Tamil Marx

கட்டுரைகள் தொடர்கள்

தென்னாப்பிரிக்காவில் இடதுசாரிகளின் மாநாடு-பேரா.விஜய் பிரசாத்

தென்னாப்பிரிக்காவில் இடதுசாரிகளின் மாநாடு-பேரா.விஜய் பிரசாத்
  • PublishedAugust 2, 2026

2026 மே மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்கில் 103 அமைப்புகள் பங்கேற்புடன் மூன்று நாட்கள் இடதுசாரிகள் மாநாடு நடைபெற்றது. அவர்கள் அனைவரும் ஏகமனதாக ஒப்புக்கொண்ட ஒரு இறுதித் தீர்மானத்தை உருவாக்கியது ஒரு சாதனை. அந்த ‘இடதுசாரிகளின் மாநாட்டில்’ (Conference on the Left) பங்கேற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கருத்துக்கள், தென்னாப்பிரிக்காவையும் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நெருக்கடியைத் தெளிவுபடுத்தின.

இந்த நெருக்கடியில் உலகளவில் நிலவும் மோசமான வறுமையும், முடிவில்லாமல் தொடரும் கொடூரமான போர்களும் அடங்கும். “இந்த நெருக்கடியைக் குறித்துப் புலம்புவதற்காக நாம் இங்கு கூடவில்லை. அதற்கு எதிராக அணிதிரள்வதற்காகவே நாம் கூடியிருக்கிறோம்” என்று அதன் இறுதிப் பிரகடனம் கூறியது. அதுதான் இந்த மாநாட்டின் தனித்துவமான அடையாளமாக இருந்தது.

மேடையில் பேசிய பல பிரதிநிதிகள், இது வெறும் ‘பேச்சுக்கான இடம்’ அல்ல. மாறாக, நாடு மற்றும் கண்டம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் கட்டமைப்பிற்கான தங்களின் திறனை மேலும் மேம்படுத்தும்  தளமாகும் என முழங்கினர்.

இந்த இடதுசாரிகளின் மாநாடு தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியால் (SACP) தொடங்கப்பட்டது. ஆனால் மிக விரைவிலேயே இது ஒரு வழிகாட்டுக் குழுவின் (steering committee) திட்டமாக மாறியது. அந்த வழிகாட்டுக் குழுவில் பல்வேறு அமைப்புகள் (தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸிலிருந்து (ANC) பிரிந்து வந்த குழுக்கள்) இடம் பெற்றிருந்தன. தென்னாப்பிரிக்காவின் அரசியல் அமைப்புகளின் ஒட்டுமொத்தப் பரப்பிலும் கூட்டங்களை நடத்துவதுதான் அவர்களை இந்த மாநாட்டிற்கு அழைப்பதற்கான வழிமுறையாக இருந்தது. இதன் மூலம், அவர்கள் ஒரு திறந்த மனதுடன் இந்தச் சந்திப்பிற்கு வரவும், ஓர் ‘இடதுசாரி கூட்டமைப்பு’ (Council of the Left) மூலமாக ஒரு குறைந்தபட்சச் செயல் திட்டத்தை (minimum programme of action) உருவாக்க முடியுமா என்று பார்க்கவும் முயற்சி செய்யப்பட்டது.

இந்த இடதுசாரிகள் மாநாட்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று, உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் பணியாற்றும் பல அரசியல் அமைப்புகளையும் சமூக அமைப்புகளையும் ஒன்றாகக் கொண்டு வந்ததாகும். பிரிவினைவாதம், ஒற்றுமையின்மை மற்றும் பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் தனித்துவிடப்பட்ட குறிப்பிட்ட பிரச்சினைகள் சார்ந்த போராட்டங்கள் நிறைந்து கிடக்கும் இக்காலத்தில், இந்த மாநாடு தொழிற்சங்கவாதிகள், சமூக ஆர்வலர்கள், இடதுசாரி அரசியல் அமைப்புகள், இளைஞர், பெண்கள் அமைப்புகள், கருப்பின மக்களின் உரிமைகளுக்கு போராடும் கட்சிகள் மற்றும் இதர மக்கள் அமைப்புகள் இணைந்து செயல்படுவதற்கான ஒரு இடத்தை உருவாக்கியது. 

இந்தச் சந்திப்பு இடதுசாரி ஒற்றுமைக்கான கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட பல முயற்சிகளிலிருந்து வேறுபட்டது. இதற்கு காரணம் மாநாட்டில் பங்கேற்ற அமைப்புகளிடம் பன்முகத்தன்மை மட்டுமல்ல மாறாக அங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அமைப்புகளான தொழிலாளர்கள், வேலை கிடைக்காதவர்கள் மற்றும் ஏழை மக்களிடையே உண்மையான ஆதரவை கொண்டிருந்தன. எனவே, இந்த மாநாடு ஒரு கற்பனையான கருத்தியல் திட்டத்தை விட, ஒரு துடிப்பான சமூக அடித்தளத்தையே பிரதிபலித்தது.

தென்னாப்பிரிக்க சூழலில் இந்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எவ்வளவு கூறினாலும் மிகையாகாது. நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து, ஒரு காலத்தில் மக்கள் போராட்டங்களைப் பரந்த அரசியல் திட்டங்களுடன் இணைத்த பல அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன அல்லது மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. புறக்கணிப்பு, வேலையின்மை, அரசின் தோல்விகள் மற்றும் மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் உள்ளூர் அளவிலேயே முடங்கிப் போய்விடுகின்றன. பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடியபோது, இந்தச் சந்திப்பின் மையப்புள்ளியை நோக்கி அவர்களை உந்தித்தள்ளியது இந்த நெருக்கடிகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த அரசியல் தீர்வை உருவாக்குவதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் தங்களின் சொந்த அனுபவங்களைச் சமூக மாற்றத்திற்கான ஒரு பெரிய திட்டத்துடன் இணைப்பதற்கான ஒரு வழியை விரும்பினர். அமைப்புகள் தங்களின் பொதுவான நோக்கத்தை கண்டறிவதற்கான ஒரு தளத்தை உருவாக்கியதன் மூலம், மக்கள் மத்தியில் ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை இது திறந்துவிட்டது.

இதேபோல், இந்த விவாதங்கள் நடந்த விதமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. “அரசியல் வேறுபாடுகளைக் கடக்கவே முடியாத தடைகளாகக் கருதுவதற்குப் பதிலாக, பங்கேற்பாளர்கள் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை மேம்படுத்துவதற்கான ஒரு பொதுவான அர்ப்பணிப்பிற்குள் விவாதிக்கப்பட வேண்டிய கேள்விகளாகவே அவற்றை அணுகினர்.”  இது தென்னாப்பிரிக்க இடதுசாரிகளை வரலாற்று ரீதியாகப் பலவீனப்படுத்திய பிரிவினை (sectarian) நடைமுறையிலிருந்து மாறுபட்ட ஒரு போக்கைக் காட்டியது. 

தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சோலி மபைலா கூறியது போல, “நமக்கிடையே வேறுபாடுகள் உள்ளன, ஆனால் நாம் எதிரிகள் அல்ல.” ஒற்றுமைக்கு ஒரே மாதிரியான தன்மை (uniformity) தேவையில்லை. மாறாக சாதாரண மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளுக்கு  தீர்வு தரும் கூட்டு போராட்டங்களை உருவாக்குவதற்கான விருப்பமே தேவை என்பதை இந்த மாநாடு நிரூபித்தது என்றார். 

இந்த அர்த்தத்தில், இந்தச் சந்திப்பு வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. மாறாக மூலதனத்தின் மூலமாக ஆழமாக வேரூன்றிய அதிகார வர்க்கத்திற்குச் சவால் விடுத்து, தென்னாப்பிரிக்காவின் எதிர்காலத்திற்கான ஒரு மாற்றுப் பார்வையை முன்வைப்பதற்கான ஓர் அரசியல் மற்றும் சமூகக் கூட்டமைப்பை (social bloc) மீண்டும் கட்டமைப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்.

“இடதுசாரி ஒற்றுமை என்பது அவர்களுக்காக  மட்டுமே முக்கியமானது அல்ல. உழைக்கும் வர்க்கத்தை ஒன்றிணைப்பதும், அதன் நம்பிக்கையையும் தெளிவையும் மேம்படுத்துவதுமே முதன்மையான பணியாகும். அந்த ஒருங்கிணைப்பு மற்றும் அணிதிரட்டலுக்கான ஒரு கருவி இடதுசாரிகளே ஆவார்கள்.”

இந்த இடதுசாரிகளின் மாநாட்டின் இரண்டாவது பெரிய பங்களிப்பு, தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசு பின்பற்றிய நவதாராளவாதப் பொருளாதார கொள்கையாகும். ஒரு மேலோட்டமான விமர்சனத்தை முன்வைப்பதற்குப் பதிலாக, மாநாட்டு பிரதிநிதிகள்  நவதாராளமய பொருளாதாரக் கொள்கை எவ்வாறு ஏகாதிபத்திய மூலதனத்தின் நலன்களுக்குப் அடிபணிந்தது என்பதையும், அதே நேரத்தில் நிறவெறி ஒடுக்குமுறை ஆட்சியிலிருந்து காலம் காலமாக இருந்து வந்த கட்டமைப்பு சமத்துவமின்மைகளைத் தீர்க்க எவ்வாறு தவறியது என்பதையும் ஆராய்ந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகளாக சந்தை சார்ந்த சீர்திருத்தங்கள், நிதிக் கட்டுப்பாடு (fiscal conservatism), தனியார்மயமாக்கல் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவை பொதுக் கொள்கைகளை எந்த அளவிற்கு வடிவமைத்துள்ளன என்பதை இந்த மாநாடு அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்தப் கொள்கைகள் பெரும்பாலும் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அவசியமானவை என்று நியாயப்படுத்தப்பட்டாலும், அவற்றின் நடைமுறை விளைவு பெருமளவிலான வேலையின்மை, தீவிரமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் பெரும்பான்மையான தென்னாப்பிரிக்க மக்களின் தொடர்ச்சியான புறக்கணிப்பு ஆகியவையாகவே இருந்தது.

முக்கியமாக, மூலதனத்தின் வளர்ச்சிக்காக (கார்பரேட்டுகளின் நலன்) செய்யப்பட்ட இந்தச் சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்ற வாதத்தை மாநாடு நிராகரித்தது. ஜனநாயக அரசால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளில் பல, அப்போதிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்குத் தேவையானதையும் தாண்டி தான் சென்றன என்று பிரதிநிதிகள் வாதிட்டனர்.  அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துடைமை முறைகளை மாற்றியமைக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், பொருளாதார ஜனநாயகத்தை அதிகரிப்பதற்காமல் உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்தால் விதிக்கப்பட்ட வரம்புகளை மாற்ற முடியாத உண்மைகளாக தென்னாப்பிரிக்க அரசு ஏற்றுக்கொண்டது.

இப்படி ஏற்றுக் கொண்டதால் அரசியல் ரீதியாக சாதிக்க முடிந்த விசயங்களின் எல்லையைச் சுருக்கியதுடன், நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தை ஊக்கப்படுத்திய நோக்கங்களையும் பலவீனப்படுத்தியது. இதன் விளைவாக, அரசியல் விடுதலைக்கும் பொருளாதாரப் புறக்கணிப்பிற்கும் இடையே ஒரு தீவிரமான முரண்பாடு ஏற்பட்டுள்ளது, ஜனநாயகத்தின் முறையான ஆதாயங்கள் இருந்தபோதிலும் லட்சக் கணக்கான மக்கள் தொடர்ந்து வறுமையையும் பாதுகாப்பற்ற நிலையையும் அனுபவித்து வருகின்றனர்.

இந்த விமர்சனத்தின் முக்கியத்துவம், மாற்று வழிகள் இன்னும் சாத்தியம் தான் என்ற அதன் அழுத்தமான வாதத்தில் உள்ளது. இந்த மாநாடு கொள்கைத் தோல்விகளை மட்டும் பட்டியலிடவில்லை. வளர்ச்சி, பொது உடைமை, தொழில்துறை உத்தி, தொழிலாளர் உரிமைகள் மற்றும் ஜனநாயகத் திட்டமிடல் பற்றிய விவாதங்களை மீண்டும் முன்னெடுக்க முயன்றது. அவ்வாறு செய்ததன் மூலம், நவதாராளவாதக் கோட்பாட்டிற்கு மாற்று வேறேதும் இல்லை என்ற பரவலான நம்பிக்கைக்கு அது சவால் விடுத்தது. 

அரசியல் பொருளாதார கேள்வியைத் தனது விவாதங்களின் மையத்தில் வைத்ததன் மூலம், மாநாடு இடதுசாரிகளின் ஒரு அடிப்படைத் தத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது: அதாவது “உண்மையான சுதந்திரத்திற்கு அரசியல் உரிமைகள் மட்டுமின்றி, சுரண்டலையும் சமத்துவமின்மையையும் மீண்டும் மீண்டும் அதிகமாக்கும் பொருளாதாரக் கட்டமைப்புகளிலும் மாற்றம் தேவை”. இந்த பார்வை தென்னாப்பிரிக்காவில் முற்போக்கு அரசியலின் எதிர்காலத் திசையைப் பற்றிச் சிந்திப்பதற்கான ஓர் அத்தியாவசியக் கட்டமைப்பை வழங்கியது.

இந்த இடதுசாரிகளின் மாநாட்டில் நடந்த அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த விவாதங்களில் ஒன்று, அன்னியர் வெறுப்பு (xenophobia) பற்றிய கேள்வியாகும். இந்தப் பிரச்சனையை கண்டிப்பதற்கான விஷயமாக மட்டும் அணுகுவதற்குப் பதிலாக, பிரதிநிதிகள் உழைக்கும் வர்க்க மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகளுக்குள் அதன் வேர்களைப் புரிந்து கொள்ள முயன்றனர். தென்னாப்பிரிக்காவில் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் வெடிக்கும் குடியேற்ற எதிர்ப்பு வன்முறைகள் பெரும்பாலும் சகிப்புத்தன்மை மற்றும் வாழ்வுறிமைக்கான கோரிக்கைகளை எழுப்பியுள்ளன. 

இருப்பினும் அத்தகைய வேண்டுகோள்கள் எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்கும் ஆழமான சமூக மற்றும் பொருளாதார இயக்கவியலைத் தீர்ப்பதில் அரிதாகவே வெற்றியடைந்துள்ளன. வேலையின்மை, பாதுகாப்பற்ற வேலை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை மற்றும் சீரழிந்து வரும் அரசு சேவைகள் ஆகிய சமூகப் பிரச்சனைகளுக்கு காரணமான அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகச் இல்லாமல், புலம்பெயர் தொழிலாளிகளை நோக்கி பிரச்சனைகளை உருவாக்குகின்றன என்பதை மாநாடு அங்கீகரித்தது.

இந்தப் பகுப்பாய்வானது, அன்னியர் வெறுப்பை அரசியல் கட்டமைப்பு மற்றும் வர்க்க உணர்வின் மூலம் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதிநிதிகளை வலியுறுத்த வழிவகுத்தது. மேடையில் பேசிய ஒவ்வொரு அரசியல் தலைவரும் அன்னியர் வெறுப்பிற்குத் தங்களின் எதிர்ப்பை உறுதிப்படுத்தினர். புலம்பெயர் தொழிலாளர்களும் தென்னாப்பிரிக்க தொழிலாளர்களும் தொழிலாளர் படைக்குள் இருக்கும் முரண்பாடுகளின் மூலமாக பயனடையும் முதலாளிகளால் ஒரே மாதிரியான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தொழிலாளர்கள் ஒருவரையொருவர் கூட்டாளிகளாகப் பார்க்காமல் போட்டியாளர்களாகப் பார்க்க தூண்டிவிடப்படும்போது, ஊதியங்களை குறைக்கவும், தொழிற் சங்கங்களை பலவீனப்படுத்தவும் மற்றும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பைக் குலைக்கவும் மூலதனத்திற்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. எனவே, அன்னியர் வெறுப்பை வெறும் தார்மீக வேண்டுகோள்களால் மட்டும் தோற்கடிக்க முடியாது என்று அந்த மாநாடு வாதிட்டது.

சமத்துவமின்மை மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதற்கான  உண்மையான காரணங்களைத் தெளிவுபடுத்தும் முறையான அரசியல் கல்வியின் மூலமே அதற்குச் சவால் விடுக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் உள்ள வேலையின்மைக்கோ அல்லது வறுமைக்கோ புலம்பெயர் தொழிலாளிகள் காரணம் அல்ல, மாறாக அவர்களும் அதே பொருளாதாரச் செயல்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வர்க்க அரசியலே விவாதத்தின மையமாக இருந்ததன் மூலம், இந்த மாநாடு நாட்டின் எல்லைகளைக் கடந்து உண்மையான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு பார்வையை முன்வைத்தது. உழைக்கும் வர்க்கம் என்பது குடியுரிமையால் வரையறுக்கப்படுவதில்லை, மாறாகச் சுரண்டல் மற்றும் உரிமைகளை பறிக்கும் அமைப்புகளுடனான அதன் உறவால்தான் வரையறுக்கப்படுகிறது என்பதை அது வலியுறுத்தியது. 

எனவே, அன்னியர் வெறுப்பிற்கு எதிரான போராட்டம் முதலாளித்துவம், வேலையின்மை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். இந்த அணுகுமுறை வெறும் மனிதாபிமான வேண்டுகோள்களை விட ஒற்றுமைக்கான வலுவான அடித்தளத்தை வழங்குகிறது, ஏனெனில் இது தொழிலாளர்களின் பொருளாதார நலன்களுடன் ஒற்றுமையை இணைக்கிறது. அவ்வாறு செய்ததன் மூலம், இந்த மாநாடு இடதுசாரி அரசியலுக்கு நீண்டகாலமாக மையமாக இருந்த மற்றும் தென்னாப்பிரிக்காவும் ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டமும் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒரு சர்வதேச மரபை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்த மாநாட்டின் இறுதித் தீர்மானம் தெளிவாக இருந்தது.

 “ஆப்பிரிக்க மற்றும் இதர புலம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எதிராக ஆப்பிரிக்க வெறுப்பையோ (Afrophobia), அன்னியர் வெறுப்பையோ அல்லது வேறு எந்த வெறுப்புணர்வையோ உருவாக்கக் குடியேற்றத்தைப் பயன்படுத்தக் கூடாது. இந்த நெருக்கடி புலம்பெயர் தொழிலாளிகளால் உருவாக்கப்பட்டது அல்ல.”

இந்த இடதுசாரிகளின் மாநாடு அரசியல் கூட்டங்களில் அடிக்கடி காணப்படும் வெறும் வெற்று முழக்கங்களுடன் முடிவடையவில்லை, மாறாக மிகவும் மதிப்புமிக்க ஒன்றுடன் முடிவடைந்தது. நெருக்கடியின் தீவிரத்தன்மைப்பற்றிய ஒரு நிதானமான அங்கீகாரம் மற்றும் கூட்டுச் செயல்பாட்டிற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு.

இந்த மாநாட்டின் முக்கியத்துவமானது ஒற்றுமை ஏற்கனவே சாதிக்கப்பட்டுவிட்டது என்ற மாயையில் இல்லை, மாறாக தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவைத் தனித்தனியான போராட்டங்களால் முறியடிக்க முடியாது என்று ஏற்றுக்கொண்டதில் உள்ளது. தென்னாப்பிரிக்க உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் சிதறிய ஆற்றல்கள் ஒரு பொதுவான நோக்கத்தைக் கண்டறியத் தொடங்குவதற்கான ஒரு இடத்தை உருவாக்கியதே இந்த மாநாட்டின் மையச் சாதனையாகும்.

இறுதிப் பத்திரிகையாளர் சந்திப்பில், வழிகாட்டுக் குழு இந்தச் சந்திப்பு வெறும் பிரகடனங்களை மட்டும் உருவாக்கவில்லை. இது ‘இடதுசாரி கூட்டமைப்பு’ மற்றும் ஒரு பொதுவான செயல் திட்டம் ஆகியவற்றின் மூலம் ஒரு நிலையான செயல்பாட்டிற்கான அடித்தளத்தை நிறுவியுள்ளது. தென் ஆப்ரிக்க கம்யூனிஸ்ட் கட்சி தனது 14 ஆவது மாநாட்டில் (2017) ஓர் ‘இடதுசாரி மக்கள் முன்னணியை’ (Left Popular Front) நிறுவத் தீர்மானித்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டமைப்பு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடதுசாரிகளின் மாநாடு விடுத்துள்ள சவால் வெறும் தேர்தல் கால நோக்கத்தை  விடப் பெரியது.

அது, உழைக்கும் வர்க்கமும் ஏழை மக்களுக்கு இந்த உலகில் குவிந்துள்ள பொருளாதார அதிகாரத்தை எதிர்கொள்ளவும், முழுமையான விடுதலைக்கான நோக்கத்தை மீட்டெடுக்கவும் கூடிய அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்பதுதான்.

– விஜய் பிரசாத்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *