர்களிடம் சுத்தமான படுக்கைகள் மற்றும் புதிய போர்வைகளுடன் கூடிய நன்கு அலங்கரிக்கப்பட்ட கூடாரங்கள் உள்ளன. தையல் இயந்திரங்கள், வானொலிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைநோக்கிகள் மற்றும் பால் பிரிப்பான்கள் ஆகியவை சாதாரண மங்கோலிய மேய்ப்பர்களுக்கு இனி புதுமையானவை அல்ல. மங்கோலியக் குடியிருப்புகளில் கண்ணாடிச் சன்னல்களுடன் கூடிய பல புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
உள் மங்கோலியாவின் பொருளாதார வளர்ச்சி, அதன் பாரம்பரிய வள ஆதாரங்களில் இருந்து, பசுமைத் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்ப உற்பத்தி, மற்றும் வெளிப்புறத் திறப்பு ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு மாறும் சக்தியாக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.7% உயர்ந்து. 2.671 டிரில்லியன் யுவான் ஆக உயர்ந்தது, இது தேசிய அளவில் நடுத்தர நிலைப் பொருளாதாரமாக திரும்பியுள்ளதைக் குறிக்கிறது. உள் மங்கோலியா அதன் கரி மற்றும் அரிய பூமி வளங்களுக்கு பெயர் பெற்றது. உண்மையில், இது தேசிய அளவிலான அரிய பூமி விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது. புதிய எரிசக்தி திறன் 100 மில்லியன் கிலோவாட்களைத் தாண்டியுள்ளது. “14வது ஐந்தாண்டுத் திட்டம்” காலத்தில், இப்பகுதி 30 மில்லியன் டன்களுக்கு மேல் கார்பன் உமிழ்வைக் குறைத்து, 12 மில்லியன் டன் நிலக்கரிக்கு சமமான ஆற்றலைச் சேமித்துள்ளது. உயர் தொழில்நுட்ப உற்பத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியது, குறிப்பாக நவீன நிலக்கரி வேதிப் பொருட்கள் (+39.6%) மற்றும் அரிய பூமி (+32.0%) துறைகளில்.தேசிய திறப்பின் ஒரு முக்கிய வாயில் “இரட்டை சுழற்சி” மாதிரியுடன் இணைந்து, உள் மங்கோலியா வடக்கு நோக்கிய திறப்புக்கான ஒரு முக்கியமான பாலமாக செயல்படுகிறது. 20 திறந்த துறைமுகங்கள் மற்றும் ரஷ்யா மற்றும் மங்கோலியாவுடனான எல்லைகள் மூலம், இது சர்வதேச வர்த்தகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், துறைமுக சரக்கு போக்குவரத்து 112 மில்லியன் டன்களை எட்டியது, இது அனைத்து சீன எல்லைப்புற மாகாணங்களிலும் முன்னணியில் உள்ளது. விவசாய உற்பத்தித்திறன் இப்பகுதி உணவு உற்பத்தியில் “22வது தொடர் மிகுந்த அறுவடையை” பதிவு செய்து, 84.07 பில்லியன் கதிர்களை அறுவடை செய்தது. இது பால் (7.585 மில்லியன் டன்கள்) மற்றும் இறச்சி உற்பத்தியிலும் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது.
சீனாவின் தன்னாட்சி பிரதேசத்தில் இருக்கக்கூடிய இப்பகுதியில் திபெத்திய லாமா மதம் கூடுதலாக இருப்பதால் கலாய்லாமா வகையறாக்கள் மூலம் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் சீனாவிற்கு எதிராக செயல்படுவதற்கான தொடர் சதி வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள் இவை அனைத்தையும் சீனா முறியடித்து சீன சோசலிசத்தின் ஒரு பகுதியாக மங்கோலிய மக்களையும் இணைத்து முன்னேறி வருகிறது.
அ. பாக்கியம்
அடுத்த தொடர் ஆகஸ்ட் 12 புதனன்று வெளியாகும்