Tamil Marx

சர்வதேசம் தென் அமெரிக்கா

வெனிசுலாவில் ரகசியப் படுகொலை நடத்த சிஐஏ திட்டம் – டிரம்ப் ஒப்புதல்

வெனிசுலாவில் ரகசியப் படுகொலை நடத்த சிஐஏ திட்டம் – டிரம்ப் ஒப்புதல்
  • PublishedOctober 22, 2025

வெனிசுலாவின் மதுரோ அரசாங்கத்தை கவிழ்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ள அமெரிக்கா தற்போது அந்நாட்டில் ரகசிய படுகொலைகளை நடத்தவும் ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றவும் தனது உளவுத் துறையான சிஐஏ முன்வைத்துள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த தகவலை நியூயார்க் டைம்ஸ் இதழ் உறுதிப்படுத்தியுள்ளது.

சிஐஏ இயக்குநர் ஜான் ராட்கிளிஃப், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, வெள்ளை மாளிகை அதிகாரியாக உள்ள ஸ்டீபன் மில்லர் ஆகியோர் தலைமையில் புதிய ஆட்சிக்கவிழ்ப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது.

நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன் என பேசிய டிரம்பால் ஆட்சிகவிழ்ப்புகளையும், வெளிநாடுகளில் நடத்தும் படுகொலைகளையும் நிறுத்த முடியவில்லை.

கையாளாக செயல்படும் மரியா கொரினா மச்சாடோ

அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு வெனிசுலா எதிர்க்கட்சித்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தீவிர வலதுசாரியான மரியா கொரினா மச்சாடோ கையாளாக உள்ளார்.  இவரை ஆட்சியில் அமர வைத்து அந்நாட்டு இயற்கை வளங்களை கொள்ளையடித்து விட வேண்டும் என் பதற்காகவே டிரம்ப் வெனிசுலாவில் திட்டமிட்ட ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளையும் தக்குதல்களையும் நடத்தி வருகிறார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் எட்டு போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் சுமார் 10,000 ராணுவ வீரர்களை கரீபியன் கடலில் (அந்நாட்டு எல்லையில்) நிலைநிறுத்தி நிறுத்தி மீனவர்கள் படகுகள் உட்பட பல படகுகள் மீது தாக்குதல் நடத்தி  27 நபர்களை படுகொலை செய்துள்ளது. அமெரிக்கா ஆனால் தாங்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை கொலை செய்ததாக அமெரிக்கா பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு வெனிசுலா மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதப் படுகொலைகள்

இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதப் படுகொலைகள் என்று சட்ட மற்றும் மனித உரிமைகள் நிபுணர்கள், அத்துடன் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். மேலும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அப்படகுகளை இடைமறித்து தவறு இருக்கும் பட்சத்தில் கைதுதான் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போர்க் கப்பல்களை நிறுத்துவதற்கு முன் கார்டல் டீ லாஸ் சோலேஸ், டிரென் டே அரகுவா ஆகிய இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் மதுரோ தொடர்பு வைத்து உலகம் முழுவது போதைப் பொருள் கடத்துகிறார். அவர் பெரும் சர்வாதிகாரியாக உள்ளார் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் அவ்விரு அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து. இவ்வாறான ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை  கட்டவிழ்த்து விட்டு அமெரிக்க ஆதரவு ஊடகங்களின் மூலமாக டிரம்ப் பிரசாரம் செய்து வருகிறார்.  மேலும் மதுரோ தலைக்கு 439 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார்.

சிஐஏ-வின் படுகொலைகள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன்பாகக் கூட ஒரு படகு மீது குண்டு வீசி சிலரை படுகொலை செய்துள்ளது அமெரிக்கா. அதில் வெனிசுலா, கொலம்பியா, ட்ரின்டா ஆகிய மூன்று நாட்டின் பொதுமக்களே இருந்துள்ளனர் என வெனிசுலா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மதுரோ அரசாங்கம் போதைப்பொருட்களை கடத்தியதாகவும், குற்றவாளிகளையும், புலம்பெயர்ந்து செல்லும் மக்களையும் அமெரிக்காவிற்கு திட்டமிட்டு அனுப்பிவருவதாகவும் வழக்கம் போல தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச்  சொல்லி தனது அத்துமீறல் நடவடிக்கையை நியாயப்படுத்தினார். அந்நாட்டின் மீது தரை வழியாகவும் தாக்குதல் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில் வெனிசுலா ராணுவம் தற்காப்பு நடவடிக்கைகாக ராணுவ ஒத்திகைகளை துவங்கியுள்ளது. நாட்டின் எல்லைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கியமான எண்ணெய் நிறுவனங்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் ராணுவத்தை நிலை நிறுத்தியுள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்

அமெரிக்கா தற்போது வரை தனது குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் அறிக்கைகள், வெனிசுலாவில் ஒரு பெரிய போதைப்பொருள் தயாரிப்போ  கப்பல் ஏற்றி வெளிநாடுகளுக்கு கடத்துவதோ இல்லை என அறிவித்துள்ளன. அமெரிக்காவிற்குச் செல்லும் பெரும்பாலான போதைப்பொருட்கள் கொலம்பியா, பெரு மற்றும் பொலிவியா போன்ற நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் பசிபிக் கடல் வழி மற்றும் மத்திய அமெரிக்கா வழியாகவே அமெரிக்கா கொண்டு செல்கின்றன.

கடந்த வாரம், வெனிசுலா ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், தங்கள் நாடு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் “பொய்களை” பயன்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்கும் நிலையும் உள்ளது என கூறி அமெரிக்காவின் செயலை கண்டித்தது.

அக்டோபர் 2 அன்று வெனிசுலாவுடனான அனைத்து ராஜிய உறவுகளையும் அமெரிக்கா துண்டித்துக் கொண்டது. இதன் பிறகு இந்தத்தக்குதல்களை ஒவ்வொரு நாளும் தீவிரப்படுத்தி வருகிறது.

போர் தொடுக்க உருவாக்கப்படும் காரணம்

அமெரிக்கா வெனிசுலாவின் மீது நேரடிப் போர் தொடுக்க ஒரு காரணத்தை உருவாக்குவதற்காக வெனிசுலாவில் உள்ள அமெரிக்கா ஆதரவு வலதுசாரிக்குழுக்கள் அங்குள்ள கைவிடப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தில் வெடிகுண்டுகளை வைத்து தகர்க்க திட்டமிட்டன. இதனை கண்டறிந்த மதுரோ அரசு அதனை தடுத்தது.

இந்த சம்பவத்தை நிராகரிப்பதற்காக 2019 இல் வெனிசுலாவுடன் ராஜிய உறவுகளை முறித்துக் கொண்டதிலிருந்து அந்த தூதரகக் கட்டடம் காலியாக உள்ளது என்று கூறி, அமெரிக்க அதிகாரிகள் வெனிசுலாவின் கூற்றை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

தென் அமெரிக்காவில் இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் தலைமையிலான அரசாங்கங்களை அமெரிக்கா தொடர்ந்து கவிழ்த்துள்ளது  என்பதை சிஐஏ-வின் ஆவணங்களே உறுதிப்படுத்தியுள்ளன.

சிஐஏ-வின் முந்தைய ஆட்சிக்கவிழ்ப்புகள்

1954 இல் ஜேக்கபோ ஆர்பென்ஸின் தலைமையிலான குவாதமாலா, 1973 இல் சல்வடோர் அலெண்டே தலைமையிலான சிலி அரசு, அரசு வெனிசுலாவில் சாவேஸ்  தலைமையிலான அரசுகளை சிஐஏ கவிழ்த்து உள்ளது. தற்போது வரை பல்வேறு தடைகள் மூலமாக கியூபாவை கவிழ்க்கத் திட்டமிட்டு வேலை செய்கிறது அமெரிக்கா.

1980கள் மற்றும் 1990களில் வெனிசுலா ராணுவத்திற்குள் இருந்த சில நபர்களை கைக்குள் போட்டுக்கொண்டு சிஐஏ கொகைன் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. 2002 இல் அமெரிக்க ஆதரவுடன் நடந்த குறுகிய கால சதி உட்பட, முன்னாள் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸை (1999-2012) கவிழ்க்க அல்லது படுகொலை செய்ய நடந்த பல சதித் திட்டங்களின் பின்னணியில் சிஐஏ உள்ளது என வெனிசுலா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டு துவக்கத்தில், மதுரோவைக் கொலை செய்வதற்காக தீவிர வலதுசாரிகுழுக்கள் திட்டம் தீட்டிய நிலையில், அவர்களை வெனிசுலா அதிகாரிகள்  கைது செய்தனர். இந்த திட்டத்திற்கு பின்னால் சிஐஏ மற்றும் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (DEA) உதவி இருந்தது எனவும் வெனிசுலா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கும் முன் 2018 இல் நடந்த ஒரு கொலை முயற்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது

வெனிசுலாவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மிக அதிகளவில் உள்ளன. அதே போல இரும்பு, பாக்சைட், தங்கம், வைரங்கள் அதன் மண்ணில் உள்ள மிகப்பெரிய இயற்கைக் கொடையாகும். நிலக்கரி உற்பத்தியில் உள்ள முதன்மை நாடாகவும் அது உள்ளது. இந்நிலையில் இவ்வளங்களை அபகரிக்க பல ஆண்டுகாலமாக அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

இந்த போர்ப் பதற்றத்தை தணிப்பதற்காக ஜனாதிபதி மதுரோ விடுத்த பேச்சுவார்த்தை அழைப்புகளை அமெரிக்கா ஏற்க மறுத்து விட்டு வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை ஆக்கிரமிப்பது என்ற திட்டத்தில் உறுதியாக உள்ளது.

–     சேது சிவன்

Written By
shethu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *