மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் கடனில் மூழ்கிய கிராமம்
ஒரு மீன்பிடித் துறைமுகத் திட்டத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தின் நம்பியார் நகர் மீனவ கிராமமே கடனில் சிக்கித் தவிக்கிறது
நாகப்பட்டினம் நகரின் எல்லையில் உள்ள பாரம்பரிய மீனவ கிராமமான நம்பியார் நகரில், கடந்த ஆறு ஆண்டுகளாக ‘கடன்’ என்பது பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் கடனில் தவிக்கிறது. இது அவர்கள் சொந்த ஆடம்பர செலவுகளுக்காக வாங்கிய கடன் அல்ல; அரசாங்கம் கொண்டு வந்த ஒரு மீன்பிடித் துறைமுகத் திட்டத்திற்காக வாங்கிய கடன்.
முந்த்ரா திட்டத்தால் உருவான விபரீதம்
நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள 64 மீனவ கிராமங்களுக்குத் தலைமை கிராமமாகக் கருதப்படும் பகுதிதான் நம்பியார் நகர். இங்கு “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ஒரு மீன்பிடித் துறைமுகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 34 கோடி ரூபாய். இதில் அரசாங்கம் ஒரு பகுதியை ஏற்க, மீதமுள்ள 11.43 கோடி ரூபாயை அந்த ஊர் மக்களே பங்களிப்பு வழங்குவது என கூறப்பட்டது. இதற்காக 2019-ஆம் ஆண்டு, கிராம மக்கள் ஒவ்வொரு குடும்பமும் முத்ரா திட்டத்தின் கீழ் 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வங்கி மூலம் கடன் வாங்கினர்.
பலன் தராத துறைமுகம்
2021-ல் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிந்தன. ஆனால், அந்தத் துறைமுகத்தால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள் மக்கள்.
வசதிகள் இல்லை
ஐஸ் பிளாண்ட், பெட்ரோல் பங்க் அல்லது மீன் பதப்படுத்தும் மையம் என எதுவுமே அங்கு இல்லை. துறைமுகத்திற்குச் செல்லும் சாலைகள் சரியாக இல்லை. போதிய ஆழம் இல்லாததால் படகுகளை நிறுத்த முடியவில்லை. “நாங்கள் இப்போதும் அக்கரைப்பேட்டை துறைமுகத்தைத்தான் நம்பி இருக்கிறோம். எங்களின் உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது,” என்கிறார் ஊர் பெரியவர் வேளாயுதம்.
உயரும் கடன் சுமை
ஆரம்பத்தில் மக்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முயன்றனர். ஆனால் வட்டி குட்டி போட்டு வளர்ந்து, இன்று அக்கிராமத்தின் மொத்தக் கடன் சுமை ₹20 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் ஊரில் உள்ள பெரியவர்கள் யாருக்கும் வங்கிகள் புதிய கடன் தர மறுக்கின்றன.
கொடூரமான பாதிப்புகள்
கல்விக்கடன் மறுப்பு
மக்களால் கடன் திருப்பி செலுத்த முடியாத சூழலில் தற்போது அவர்களின் சிபில் (CIBIL) ஸ்கோர் பிரச்சனையின் காரணமாக குழந்தைகளுக்கு கல்விக்கடன் கூட மறுக்கப்பட்டு வருகிறது. “என் பிள்ளைக்குக் கல்விக்கடன் கேட்டபோது, பழைய கடன் இருப்பதால் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்,” என வேதனையுடன் கூறுகிறார் அப்பகுதியயைச் சேர்ந்த மீனவப் பெண் செல்வராணி. இதுமட்டுமல்ல மருத்துவச் செலவுக்கோ அல்லது ஒரு இருசக்கர வாகனத்தைச் தவணை முறையில் வாங்கவோ கூட இவர்களால் கடன் பெற முடியவில்லை.
கொரோனா பாதிப்பு, குறைந்த மீன் வரத்து மற்றும் மாறிவரும் வானிலை காரணமாக வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பெரிய கடனை அடைப்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது இன்னும் சொல்லப்போனால் அம்மக்களின் அடிப்படை பொருளாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.
அதிகாரிகளின் பதில்
இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி. சந்திரசேகர் கூறுகையில், “75% கடனைத் திருப்பிச் செலுத்தினால் மீதமுள்ளதைத் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், அப்படிச் செய்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்குப் புதிய கடன் கிடைக்காது. சிபில் (CIBIL) ஸ்கோர் சரியாக வேண்டுமானால் முழுத் தொகையையும் உடனடியாகக் கட்ட வேண்டும். இவை ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்,” என்றார்.
அரசின் தலையீடு அவசியம்
அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர அவசரமாகத் துறைமுகம் திறக்கப்பட்டதே இந்த நிலைக்குக் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், அமைச்சர்களிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
“ஒவ்வொரு முறையும் பரிசீலிப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால் எதுவும் நடக்கவில்லை,” என்கிறார் செல்வராணி. தங்களின் பிள்ளைகளின் எதிர்காலமாவது கடனில்லாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.