Tamil Marx

தமிழ் நாடு

“நீட்” தேர்வுக்கு மாற்று பொதுக்கல்வியே!

“நீட்” தேர்வுக்கு மாற்று பொதுக்கல்வியே!
  • PublishedFebruary 4, 2022

நேற்றைய தினம் ஆளுநர் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்க்கு ஒப்புதல் வழங்காமல் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளார். இதன் மூலம் நீட் குறித்து ஒரு மறுவிவாதம் எழுந்துள்ளது ஆனால் நீட் வேண்டாம் என்பதில் தெளிவு உள்ள, நாம் விவாதிக்க வேண்டிய முக்கியமான் பிரச்சனையை மறந்துவிடுகிறோம் அதுதான் கல்வி வியாபாரம். அதை முழுமையாக அறிந்துகொள்ள நீட் குறித்தும் அதற்கு முந்தைய நிலை குறித்தும் தீர்க்கமான ஆய்வு தேவை.

நீட் தேர்வு ஏற்படுத்தும் சிக்கல்கள்

  1. மாநில அரசின் கல்வி மீதான உரிமையை முற்றிலுமாக பறிக்கிறது இது இந்திய அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது.
  2. நீட் அனைத்து பல்கலைகழகத்திற்கும் எந்த சிறப்பு சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பல்கலைகழத்திற்கும் பொருந்தும் என்கிறது. இதுவும் அரசியல் அமைப்பு சட்டமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரத்திற்கு எதிரானது. மாநில சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்படும் பல்கலைகழத்தின் விதிகளை எப்படி நாடளுமன்றம் தீர்மானிக்கமுடியும்?
  3. மருத்துவ கல்வியில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. முறைசார்ந்த கல்வியை பின்னுக்கு தள்ளி முறைசாரா கோச்சிங் சென்டர் நடைமுறையை ஊக்கபடுத்துகிறது.
  4. கோச்சிங் சென்டர் இன்றைய கல்விசந்தையில் நீதியரசர் ஏ.கே ராஜன் கமிட்டி படி குறுகிய கால பயிற்சிக்கு குறைந்த பட்ச கட்டணமே 3,50,000 என்கிறது இந்த தொகையை கட்டித்தான் படிக்க வேண்டிய சூழல் உள்ளது. இது சாதாரண ஏழை எளிய மக்களின் சாதாரண தொழிலாளியின் வீட்டு பிள்ளைக்கோ விவசாய தொழிலாளியின் பிள்ளைக்கோ சாத்தியமற்ற ஒன்று.
  5. வட்டார மொழிகள் புறக்கணிக்கபடுகிறது சரியான மொழிபெயர்ப்பு இல்லாமல் தமிழ் வழி மாணவர்களை வடிகட்டுகிறது. உதாரணத்திற்கு cheetah runs speed__ km per hr என்பதை சீதா ஓடும் வேகம் என கேட்க படுவதை போல…
  6. நெகடிவ் மதிப்பெண் முறை மாணவர்களை உளவியல் ரீதியாக தயக்கமின்றி பதில் அளிப்பதை தடுக்கிறது. இப்படி பல்வேறு குளறுபடிகள் ஒட்டுமொத்தமாக கல்விமறுக்கப்படும் சமூக மக்களுக்கு நீட் ஒரு நவீன தீண்டாமையே, இவை அனைத்தும் நீட்டை நாம் மறுப்பதற்கான பிரதான காரணங்களாகும்.

ஆனால் நீட் என்னும் கொடியவனை விரட்டி மீண்டும் பழைய நடைமுறை என்பது தான் சிக்கல் அதற்கு நாம் நீட்டுக்கு முந்தைய கால நடைமுறையையும், நீதியரசர் ஏ‌.கே ராஜன் கமிட்டி தந்துள்ள புள்ளிவிபரங்களை கொண்டு ஒப்பீடு செய்துப்பார்ப்போம்.

நீட்மற்றும் நீட்டிற்கு முந்தைய நிலை

அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை நீட்டுக்கு முந்தைய காலத்தில் அதிகபட்சமாக மாணவர்கள் சேர்ந்த ஆண்டு 2014- 2015. இந்த கல்வியாண்டில் 38 மாணவர்கள் 26 அரசு கல்லூரிகளிலும், 12 சுயநிதி கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். ஆனால் அந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மருத்துவ தகுதி பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் 2,48,602.  அதாவது 2,48,602 மாணவர்களில் 38 பேர் மட்டும் ஆனால் தனியார் பள்ளிகளில் 1,67,728 மாணவர்களில் 3,103 பேர் சேர்ந்துள்ளனர். கிட்டதட்ட 98.57 விழுக்காடு இது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான விழுக்காடு. எவ்வளவு பெரிய வித்தியாசத்தை எளிதில் கடந்து போகிறோம் .

நீட் தேர்வால் சிபிஎஸ்சி மாணவர்கள் கணிசமாக பயனடைவது உயர்ந்துள்ளது.  பொது வகுப்பில் முற்படுத்தபட்ட வகுப்பினர் சேர்க்கையும் தமிழகத்திற்கு வெளியில் படித்தவர்கள் சேர்க்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டேபோகிறது. நகர்புற கிராமப்புற, பொருளாதார அடிப்படை போன்ற மற்ற ஒப்பீடுகள் எல்லாம் 4 முதல் 5 விழுக்காடு குறைந்துள்ளது.

ஆனால் இங்கு முக்கியமான விசயம் அரசு பள்ளி குறித்தானது, நீட் தேர்வு கல்வியை கார்ப்பரேட் வணிகமாக மாற்றியுள்ளது ஆனால் நீட்டுக்கு முந்தைய நிலையோ தனியார் பள்ளி முதலாளிகளின் வணிகமாகவே இருந்துள்ளது. நீட்டுக்கு முந்தைய காலத்தில் விரல் விட்டும் எண்ணும் அளவில் சில தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இருந்துள்ளது இப்போது அவை கார்ப்பரேட் முதலாளிகளின் கோச்சிங் சென்டரும் அதே தனியார் பள்ளிகளின் எக்ஸ்ட்ரா கோச்சிங் வகுப்புகளும் மீள் ஆதிக்கம் செய்கின்றன. இதை நாம் பரிசீலிக்காமல் செல்ல முடியாது.

பொதுக்கல்வியே மாற்று அதுவே சிறந்தது

அடிப்படையில் கல்வி அனைவருக்கும் சமமானதாகவும் அறிவியல் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் நவ தாராளமயமாக்கம், கல்வியில் தனியார்துறையும் அனைவருக்கும் சமமான கல்வியை சீர்குலைக்கிறது . வசதிபடைத்தவர்களே கல்வியில் தொடர் ஆதிக்கத்தை செலுத்திவருகின்றனர். உலக மக்கள் தொகை சராசரியில் அதிக விழுக்காடு மருத்துவர்களை கொண்டுள்ள நாடு கியூபா. அதன் மூலம் அனைவருக்கும் தரமான பொது சுகாதாரத்தை வழங்கிவருகிறது அதற்கு அடிப்படையான காரணம் சோசியலிச கியூப அரசும், கியூபாவில் கடைபிடிக்கபடும் கல்விமுறை பொதுகல்வி முறையுமே ஆகும்.

இந்தியாவில் 80% மக்கள் இன்னும் பொது சுகாதாரத்தையே நம்பியுள்ளனர் ஆனால் நாம் சுகாதார வசதிகளில் தன்னிறைவு அடையவில்லை அதற்கு மருத்துவ கல்வி அனைவருக்கும் கிடைக்காதது ஒரு முக்கிய காரணமாகும். இறுதியாக பொதுகல்வியே அனைவருக்குமான கல்வியை வழங்கிடும். நீட்டுக்கு மாற்று பொதுக்கல்வி முறைதான் என்பதை சத்தமாக எடுத்து சொல்ல வேண்டிய நேரம் இது . சோசலிசமும் , பொதுக்கல்வியுமே மாற்று மற்றதெல்லாம் ஏமாற்று.

கட்டுரையாளர்: தௌ.சம்சீர் அகமது

SFI மாநில துணை தலைவர், தமிழ்நாடு.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *