Tamil Marx

தொழிலாளர் போராட்டங்கள்

Right to disconnect என்றால் என்ன ? இது ஊழியர்களை பாதுகாக்குமா?

Right to disconnect  என்றால் என்ன ? இது ஊழியர்களை பாதுகாக்குமா?
  • PublishedOctober 23, 2025

Right to disconnect bill 2025, தனியார் துறை ஊழியர்களை அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை கோரிக்கைகளில் இருந்து பாதுகாக்குமா?

“ஓய்வு,தூக்கம் மட்டும் இல்லை என்றால் மனிதன் இயந்திரதின்

ஒரு பகுதியாக மற்றப்பட்டிருப்பான்”

என்று மார்ஸ் 200 வருடங்களுக்கு முன்பு கூறினார். இது தற்போது நடைபெறத் தொடங்கியுள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் தொலைதூரப் பணி (Work From Home) முறையின் பரவலும், பல ஊழியர்களின் வேலை தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டது.

அலுவலக நேரம் முடிந்த பின்னரும், மேலாளர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து தொடர்ந்து வரும் வாட்ஸ்ஆப் மெசேஜ்கள், ஈ-மெயில்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் இன்றைய பணி சூழலின் ஒரு பொதுவான அம்சமாக மாறியுள்ளன. இதன் விளைவாக, மன அழுத்தம், தீவிர சோர்வு மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை இல்லாத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை ஊழியர்கள் சந்திக்கின்றனர்.

இந்தியாவில் முதல் முறையாக, கேரள மாநிலம் ஒரு சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தி, தனியார் துறை ஊழியர்களை அலுவலக நேரத்திற்குப் பிறகு வரும் வேலை கோரிக்கைகளில் இருந்து பாதுகாக்க திட்டமிட்டுள்ளது. இதுவே  Kerala’s Right to Disconnect Bill அல்லது ‘தொடர்பு துண்டிப்பு உரிமை’ சட்டமுன்வடிவு ஆகும்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களின் பணி நேரத்தை அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றம் உழைப்பு நேரத்தைக் குறைக்க வேண்டும், ஆனால், வேலைப் பளு, பணி நேரத்தை அதிகரித்துள்ளது. இதனால் அனைவருக்கும் கல்வி, கலை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நேரம் கிடைக்கும்.  மார்க்ஸ் ஒரு வர்க்கத்தின் (முதலாளி வர்க்கம்) ஓய்வு நேரமும், வளமான வாழ்க்கையும், மற்றொரு வர்க்கத்தின் (தொழிலாளி வர்க்கம்) நீடித்த உழைப்பின் பேரில் கட்டப்பட்டது என்கிறார்.

முதலாளிக்கு கிடைக்கும் லாபம் மற்றும் ஓய்வு, தொழிலாளர்கள் தங்கள் வாழ்கை நேரத்தை வேலையில் செலவிடுவதால் மட்டுமே சாத்தியமாகிறது.

“உழைப்பு நேரத்தின் சேமிப்பு, சுதந்திர நேரத்தின் அதிகரிப்புக்கு சமம், அதாவது தனிநபரின் முழுமையான வளர்ச்சிக்கான நேரம் ஓய்வு நேரம் தான். அதுதான் மனிதனுக்கு புதிய சிந்தனையை உருவாக்கும் ”.

தொடர்பு துண்டிப்பு உரிமைஎன்றால் என்ன?

‘தொடர்பு துண்டிப்பு உரிமை’ என்பது, ஒரு ஊழியருக்கு, முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட அலுவலக நேரம் முடிந்த பின்னர், அல்லது வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், வேலை தொடர்பான ஈ-மெயில்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது மற்ற எந்தவொரு தகவல் தொடர்பு வழிகளிலும் இருந்து விலகி இருக்கும் உரிமையைக் குறிக்கிறது. இந்த உரிமை, ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான ஓய்வு நேரத்தை அனுபவிக்க உதவுகிறது.

யாருக்கு பொருந்தும்?

50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் இந்த சட்டத்திற்கு உட்பட்டவை. நிறுவனங்கள் ஊழியர்களுடன் கலந்தாலோசித்து, “தொடர்பு துண்டிப்பு உரிமை” தொடர்பான ஒரு சாசனத்தை (Charter) உருவாக்க வேண்டும்.

இந்த சாசனம் பின்வருவனவற்றை வரையறுக்க வேண்டும்:

  • அலுவலக நேரத்திற்குப் பிறகு ஊழியர்களை வேலை நிமித்தம் தொடர்பு கொள்வதை தவிர்க்கும் வழிமுறைகள்.
  • ஊழியர்களின் ஓய்வு நேரம் மற்றும் குடும்ப வாழ்க்கையை மதிப்பிடும் வழிகள்.
  • டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த உரிமையை ஒரு முக்கிய தொழிலாளர் உரிமையாக அங்கீகரித்து வருகிறது. மேலும் பல நாடுகள் தங்கள் சொந்த சட்டங்களை உருவாக்கும் செயல்பாட்டில் உள்ளன. இந்தக் கருத்து பிரான்ஸ் தொழிலாளர்களிடம் இருந்து பரவியது. அந்நாட்டு தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் மூலமாக நடத்திய தொடர் போரட்டத்தின் விளைவாக 2017 ஆம் ஆண்டில் அங்கு “தொடர்பு துண்டிக்கும் உரிமை” சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக இச்சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடாக பிரான்ஸ் இடம்பெற்றது (2017-Droit à la Déconnexion))

ஜெர்மனி

ஜெர்மனியில் “தொடர்பு துண்டிப்பு உரிமை” என நேரடியான தனிச் சட்டம் இல்லை. அங்கு பணி நேரச் சட்டம் உள்ளது. இந்த சட்டம் கடுமையாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி என்பதை உறுதி செய்கிறது. அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை செய்ய வைக்கப்படுவது சட்ட  மீறலாம்.

பல தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தங்கள்  மற்றும் நிறுவன ஒப்பந்தங்களில் அலுவலக நேரத்திற்குப் பிறகு ஈ-மெயில்கள் அனுப்புவதற்கான தடை. அலுவலக தொலைபேசிகள் மற்றும் லேப்டாப்களை அணுகாமல் இருப்பதற்கான விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

2011 முதல், வோக்ஸ்வாகன் BMW Daimler போன்ற நிறுவனங்கள் அலுவலக நேரம் முடிந்த 30 நிமிடங்களுக்குப் பிறகு சேவை ஈ-மெயில் சர்வர்களை அணுக தடை விதித்துள்ளது.

இந்தியாவில் சேவைத் துறை மற்றும்  IT துறை நிலை

இன்றைய சேவைத் துறை மற்றும் IT Industry ஊழியர்கள் நீண்ட நேர பணி, குடும்ப வாழ்க்கையில் சமநிலையின்மை மற்றும் மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர். பலர் இரவு நேரம் வரை “overtime” அல்லது “on-call” பணிகளைச் செய்கின்றனர். இதன் விளைவாக குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகின்றன. ஓய்வு நேரம் குறைகிறது, மன அழுத்தம், உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேலும், இந்தியாவின் IT மற்றும் சேவைத் துறை பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தின் மீது (Western Economy) சார்ந்துள்ளது. TCS, Infosys, Wipro போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் outsourced projects செய்து வருகின்றன. இதன் விளைவாக, ஊழியர்கள் மாறும் time zones-க்கு ஏற்ப வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சில நேரங்களில் இரவு நேரம் முழுவதும் பணிபுரியவும், விடுமுறை நாட்களிலும் தொடர்பில் இருக்கவும் வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ஊழியர்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தைக் கடுமையாக பாதிக்கிறது.

இதனால், இந்தியாவில் சீரான வேலை நேரம் (Regularised Work Culture) மற்றும் அடிப்படை மனித உரிமை பாதுகாக்கும் பணிச்சூழல் (Proper Work Conditions) உருவாக்கப்படுவது அவசியமாகிறது. இதற்கான அடிப்படையாகவே ‘தொடர்பு துண்டிப்பு உரிமை’ (Right to Disconnect Bill) அமைய வேண்டும்.

கேரள அரசு மசோதாவின் முக்கிய விதிகள்:

  • ஊழியர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பான தொடர்புகளுக்கு பதிலளிப்பதில் இருந்து விலகிச் செல்லலாம்.
  • நிறுவனங்கள், அவசரகால சூழ்நிலைகளில் தொடர்பு கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். அவசரகால சூழ்நிலைகளின் பட்டியலை உருவாக்கி, அதை அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். (எ.கா., ஒரு திட்டத்தின் இறுதி நாள், சர்வர் விபத்து போன்றவை மட்டுமே அவசரமாகக் கருதப்படும்).
  • ஊழியர்கள் தொடர்பு துண்டித்ததற்காக தண்டனை அளிக்கக் கூடாது.
  • குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள் இந்த கொள்கையை வெளியிட வேண்டும்.
  • நிறுவனம் விதிகளை மீறினால், அபராதம் விதிக்கப்படும், இருப்பினும் அபராதத்தின் தொகை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
  • குறைகளை தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையும்(Portal) இந்த மசோதாவில் உள்ளடக்கப்படும்.

இது ஒரு பெரிய சமூக-பொருளாதார தாக்கம். இந்த மசோதா ஊழியர்களின் நலனை மையமாகக் கொண்ட ஒரு சமூக நலக் கொள்கை என்பதை வலியுறுத்துகிறது. இது ஊழியர்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முன்மாதிரி ஆகும். இது இந்தியாவின் பிற மாநிலங்களத்தில் உள்ள தொழிலாளர்களையும் இதே போன்ற சட்டங்களைக் உருவாக்கக் கோரி தங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த தூண்டக்கூடும்.

“நல்ல மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்பது உற்பத்தித்திறனுக்கு முக்கியம்” என்ற அறிவியல் பூர்வ சிந்தனையை ஊக்குவிக்கிற இந்த சட்டம் வரவேற்கத்தக்கது.

இந்த மசோதா அனைத்து வேலைகளுக்கும் பொருந்தாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவமனை பணியாளர்கள், அவசர சேவைகள், அல்லது 24/7 சுழற்சியில் செயல்படும் தொழில்கள் போன்றவற்றுக்கு தனி விதிகள் இருக்கலாம்.

சுருக்கமாக, கேரளத்தின் “தொடர்பு துண்டிப்பு உரிமை” மசோதா என்பது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கும் ஒரு முன்னோடி முயற்சியாகும், இது பணிபுரியும் கலாச்சாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தின் அடித்தளத்தை அமைக்கிறது.

கட்டுரையாளர் தீபக்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *