Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

திருடப்பட்ட தலைமுறைகளும் தொடரப்பட்ட தலைமுறைகளும்-அ.பாக்கியம்

திருடப்பட்ட தலைமுறைகளும் தொடரப்பட்ட தலைமுறைகளும்-அ.பாக்கியம்
  • PublishedApril 15, 2026

சீனாவில் இனச் சிறுபான்மை கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வரும் உறைவிட பள்ளி குறித்து மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் உலகெங்கிலும் பொய்ப் பிரச்சாரத்தை நடத்துகிறார்கள். இது அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படும் பொய் பிரச்சாரம் என்பதை சீன நாட்டின் தலைவர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சாரத்தின் மையமான இடமாக திபெத் இருக்கிறது. தலாய்லாமா நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை நீடித்து வைத்திருப்பதற்கு, கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் வாழ்ந்த மக்களுக்கு கல்வியை கொடுக்காமல் தடுத்து வந்தார். கிராமப்புறங்களில் கல்வி எளிதில் அணுக முடியாத இடங்களில் இருக்கக்கூடிய குடும்பங்கள் அரசு செலவில் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள். இதன் மூலம் தலாய்லாமாவின் கட்டுப்பாடுகள் கலகலத்து போவதுடன் அறிவியல் கல்வியும், அறிவியல் சார்ந்த அறிவும் மேம்படுகிறது. இதை தடுப்பதற்காக உறைவிடப் பள்ளிகள் சிறைக்கூடங்கள் என்று சித்தரிக்கிறார்கள். பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிப்பது, சிறுபான்மை கலாச்சாரத்தை அழித்து சீன மயமாக்குவது என்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

முதலாவதாக, இனச் சிறுபான்மை பிரதேசங்களில் அமலாக்கப்படும் உறைவிடப் பள்ளி என்பது முழுக்க முழுக்க தன்னார்வத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. உறைவிட பள்ளியில் சேருவதா அல்லது தினசரி மாணவராக வந்து செல்வதா என்பதை முற்றிலும் மாணவர்களும், அவரது பெற்றோர்களின் விருப்பத்தைச் சார்ந்ததாகும். கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் இதில் ஏதாவது ஒன்றை கடைபிடிக்க வேண்டும். எனவே தான் உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறைகளிலும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவது இந்த தன்னார்வத் திட்டத்தின் அடிப்படையில்தான்.

இரண்டாவதாக, புவியியல் தேவையை சார்ந்தது. திபெத் பகுதியும் வேறு சில சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களும் மிக உயரத்திலும் விரிந்த பகுதிகளிலும் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்டதாகவும் உள்ளது. இவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைப்பது சிரமமாகும். எனவே அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி உரிமையை உறுதி செய்ய இந்த உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டது. உலகில் இதே போன்று நிலப்பரப்பு அமைந்துள்ள பல நாடுகளிலும் இது போன்ற பள்ளிகள் அமைத்துதான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

மூன்றாவதாக, பாரம்பரிய கலாச்சாரம் ஒழிக்கப்படுகிறது என்பதற்கு மாறாக திபெத்திய மொழி, இலக்கியம், நாட்டுப்புற நடனம் போன்ற பாரம்பரிய பண்பாட்டுப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். உணவுகளிலும் கூட திபெத்திய மற்றும் இதர சிறுபான்மை மக்களின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களில் இனச் சிறுபான்மை ஆசிரியர்கள் 90% தங்கள் தாய் மொழியில் பாடங்களை நடத்துகிறார்கள். நான்காவதாக, வரலாற்று ரீதியாக மேற்கத்திய காலனித்துவ உறைவிடப் பள்ளிகளுக்கும் சீனாவில் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளுக்கும் அதன் நோக்கத்திலேயே அடிப்படை வேறுபாடு இருக்கிறது என்று சீன நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் உறைவிடப் பள்ளிகளின் நோக்கம் பழங்குடியினரின் கலாச்சாரத்தையே அழிப்பதாக இருந்தது. ஆனால் சீன பள்ளிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன், கலாச்சாரத்தையும் பாதுகாக்கின்றன. சீன அரசியல் அமைப்பு பன்முக இனங்களுக்கான உரிமைகளை வழங்குகிறது.

திருடப்பட்ட தலைமுறைகள்

எனவே மேற்கத்திய நிபுணர்களின் கருத்துப்படி இந்த விமர்சனங்கள் உண்மை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக அமெரிக்காவின் புவிசார் அரசியல் நிலைபாடுகளுக்காக சீனாவுக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரங்கள் ஆகும். தங்கள் நாட்டில் செய்த கலாச்சார படுகொலை போன்ற வரலாற்றுக் குற்றங்களை வைத்துக் கொண்டு சீனாவையும் அவ்வாறே இருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கக்கூடிய பிரச்சாரமாகும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடாவில் நடந்த உறைவிடப் பள்ளிகளின் படுகொலைகளை இங்கு கவனத்திற்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

ஆஸ்திரேலியாவில் 1910 ஆம் ஆண்டு முதல் 1970 வரை அரசு மற்றும் தேவாலயக் கொள்கைகள் காரணமாக பல்லாயிரக் கணக்கான பழங்குடி இனக்குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். பழங்குடி பகுதி மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவு (Aboriginal and Torres Strait Islander) கூட்டங்களில் குவியலாக பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். உலகின் மிகப் பழமையான, தொடர்ச்சியான கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் இரண்டு தனி குழுக்களாக, 250 க்கும் மேற்பட்ட மொழி குழுக்களாக வாழ்ந்தனர். வளமான பன்முக கலாச்சார மரபுகளை கொண்டிருந்தனர். இவர்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான பழங்குடி இன குழந்தைகளை அவர்களின் குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் இதரப் பகுதியில் வாழ்ந்த வெள்ளை இனத்தவர் குடும்பங்களில் கட்டாயமாக வளர்க்கப்பட்டனர். இந்த செயல் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை அழித்து வெள்ளை இன கலாச்சாரத்துடன் இணைக்கும் நோக்கில் செய்யப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பிற் காகவும், அவர்களை புறக்கணிப்பு வாழ்க்கையில் இருந்து காப்பாற்றுவதற்கும் இதை மேற்கொள்கிறோம் என்று ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் தூயஇரத்த பழங்குடியின மக்கள் அழிந்து விடுவார்கள் என்றும், கலப்பு இரத்த குழந்தைகள் சமூகத்துடன் மிக எளிதாக ஒன்றி விடுவார்கள் என்றும் அன்றைய அரசாங்கம் நம்பியது. பழங்குடி இன மக்கள் இன ரீதியாக தாழ்ந்தவர்கள் என்ற வெள்ளை இன மேலாதிக்க கருத்தின் அடிப்படையில் இந்த கொள்கை அமலாக்கப்பட்டது.

இவ்வாறு பழங்குடி குடும்பங்களிடமிருந்து குழந்தைகளை அகற்றுவதற்காக 1869 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் விக்டோரியன் பழங்குடி பாதுகாப்பு சட்டம்(1869) என்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள். இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்துக் கொண்டுவர அனுமதி அளித்தது. 1915 ஆம் ஆண்டு பழங்குடியினர் பாதுகாப்பு திருத்தச் சட்டம் (நியூ சவுத் வேல்ஸ் 1915) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் தீங்குகள் நிறைந்தது. 1869 சட்டத்தின்படி பழங்குடியின குழந்தைகள் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இந்த திருத்தம் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து அகற்றுவதற்கான அதிகா ரத்தை கொடுத்தது.

ஒரு குழந்தை தன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட உடன் அது வெள்ளையர் சமூகத்துடன் ஒன்றிப்போக கட்டாயப்படுத்தப்பட்டது. வெள்ளையர்களின் குடும்பத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள். அங்கு அவர்கள் பாரம்பரிய மொழியை பேசவோ, சொந்த கலாச்சார பழக்கவழக்கங்களில் பங்கேற்பது தடை செய்யப்பட்டது. அவர்களுக்கு புதிய பெயர்களும், புதிய அடையாளங்களையும் கொடுத்தார்கள். இவ்வாறு கொண்டுவரப்பட்ட குழந்தைகளிடம் அவர்களது குடும்பத்தினர் அவர்களை கைவிட்டு விட்டனர் அல்லது இறந்து விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. பிரித்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்க அதிகாரிகள் குழந்தைகளை அவர்களின் வாழ்விடங்களில் இருந்தும் குடும்பங்களிலிருந்தும் வெகு தொலைவிற்கு அனுப்பி விடுவார்கள். தங்கள் குடும்பத்தை பற்றி தவறாக கற்பிக்கப்பட்டதால் பிரிக்கப்பட்ட குழந்தைகள் தங்களது பாரம்பரியத்தை பற்றியும் குடும்பத்தை பற்றியும் அவமானமாக கருதினார்கள். பிற்காலத்தில்தான் இந்த திருடப்பட்ட தலைமுறையைப் பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட குழந்தைகளில் பலர் உறைவிட பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல் உட்பட பல்வேறு வடிவங்களில் கொடுமைகளையும் அனுபவித்தனர். இந்த நிகழ்வு தலைமுறைகளுக்கு இடையேயான மன அதிர்ச்சியை (intergenerational trauma) ஏற்படுத்தி பழங்குடி சமூகங்களில் நீண்டகால இழப்புகளையும் பாதிப்புகளையும் விளைவித்தது.

மன்னிப்பும் தொடரும் தலைமுறை திருட்டும்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் திருடப்பட்ட தலைமுறை உறுப்பினர்களிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய வரலாற்றில் இருண்ட பக்கமாக கருதப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இது இன்றும் பெரும் வலியாக உள்ளது. குழந்தைகளை அகற்றும் நடைமுறை இன்றும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா சமூக துறை மற்றும் சுகாதாரத் துறையின் தரவுகளில் இருந்து தொகுக்கப்பட்ட தொகுக்கப்பட்ட விவரங்கள் 2019 வெளியிடப்பட்டது.

2012 மற்றும் 2017 க்கு இடையில் உறைவிட இல்ல பராமரிப்பில் வைக்கப்பட்ட பழங்குடி குழந்தைகளின் எண்ணிக்கை 1000 க்கு 46.6 லிருந்து 1000க்கு 56.6 உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதே ஆராய்ச்சி தரவுகள் 2013 மற்றும் 2016 க்கு இடையில் இல்ல பராமரிப்பில் வைக்கப்பட்ட ஒரு வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 1000 எனக்கு 24.8 இலிருந்து 29.1 ஆக உயர்ந்ததையும் கண்டறிந்துள்ளனர். பழங்குடி குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக தொடரும் மன அதிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர். பாரம்பரிய அறிவு, கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட முடியாததால் திருடப்பட்ட தலைமுறையினர் பாரம்பரிய அறிவை இழந்துள்ளனர். 1788 ஆம் ஆண்டில் பிரிட்டன் தனது முதல் ஆஸ்திரேலியா காலனியை நிறுவிய பொழுது பழங்குடி மக்கள் தொகை மூன்று லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் நிறுவப்பட்ட போது பழங்குடியின மக்கள் தொகை 90 ஆயிரம் ஆக குறைந்துவிட்டது. எந்த அளவு காலனித்துவ வேட்டை நடந்துள்ளது என்பதை இந்த எண்ணிக்கை புலப்படுத்தும்.

இந்தியரை கொன்று மனிதரை காப்பாற்றுங்கள்

ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் நடத்தியது போன்று அமெரிக் காவில் பழங்குடி இன மக்களின் குழந்தைகளை பல பத்தாண்டுகளாக கட்டாயப்படுத்தி உறைவிட பள்ளிகளில் சேர்த்தார்கள். இந்த நடவடிக் கைகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கி 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அமெரிக்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான கட்டாய ஒருங்கிணைப்புக் கொள்கையாகும். இதன் மிச்ச சொச்சங்கள் 1980 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கிறது. இந்தக் கொள்கையின் நோக்கம் பழங்குடி குழந்தைகளை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்து வெள்ளை அமெரிக்க சமூகத்தில் ஒருங்கிணைப்பது ஆகும். இந்த செயலின் வழியாக பழங்குடி கலாச்சாரத்தை அழிப்பதாகும். இந்தப் பள்ளியை துவக்குதற்கு முதல் காரணமாக இருந்த ராணுவ அதிகாரியான ரிச்சர்ட் ஹென்றி பிராட் கூறியதுதான் இந்தியனை மனிதனைக் காப்பாற்று என்ற வாக்கியமாகும். அமெரிக்காவிலிருந்து பூர்வகுடி மக்களை செவ்விந்தியர்கள் என்று அழைப்பார்கள். அந்த அடிப்படையிலேயே அனைத்து பூர்வகுடி இன குழந்தைகளையும் கட்டாய உறைவிட பள்ளியில் சேர்த்தார்கள்.

குழந்தைகளை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதற்கு பல்வேறு முறைகளை பயன்படுத்தினார்கள். 1891ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு சட்டத்தை இயற்றி பழங்குடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை கட்டாயமாக்கியது. பழங்குடி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தால் அந்த பெற்றோருக்கான உணவுப் பொருட்கள் மற்றும் பிற உதவிகளை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த முறைகளுக்கு ஒத்துழைக்காத பெற்றோரின் குழந்தைகளை போலீசார் மூலம் நேரடியாக பிடித்துச் செல்லப்பட்டனர். பெற்றோர்கள் எதிர்த்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். உதாரணமாக 1894 ஆம் ஆண்டில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த 29 ஹோபிஇன பெற்றோர்கள் அல்காட்ராஸ் சிறையில் அடைக்கப் பட்டார்கள்.

உறைவிட பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் மிகவும் கடுமையான சூழலை எதிர்கொண்டார்கள். குழந்தைகளின் பூர்வீக பெயர்கள் மாற்றப்பட்டு ஆங்கில பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்களது நீண்ட முடிகள் வெட்டப்பட்டு சீருடை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தாய் மொழியில் பேசுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டு ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றனர். தாய் மொழியில் பேசினால் சோப்புக் கட்டிகளை சாப்பிட வைத்து கடுமையான தண்டனைகள் வழங்கினார்கள். இந்தப் பள்ளிகள் ராணுவ முகாம் போல் இயக்கப்பட்டன. விதிகளை மீறினால் அடித்தல், தனிமை சிறையில் அடைத்தல், மின்சாரத்தை பாய்ச்சுதல் போன்ற தண்டனைகளும் வழங்கப்பட்டன.

மோசமான உணவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்கள் காரணமான ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அரசாங்க அறிக்கையின்படி 1819 முதல் 1969 வரை 973 பழங்குடி குழந்தைகள் பள்ளிகளிலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அடையாளம் தெரியாத கல்லறைகளில் புதைக்கப்பட்டார்கள். இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமானது மட்டும்தான். மரணமடைந்தது இதைவிட அதிகம்.

அமெரிக்காவில் இருந்த உறைவிட பள்ளி கல்விக்காக மட்டுமல்ல ஒரு முழு சமூகத்தையே ஒடுக்குவதற்கான அரசின் கொள்கையின் வெளிப்பாடாகும். இதன் விளைவாக பல தலைமுறை பழங்குடி மக்கள் மன உளச்சலுக்கு ஆளானார்கள். மொழிகள் அழிந்து போனது, கலாச்சாரம் சீர்குலைந்து போனது, அத்துடன் அவர்களின் அடுத்த தலைமுறையும் மறைந்து போனது. ஆஸ்திரேலியா நாட்டுப் பிரதமர் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு என்பது நடந்த து உண்மை என்பதை நிருபிக்கிறது. ஆனால் காலனித்துவ வாதிகள்னி சுரண்டல் கொள்கையே இதற்கு காரணம். இன்றும் இது புதிய வடிவில் வெளிப்படுகிறது.

 

கனடாவில் கலாச்சார இனப்படுகொலை

கனடிய இந்திய உறைவிட பள்ளி அமைப்பு என்பது பழங்குடி மக்களுக்கான உறைவிட பள்ளிகளின் வலையமைப்பாகும். இந்தப் பள்ளிக்கூடங்கள் கனடிய அரசாங்கத்தின், இந்திய விவகாரங்கள் துறையால் நிதியளிக்கப்பட்டு பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களால் நடத்தப்பட்டது. பழங்குடி குழந்தைகளை அவர்களின் சொந்த கலாச்சாரம் மற்றும் அவர்கள் மதத்தின் செல்வாக்கில் இருந்து தனிமைப்படுத்தி அவர்களை மேலாதிக்க யூரோ-கனடிய கலாச்சாரத்தில் ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியாகும். இது கனடிய வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும். 1870 முதல் 1997 வரை அதாவது கடைசி உறைவிட பள்ளிகள் மூடுகின்ற வரை 1,50,000பழங்குடி குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பறிக்கப்பட்டு தேவாலயங்களால் நடத்தப்பட்ட வந்த உறைவிட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

1894ஆம் ஆண்டு இந்தியன் சட்டத்திருத்தம் பழங்குடி குழந்தைகளை அவர்களது குடும்பங்களில் இருந்து அகற்றி உறைவிட பள்ளிகளில் சேர்க்கும் அதிகாரத்தை உள்ளுர் அதிகாரிகளுக்கு அளித்தது. 1920 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் மேலும் பலப்படுத்தப்பட்டு 7முதல்16 வயதுடைய ஒவ்வொரு பழங்குடி குழந்தையும் இந்தப் பள்ளிகளில் சேர்வது கட்டாயமாக்கப்பட்டது. இந்திய உறைவிட பள்ளிகள் தீர்வு ஒப்பந்தத்தின் கீழ் (IRSSA) மொத்தம் 139 பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.

இந்தப் பள்ளிகளின் முதன்மையான நோக்கம் பழங்குடி குழந்தைகளை அவர்களின் குடும்பம், மொழி மற்றும் கலாச்சாரத்தில் இருந்து பிரித்து, அவர்களை வெள்ளையர் சமூகத்தின் பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க வைப்பது. கிறிஸ்துவ மதத்தை தழுவு செய்வது. ஆங்கில மொழியை கற்கும்படி கட்டாயப்படுத்துவது போன்ற மிகப் பெரும் கலாச்சார இனப்படுகொலையை செய்தனர்.

கன்னடிய நாட்டில் இருந்த உறைவிடப் பள்ளிகளில் கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்களும், மனரீதியான துன்புறுத்தல் களாலும், பாலியல் துன்புறுத்தவர்களாலும் பெரும் பகுதி மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். குழந்தைகள் தங்கள் தாய் மொழியில் பேசவோ பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றுவோ அனுமதிக்கப் படவில்லை. அவ்வாறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். உறைவிட பள்ளிகளின் மோசமான வாழ்க்கை நிலைமைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய்கள் காரணமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்தனர். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையும் என்ற அமைப்பு இறந்த குழந்தைகளில் இதுவரை 4100 க்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களை அடையாளம் கண்டுள்ளது இருப்பினும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சமீப காலங்களில் பல பள்ளி கட்டிடங்களின் வளாகங்களில் அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உறைவிட பள்ளி மாணவர்களின் கல்லறைகள் என்று யூகிக்கப் படுகிறது.

2008 ஆம் ஆண்டில் கன்னடிய நாட்டின் அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கலாச்சார இனப்படுகொலைக்காக மன்னிப்பு கோரினார். உண்மை மற்றும் நல்லிணக்க அமைப்பு 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 2015 ஆம் ஆண்டு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கனடாவின் உறைவிட பள்ளி முறைகள் பழங்குடி சமூகங்களுக்கு ஏற்படுத்திய ஆழ்ந்த துயரத்தையும் அதன் பயனாக இன்றும் தொடரும் வலியை பற்றியும் தெரிவித்திருக்கிறது

மேற்கத்திய நாடுகளில் காலினித்துவ கொள்கையை தீவிரமாக கடைபிடித்த பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பழங்குடி மக்களை அவர்களின் குழந்தைகளை கொடூரமான முறையில் நடத்தியதை இந்தச் சம்பவங்கள் வெளிக்கொணர்ந்து உள்ளது. இதே கண்ணோட்டத்தில் சீனாவில் உறைவிட பள்ளிகள் இருப்பதாக அரசியல் நோக்கத்துடன் பிரச்சாரம் செய்கிறார்கள். சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின் பிங் மேற்கத்திய நாடுகள் காலனித்துவ வரலாற்றை தன்னகத்தை கொண்டுள்ள பொழுது, சீனா காலனித்துவத்தை எதிர்த்த வரலாற்றை ஏற்படுத்தி உள்ளது. எனவே நம் மக்களின் வலியை உணர்ந்தவர்கள் என்றார். எங்கள் கொள்கையும் காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதாகும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தார்.

அ.பாக்கியம்

69 ஆவது தொடர் ஏப்ரல் 22 புதனன்று வெளியாகும். 

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *