Tamil Marx

இந்தியா

கிழிந்து தொங்கும் குஜராத் மாடல்-சுதிர்

கிழிந்து தொங்கும் குஜராத் மாடல்-சுதிர்
  • PublishedJuly 19, 2026

பாஜகவின் “பெண் முன்னேற்றம்” எனும் முழக்கத்தின் பின்னால் இருக்கும் போலித்தனத்தை, அவர்களின் சொந்தக் கோட்டையான குஜராத்தின் புள்ளிவிவரங்களே தவிடு பொடியாக்கியுள்ளன.

“பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு தரப்போகிறோம்” என்று மேடைக்கு மேடை தம்பட்டம் அடிக்கும் பாஜகவின் வெற்றுப் பிரச்சாரத்தை, மத்திய அரசின் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை-6 (NFHS-6) தரவுகள் முற்றிலுமாக உடைத்தெறிந்துள்ளன.

அடிப்படை உரிமைகளைக் கூட வழங்காதவர்கள், ஆகாயக் கோட்டை கட்ட போகிறோம் என்ற வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதை விளக்கும் விதமாக, “அரிசி உளுந்துக்கே வழியைக் காணோம், இதுல அண்டா நிறையப் பணியாரமாம்!” என்ற சொலவடை தான் தற்போதைய பாஜகவின் நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

குஜராத் மாடலின் கல்வி மற்றும் பொருளாதார அவலம்

சமூக முன்னேற்றத்தின் மிக முக்கிய அடித்தளமாகப் பார்க்கப்படுவது கல்வி. ஆனால், குஜராத் மாடலில் பெண்களின் கல்வி நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. NFHS-6 தரவுகளின்படி, குஜராத்தில் கிட்டத்தட்ட 25% பெண்கள் ஒருபோதும் பள்ளிக்குச் சென்றதே இல்லை. அதாவது, மாநிலத்தில் உள்ள 4 பெண்களில் ஒருவருக்கு பள்ளிப் பக்கமே போகும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

பத்தில் நான்கு பேருக்கும் குறைவானவர்களே தங்களது மேல்நிலைக் கல்வியை முடித்துள்ளனர். வெறும் 38.6% பெண்கள் மட்டுமே 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்துள்ளனர். நகரங்களைத் தாண்டி கிராமப்புறங்களுக்குச் சென்றால், கல்விக்கான வாய்ப்புகள் மிக மோசமான அளவில் சரிந்து கிடப்பதை இந்த ஆய்வு அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

கல்வி மட்டுமன்றி, பெண்களின் பொருளாதார மற்றும் சமூக அதிகாரத்திலும் குஜராத் மாடல் படுதோல்வி அடைந்துள்ளது என்பதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. மாநிலத்தில் வெறும் 16% பெண்களுக்கு மட்டுமே சொந்தமாக வீடோ அல்லது நிலமோ உடமையாகவோ உள்ளது.

டிஜிட்டல் இந்தியா என்று கூச்சல் போடும் இந்த ஆட்சியில், குஜராத்தின் கிராமப்புறப் பெண்களில் வெறும் 46.2% பேருக்கு மட்டுமே மொபைல் போன் பயன்படுத்தும் வசதி கிடைத்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்களுக்குத் தொழில்நுட்பத் தொடர்பே இல்லாத நிலையில், பாஜகவின் டிஜிட்டல் இந்தியா எங்கே வாழ்கிறது?

‘மனுஸ்மிருதி’ சிந்தனையும் பெண் அடிமைத்தனமும்

பாஜகவின் இந்த நடைமுறைத் தோல்விகள் தற்செயலானவை அல்ல; அவை அவர்களின் தத்துவார்த்தப் பின்னணியில் இருந்து உருவானவை. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜகவின் தத்துவ அடித்தளம் என்பது  பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் பழமைவாதச் சிந்தனைகளைக் கொண்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய வழிகாட்டியான எம்.எஸ்.கோல்வல்கர் தனது நூல்களில், பெண்களுக்கு நவீனக் கல்வியோ, பொருளாதாரச் சுதந்திரமோ வழங்குவது குடும்ப அமைப்பைச் சீர்குலைத்துவிடும் என்ற தொனியில் வாதாடியுள்ளார். பெண்களின் முதன்மைக் கடமை என்பது ‘நல்ல தாய்மார்களாக’ இருப்பதும், இல்லத்தரசிகளாக வாழ்வதுமே தவிர, அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான சமூக, அரசியல் உரிமைகள் தேவையில்லை என்பதே இவர்களின் உள்ளார்ந்த தத்துவம்.

பாஜகவின் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் சங் பரிவார் அமைப்பினர் பலமுறை பொதுமேடைகளில், “பெண்கள் சுதந்திரமாக இருக்கக் கூடாது, அவர்கள் ஆண்களின் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும்” என்ற மனுஸ்மிருதி சிந்தனையை வெளிப்படையாகவே பேசியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் இன் பெண்கள் பிரிவான ‘ராஷ்ட்ர சேவிகா சமிதி’ கூட பெண்களைத் தற்காப்புக்குத் தயார்படுத்துவதாகக் கூறினாலும், இறுதியில் அவர்களைக் குடும்பப் பாரம்பர்யத்தைக் காக்கும் எல்லைக்குள்ளேயே முடக்கி வைக்கப் போதிக்கிறது. இந்தத் தத்துவார்த்தப் பின்னணியைக் கொண்டவர்கள் கொண்டு வரும் ‘மகளிர் இட ஒதுக்கீடு’ என்பது வெறும் தேர்தல் கண்துடைப்பே தவிர, அவர்களின் கொள்கை ரீதியான மாற்றம் அல்ல.

2014-க்குப் பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும்

2014-ல் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (Beti Bachao, Beti Padhao) என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த பாஜகவின் ஆட்சிக் காலத்தில், இந்தியப் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளும், அதற்கு இந்த அரசு எதிர்வினையாற்றிய விதமும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 2014-க்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறைகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன.

கதுவா மற்றும் உன்னாவ் சம்பவங்கள்: ஜம்முவின் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜகவின் அமைச்சர்களே பேரணி நடத்தினர். உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியான பாஜாக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முயன்றது அம்பலமானது.

ஹாத்ரஸ் கொடுமை (2020): உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் தலித் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலைக் குடும்பத்தினரின் அனுமதியின்றி, நள்ளிரவில் காவல்துறையே வலுக்கட்டாயமாகத் தகனம் செய்தது. குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை அச்சுறுத்தவும் அம்மாநில பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்றன.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை (2022): 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து, அவரது குடும்பத்தினரைக் கொடூரமாகக் கொன்ற 11 ஆயுள் தண்டனைக் கைதிகளைக் குஜராத் பாஜக அரசு நன்னடத்தைக் காரணங்களைக் கூறி விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட அந்தக் குற்றவாளிகளுக்குச் சங் பரிவார அமைப்புகள் மாலையிட்டு, இனிப்பு வழங்கி வரவேற்றது பாஜகவின் ஒட்டுமொத்த ‘பெண் பாதுகாப்பு’ முகமூடியையும் கிழித்துத் தொங்கவிட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த விடுதலையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் வன்முறை (2023): மணிப்பூரில் பாஜகவால் உருவாக்கப்பட்ட இனக்கலவரத்தின் போது, பெண்கள் நிர்வாணமாக வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட கொடூரக் காட்சிகள் உலகையே உலுக்கின. பல மாதங்களாக இந்த வன்முறை தொடர்ந்த போதும், மத்திய பாஜக அரசு அதைத் தடுக்கத் தவறியதோடு, நாடாளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசவே தயங்கியது.

இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்:

நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்தியாவின் முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனைகள், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாரளித்து டெல்லி வீதிகளில் பல மாதங்கள் போராடினர். குற்றவாளியான எம்பி மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, போராடிய வீராங்கனைகளை டெல்லி காவல்துறை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது பாஜக ஆட்சியின் மிகப்பெரிய கரும்புள்ளி.

பாஜகவின் உலக மகா ஏமாற்று;

நான்கில் ஒரு பெண்ணைப் பள்ளிக்குக் கூட அனுப்பத் துப்பில்லாத ஒரு அரசு, பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு வழங்கி அரியணையில் ஏற்றப் போகிறோம் என்று கூறுவது உலக மகா ஏமாற்று வேலை. பெண்களைத் தங்களது தத்துவார்த்த ரீதியாக அடிமைகளாகப் பார்க்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணி, தேர்தல் ஆதாயத்திற்காகத் தூக்கி வீசும் வெற்றுத் துண்டே இந்த இட ஒதுக்கீடு அறிவிப்பு.

“அ ஆ இ ஈ” சொல்லிக் கொடுக்க வக்கற்றவர்கள், அரியணை ஏற்றி அழகு பார்க்கப் போகிறோம் என்று சொல்வது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் என்பதை குஜராத்தின் இந்த அவல நிலவரமும், கடந்த பத்தாண்டு கால பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் நாட்டு மக்களுக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. வெற்று விளம்பரங்களாலும், போலி முழக்கங்களாலும் நிதர்சனத்தை எப்போதும் மறைத்துவிட முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் பாஜக விரைவில் புரிந்து கொள்ளும், மக்கள் அதை புரியவும் வைப்பார்கள்.

 

கட்டுரையாளர் சுதிர்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *