Tamil Marx

இந்தியா

இளைஞர்களின் கோபம்=காக்ரோச் ஜனதா பார்டி – நா. சிநேகவல்லி

இளைஞர்களின் கோபம்=காக்ரோச் ஜனதா பார்டி – நா. சிநேகவல்லி
  • PublishedMay 22, 2026

எப்போதும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒன்று வைரலாகி மறைந்து கொண்டே இருக்கும். ஆனால் “காக்ரோச் ஜனதா பார்ட்டி” அப்படிப்பட்ட சாதாரண டிரெண்ட் அல்ல போல தெரிகிறது. ஆரம்பத்தில் வெறும் கிண்டலாக, மீம் கலாச்சாரத்தின் ஒரு ஜோக்காக உருவான இந்த சமூக வலைதளப் பக்கம், இன்று இந்திய ஜென் ஸி இளைஞர்களின் கோபம், விரக்தி மற்றும் அரசியல் எதிர்ப்பின் புதிய அடையாளமாக மாறி வருகிறது.

காக்ரோச் ஜனதா பார்ட்டியின் சமூக வலைதளப் பக்கத்தில் நேரடியாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தை எதிர்த்து கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒரு காலத்தில் தெருக்களில் முழக்கமாக வெளிப்பட்ட எதிர்ப்பு, இன்று மீம்களாகவும், ரீல்ஸ்களாகவும், ஹாஷ்டேக்குகளாகவும் உயிர் பெற்றிருக்கிறது. அதனால் தான் பலர் “காக்ரோச் ஜனதா பார்ட்டி”யை இந்திய அளவிலான இளைஞர் எழுச்சியின் டிஜிட்டல் தொடக்கமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இளைஞர்களின் திடீர் எழுச்சிக்கு காரணம் என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசுகையில், “வேலை இல்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்றும், ஒட்டுண்ணிகளைப் போன்றும் உள்ளனர். அவர்கள் தங்களை ஊடகவியலாளர்கள் என்றும், ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் என்றும் கூறிக்கொண்டு அனைவரையும் தாக்குகிறார்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

ஏற்கனவே இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இளைஞர்களின் வேலையின்மை தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், இந்த கருத்து மேலும் அதிருப்தியை தூண்டியது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் சூழலில், இளைஞர்களை “கரப்பான் பூச்சி”யுடன் ஒப்பிட்டு பேசியது பலருக்கும் அவமதிப்பாக தோன்றியது.

நீதிபதியின் பேச்சுக்கு எதிராக அபிஜித் தீப்கே என்பவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவுகள் வேகமாக வைரலாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து பலரின் மீம்கள், AI படங்கள், கற்பனை தேர்தல் அறிக்கைகள், போலி கட்சி கொடிகள் மற்றும் நையாண்டி வாசகங்கள் இணையத்தில் வெடித்தன.

“எங்களை கரப்பான் பூச்சி என்று அழைத்தால், அதையே நாங்கள் அடையாளமாக மாற்றிக் கொள்கிறோம்” என்ற மனநிலையோடு பல இளைஞர்கள் இந்த டிரெண்டில் இணைந்தனர். அதனால் தான் “காக்ரோச் ஜனதா பார்ட்டி” இன்று ஒரு சாதாரண மீம் பக்கம் அல்ல; அது இளைய தலைமுறையின் குமுறலால் உருவான டிஜிட்டல் எதிர்ப்பு இயக்கமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் தெருக்களில் முழக்கமாக வெளிப்பட்ட எதிர்ப்புகள், இன்று மீம்களாகவும், ரீல்களாகவும் வெளிப்படுகின்றன. “காக்ரோச் ஜனதா பார்ட்டி” அந்த மாற்றத்தின் சமீபத்திய முகமாக மாறியுள்ளது.

வழக்கம்போல், அதிகாரத்தில் இருப்பவர்கள் “காக்ரோச் ஜனதா பார்ட்டி”யின் சமூக வலைதளப் பக்கங்களை முடக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

வேலையில்லாமல் சோம்பேறியாக இருப்பதே கட்சியில் சேர்வதற்கான தகுதி!

காக்ரோச் ஜனதா பார்ட்டியை உருவாக்கிய அபிஜித் தீப்கேவும், அதில் இணைந்துள்ள லட்சக்கணக்கான இளைஞர்களும் இதை ஒரு அரசியல் கட்சி என்றே கூறுகின்றனர்.

காக்ரோச் ஜனதா பார்ட்டி ஆரம்பிக்கப்பட்டு வெறும் ஐந்தே நாட்களில் 15.4 மில்லியன் (1,54,00,000) பேர் அதில் இணைந்துள்ளனர். இணையம் முழுக்க “நாங்கள் காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்” என இளைஞர்கள் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நாட்டில் மிகப்பெரிய அரசியல் கட்சிகள் என்று கூறப்படும் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகளை விட சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களை காக்ரோச் ஜனதா பார்ட்டி பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் கூட ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அப்படி இந்த கட்சியில் சேர விரும்புபவர்களுக்கான தகுதிதான் விசித்திரமானதாக உள்ளது. “நீங்கள் நீதிபதி சூர்யகாந்த் சொன்னது போல் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். 24 மணி நேரமும் சமூக ஊடகங்களில் பிரச்சனைகளுக்கு எதிராக கேள்வி கேட்டு பதிவிடுபவராக இருக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு “தகுதிகள்” வரையறுக்கப்படுகின்றன.

பட்டையை கிளப்பும் 5 அம்சக் கொள்கை அறிக்கை!

சில நாட்களில் இந்த டிரெண்ட் காணாமல் போய்விடும் என்று எண்ணிக்கொண்டிருந்த போதே, காக்ரோச் ஜனதா பார்ட்டி சார்பில் 5 அம்சக் கொள்கை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

1.ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள், ஓய்வுக்குப் பிறகு ராஜ்யசபா பதவிகளை ஏற்கத் தடை விதிக்க வேண்டும்.

2.அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

3.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கட்சி தாவும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்.

4.கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் ஊடக ஆதிக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், “கோடி மீடியா” என்று அவர்கள் குறிப்பிடும் ஊடக நெறியாளர்களின் வங்கிக் கணக்குகளை விசாரிக்க வேண்டும்.

5.முறையான வாக்குகள் நீக்கப்பட்டால், தேர்தல் ஆணையர் மீது UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொள்கை அறிக்கை அனைத்து தரப்பினரிடத்திலும் கவனம் ஈர்த்து வருகிறது.

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை:

இந்தியாவில் இருக்கும் வேலையின்மை பிரச்சனைக்கு யார் காரணம் என்று நீதிபதி சூர்யகாந்துக்கு தெரியாதா? கடந்த ஆண்டில் மட்டும் வேலையின்மை 18% அதிகரித்துள்ளது. இன்றைய இளைஞர்கள் எத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இதற்கு யாரை குறை சொல்வது? நாட்டு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல், கார்ப்பரேட் நலனுக்காக முழு மூச்சாக செயல்படும் இந்த ஆளும் அரசாங்கத்தையா? அல்லது அப்பாவி இளைஞர்களையா?

உண்மையாகவே இளைஞர்களுக்கு வேலையில்லாதது குறித்த கவலை இருந்திருந்தால், எதனால் வேலையின்மை அதிகரித்து வருகிறது, அதற்கான காரணம் யார், அதை சரி செய்ய அரசாங்கம் எந்த மாதிரியான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பது குறித்து அவர் பேசியிருக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, இளைஞர்களை அவமதிப்பது போல் பேசுவது, ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர் பேசுகிறார் என்பதையே அப்பட்டமாக காட்டுகிறது.

நீதிபதி சூர்யகாந்த் பேசும்போது, ஊடகவியலாளர்களையும், ஆர்.டி.ஐ. ஆர்வலர்களையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, அரசு அமைப்புகளாக இருந்தாலும் சரி, இவ்விரண்டுமே கேள்விகளுக்கு உட்பட்டவைதான். நீதிமன்றங்கள் ஒருசார்பாக செயல்படும்போதோ, அரசாங்கத்தின் தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்பதும், சுட்டிக்காட்டுவதும் ஊடகவியலாளர்களின் தார்மீக கடமை. அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைமை நீதிபதியின் பேச்சை எப்படி எடுத்துக்கொள்வது?

அடுத்ததாக, ஆர்.டி.ஐ. பற்றி அவர் பேசியிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ளும் அனைத்து விதமான உரிமைகளும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. ஆனால், இந்த அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆர்.டி.ஐ. மூலமாக கூட தெரிந்துகொள்ள முடியாத வகையில்தான் இங்கு ஆட்சி நடைபெறுகிறது.

தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் நிதிநிலை அதளபாதாளத்தில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. வேலை இல்லாமல் இளைஞர்கள் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் கடும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இதையெல்லாம் சரி செய்யாமல், ஆளும் ஒன்றிய பாஜகவும் சரி, அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்ளும் சரி, தொடர்ந்து மக்களை மடைமாற்றும் வேலையை செய்து வருகின்றனர்.

ஆனால் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான், இளைஞர்களின் எழுச்சியால் இன்று உருவாகியிருக்கும் “காக்ரோச் ஜனதா பார்ட்டி”.

இந்திய அளவிலான இளைஞர்களின் மாபெரும் எழுச்சியின் தொடக்கமாகவே இந்த “காக்ரோச் ஜனதா பார்ட்டி” பார்க்கப்படுகிறது. ஆனால் இது வெறும் டிரெண்டாகவும், ஆளும் அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் மட்டுமே இருந்துவிடப்போகிறதா? அல்லது உண்மையாகவே மக்கள் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து கேள்வி எழுப்பும் ஓர் புரட்சிகரமான அரசியல் அமைப்பாக நீண்ட காலம் செயல்படப்போகிறதா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

கட்டுரையாளர் நா.சிநேகவல்லி

இந்த கட்டுரை மே 21 அன்று தீக்கதிர் இணைய இதழில் வெளியானது

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *