Tamil Marx

கட்டுரைகள்

சென்னை வெள்ளமும் வடியவில்லை, வசை வெள்ளமும் தீரவில்லை! – உ.பி.க்களின் அட்ராசிட்டிஸ்!

சென்னை வெள்ளமும் வடியவில்லை, வசை வெள்ளமும் தீரவில்லை! – உ.பி.க்களின் அட்ராசிட்டிஸ்!
  • PublishedDecember 12, 2023

“விமர்சனமில்லாத கருத்து எப்படி வீரியம் பெரும்? எப்படி நிரந்தரமாக செம்மையாக்கப்படும்? எப்படி மெருக்கேற்றப்படும்? அதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறதே!”
– தந்தை பெரியார்.

தமிழ்நாட்டில் ஹாட் டாபிக்காக இருந்த மிக்ஜன் புயலின் சென்னை பெருவெள்ளத்தையே பின்னுக்கு தள்ளியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் உடன்பிறப்புகளின் வசை வெள்ளங்கள்! வழக்கத்திற்கு மாறாக அதீத மழையால் சென்னை கடும் வெள்ளத்தை சந்தித்திருக்கிறது. எல்-நினோ பருவ நிலை மாற்ற காலத்தில் இதுகுறித்து சூழலியல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகவே கூறி வந்த நிலையில், புயல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநில அரசாங்கம், வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் கோட்டை விட்டிருக்கிறது. ஒட்டுமொத்த சென்னை நகரமும் 24 மணி நேரங்களுக்கு உள்ளாகவே முழுவதுமாக மூழ்க தொடங்கிய நேரத்திலேயே நிவாரண, மீட்பு பணிகளை முடுக்கிவிட வேண்டிய அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்பட்டதே இன்று வரை தேங்கிய வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல், மக்கள் எதிர்ப்புகளுடனே திணறி வருகிறது.

சென்னை பெருநகர மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி என தனித்தனியாக நிர்வாக வசதிக்காக பிரித்திருந்ததே தவிர உரிய வசதிகளையோ, தேவையான உதவிகளோ அரசாங்கத்திடம் இருந்து இந்த பேரிடர் காலத்திலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தான் சென்னை புறநகர் பகுதிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்தது தெரிய வந்தது. மின்சாரம் துண்டிப்பு, தகவல் தொடர்பின்மையும் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவேயில்லை என்பதே மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது. அதிருப்திகளுக்கும், எதிர்ப்புகளுக்கு பிறகே பல அமைசசர்கள் , அதிகாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் கவனம் செலுத்தி மீட்பு பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கினர்.

இத்தகைய எதிர்ப்புகளை லாவகமாக கையாள வேண்டிய ஆளும் தரப்பு எடுத்த சில நடவடிக்கைகள் மேலும் எதிர்ப்புகளை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. முன்னணி ஊடகங்களில் வெள்ள பாதிப்புகளை ஒளிபரப்பியதைவிட அதிகமான தாக்கத்தை சமூக ஊடகங்கள் ஏற்படுத்தின. டிஜிட்டல் ஊடகங்கள் கோலோச்சும் இந்த காலகட்டத்தில் சென்னை வெள்ளப்பாதிப்பு பல போலி செய்திகளோடு சேர்த்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. முதல்வரின் துதிபாடி கொண்டிருந்த, இதனை எதிர்பாராத ஆளும் திமுக தரப்பு தனது ஐ.டி.விங்கை இணைய களத்தில் கூலிப்படையாக இறக்கியது. ஒருபக்கம் வெள்ள பாதிப்பு பகுதிகளை கண்டறிய X தளத்தில் பதிவு செய்து கவனப்படுத்துங்கள் என அமைச்சர்கள் சொல்லி கொண்டிருந்த நிலையில், இன்னொரு பக்கம் அதன் ஐ.டி.விங் உதவிக்காக பாதிப்புகளை பதிவிடுபவர்கள் மீது பாய்ந்தது.

பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என எவரும் இந்த இணைய கூலிப்படை தாக்குதலுக்கு தப்பவில்லை. உச்சமாக கள உண்மை நிலவரத்தை பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர் சபீர் அகமதுவை திமுகவின் முக்கிய நிர்வாகியான ஆர்.எ ஸ். பாரதியின் மகன் “அவனலாம் வாழவே விடக்கூடாது” என கொலை மிரட்டல் விடும் அளவுக்கு ஐ.டி.விங். களேபரத்தை உருவாக்கியுள்ளது. (Factcheck) புகழ் பத்திரிகையாளர் ஷுபைராக இருந்தாலும், சபீராக இருந்தாலும் துவம்சம் செய்யும் நிலையில்தான் திமுகவின் இணைய கும்பல் இயங்கியது. பேரிடர் காலங்களில் உதவிக்கான களமாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டிய நிலையில் மேலும் சங்கடமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இத்தகைய செயல்பாடுகளை இதுவரையிலும் ஆளும் தரப்பினர் யாரும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் தமிழக அரசாங்கம் பொய் செய்திகளை கண்டறிய தனிப்பிரிவை தொடங்கியிருந்தது. ஆனால் அதனை மாநில அரசாங்கத்தின் நலனுக்காக அல்லாமல் சொந்த நலனுக்காகவே பயன்படுத்தி வருகிறது. உண்மையான வெள்ள பாதிப்பு தகவல்களை அந்த பிரிவின் மூலமே (Factcheck) செய்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டிருக்கலாம். உரிய முறையில் பயன்படுத்த அதையும் தவறவிட்ட ஆளும் திமுக , பாதிப்பு செய்திகளை பதிவிட்ட, ரிப்போர்ட் செய்தவர்களின் கடந்த கால பதிவுகளை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் திமுக சமூக வலைத்தளங்களில் செய்த கருத்துருவாக்கத்தையே தற்போதும் செய்ய முயன்று தோற்று போயிருக்கிறது. கீழடி காலத்திலேயே நம் இனம் கழிவுநீர் வசதியை ஊர்களில் ஏற்படுத்திய நாகரிக கொண்ட தொன்மையான இனம் என்ற தமிழ்நாட்டின் அறிவுஜீவிகள், சென்னையின் உட்கட்டமைப்பு வசதிக்கு ஆலோசனை கூறுவார்களா இல்லை வழக்கம்போல அரசின் துதிப்பாடுவார்களா என பார்ப்போம்.

கட்டுரையாளர்: சைலஸ் அருள்ராஜ் (சமூகவியல் மாணவர்)

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *