Tamil Marx

சர்வதேசம் தென் அமெரிக்கா

வெனிசுலா-கச்சா எண்ணெய்-பெட்ரோ டாலர்-அமெரிக்கா

வெனிசுலா-கச்சா எண்ணெய்-பெட்ரோ டாலர்-அமெரிக்கா
  • PublishedJanuary 12, 2026

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கடத்தியுள்ளது. இது கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன் ராணுவ ரீதியாக ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமித்து வந்த காலனி ஆதிக்க நடைமுறையாகவே உள்ளது.

1. வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்

2026- ஜனவரி 3 அதிகாலை 2 மணியளவில், அமெரிக்கா “ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்” (Operation Absolute Resolve) என்ற பெயரில் வெனிசுலா தலைநகர் மீது போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி பெரும் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. சுமார் 150 போர் விமானங்கள் மற்றும் 20 ராணுவத் தளங்களைப் பயன்படுத்தி வெனிசுலாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா செயலிழக்கச் செய்தது

தலைநகர் கராகஸ், புயர்டே தியூனா ராணுவத் தளம், ஹிகுவெரோட் விமான நிலையம் மற்றும் மிராண்டா, அரகுவா, லா குவைரா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா சரமாரியாகக் குண்டுகளை வீசியது இந்தத் தாக்குதலில் குடியிருப்புகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் தரைமட்டமாக்கப்பட்டதோடு, 100 க்கும் அப்பாவிப் பொதுமக்கள். வெனிசுலாவின் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட 30 க்கும் அதிகமான கியூபா நாட்டின் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் .

2. ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி கடத்தல்

தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படையான டெல்டா’ பிரிவு, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் அவர்களது வீட்டிலிருந்து கடத்திச் சென்றது. பின்னர் அவர்கள் ஒரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நியூயார்க்கிற்கு கடத்திச் செல்லப்பட்டனர்.

சாம்பல் நிற ட்ராக் சூட் அணிவிக்கப்பட்டு, கண்களைக் கட்டிய நிலையில் மதுரோவை கொண்டு சென்ற புகைப்படத்தை டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அவர்கள் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள மிக மோசமான வன்முறை நடக்க கூடிய ஆபத்தான சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

3. அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதுரோ 

கடத்தப்பட்ட ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ், நியூயார்க் நீதிமன்றத்தில் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் . அவர்கள் மீது நார்க்கோ-தீவிரவாத சதி” (Narco-terrorism conspiracy)** மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எந்த ஒரு ஆதாரமும் இன்றி டிரம்ப்பும் அவரது அரசும் சுமத்தியுள்ளது.

அந்நீதிமன்றத்தில் மதுரோ பேசுகையில், “நான் குற்றமற்றவன். நான் ஒரு நாட்டின் ஜனாதிபதி, என்னை ஒரு போர்க்குற்றவாளி போல இங்கே நிறுத்தியிருக்கிறார்கள்” என்று வாதிட்டார் .
அவரது மனைவி சிலியா புளோரஸின் முகத்தில் பலத்த காயங்கள் இருந்தன, அவர் தாக்கப்பட்டிருப்பதை அனைவரும் கவனித்தனர்.
அமெரிக்க அரசின் பல்வேறு குற்றங்களை உலகின் முன் அம்பலப்படுத்திய ஜூலியன் அசாஞ்சிற்காக வாதிட்டு அவருக்கு விடுதலை பெற்றுத் தந்த புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞர் பாரி போலாக் தான் மதுரோவிற்கு தற்போது வழக்கறிஞராக உள்ளார்.

4. கரீபியன் கடல் பகுதியில் தாக்குதல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் கடத்தல்

இந்த சம்பவங்களுக்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே அதாவது 2025 செப்டம்பர் மாதம் முதல் வெனிசுலா நாட்டின் கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையை நிலைநிறுத்தி அந்நாட்டின் படகுகளை தாக்கி தொடர் போர் பதற்றத்தை உருவாக்கி வந்தது.

இந்த அனைத்து தாக்குதல் இருக்கும் நியாயப்படுத்தும் வகையில் தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் போதை பொருள் வருகிறது. குறிப்பாக வெனிசுலா ஜனாதிபதி இரண்டு போதைப் பொருள் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளார். தலைமை தாங்குகிறார் என்றெல்லாம் ட்ரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த வெனிசுலா கடந்த ஆண்டு ஐ.நாவில் புகார் செய்திருந்தது. மேலும் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கேட்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தற்போது வரை வெனிசுலா மீது வைத்து வரும் குற்றத்திற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் கொடுக்கவில்லை.

தற்போது வரை ‘கடல்சார் பாதுகாப்பு’ என்ற பெயரில் வெனிசுலாவின் சுமார் 30 படகுகள் மீது குண்டு வீசி 115-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை அமெரிக்கா படுகொலை செய்துள்ளது.

எண்ணெய் திருட்டில் ஈடுபடும் அமெரிக்கா

மேலும், 2025 டிசம்பரில் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ‘ஸ்கிப்பர்’ (Skipper) உள்ளிட்ட இரு கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துக் கடத்தியது . அதேபோல், வட அட்லாண்டிக் கடலில் ரஷ்யக் கொடியுன் ‘பெல்லா 1’ (Bella 1) என்ற டேங்கர் கப்பலையும், கரீபியன் கடலில் ‘சோஃபியா’ (Sofia) எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் அமெரிக்கக் கடலோர காவல் படை “பொருளாதாரத் தடைகளை மீறியதாகக்” கூறி கடத்திச் சென்றுள்ளது. இதனால் சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

5அமெரிக்கா வெனிசுலாவைக் குறிவைப்பதற்கான உண்மையான காரணங்கள்:

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பிற்குப் பின்னால் போதைப்பொருள் ஒழிப்போ அல்லது ஜனநாயகமோ இல்லை; அதன் உண்மையான காரணங்கள் பின்வருமாறு:

பெட்ரோ-டாலர் (Petro-Dollar) அரசியல்

1974-ல் அமெரிக்கா சவுதி அரேபியாவுடன் செய்த ஒப்பந்தப்படி, உலக எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலரில் மட்டுமே நடக்க வேண்டும். இதுதான் டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு அடிப்படை . ஆனால், வெனிசுலா தனது எண்ணெயை டாலருக்குப் பதிலாக சீன யுவான், யூரோ மற்றும் ரூபிள் போன்ற நாணயங்களில் விற்பனை செய்யத் தொடங்கியது. இது அமெரிக்காவின் நிதி ஆதிக்கத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாக உள்ளது.

எண்ணெய் வளம்

வெனிசுலா உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இருப்பைக் (303-330 பில்லியன் பேரல்கள்) கொண்டுள்ள நாடு . இது அமெரிக்காவை விட 5 மடங்கு அதிகமாகும். இன்னும் சொல்லப்போனால் முக்கிய எண்ணெய் வள நாடுகளாகப் பார்க்கப்படுகிறது சவுதி அரேபியா,அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளை விட வெனிசுலாவில் தான் கச்சா எண்ணெய் அதிகமாக உள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை விட வெனிசுலாவின் கச்சா எண்ணெய் “ஹெவி குரூட் ஆயில்” ஆகும். இந்த ஆயில் வெனிசுலா மெக்சிகோ கனடா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே உள்ளது. இதுவும் வெனிசுலாவில் இருப்பது தான் அதிகம்.

(Heavy Crude Oil) என்பது அடர்த்தி மற்றும் பிசுபிசுப்புத் தன்மை அதிகம் கொண்ட ஒரு வகை கச்சா எண்ணெய் ஆகும். இது சாதாரண எண்ணெயைப் போல எளிதாக ஓடாது, மாறாகத் தார் அல்லது தேன் போல மிகவும் கெட்டியாக இருக்கும். இதன் அடர்த்தி அதிகமாக இருப்பதால், இது நீரில் மிதக்காமல் மூழ்கும் தன்மையைக் கொண்டிருக்கும். அறிவியல் ரீதியாக, இதன் API gravity 20-க்கும் குறைவாக இருக்கும்.

அமெரிக்கா தற்போது உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும், அதற்கு ‘ஹெவி குரூட் ஆயில்’ இன்றி அமையாதது ஏனெனில் அதற்கு சில காரணங்கள் உள்ளன.

1.) ​சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டமைப்பு

அமெரிக்காவின் பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்கள் (குறிப்பாக வளைகுடா பகுதிகளில் உள்ளவை) பல ஆண்டுகளுக்கு முன்பே ‘ஹெவி குரூட் ஆயில்’ வகை எண்ணெயைச் சுத்திகரிப்பதற்காகக் கோடிக்கணக்கான டாலர் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை லேசான (Light) எண்ணெயை விட கனமான எண்ணெயைச் சுத்திகரிப்பதில்தான் அதிக லாபம் ஈட்டுகின்றன.

2.) ​உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு இடையிலான வேறுபாடு

அமெரிக்கா உற்பத்தி செய்யும் எண்ணெய் பெரும்பாலும் ‘லைட் ஸ்வீட் குரூட்’ (Light Sweet Crude) வகையைச் சார்ந்தது. ஆனால், அதன் சுத்திகரிப்பு நிலையங்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்த ‘ஹெவி சோர் குரூட்’ (Heavy Sour Crude) தேவைப்படுகிறது. எனவே, அமெரிக்கா தனது சொந்த எண்ணெயை ஏற்றுமதி செய்துவிட்டு, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து ஹெவி க்ரூட் ஆயிலை இறக்குமதி செய்கிறது.

3.) ​பொருளாதார லாபம்

லேசான எண்ணெயை விடக் ஹெவி க்ரூட் ஆயில் சர்வதேச சந்தையில் குறைந்த விலைக்குக் கிடைக்கும். மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்கச் சுத்திகரிப்பு நிலையங்கள், இந்த மலிவான கனரக எண்ணெயை வாங்கி அதிலிருந்து அதிக மதிப்புள்ள எரிபொருட்களைத் தயாரிப்பதன் மூலம் மேலும் அதிக லாபம் அடையமுடியும்.

​அமெரிக்க எரிசக்தி பாதுகாப்பு

தற்போதைய அரசியல் சூழலில் (2026), வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்கா காட்டும் ஆர்வம் மற்றும் கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்த ‘ஹெவி குரூட் ஆயில்’ தேவையை நிறைவு செய்வதற்காகவே உள்ளது.

தற்போது அமெரிக்க நாட்டின் எண்ணெய் நிறுவனங்களை வெனிசுலாவில் நிறுவி நம் நாட்டின் எண்ணெய் வளத்தைக் திருடுவது தான் டிரம்பின் அடிப்படை நோக்கம் என்பது தெளிவாகிறது.

இதை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். தனது ட்ரூத் சோசியல் மீடியா தளத்தில் ஒரு பதிவை வெளியிட்ட அவர் வெனிசுலாவிடமிருந்து 30 முதல் 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை தினமும் பெறப்போவதாக கூறியுள்ளார். பதிலுக்கு இந்நாட்டின் சந்தைக்குள் அமெரிக்காவின் விவசாய பொருட்களையும் மகத்துவ பொருட்களையும் விற்கப்போவதாகவும் அறிவித்துள்ளார் இது வெனிசுலாவின் பொருளாதாரத்தை முழுமையாக அழித்து விடும்.

பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு

வெனிசுலா BRICS அமைப்பில் சேர விண்ணப்பித்துள்ளது. சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுடன் இணைந்து டாலரைத் தவிர்க்கும் (De-dollarization) முயற்சியில் வெனிசுலாவும் உள்ளது

டாலருக்கு மாற்றான வர்த்தகம்

சீனா உருவாக்கிய CIPS மற்றும் mBridge போன்ற கட்டண முறைகளைப் பயன்படுத்தி டாலர் மற்றும் SWIFT அமைப்பைத் தவிர்க்க வெனிசுலா முயன்றது. 330 பில்லியன் பேரல் எண்ணெயுடன் வெனிசுலா இத்தகைய அமைப்புகளில் இணைந்தால், அது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் என்பதால் அமெரிக்கா இந்தத் தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது.

முன்பு ஈராக்கின் சதாம் ஹுசேன் (2003) மற்றும் லிபியாவின் கடாபி (2011) ஆகியோர் டாலரைத் தவிர்த்து மாற்று நாணயங்களில் எண்ணெய் வர்த்தகம் செய்ய முயன்றபோது அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ, அதையே அமெரிக்கா இப்போது மதுரோவிற்கும் செய்துள்ளது. இது ஒரு நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் மட்டுமல்லாமல், டாலர் ஆதிக்கத்தை நிலைநிறுத்த நடத்தப்படும் சர்வதேசப் பயங்கரவாதமாகும்.

இது மட்டுமின்றி அமெரிக்கா தற்போது ஐநா அவையின் 31 துணை அமைப்புகள் உட்பட மொத்தம் 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து தன்னை வெளியேற்றிக் கொண்டுள்து. இந்த நடவடிக்கைகளானது தன்னை சர்வதேச சட்டங்களுக்குள் இருந்து செயல்படக்கூடிய ஒரு நாடாக இல்லாமல் அமெரிக்க விடுவித்துக் கொள்ளும் நடவடிக்கையாகும். சர்வதேச சட்டங்கள் இருக்கும்போதே அந்த சட்டத்தை மதிக்காமல் பல நாடுகளின் மீது நடத்தி வரும் அமெரிக்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும்போது சர்வதேச சட்டங்களில் இருந்தும் விடுவித்துக் கொள்ளும்.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை கடத்திய பிறகு மெக்சிகோவையும் ராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பேன் கொலம்பியாவிற்கும் வெனிசுலாவிற்கு ஏற்பட்ட அதே கதி தான் நடக்கும் கிரீன்லாந்தையும் நான் ஆக்கிரமிப்பேன் என்று டிரம்ப் பேசி வருகிறார். இந்நாடுகளில் எல்லாம் எண்ணெய் வளங்களும் கனிம வளங்களும் நிறைய உள்ளன.

கிரீன்லாந்து ஆக்கிரமிப்பது அல்லது விலை கொடுத்து வாங்குவது என்று வெள்ளை மாளிகையே அதிகாரப்பூர்வமாக பேசி வருகிறது. கிரீன்லாந்தானது டெர்மார்க் என்ற நேட்டோ நாட்டில் உள்ள ஒரு சுயாட்சி பகுதியாகும் தற்போது ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இத்தகைய சூழலில் தான் டிரம்ப சர்வதேச சட்டங்கள் அமைப்புகளில் இருந்து தன்நாட்டை வெளியேற்றி வருகிறார். அப்படி நடந்தால் அதன் பிறகு ஒரு வெறி பிடித்த மிருகம் போல இதைவிட கொடூரமாக எந்த நாட்டை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அமெரிக்கா சென்று விடும்.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி,பண வீக்கம்,வேலையின்மை தீவிரமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமை மிக மோசம் அடைந்து வருகிறது. இந்நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இதற்கிடையே சீனாவின் வளர்ச்சி அதாவது ஒரு சோசலிச நாட்டை சார்ந்த வளர்ச்சி என்பது மிக வேகமாக முன்னுக்கு வந்துள்ளது. இது அமெரிக்கா தலைமையிலான சர்வதேச ஆதிக்கத்தை உடைத்து . அமெரிக்காவுக்கு மாற்றாக மற்றொரு சக்தி வாய்ந்த நாடு உள்ளது. அந்த நாட்டோடு நம்மால் இணைந்து செயல்பட முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டால் அமெரிக்காவின் சர்வதேச ஆதிக்கம் உடையும். இத்தகைய சூழல்களுக்கு இடையே தான் அமெரிக்கா உலக நாடுகளை ஒரு போர் சூழலுக்குள் தள்ளுகிறது.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *