DeepSeek-RI பூகம்பம் முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட எதிர்காலம் – அ.பாக்கியம்
1978 ஆம் ஆண்டில் சீனா தனது பொருளாதாரத்தில் சீர்திருத்தத்தையும், திறப்புகளையும் (open door policy) தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டெங்ஷியோபிங் ஆராய்ச்சியாளர் கூட்டத்தில் கீழ்கண்டவாறு கூறினார்.
“புதிய சீனா அமைக்கப்பட்ட காலத்திலிருந்து நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மகத்தான முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் நாம் தெளிவான பார்வையுடன் இருக்க வேண்டும். நமது நிலைக்கும், மிகவும் முன்னேறிய நாடுகளின் நிலைக்கும் இடையே இன்னும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது என்பதையும், நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சக்திகள் இன்னும் மிகக் குறைவு என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்”
என்று அழுத்தமான எதார்த்த நிலைமைகளை எடுத்துரைத்தார்.
கடந்த சில வாரங்களில் நடைபெறக்கூடிய மாற்றங்களை நேரில் பார்க்க அவர் உயிரோடு இருந்திருந்தால் மிகப்பெரும் இன்ப அதிர்ச்சி அடைந்திருப்பார்.
DeepSeek-RI சாட் போர்டின் வருகை என்பது, சீனாவின் வளர்ச்சி அடைந்த பெரிய மொழி மாதிரி (LLM) உலகத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவுத்துறையை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமல்ல, ஒரே இரவில் நியூயார்க் பங்குச்சந்தையில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்புகளில் ஒரு ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி டாலர்) டாலர்களை வீழ்ச்சி அடைய செய்துள்ளது. அந்த அளவு வேகமாக சீனாவின் DeepSeek-RI பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியமானது என்ற ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சீனா மீதான தடைகள்
2022 ஆம் ஆண்டு ஜோ பைடன் நிர்வாகம் செயற்கை நுண்ணறிவு துறை வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான சிப் (semiconductor) தயாரிக்கும் கருவிகள் மற்றும் மென்பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தது. இது உலக வர்த்தக விதிகளுக்கு மாறானது என்று அப்பொழுது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பொழுது இந்தத் தடை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்புடையது என கூறி பைடன் நியாயப்படுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க தேர்தலில் டிரம்ப்பின் பிரச்சாரத்தை எதிர்கொள்வதற்காக பைடன் மற்றொரு உத்தரவை வெளியிட்டார். அதாவது ChatGPT, DeepSeek-RI போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுகளை பயிற்றுவிப்பதற்கான கிராபிக்ஸ் பிராஸசிங் யூனிட்டுகள் (GPU) ஏற்றுமதி செய்வதையும் தடை செய்தது மட்டுமல்ல, சீனாவுடன் வர்த்தகம் செய்யும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் இந்த தடையை விரிவுபடுத்தி சீனாவின் தொழில்நுட்பத்தை அழிக்க முயற்சித்தார்.
வரலாற்று தவறை மீண்டும் செய்த அமெரிக்கா
அமெரிக்காவும் முதலாளித்து உலகமும் சோசலிச நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து வர்த்தகத்தை தடுக்க சுவர்களை ஏற்படுத்தினால் அவர்களை தொழில்நுட்ப ரீதியாக எப்போதும் பின்தங்கியே வைத்திருக்க முடியும் என்று கருதி தனது வரலாற்று தவறை மீண்டும் செய்தது.
அமெரிக்காவின் தடையை தொடர்ந்து சீனாவில் நடந்ததோ வேறு. அதாவது புதிய படைப்பு சக்தி பெறக்கூடிய அளவிற்கு இந்த தடைகள் சீனாவின் டெவலப்பர்களை தூண்டியது. அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய பழைய சிப்களை பயன்படுத்துவதற்கும் மலிவான மற்றும் திறமையான வழிகளை கொண்டு வருவதற்கும் அவர்களை இந்தத் தடை தூண்டியது. இந்த முயற்சிகள் காரணமாக குறைந்த நினைவாற்றலையும், குறைந்த அளவு கணினி சக்திகளை பயன்படுத்தியும் செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிற்பதற்கும் பயன்படுத்துவதற்குமான முறைகளை கண்டுபிடித்து விட்டார்கள்.
இந்த கண்டுபிடிப்பின் விளைவாக அமெரிக்கா தொழில்நுட்பத்தில் ஏகபோகமாக இருந்ததை உடைத்தெறிந்தார்கள். சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அமெரிக்காவின் கண்டுபிடிப்புகளுக்கு மாறாக விலைகுறைவான, பூமிக்கும் சுற்றுச்சூழலுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்தாத சிப்களை தயாரித்து விட்டார்கள்.
குறைந்த செலவில் சிறந்த தொழில்நுட்பம்
சீனா இந்த DeepSeek-RI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சிக்காக ஆறு மில்லியன் டாலர்களை மட்டுமே செலவழித்துள்ளது. அமெரிக்காவோ செயற்கை நுண்ணறிவிற்காக பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டி குவித்து பங்குச் சந்தையில் வைத்துள்ளது. என்விடியா (Nvidia) என்ற சிப் தயாரிக்கும் கம்பெனி செயற்கை நுண்ணறிவு சந்தையில் மிகப்பெரும் கம்பெனியாகும்.
கடந்த நான்கு காலாண்டுகளில் 63 பில்லியன் டாலர்களை லாபமாக பெற்றுள்ளது. அதன் பங்கு விலை 800 சதவீதம் வெடித்துகிளம்பியது. ஆனால் DeepSeek-RI வெளியான பிறகு இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை இழந்து விட்டது. இதே போன்று இன்டல், மைக்ரோ நிறுவனங்களும் பெரும் சரிவை கண்டார்கள். மொத்தமாக வால் ஸ்ட்ரீட் ஒரு ட்ரில்லியன் டாலர்களை இழந்தது. இந்த இழப்பு என்பது அமெரிக்க ராணுவ பென்டகன் நிறுவனத்தின் சமீபத்திய வருடாந்திர செலவிற்கு சமமான இழப்பாகும்.
என்விடியா சிப்களை நம்பி இருக்கும் ChatGPT ஒரு வருடத்திற்கு அமெரிக்காவில் 21,000 வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு இணையான அதிகளவு மின்சாரத்தை செலவு செய்கிறது. இதனால் நிறைய புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களால் வளிமண்டலத்தில் அதிக கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. இது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கிறது. சீனாவின் DeepSeek-RI இதற்கு மாறாக 90 சதவீதம் குறைவான ஆற்றலை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் 92 சதவீதம் கார்பன் வெளியேற்றம் குறைகிறது.
இந்த DeepSeek-RI கண்டுபிடிப்பு அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கும், அது தொடர்பான மின் உற்பத்தி நிலையங்களுக்கும் 500 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கி அறிவித்தார். படோடமாக அறிவிக்கப்பட்ட இந்த நிதி இப்பொழுது வீணாகிவிட்டது என்று தலையில் கைவைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் இந்த DeepSeek-RI சாட்போட்டின் முக்கியமான சிறப்பு இதன் டெவலப்பர்கள், இதை ஓபன் சோர்ஸ் ஆக உருவாக்கியுள்ளார்கள் என்பதுதான். தங்களது பணியை இந்த உலகம் அறிந்து கொள்வது மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்காகவும் இதை அர்ப்பணித்தார்கள். எந்த ஒரு விஞ்ஞானியும், குறியீட்டாளர்களும் தங்களுக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்க DeepSeek-RI பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மிக மிக முக்கியமான விஷயம்.
அறிவை சமூகமயமாக்குவோம்
அறிவு சார் சொத்துரிமையும், சட்டத்தையும் நிரந்தர காப்புரிமைகளையும், பயன்படுத்தி தங்களது கொள்ளை லாபத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக சீனா உலக மக்களின் அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவை அளித்துள்ளதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
DeepSeek-RI நிறுவனத்தின் நிறுவனர் லியாங் வென்பெங் (Liang Wenfeng) தனது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட் போர்ட் மூலம் பணம் சம்பாதிப்பது நோக்கம் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
“எங்களது நோக்கம் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பை தேடுவது அல்ல. அதற்கு மாறாக, தொழில்நுட்ப எல்லையை அடைந்து முழுசுற்றுச்சூழல் வளர்ச்சி ஏற்படுத்துவதற்கான உந்துதலை உருவாக்க வேண்டும் என்பதாகும்”. பொருளாதார வளர்ச்சி அடையும் போது சீனா மட்டும் சீனா மட்டும் தனியாக முன்னேறுவதற்கு பதிலாக, இந்த வளர்ச்சியில் ஒரு பங்களிப்பாளராக மட்டும் மாற சீனா வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுவரை நாங்கள் முயற்சித்து முடித்து விட்டோம். இப்போது வழிநடத்த வேண்டிய நேரம் இது” என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்.
உயர் தொழில்நுட்ப பொருளாதாரத்தில் அமெரிக்க ஏகபோகங்களின் ஆதிக்கம் செலுத்தும் காலம் சந்தேகத்திற்கு இடமின்றி முடிவுக்கு வந்து விட்டது. சீனாவின் அறிவியலும் தொழில்நுட்பமும் மிகவும் மட்ட ரகமானது என்று கருதப்படும் நாட்களும் கடந்து போய்விட்டன. 47 ஆண்டுகளுக்கு முன்பாக சீனத் தலைவர் டெங்ஷியோபிங் குறிப்பிட்ட பெரிய இடைவெளி இப்பொழுது முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
தொழிலாளிக்கு எதிராக திருப்பப்படும் தொழில்நுட்பம்
தொழில்நுட்ப முன்னேற்றமும், தொழில் நுட்பமும் தன்னளவில் வர்க்க குணங்களைக் கொண்டிருக்காது. அதை பயன்படுத்தும் வர்க்கங்களை சார்ந்து தான் அதன் பயன்கள் இருக்கும். “உண்மையான வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே உண்மையான உலகில், உண்மையான விடுதலையை அடைய முடியும்..நீராவி என்ஜின், நூற்பாலைகளும் இல்லாமல் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியாது. அடிமை முறை ஒழிக்கப்படாமல் விவசாயம் மேம்படுத்த முடியாது. விடுதலை என்பது ஒரு வரலாற்றுச் செயலாகும். அது ஒரு மனச்செயல் அல்ல. அது வரலாற்றுச் சூழல்கள் தொழில் வணிகம் விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சியால் உருவானது” என்று காரல் மார்க்ஸ் ஜெர்மன் தத்துவம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டார்.
நீராவி இயந்திரமும் நூற்பாலைகளும் சமுதாய முன்னேற்றத்திற்கு உதவின. அதே நேரத்தில் தொழில் புரட்சியால் உருவான தொழிற்சாலைகளும் அந்த ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களை சுரண்டுவதற்கான புதிய கருவிகளாக மாறியது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற உயர்தொழில்நுட்ப பயன்பாடுகள் அறிவுத் துறையிலும், பிற உற்பத்தி துறைகளிலும், விநியோக முறைகளிலும், மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தும் திறனை கொண்டுள்ளது. ஆனால் இந்த முன்னேற்றங்கள் சமூக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாமல் விட்டால் அவை அனைத்தும் தனியார் மயமாக்கப்படும்
அவர்கள், தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கும், ஊதியங்களை குறைப்பதற்கும், வேலை நிலைமைகளை மோசமாக்குவதற்கும் மட்டுமே இதை பயன்படுத்துவார்கள். உழைப்பின் மதிப்பை இழிவுப்படுத்துவதற்கும், வசதி படைத்தவர்கள் லாப குவிப்பை அதிகரிப்பதற்குமான வழிமுறையாக இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் இருத்தலியல் கேள்விகளை எழுப்பினாலும் தொடர்ந்து நடக்கக்கூடிய வர்க்க மற்றும் ஜனநாயக போராட்டத்தின் மூலமாக உழைக்கும் மக்களுக்கான கருவியாக அது பயன்படுத்தப்பட வேண்டும்.
ஸ்புட்னிக் மொமண்ட
இந்தத் தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாக நாம் இதை அங்கீகரிக்க வேண்டும். DeepSeek-RI மீது மிகப்பெரிய சைபர் தாக்குதலும், பல டிஜிட்டல் தாக்குதல்களும் அமெரிக்கா மூலமாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே இந்த தாக்குதலை நடத்தினாலும் மீண்டும் இந்த தாக்குதலை வேகமாக தொடர்கிறார்கள். ஆனால் உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாட்டில் DeepSeek-RI முதலிடத்தில் உள்ளது.
பொதுவாக இதை சீனாவின் ஸ்புட்னிக் தருணம் (Sputnik moment ) என்று அழைக்கிறார்கள்.சோவியத் யூனியன் 1957ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோளாக ஸ்புட்னிக் -1 செய்கைகோளை ஏவியதின் மூலம் விண்வெளி யுகத்தை துவங்கியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவும் குறுகிய காலத்தில் இதர தொழில்நுட்ப வளர்ச்சிகளை மிஞ்சும் என்பதில் சந்தேகம் இல்லை இது ஒரு புதிய வரலாற்று காலகட்டத்தின் முன்னோடியாகவும் அமையும்.
1957 ஆம் ஆண்டு ஆண்டனாக்களுடன் சோவியத் யூனியன் விண்வெளிக்கு அனுப்பிய ஸ்புட்னிக் விண்வெளிக்கலம் சோசலிசத்தின் ஆற்றலை காட்டியது. முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட எதிர்காலம் என்ற முறையில் ஏகாதிபத்தியத்திற்கு எச்சரிக்கை மணி அடித்தது. எனவே சோவியத் யூனியனுக்கு எதிராக ஏகாதிபத்தியம் விண்வெளிப் போட்டியை ஆரம்பித்தது. சோவியத் யூனியனை அச்சுறுத்தக் கூடிய வகையில் வளரும் நாடுகள் முழுவதும் அணு ஆயுதத்தை தயாரித்தனர். கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களை உலகம் முழுவதும் தீவிரமாக பரப்பினார்கள். அப்படி ஒரு அதிர்வலையை சோவியத் யூனியன் குறுகிய கால வளர்ச்சியில் ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுத்தி இருந்தது.
சீனா vs அமெரிக்கா
DeepSeek-RI குறுகிய காலத்தில் இதர தொழில் நுட்ப வளர்ச்சிகளை மிஞ்சும் என்பதில் சந்தேகம் இல்லை. இது ஒரு புதிய வரலாறு காலகட்டத்தின் முன்னோடியாகவும் அமையும்.
அமெரிக்கா ஏகபோக ஆசைகளை பாதுகாக்க சீனாவின் கண்டுபிடிப்பின் மீது மிகப்பெரிய அடுத்தடுத்த தாக்குதல்களை தொடுப்பார்கள். சிப் மேக்கர்களுக்கும், செயற்கை நுண்ணறிவு டெவலப்பர்களுக்கும் மிகப்பெரிய எச்சரிக்கை மணி என்று அமெரிக்க ஜனாதிப் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவுக்கு எதிரான பொருளாதாரப் போரை தீவிரப்படுத்துவார்கள். அமெரிக்காவின் உள்நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்பட்டாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் கட்டணங்கள், வர்த்தக கட்டுப்பாடுகள், ஏற்றுமதி தடைகள், என்று பலவற்றை அறிவிக்கலாம்.
அமெரிக்க முதலாளிகள் தடையற்ற வர்த்தகத்தையும், சுதந்திர சந்தையை மட்டுமே நம்புகிறார்கள். எனவே தங்களை பொருளாதாரப் போட்டியில் தோற்கடிக்க முடியாது என்று நம்பினார்கள். ஆனால் இந்த DeepSeek-RI பூகம்பம் முதலாளிகள் இழக்கநேரிடும் இழப்புகளை முன்னிறுத்தி அவர்களை சிந்திக்க வைத்துள்ளது. எனவே நீண்ட காலத்திற்கு ராணுவ பதட்டத்தை அதிகரித்து சீனாவுக்கு எதிரான போர்பறையை அடிக்கத் தொடங்குவார்கள். சீனாவை முற்றுகையிடவும் முயற்சி செய்வார்கள். சீன அச்சுறுத்தல் என்ற பிரச்சார தாக்குதலை மக்களை நோக்கி வீசுவார்கள். தொற்றுநோய் காலத்தில் செய்தது போல் ஆசிய விரோத இனவெறியை கிளப்பி விடுவார்கள்.
இருதரப்பு வளர்ச்சியே முக்கியம்
ஆனால் சீனாவின் கொள்கையோ வேறு. DeepSeek-RI செயலியை பதிவிறக்கம்செய்து அதனிடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான சீனாவின் அணுகுமுறை குறித்து பீப்புல்ஸ் வேர்ல்ட் பத்திரிக்கை கேட்ட பொழுது கீழ்க்கண்ட பதிலை DeepSeek-RI கொடுத்தது.
“சீன அரசாங்கம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் பரஸ்பர நன்மை மற்றும் பகிர்ந்து அளிக்கப்படுகிற வளர்ச்சி ஆகிய கொள்கைகளை உறுதியாக கடைப்பிடிக்கிறது அனைத்து மனித குலத்தின் நலனுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது” என்ற பதிலை கொடுத்தது.
பல்வேறு சமூக அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கிடையே, அமைதியான சகவாழ்வு சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய கொள்கைகளை பல பத்தாண்டுகளாக சீன வெளியுறவு கொள்கையின் வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஆனால் அமெரிக்கா புதிய பனிப்போரை தொடங்குவதற்காக சீனாவின் முயற்சிகளை தடுத்து நிறுத்துகிறது. தொழில்நுட்ப ஏகபோகவாதிகள் தங்கள் சொந்த லாபத்தையும், அதிகாரத்தையும் பாதுகாக்க எதையும் செய்வார்கள். அது உலகை பிளவுபடுத்துவதையும், பகிர்ந்து அளிக்கப்படுகிற வளர்ச்சியை, முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதாகவும் அமைகிறது. மக்கள் இந்த சக்திகளை பின்னுக்கு தள்ள வேண்டும்.
(பீப்பிள்ஸ் வேர்ல்ட் பத்திரிக்கையில் ஜனவரி 31 அன்று CJ ATKINS எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது.)