Tamil Marx

தமிழ் நாடு தொழிலாளர் போராட்டங்கள்

தமிழ்நாடு அரசா? சாம்சங் அரசா? – இரண்டுக்கும் வேறுபாடுகளே இல்லை! – தோழர் இ.முத்துகுமார்‌ நேர்காணல்

தமிழ்நாடு அரசா? சாம்சங் அரசா? – இரண்டுக்கும் வேறுபாடுகளே இல்லை! – தோழர் இ.முத்துகுமார்‌ நேர்காணல்
  • PublishedOctober 13, 2024

நேர்காணல்

சாம்சங் தொழிலாளர்களின் இந்த தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தின் வெற்றி என்பது இந்திய உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமான வெற்றி.

இந்திய தொழிற்சங்க மையம் (CITU) தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்களால் நடத்தபடும் போராட்டம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் சங்கம் அமைக்கும் உரிமையை பாதுகாப்பதற்கான போராட்டம்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் இல்லாமல் வேலைக்கு செல்லும் 300 தொழிலாளர்களில் ஒரு சிலரை உள்ளடக்கிய குழுவுடன் கடந்த அக்டோபர் 07-ம் தேதி அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் படி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது என்று அரசு அறிவித்திருப்பதை CITU நிராகரித்தது. மேலும், போராடும் 1500 தொழிலாளர்களை உள்ளடக்கிய SIWU நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என CITU தெரிவித்துள்ளது. “கூலி குறித்தோ, பணியிட சூழல் குறித்தோ நிறுவனத்துடன் விவாதிக்க சங்கம் அமைக்கும் உரிமையை நிறுவனமும், அரசும் மறுப்பதே இங்கே பிரச்சனை” என்று CITU மாவட்ட செயலாளரும், SIWU தலைவருமான இ.முத்துகுமார் தெரிவித்துள்ளார்.

Q: இதுவரையில் எத்தனை‌ சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது? அவற்றில்‌ எடுக்கப்பட்ட முடிவு என்ன?

A: மொத்தம் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதுள்ளது. அவை அனைத்திலும் சாம்சங் நிறுவனம் போராட்டத்தில் ஈடுபடாத தொழிலாளர்களை உள்ளடக்கிய தனது சொந்த குழுவுடன் நடந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தி வருகிறது. SIWU தொழிற்சங்கத்தையும், அதன் கோரிக்கை சாசனத்தையும் ஏற்க‌ மறுக்கிறது.

அரசின் தொழிலாளர் துறை “தொழிற்சங்க பதிவிற்கு நிறுவனம் சம்மதிக்கவில்லை” என்று அரசின் தொழிலாளர் துறை தெரிவித்து வருகிறது. நிறுவனத்தை கூட்டு பேரத்தில் ஈடுபட செய்யாத இந்த திமுக அரசு தொழிலாளர்களை போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புமாறு அறிவுறுத்துகிறது. இந்த விசயத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்ததற்கும் அரசின் அறிவுரைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தொழிலாளர்களின் பிரச்சனைகளை அரசு சட்டப்படி கையாள வேண்டும்.

Q: அக்டோபர் 07-ல் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

A: இருங்காட்டுகோட்டை அருகே உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேசினோம். தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டோம். தொழிற்துறை அமைச்சர் T.R.B.ராஜாவுடன் SIWU-வை சேர்ந்த தொழிலாளர்கள் பேசுகையில் நிறுவனத்தில் கடந்த 16 ஆண்டுகளில் அவர்கள் சந்தித்த துயரங்களை பற்றியும் சங்கம்‌ அமைக்கும் முடிவை நோக்கி நகர்வதற்கான காரணத்தையும் எடுத்துரைத்தனர். (2007 முதல் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் என்பதே கிடையாது)

நிர்வாகத்துடன் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதோடு ஊதிய உயர்வு குறித்தும் நிர்வாகத்திற்கு வலியுறுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். முதல்வர் இந்த போராட்டத்தினால் வருத்தமடைந்ததாக சொல்லி போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். சாம்சங் நிறுவனத்திற்கு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் குறித்தும், தொழிலாளர் சட்டங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கிட வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம்.

மேலும், இந்த போராட்டம் வெறும் ஊதிய உயர்விற்கானது அல்ல என்றும் கூலியை‌ குறித்தோ, பணியிட சூழல் குறித்தோ நிறுவனத்துடன் விவாதிப்பதற்கான சங்கம் அமைக்கும் உரிமையை நிறுவனமும், அரசும் மறுப்பதே இங்கே பிரச்சனை என்றும் அமைச்சரிடம் தெரிவித்தோம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைக்கும் உரிமையை சாம்சங் மறுப்பதையும் கவனப்படுத்தினோம்.

‘நீங்கள் ஏன் நீதிமன்றத்தை அணுகினீர்கள்?’ என்று எங்களிடம் கேட்டபோது, பதிவு செய்யாமல் 45 நாட்களைக் கடந்துவிட்டது என்றும், பல சுற்று பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் தரவில்லை என்றும் கூறினோம். எங்கள் பிரச்சினை சாம்சங் நிர்வாகத்தில் உள்ளது. சாம்சங் நிறுவனம் எழுப்பிய ஆட்சேபனைகளுக்கு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளோம். அரசு தொழிற்சங்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்திருந்தால் நாங்கள் ஏன் நீதிமன்றத்தை நாடப்போகிறோம்? இந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தை ஒரு தரப்பாக சேர்க்குமாறு அரசு தரப்பே வாதிடுகிறது.

அன்றைய தினம் நாங்கள் பேச்சுவார்த்தையை‌ முடித்து விடைபெறும் போது இந்த விவகாரம் குறித்த முதல்வருடன் ஆலோசித்து அவரது கருத்தை பின்னர் தெரிவிப்பதாக கூறினார். ஆனால், நிறுவனம் அனுப்பி வைத்த தொழிலாளர் குழுவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அன்று இரவே செய்தியாளர்களிடம் பேசுகிறார்.

பெரும்பான்மை சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டு, சங்கம் அமைத்து, கோரிக்கை சாசனம் வெளியிட்டு 30 நாட்களுக்கு மேலாக போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைச்சரோ சாம்சங் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட போட்டி குழுவிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். அவர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்து எல்லாம் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டதாக கூறி போராடும் தொழிலாளர்களை வேலைக்கு திரும்ப அறிவுறுத்தினார்.

இவற்றை ‘நியாயமற்ற தொழிலாளர் நடைமுறை’ என அரசியலமைப்பு வரையறுக்கிறது. [அதாவது, முதலாளியின் ஆதரவுடன் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களை நிறுவுதல், எந்தவொரு தொழிலாளிக்கும் எதிராக பாகுபாடு காட்டுவதன் மூலம் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் உறுப்பினர்களை ஊக்குவிப்பது ஆகியவை அடங்கும்.] அரசியலமைப்பின் படி பொறுப்பேற்று கொண்ட அரசின் இந்த ஒரு சார்பு நடவடிக்கை கண்டனத்திற்கு உரியது.

Q: தொழிற்சங்கம் அமைப்பது என்பது முதலீடுகளை பாதிக்கும் என்கிற விமர்சனம் எழுகிறதே. அது குறித்த உங்கள் கருத்து என்ன? 

A: இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான மற்றும் ஆதரம் இல்லாத செய்தி. 2007-2008 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் Hyundai நிறுவனத்தில் CITU பதிவு செய்யப்பட்டது.

1350 தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட அந்த சங்கத்தை நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அந்நிறுவனம் 2012-ல் போட்டி சங்கத்தை பதிவு செய்தது. அங்கே‌ போராட்டத்தை‌ நாங்கள் நடத்தினோம். ஆனால், நிர்வாகம் மற்ற சங்கத்துடன் தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது Hyundai நிறுவனத்தின் கார் உற்பத்தி பெருகிய இருக்கிறது, தொழிலாளர்களின் வேலைதிறனும் அதிகரித்துள்ளது. இப்போது அந்நிறுவனம் இந்தியாவில் அதன் 3வது தொழிற்சாலையை மகாராட்டிராவில் துவங்கியுள்ளது. உற்பத்தி அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, சமூக மற்றும் பணியிட பாதுகாப்பு உள்ளிட்டவை அனைத்தும் சரி செய்யப்பட்டன.

அதேபோல், அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தில் 2017-ல் CITU துவங்கப்பட்டது. 7,000 டயர்கள் உற்பத்தி செய்யப்பட்ட தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தின் பதிவுக்கு பின் தான் 16,000 டயர்கள் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஆனால், 17,000 டயர்களை ஓவர்‌ டைம் மூலம் அந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. சாதாரண வாகன டயர்கள் மற்றும் லாரிகளுக்கான டயர்கள் என இருவகையான டயர்கள் அங்கே தயாரிக்கப்படுகிறது. லாரி டயர்களுக்கான தேவை குறைவு.

தொழிலாளர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள், ஆனால் நிறுவனம் உற்பத்திக்கு தயாராகவில்லை. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் CITU சங்கம் உருவான பிறகு, தொழிற்சங்கமும் நிர்வாகமும் உற்பத்தித் தேவைகளை கூட்டாக விவாதித்து விதிமுறைகளை முடிவு செய்கின்றனர். உற்பத்தி உறவுகளும் தீர்மானிக்கப்படுகின்றன. தொழிற்சங்கங்கள் இருக்கும் இடங்களில் உற்பத்தி அமைதியாக நடக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. தொழிற்சங்கங்கள் முதலீடுகளுக்கும் தொழிற்வளர்ச்சிக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்பதெல்லாம் அப்பாட்டமான பொய் பிரச்சாரம்.

Q: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் ஏதேனும் நோட்டீஸ் அனுப்பியதா?

A: ஆம், நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அவை தெளிவற்ற, சட்டவிரோதமானவை. அவர்களுக்கு பதில் அளித்துள்ளோம். இதனை தொழிலாளர்கள் பொருட்படுத்தவில்லை.

 

Q: தொழிற்சங்கத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?

A: சாம்சங் தொழிலாளர்கள் கையிலெடுத்துள்ள இந்த சங்கம் அமைக்கும் உரிமைக்கான போராட்டம் வெற்றியில் தான் முடியும். இப்போராட்டத்தில் தொழிலாளர்கள் அடைய போகும் வெற்றி உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமான வெற்றியாக அமைய போகிறது. இந்த அரசின் கார்ப்பரேட் ஆதரவு நிலையை கண்டித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்டோபர் 21ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளோம். நுழைவாயில் கூட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஒரு இயக்கமாக மாறியுள்ளதால், இது நமது இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

 

Frontline பத்திரிக்கையாளர் சித்தார் முரளிதரன் நடத்திய நேர்காணல்.இந்த நேர்காணல் முதலில் frontline இதழிலில் ஆங்கிலத்தில் வெளியானது.

தமிழில் தோழர் M.E.நிருபன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *