Tamil Marx

ஆசிரியர்குழு தென் அமெரிக்கா

வெனிசுலாவும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியலும்

வெனிசுலாவும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியலும்
  • PublishedJanuary 4, 2026

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி பேசும் போது டிரம்ப் எதையுமே மறைக்கவில்லை. வெனிசுலாவில் ஜனநாயகம் இல்லை, தேர்தலில் தில்லுமுள்ளு நடந்துள்ளது, போதை பொருட்கள் கடத்துகிறது என்ற பொய்ப் பிரச்சாரங்கள் செய்ததுடன் நேரடியாகவே அந்நாட்டின் எண்ணெய் (Oil) பற்றிப் பேசினார்.

அமெரிக்கா தான் இனி வெனிசுலாவை ஆளும் (“நிர்வகிக்கும்” ) என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். வெனிசுலாவின் எண்ணெய் தொழில் துறை முற்றிலும் “முடங்கிவிட்டது” என்றும் இனி அமெரிக்க நிறுவனங்கள் அங்கே சென்று அந்த நிறுவனங்களின் உள்கட்டமைப்புகளை சீரமைத்து அந்நாட்டின் எண்ணெயை எடுத்து லாபம் ஈட்டத் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏதோ ஒரு நிறுவனத்தை விலைக்கு வாங்கி தொழில் நடத்துவது போல, மிகச் சாதாரணமாக ஒரு நாட்டை ஆக்கிரமிக்கப்போகிறேன் என்று அவர் பேசியுள்ளார்.

இந்த தருணத்தில் தான் ஒரு உண்மை நிலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிரம்ப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கப் (Management) போவதைப் போலத் தான் இருந்தது. டிரம்பின் பார்வையில், வெனிசுலா என்பது ஒரு தோல்வியடைந்த நாடு. ஆனால் உண்மை அதுவா?

அந்நாட்டிடம் சவுதி அரேபியாவை விட அதிக எண்ணெய் வளம் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் உலகளவில் அதிக கச்சா எண்ணெய் கொண்ட வளமிக்க நாடு தான் வெனிசுலா.பல ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் வெனிசுலாவில் அதிக கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது என்ற இந்த உண்மை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வெளிப்படையாகப் பேசப்படுகிறது.

அவற்றைத் திருடத் தான் அமெரிக்கா அந்நாட்டை ஆக்கிரமித்து தனது எண்ணெய் நிறுவனங்களை உள்ளே அனுப்புகிறது. அதாவது எண்ணெய் திருட்டை ரகசிய திட்டமாகவே வைத்திருக்காமல் அதுதான் இந்த ஒட்டுமொத்த போருக்கும் முதன்மையான காரணம் என போட்டு உடைத்துள்ளார்.

மீண்டும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த போருக்கு பிறகு டிரம்ப் ஜனநாயகம், விடுதலை போன்ற பழைய பொய்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு நிறுத்திவிட வில்லை. முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் லாபம் பற்றி தான் பேசினார். தனது ராணுவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இந்த எண்ணெய் வியாபார ஒப்பந்தத்தை நடத்தும் வேலையில் உள்ளார்.

இறையாண்மை கொண்ட நாட்டை ஆக்கிரமிப்பதை ஏதோ ஒரு பராமரிப்புப் பணி செய்யப் போவதைப் போல சொல்கிறார் டிரம்ப். இது மிகவும் அபாயகரமான விசயம். ஒரு நாட்டை எப்போது ஆக்கிரமிக்க வேண்டும், எப்போது வெளியேற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என்பதை அவர் இந்த நடவடிக்கையில் காட்டியுள்ளார்.

எண்ணெய்காகப் போர் தொடுக்கும் காலம் முடிந்துவிட்டது என்றும், ஈராக் போரில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம் என்றும் இவ்வளவு காலம் அமெரிக்க மக்களிடம் கூறப்பட்டது.

ஆனால், இன்று ஒரு நாட்டின் எண்ணெய் வளத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதால், அதைச் சரி செய்ய அமெரிக்கா அங்கே போகிறது என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறுகிறார்.

வழக்கமாக ஒரு நாட்டை ஆக்கிரமித்த பிறகுதான் அங்கிருக்கும் வளங்களை எடுப்பார்கள். ஆனால் இந்த முறை, வளங்களை எடுப்பதுதான் ஆக்கிரமிப்பின் முக்கிய நோக்கம் என்பதை அறிவித்து விட்டே செயல்படுகிறார்கள்.

நாங்கள் சொல்வது இதுதான் இடதுசாரி தலைவரான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், “நாங்கள் உங்கள் நாட்டை ஆள்வோம், வழிநடத்துவோம், உங்கள் எண்ணெய் வளங்களை நாங்கள் எடுத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தை நாங்களே கொண்டு செல்வோம் என்று கூறுவது ஒரு நாட்டை ஒரு தலைவரிடம் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையே அல்ல; இது ஒரு ஆதிக்கம்.

அமெரிக்க எம்பிக்கள் வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் போர் தொடுப்பது சட்டவிரோதமானது என்றும், இயற்கை வளங்களுக்காக ராணுவத்தைப் பயன்படுத்துவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் ஜனநாயகக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது உள்நாட்டு அரசியலில் ஜனநாயக கட்சி நடத்தும் நாடகம் என்பதை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் அவர்களும் கச்சா எண்ணெய்காக பல நாடுகளில் மீது குண்டு வீசிய கொடூரர்கள் தான்

தகவல் உதவி: The other 98%

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *