புதிய முதலவர் விஜய் முன் இருக்கும் சவால்கள்- சம்சீர் அகமது
புதிய முதலவர் விஜய் முன் இருக்கும் சவால்கள்
தமிழக அரசியலில் புதிய தலைமுறைக்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ள சூழலில் நடிகர் விஜய் தலைமையில் ஒரு புதிய அரசு உருவானால், அது வெறும் ஆட்சி மாற்றமாக மட்டும் பார்க்கப்படாது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எந்த திசையில் செல்லும், வேலைவாய்ப்புகள் உருவாகுமா, முதலீடுகள் அதிகரிக்குமா, அதே நேரத்தில் சமூகநீதி மற்றும் மக்கள் நல அரசியல் பாதுகாக்கப்படுமா என்பதையும் மக்கள் கவனிப்பார்கள். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் வெறும் அரசியல் கோஷங்கள் சினிமா கவர்ச்சியை தாண்டி“வேலை கிடைக்குமா?”, “வாழ்க்கைச் செலவு குறையுமா?”, “கல்வி எல்லோருக்கும் கிடைக்குமா?”, “மாநில உரிமைகள் பாதுகாக்கப்படுமா?” என்பதையும் அவர்கள் கேட்கிறார்கள். அந்த கேள்விகளுக்கான பதில்தான் எந்த புதிய அரசின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
தமிழக பொருளாதார வளர்ச்சிக்குள் இருக்கும் அழுத்தங்கள்
இந்தியாவில் அதிக வருவாய் தரும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு சுமார் 8 முதல் 9 சதவீதம் வரை உள்ளது. ஆட்டோமொபைல், IT, எலக்ட்ரானிக்ஸ், துணிநூல், தோல், துறைமுகம் மற்றும் சேவைத் துறைகளில் தமிழகம் முக்கிய மையமாக உள்ளது. சென்னை “இந்தியாவின் டெட்ராய்ட்” (Detroit of India) என்று அழைக்கப்படும் அளவிற்கு Hyundai, Renault-Nissan, Daimler போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. Foxconn, Tata Electronics, VinFast போன்ற புதிய முதலீடுகளும் சமீபகாலங்களில் தமிழகத்தை நோக்கி வந்துள்ளன. இதனால் தமிழகம் முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பான மாநிலமாக மாறியுள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சியின் பின்னால் நிதிசுமையும் அதிகரித்து வருகிறது. 2025–26 பட்ஜெட் மதிப்பீடுகளின்படி தமிழகத்தின் மொத்த கடன் ₹9 லட்சம் கோடியை கடந்துள்ளது. அதே நேரத்தில் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், தமிழகத்தின் Debt-to-GSDP ratio இன்னும் FRBM சட்ட வரம்புக்குள் உள்ளது. அதாவது மாநிலம் உடனடி நிதிச் சரிவில் இல்லை. ஆனால் வருவாயின் பெரும்பகுதி ஊதியம், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் வட்டி செலுத்துவதற்கே செலவாகி வருவதால் வளர்ச்சிக்காக புதிய முதலீடுகள் செய்ய முடியாமல் நிதி அழுத்தம் உருவாகிறது. இதனால் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து கழகங்கள் மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் நிதி பிரச்சனை ஏற்படுகிறது.
இதற்கான தீர்வு நலத்திட்டங்களை குறைப்பது அல்ல. மாறாக உற்பத்தி வளர்ச்சியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதுதான் உண்மையான தீர்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மக்கள் கையில் பணம் சென்றால்தான் உள்ளூர் பொருளாதாரம் வலுப்படும்.
புதிய தாராளமய பொருளாதாரம் – வளர்ச்சியா அல்லது சமத்துவமின்மையா?
1991-க்கு பிறகு இந்தியாவில் Liberalisation, Privatisation, Globalisation என்ற புதிய தாராளமய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், அரசு கட்டுப்பாடுகளை குறைத்தல், சந்தை மைய பொருளாதாரத்தை உருவாக்குதல் என்பவையே அதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன. இதன் மூலம் IT துறை, சேவைத் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி வேகமாக உயர்ந்தது. இந்தியாவின் GDP உலகளவில் முக்கிய இடத்தை அடைந்தது.
உலகளவில் இந்தியாவின் GDP யும் இந்தியாவிற்குள் தமிழ்நாட்டின் GDP யும் முக்கிய இடத்தை பெற்றிருந்தாலும் தனிநபர் GDP , வருமானம் வாழ்க்கை தரம் உயரவில்லை. சமூக சமத்துவமின்மையும் அதிகரித்தது என்பது முக்கியமான விசயம்.
Oxfam உள்ளிட்ட ஆய்வுகள் இந்தியாவில் செல்வம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான Corporate மற்றும் பணக்காரர்களிடம் குவிந்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றன. பங்குச்சந்தை வளர்ச்சியும் Corporate லாபங்களும் உயர்ந்தாலும், சாதாரண மக்களின் வாங்கும் திறன் அதே வேகத்தில் உயரவில்லை. இதனால் “Jobless Growth” என்ற புதிய பொருளாதார நிலை உருவானது. அதாவது GDP வளர்ச்சி இருக்கிறது; ஆனால் பாதுகாப்பான வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.
புதிய தாராளமய பொருளாதாரம் வளர்ச்சியை உருவாக்கியிருக்கலாம்; ஆனால் அந்த வளர்ச்சியின் பலன் சமமாக பகிரப்படவில்லை. Corporate நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் நிலையில், கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுத்துறை முதலீடுகள் குறைக்கப்படுவது சமூகநீதியை பாதிக்கிறது என்பதே இடதுசாரிகளின் விமர்சனம்.
வேலைவாய்ப்பு நெருக்கடி — இளைஞர்களின் அச்சம்
தமிழகத்தில் கல்வியறிவு உயர்ந்திருந்தாலும் வேலைவாய்ப்பு நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Periodic Labour Force Survey (PLFS) தரவுகளின்படி பட்டதாரி இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை இந்திய அளவில் கவலைக்குரிய நிலையில் உள்ளது. Engineering மற்றும் Arts graduates பலர் தங்களின் படிப்புக்கு சம்பந்தமில்லாத குறைந்த சம்பள வேலைகளில் சேர வேண்டிய சூழலில் உள்ளனர். IT sector layoffs, recruitment freeze, அரசு தேர்வு தாமதங்கள் போன்றவை இளைஞர்களின் எதிர்கால அச்சத்தை அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான அரசு காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் போன்ற துறைகளில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது.
அரசு வேலைவாய்ப்பு என்பது வெறும் சம்பளம் அல்ல; அது உள்ளூர் பொருளாதாரத்தை இயக்கும் சக்தி. மக்கள் தேவைகளை பூர்த்தி செய்து மேம்படுத்த கூடிய மிக முக்கியமான சேவைத்துறைகளை கொண்டது. அதனால் அரசு வேலைவாய்ப்பை குறைப்பது பொருளாதார சுழற்சியையும் மக்களுக்கான தரமான சேவையையும் பலவீனப்படுத்தும்
கல்வி வியாபாரம்
தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், கடந்த இருபது ஆண்டுகளில் கல்வி மிகப்பெரிய வியாபாரமாக மாறியுள்ளது. தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கட்டணங்கள் நடுத்தர குடும்பங்களுக்கே பெரிய சுமையாக உள்ளன. கல்விக்கடன் அதிகரிப்பதால் பல மாணவர்கள் படிப்பு முடியும் முன்பே கடன் சுமையில் சிக்குகிறார்கள்.
NEET தேர்வு அறிமுகமான பிறகு Coaching centre economy மிக வேகமாக வளர்ந்துள்ளது. கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டி சிரமமாகியுள்ளதாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். Students’ Federation of India உள்ளிட்ட மாணவர் இயக்கங்கள் கல்வியை சந்தை பொருளாக அல்ல, சமூக உரிமையாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் அனைவருக்கும் சமமான கல்வி சாத்தியமில்லை
பெண்களின் பொருளாதார நிலை மற்றும் சமூக பாதுகாப்பு
அதேபோல தமிழகத்தில் கல்வி பெறும் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய சமத்துவத்தில் இன்னும் பெரிய இடைவெளி உள்ளது. Garment factories, textile mills, electronics assembly units போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் பணிபுரிகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் Contract அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். Informal sector-ல் பணிபுரியும் பெண்களுக்கு PF, ESI போன்ற சமூக பாதுகாப்புகள் பல நேரங்களில் கிடைப்பதில்லை.
பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் போன்றவை குடும்பச் செலவை குறைத்து அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை அதிகரித்துள்ளதாக பல சமூக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இடதுசாரி பார்வையில் இது “இலவச அரசியல்” அல்ல; பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான முதலீடு. பெண்களின் வருமானம் உயர்ந்தால் குடும்ப சுகாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நிலை நேரடியாக மேம்படுகிறது என்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அழிக்கப்படும் தொழிலாளர் உரிமைகள்
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியின் பின்னால் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது. ஆனால் புதிய தாராளமய பொருளாதாரத்தின் தாக்கத்தால் நிரந்தர வேலைகள் குறைந்து Contract labour முறை அதிகரித்துள்ளது. Textile, leather, automobile ancillary, construction போன்ற துறைகளில் தொழிலாளர்கள் வேலை பாதுகாப்பின்றி பணிபுரிகின்றனர்.
தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த Labour Codes க்கு நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் வேலை நேரம் அதிகரிக்கப்படுவதை புதிய சட்டங்கள் அனுமதிக்கும். தொழிற்சங்க உரிமை பலவீனப்படுத்தப்படும், Contract அடிப்படையிலான வேலை மேலும் அதிகரிக்கப்படும். இது போன்ற பல பிரச்சனைகளை புதிய சட்டங்கள் கொண்டுள்ளன. Swiggy, Zomato, Uber போன்ற Gig economy வேலைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு PF, ESI, paid leave போன்ற அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பதில்லை.
தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படாமல் உற்பத்தி வளர்ச்சி நிலையானதாக இருக்காது என்று சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எச்சரித்து வருகின்றன. நாடு வளரவேண்டும் என்றால் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். ஆனால் அதற்காக தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்க கூடாது. வளர்ச்சி என்பதும் அதிக உற்பத்தியும் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதுகாப்புடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே கம்யூஸ்ட்கள் நிலைப்பாடு.
ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்
தமிழகத்தின் பொருளாதார விவாதங்களில் IT மற்றும் தொழிற்துறை அதிகமாக பேசப்பட்டாலும், இன்னும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமே உள்ளது. சிறு மற்றும் குறைந்த நில விவசாயிகள் டீசல் விலை உயர்வு, உரச் செலவு, நீர் பற்றாக்குறை, விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை இல்லாததால் மிகக்கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) போதிய அளவு உயர்த்தப்பட்டாததால் விவசாயிகள் சந்தை மாற்றங்களுக்கு முழுமையாக அடிமையாக்கப்படுகிறார்கள். அதாவது அரசு விலை நிர்ணயம் செய்யாததால் இடைத்தரகர்கள் மற்றும் பெரிய நஇறுவனங்களே விலை நிர்ணயத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இடதுசாரி இயக்கங்கள் MSP-ஐ சட்ட உரிமையாக்க வேண்டும், அரசு கொள்முதல் மையங்களை அதிகரிக்க வேண்டும், கூட்டுறவு சந்தை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
மாநில உரிமைகள் மற்றும் ஒன்றிய நிதி
GST அறிமுகமான பிறகு மாநிலங்களின் நிதி அதிகாரம் குறைந்துள்ளது.
தமிழகம் நாட்டின் முக்கிய வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், திரும்ப கிடைக்கும் நிதி குறைவாக உள்ளது. இதனால் ஒன்றிய அரசுடன் மாநில அரசுகளின் உறவு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமாக மாறியுள்ளது.
பாஜக அரசால் கூட்டாட்சி அமைப்பு பலவீனப்படுத்தப்படும் நிலையில் மாநில வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் பாஜக ஆட்சியில் இல்லா மாநிலங்கள் குறிப்பாக தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து மாநில நிதி உரிமைகள் குறித்து அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
விஜய் முன் இருக்கும் உண்மையான சோதனை
விஜய்க்கு மக்கள் ஆதரவு இருக்கலாம். ஆனால் ஆட்சியில் ரசிகர் அரசியல் மட்டும் போதாது. வலுவான பொருளாதார கொள்கை, தெளிவான தொழில் கொள்கை, சமூகநீதியை பாதுகாக்கும் உறுதியான அணுகுமுறை ஆகியவை அவசியமாகும்.
தமிழகத்திற்கு முதலீடு தேவை என்பது உண்மை. Semiconductor, EV, Green energy, Electronics போன்ற துறைகளில் வளர்ச்சி மாநிலத்திற்கு அவசியம். ஆனால் அதே நேரத்தில் தொழிலாளர் உரிமைகள், சமத்துவ கல்வி, பெண்களின் பொருளாதார பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்றவை புறக்கணிக்கப்படக்கூடாது.
இறுதியாக
புதிய முதலவருக்கு முன் இருக்கும் உண்மையான சவால் தேர்தல் வெற்றி அல்ல; தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை சமூகநீதியுடன் இணைப்பதே. முதலீடு தேவை. தொழில் வளர்ச்சி தேவை. உற்பத்தி அதிகரிக்க வேண்டும். ஆனால் அந்த வளர்ச்சியின் பலன் சாதாரண மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.
உண்மையான வளர்ச்சி என்பது வெறும் GDP உயர்வு அல்ல; வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழிலாளர் உரிமை, பெண்களின் முன்னேற்றம் மற்றும் விவசாய பாதுகாப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முன்னேற்றமே உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும்..
கட்டுரையாளர் சம்சீர் அகமது SFI மாநில செயலாளர்