தெலங்கானவின் அரசியல் மாற்று ரேவந்தா ரெட்டியா? சீதக்காவா?
ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பண்பையும், அரசியலையும் எனக்கு கற்றுக்கொடுத்தது நக்சலைட் கால வாழ்க்கைதான் என பெருமிதத்துடன் கூறும் சீதக்கா, தற்போதைய தெலங்கானா அரசில் பழங்குடியினர் நலன் அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இவரது அரசியல் வாழ்க்கை இன்றைக்கு இந்தியாவின் விவாத பொருளாக்கியிருக்கிறது. எந்த துப்பாக்கி முனைகள் சீதக்காவை வேட்டையாட பின்னால் துரத்தியதோ, அதே துப்பாக்கிகள் இன்றைக்கு அவருக்கு முன்னால் பாதுகாப்புக்காக செல்கிறது.
தெலங்கானாவில் காங்கிரசின் வெற்றி இரண்டு பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறது.
1. ரேவந்த் ரெட்டி
தெலங்கானாவில் பெரும்பான்மையான ரெட்டி சமூகத்தை சார்ந்த வசதி படைத்த குடும்பத்தல் பிறந்தவர். மாணவர் காலந்தொட்டே ஆர்.எஸ்.எஸ்.சின் ABVP அமைப்பில் அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். அதன்பின் சுயேட்சையாக காங்கிரசுடன் மல்லுகட்டி சண்டையிட்டவர், தெலுங்கு தேசம் கட்சியில் தஞ்சம் அடைந்தார். அங்கும் ஒரங்கட்டப்பட்ட ரேவந்த் ரெட்டி, தனி தெலங்கானா மாநில உருவாக்கத்துக்குப்பிறகு காங்கிரசில் இணைந்து அரசியல் வாழ்க்கையில் உச்சத்தை தொட்டு இன்றைக்கு மாநில முதல்வராக ஆகியிருக்கிறார். தெலங்கானா மாநில தேர்தலில் கடுமையான சவால்களை ஆளும்கட்சிக்கு ஏற்படுத்தி, காங்கிரசின் செல்வாக்கையும், தனக்கான மதிப்பையும் உயர்த்தியிருந்தார். இவரது அரசியல் பாணி பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்த வேளையில், சர்ச்சைகளுக்கு உள்ளானது. சந்திரசேகர ராவின் நிர்வாக உண்மை முகத்தை தோலுரித்த ரேவந்த் ரெட்டி, தனக்கான பாரம்பரிய இந்துத்துவ முகத்தையும் தளராமல் வெளிப்படுத்தியிருந்தார். பி.ஆர்.எஸ். தங்களுக்குள் இந்துத்துவத்தை பங்கீட்டு கொண்டு சண்டையிட்ட நேரத்தில், வைல்ட் கார்டு எண்ட்ரியாக அதே ஆயுதத்தை கையில் எடுத்து பயன்படுத்தினார் ரேவந்த் ரெட்டி. இன்று அவர் முதல்வராக பதவியேற்ற பிறகு தெலங்கானா அம்பேத்கர் தலைமை செயலகத்தில் பார்ப்பன புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இதற்காக ரேவந்த் ரெட்டியை விமர்சிப்பவர்கள் அவரது மற்றும் காங்கிரசின் கடந்த கால வரலாற்றையும் திருப்பி பார்க்க வேண்டும்.
2. சீதக்கா ( தன்வந்திரி அனுசுயா)
இளம் வயதில் நக்சலைட்டாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் அனுசுயா. இன்றைக்கு “சீதக்கா” என அன்போடு தெலங்கானா மக்களால் பாகுபலி மாதிரியை போன்று கொண்டாடப்படுகின்றார். இவர் தெலங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர். 80-களில் நிலபிரபுத்துவத்துக்கு எதிரான நக்சலைட்டுகளின் போராட்டக்குணத்தினால் ஈர்க்கப்பட்டு அதில் ஆயுதமேந்தி ஆளும் வர்க்கத்தோடு சண்டையிட்டவர். சந்திரபாபு நாயுடு அரசு நடத்திய எண்கவுண்டரில் தனது கணவர் மற்றும் சகோதரரை பலி கொடுத்திருந்தார் சீதக்கா. பின்னாளில் அதே சந்திரபாபு நாயுடு கட்சியில் இணைந்து பணியாற்றவும் செய்தார்.
நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை அழித்தொழித்த அரசாங்கம் பலருக்கும் அந்த நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. அதில் தனது 4 வயது மகனோடு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியவர், நின்றுபோன கல்வியை தொடங்கி சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். உதவுவதற்கு ஆறு இல்லாத ஏழை, எளிய விளிம்பு மக்களுக்கும், சரணடைந்த நக்சலைட்டுகளுக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடினார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் அரசியலில் தன் எளிய மக்களுக்கான அரசியல் பாணியை தேர்தல் ஜனநாயகத்தில் தொடங்கினார். TDP கட்சியில் முக்கிய பெண் தலைவராக வளர்ந்தவர், தெலங்கானா மாநில உருவாக்கத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவரது செல்வாக்கை உணர்ந்த காங்கிரஸ் சீதக்காவற்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் முக்கியமான பொறுப்புகளை கொடுத்தது. தன் தொகுதியில் எளிய மக்களோடு பணியாற்றும் அர்ப்பணிப்பு, அரசியல் சேவையென தன் செல்வாக்கை உயர்த்தி கொண்டே இருந்தார். கொரோனா பெருந்தொற்றின்போது விளிம்பு நிலையில் இருந்த பழங்குடியின மக்களுக்கு தானே பொருட்களை சுமந்து சென்று உணவு பொருட்கள் வழங்கினார். ஊடகங்களில் சீதக்காவின் செயல் பெரும் பாராட்டை பெற்றது. அப்போது அவர் கூறியது, எனது இளமை காலங்களில் நக்சலைட்டாக இருந்தபோது இந்த விளிம்பு நலை மக்களுக்காக துப்பாக்கியை தோளில் சுமந்தேன். தற்போது அதே மக்களுக்காக உணவு பொருட்களை என் தோளில் சுமக்கிறேன் என்றதோடு, நான் 20-வயதில் பசியோடு இருந்தபோது எனக்கு உணவளித்த மக்களுக்கு இன்று நான் உணவளிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது என்றார் சீதக்கா.
ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பண்பையும், அரசியலையும் எனக்கு கற்றுக்கொடுத்தது நக்சலைட் கால வாழ்க்கைதான் என பெருமிதத்துடன் கூறும் சீதக்கா, தற்போதைய தெலங்கானா அரசில் பழங்குடியினர் நலன் அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இவரது அரசியல் வாழ்க்கை இன்றைக்கு இந்தியாவின் விவாத பொருளாக்கியிருக்கிறது. எந்த துப்பாக்கி முனைகள் சீதக்காவை வேட்டையாட பின்னால் துரத்தியதோ, அதே துப்பாக்கிகள் இன்றைக்கு அவருக்கு முன்னால் பாதுகாப்புக்காக செல்கிறது. இந்தியாவின் ஜனநாயகம் எத்தகைய மாண்பை கொண்டது என பலரும் உச்சி முகிரும் வேளையில், சீதக்காவின் அரசியல் இடதுசாரிகளின் முழுமையான மக்கள் ஜனநாயகத்திற்கான அரசியல் என்பதை அறியாதவர்கள்.
தெலங்கானாவில் காங்கிரசின் வெற்றி என்பது இப்படியாக ஆதிக்க குணாம்சத்தையும், அடக்குமுறைக்கு எதிரான குணாம்சத்தையும் உள்ளடக்கியே பெற்றிருக்கிறது. இது காங்கிரசின் வெற்றயல்ல. முதலாளித்துவ ஜனநாயகத்தை காப்பாற்றி கொள்ளும் தந்திர வெற்றி. புதியதொரு இடதுசாரிகளின் மாற்று மக்கள் மத்தியில் வலுப்பெறாதவரை, சீதக்காவின் அரசியல் பலம் இந்துத்துவ ரேவந்த ரெட்டிக்கே வலு சேர்க்கும்.
கட்டுரையாளர்: சைலஸ் அருள்ராஜ் ( சமூகவியல் மாணவர்)