சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR ) நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழிக்கும் செயல்-அ.அன்வர்
பீகாரில் தேர்தல் ஆணையம் முன்னெடுத்த “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” நாடு முழுவதும் மிகக்கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது. இது குறித்து விவாதம் நடத்த எதிர் கட்சிகள் கேட்டு வந்த நிலையில் பல நாட்கள் நாடாளுமன்றமே செயல்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. இது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றன. பீகார் பிரச்சனை அகில இந்திய பிரச்சனையாக மாறி பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அப்படி இருந்தும் “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” நாடு முழுவதும் அமலாக்க போவதாக தேர்தல் ஆணையம் கூறியது. மறுபுறத்தில் மகாராஷ்ட்ரா, உ.பி., பிரதமரின் தொகுதியான வாரணாசி/ ஒடிசா உட்பட பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடத்துள்ளது என புகார்கள் கிளம்பின. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓரளவு நியாயம் வழங்கினாலும் பல அடிப்படை பிரச்சனைகள் தொடர்கின்றன. இதனால் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகமும் வாக்குரிமையும் கடும் ஆபத்தில் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஜனநாயகம் குறித்து கவலை கொள்பவர்கள் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பிரச்சனையாக இது மாறியுள்ளது எனில் மிகை அல்ல.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிரி யார்?
வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒரு விளைவு எனில் மிகை அல்ல. பிரிட்டனில் “மக்கள் சாசன இயக்கம்” எனும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் மூலமாகவே வாக்குரிமை விரிவாக்கம் பெற்றது. எனினும் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை. 1917 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் புரட்சி வென்ற பின்னர்தான் முதன் முதலாக பெண்களும் வாக்குரிமை பெற்றனர். பின்னர் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாரக மந்திரமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அரசியல் நிர்ணய சபை இந்த பிரச்சனையை பல நாட்கள் விவாதித்து “ஒரு மனிதன்; ஒரு வாக்கு” எனும் முடிவுக்கு வந்தது.
எனினும் தான் உருவாக்கிய ஜனநாயக கட்டமைப்பை கூட முதலாளித்துவம் தனது தேவைக்கு ஏற்றவாறு மாற்ற அல்லது சிதைக்க முற்படுகிறது. தனது கொள்ளைகளுக்கும் லாபத்திற்கும் அனுமதிக்கும் வரை ஜனநாயக விழுமியங்களை முதலாளித்துவம் உயர்த்தி பிடிக்கிறது. சிலாகிக்கிறது. ஆனால் தனது கொள்ளைகளுக்கும் லாபத்திற்கும் தடை ஏற்படுமானால் அதே ஜனநாயகத்தை சிதைக்கவும் அல்லது அழிக்கவும் முதலாளித்துவம் தயங்குவது இல்லை. இது உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வு. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 1975 அவசரநிலை காலம் இதற்கு சிறந்த எடுத்துகாட்டு. அதற்கு முன்பாக 1971 ஆம் ஆண்டிலிருந்தே மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் செல்வாக்கை தடுக்க பரவலான ஜனநாயக சிதைவுகள் அரங்கேற்றப்பட்டன. 1971 இல் மேற்கு வங்கத்தில் என்ன நடந்ததோ அதுதான் இந்தியா முழுதும் 1975 இல் நடந்தது.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து உழைப்பாளி மக்களிடமிருந்து வருவது இல்லை. ஆளும் வர்க்கங்களிடமிருந்துதான் அந்த ஆபத்து வருகிறது. பா.ஜ.க.வின் கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணி ஆட்சியில் இந்த ஆபத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” ஆகும். பீகாரில் துவங்கப்பட்ட இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அமலாக்கப்பட போவதாக தேர்தல் ஆணையம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாடு/ கேரளா/ மேற்கு வங்கத்துக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளதால் இது பற்றிய கூடுதல் கவனத்தை நாம் செலுத்த வேண்டியுள்ளது. மக்களை இந்த பிரச்சனையில் அணி திரட்ட வேண்டியுள்ளது.
பா.ஜ.க. ஆட்சியில் அழிந்து வரும் தேர்தல் ஜனநாயகம்
நமது அரசியலமைப்பு சட்டத்தின் 324 ஆவது பிரிவின்படி நியாயமான சுதந்தரமான தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் சுயேச்சையாக செயல்பட தேவையான அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. தேர்தல் நடத்துவது என்பது வாக்காளர் பட்டியலை தயாரிப்பதும் அவ்வப்பொழுது அதனை திருத்துவதும் அடங்கும். கடந்த 70 ஆண்டுக்களுக்கும் மேலாக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பாகவே செயல்பட்டது. சில குறைகளும் விமர்சனங்களும் இருந்தாலும் பொதுவாக தேர்தல் ஆணையம் சிறப்பாகவே செயல்பட்டது என கூறினால் தவறாகாது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தனது சுயேச்சை தன்மையை இழந்து வருகிறது என்பதற்கு பல நிகழ்வுகள் வெளிப்படையாக தெரிகின்றன.
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் செய்யப்பட்ட மற்றம் இதனை தெளிவாகக் காட்டியது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வு குழு தான் புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவாக இருந்தனர். ஆனால் மோடி அரசாங்கம் அந்த குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி விட்டு ஒரு ஒன்றிய அமைச்சர் இடம் பெற வேண்டும் என்பது போல மாற்றி விட்டது.
இதன் பொருள் என்னவெனில் தேர்வு குழுவில் உள்ள 3 பேரில் பிரதமரும் ஒன்றிய அமைச்சர் ஆகிய இருவரும் ஒரே கருத்து உடையவராக இருப்பார்கள். அதுவே பெரும்பான்மையாக இருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தனக்கு ஆதரவாக செயல்படும் நபர்களை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கும் அதிகாரம் பிரதமரின் கைகளுக்கு வந்து விடுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் பாரபட்ச தன்மையை சிதைக்கும் செயல். இதனால் அரசியலமைப்பு சட்டம் சொல்லும் “பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம்” என்பது காணாமல் போய்விடுகிறது.
இந்திய தேர்தல்களில் உருவான அடுத்த சிதைவு “தேர்தல் பத்திரங்கள்” என்பதாகும். தேர்தல் பத்திரங்களில் மிகப்பெரும்பான்மையானவை சென்றதால் ஏராளமான நிதி பா.ஜ.க. வுக்கு கிடைத்தது. இது தேர்தல் களத்தில் சமமற்ற சூழல் உருவாக்கியது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதமானவை என தீர்ப்பு வழங்கியதன் மூலம் இந்த பிரச்சனையில் நீதி நிலைநாட்டப்பட்டது.
மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை பரவலாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை “ஹேக்” செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வாக்கு பதியும் வரிசை தவறானதாக உள்ளது. இதன் மூலம் முறைகேடு சாத்தியம் என்பதே முக்கிய குற்றச்சாட்டாகும். மேலும் குறைந்தபட்சம் 50% ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையும் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்படவில்லை.
2019 தேர்தலில் புல்வாமா மற்றும் பாலகோட் ராணுவ நடவடிக்கையை அப்பட்டமாக தமக்கு சாதகமாக மாற்ற முயன்ற பிரதமரையும் ஏனைய பா.ஜ.க. தலைவர்களையும் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் தவறியது. மேலும் 2019 மற்றும் 2024 தேர்தல்களில் பிரதமர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலமுறை மதப்பிளவுகளை உருவாக்கும் வகையில் மதவெறியை தூண்டி பேசிய பொழுதும் அவற்றை எதிர்கட்சிகள் தொடர்ந்து புகாராக கொடுத்த பொழுதும் தேர்தல் ஆணையம் அசையவில்லை. இந்த பின்னணியில்தான் பீகார் “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” பிரச்சனை எழுந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தமா? புதிய பட்டியலா?
“சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. அதில் மிக முக்கியமானது இது பட்டியல் திருத்தமா? அல்லது புதிய பட்டியலா என்பதாகும். ஏனெனில் இதுவரை இத்தகைய முன்னெடுப்பை தேர்தல் ஆணையம் நடத்தியது இல்லை. “சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்” நடந்துள்ளது. “தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமும்” நடந்துள்ளது. ஆனால் “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” நடந்தது இல்லை. உண்மையில் இது திருத்தம் இல்லை. மாறாக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு ஆகும். ஏனெனில் பீகாரில் உள்ள 8 கோடி வாக்காளர்களுக்கும் புதிய படிவம் தரப்பட்டது. அதுவும் பூர்த்தி செய்யப்படாத படிவம் இல்லை. ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது பெயர்/ முகவரி போன்றவை அச்சிடப்பட்டு வாக்காளருக்கு தரப்பட்டு அவர்கள் அந்த படிவத்தில் கையெழுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டனர். எனவே இது திருத்தம் இல்லை. புதிய பட்டியலுக்கு இணையானது ஆகும்.
இந்த பட்டியல் திருத்தம் அல்லது புதிய பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் சொன்ன காரணம் என்ன?
- வேகமான நகரமயமாக்கல்
- இடம் பெயர்தல்
- தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் சேர்த்தல்
- இறந்தவர்களின் பெயரை நீக்குதல்
- சட்ட விரோதமாக குடியேறிய வாக்காளர்களை கண்டறிதல்.
ஆகிய காரணங்களுக்காக இது செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
ஜூன் மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் இந்த படிவங்கள் ஜூலை 1 ஆம் தேதிக்குள் திரும்ப பெறப்பட வேண்டும் எனவும் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும் செப்டம்பர் 30 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டது. பீகார் சட்டமன்றத்தின் ஆயுள் நவம்பர் மாதம் 22ம் தேதி முடிவடைகிறது. எனவே அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். கேள்வி என்னவெனில் 8 கோடி வாக்காளர்களின் படிவங்களை ஒரு மாதம் அல்லது இரு மாத காலத்துக்குள் எவ்வாறு சரிபார்க்க முடியும் என்பதாகும். மேலும் மிக குறுகிய காலத்தில் எப்படி படிவங்கள் அச்சிடப்பட்டு வாக்காளரிடம் தரப்பட்டு மீண்டும் அவர்களிடமிருந்து திரும்ப பெற்று அவற்றை சரிபார்க்க இயலும்? எனவே வாக்காளர் பட்டியலை தொகுத்ததில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என புகார்கள் எழுந்துள்ளன. பல இடங்களில் அதிகாரிகளே வாக்காளரின் கையெழுத்துக்களை போட்டனர் எனவும் ஒரு குடும்பத்தில் சிலரின் வாக்குகள் உறுதிப்படுத்தி வேறு சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டன எனவும் பரவலான புகார்கள் எழுந்துள்ளன. மேலும் பீகாரிலிருந்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்ற உழைப்பாளிகள் பலருக்கும் இப்படி திருத்தம் செய்யப்படுகிறது என்பதே தெரியாது. அவர்கள் தமது ஊருக்கு வந்து படிவம் தரவில்லையெனில் அவர்களின் பெயர் நீக்கப்படும் ஆபத்து உள்ளது.
குடியுரிமை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டா?
“சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” எழுப்பியுள்ள இன்னொரு மிக முக்கியமான கேள்வி தேர்தல் ஆணையத்துக்கு ஒரு வாக்காளரின் குடியுரிமை தீர்மானிக்கும் அதிகாரம் உண்டா என்பதாகும். 1.1.2003க்கு பின்னர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தமது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என ஆணையம் கூறுகிறது. அப்படியானால் ஒரு கேள்வி எழுகிறது. 2003க்கு பின்னர் பல தேர்தல்கள் பீகாரில் நடந்துள்ளன. அந்த தேர்தல்கள் எல்லாம் இப்பொழுது செல்லுபடியாகாதா? தேர்வு செய்யப்பட்ட பல சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட விரோதமாக பதவி வகித்தனரா எனும் கேள்விகள் எழுகின்றன.
அதே சமயத்தில் ஒரு வாக்காளரின் குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் உண்டா எனும் கேள்விக்கு அந்த அதிகாரம் தனக்கு உண்டு என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறது. குடியுரிமை இல்லாத ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. ஆனால் ஒருவருக்கு குடியுரிமை உள்ளதா இல்லையா என தீர்மானிக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சகத்துக்குதான் உண்டு. அந்த உரிமையை தேர்தல் ஆணையம் எடுத்து கொள்ள எண்ணுவது பல கவலைகளை உருவாக்குகிறது. குடியுரிமையை தீர்மானிக்கும் செயல் தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்னரும் ஆணையம் அந்த அதிகாரம் தனக்கு உண்டு என மூர்க்கத்தனமாக வாதிடுகிறது.
1987 முதல் 2003 வரை பிறந்தவர்களுக்கு பெற்றோர் இருவரில் ஒருவரின் பிறப்பு சான்றிதழும் 2003க்கு பின்னர் பிறந்தவர்களுக்கு இரு பெற்றோரின் பிறப்பு சான்றிதழும் கேட்கப்படுகிறது. பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழ் குழந்தைகளுக்கு எப்படி கிடைக்கும்? ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர்தான் பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனையே நீதியரசர் துலியா தன்னிடம் கூட தனது பெற்றோரின் சான்றிதழ்கள் இல்லை; அவற்றை ஆணையம் கேட்டால் உடனடியாக தர இயலாது; எனக்கே இந்த நிலை எனில் சாதாரண மக்களின் நிலை என்ன என நீதிமன்றத்தில் கேட்டார்.
1993 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “வரைவு வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் கட்டத்தில் குடியுரிமை பிரச்சனையை திர்மானிக்கும் எவ்வித விதிகளும் உருவாக்கப்படவில்லை” என தெளிவாக கூறியுள்ளது. இதனை பின்னர் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு பின்னரும் குடியுரிமையை தீர்மானிக்கும் உரிமை தனக்கு உண்டு என தேர்தல் ஆணையம் வாதிடுவது CAA/NRC/NPAவை பின்வாசல் வழியாக அமல்படுத்துவது என்பது பொருளாகும். இதனை அனுமதிப்பது மிக ஆபத்தானது.
இப்பொழுது ஏன்?
தேர்தல் ஆணையத்துக்கு உண்மையிலேயே வாக்காளர் ஒரு பிரிவினரின் குடியுரிமை பற்றி கேள்விகள் இருக்குமானால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
பீகார் தேர்தலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே இந்த முன்னெடுப்பை திட்டமிட்டிருக்க வேண்டும். அதுவும் தானாக அல்ல; உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து இதனை செய்திருக்க வேண்டும். ஏனெனில் குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சகத்துக்குதான் உண்டு. ஒரு குடிமகனின் குடியுரிமை என்பது அவனது வாழ்வாதரத்துடனும் வாழ்க்கை முழுமைக்கும் தாக்கம் கொண்டதாக இருப்பதால் நிதானித்து இந்த விசாரணை நடைபெற வேண்டும். தனது குடியுரிமையை நிலைநாட்ட குடிமகனுக்கு அனைத்து வாய்ப்புகளும் தரப்பட வேண்டும். அதற்கு கணிசமான கால அவகாசம் தேவை. ஆனால் தேர்தல் ஆணையம் எடுத்தேன் கவிழ்த்தேன் என குடியுரிமை பற்றி தீர்மானிக்க முனைகிறது.
இதனைதான் நீதியரசர் பகஷி கீழ்கண்டவாறு கேட்டார்:
“ஒரு வேளை வாதத்துக்காக குடியுரிமையை தீர்மானிப்பதற்கு அதிகாரம் உண்டு என வைத்து கொண்டாலும் அது தேவை என வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும் ஏன் பீகார் தேர்தலுடன் அவசர அவசரமாக செய்கிறீர்கள்? நிதானமாக ஒரு ஆண்டு எடுத்து கொண்டு செய்யுங்கள்?” இதற்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை.
ஆதார் கேலிக்கூத்தா?
வாக்காளர் பட்டியலில் புதிதாக அல்லது விடுபட்டவர்கள் மீண்டும் சேர சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் பட்டியலில் ஆதாரை ஆணையம் இணைக்கவில்லை. வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, சமையல் வாயு பெற, வெளியூரில் தங்கும் விடுதியில் அறை பெற, ரயில்வேயில் தக்கல் முறையில் பயணச்சீட்டு பெற, வீட்டு வாடகை பத்திரம் எழுத, சொத்து பதிவு செய்ய, ரேஷன் அட்டை பெற, அரசின் நல திட்டங்கள் பெற என அனைத்துக்கும் ஆதார் எண் வேண்டும் என கேட்கப்பட்டது. ஆனால் இப்பொழுது குடியுரிமையை நிரூபிக்க ஆதார் ஆதாரம் இல்லை என ஆணையம் சொல்கிறது. இது கேலி கூத்தாக இல்லையா?
மிக எளிதாக போலி ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை உருவாக்கிவிடுகின்றனர் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டிய கடமை அரசுக்குதானே உண்டு. தனது கடமையிலிருந்து தவறிய அரசு குடிமக்களுக்கு தண்டனை தருவது சரியா?
தற்பொழுது ஆதார் அட்டையை ஒரு ஆவணமாக எடுத்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும் ஆதார் குடியுரிமைக்கு உகந்த ஆவணமா எனும் கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
பீகாருக்கு அப்பால்
பீகாரில் தொடங்கிய இந்த பிரச்சனை நாடு முழுதும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் எனில் மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 39 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர். இது சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு உதவியது. ஒடிசாவிலும் இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் சுரேஷ் கோபி வென்றது முறைகேடு காரணமாகவே என இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆதாரங்களையும் முன்வைத்துள்ளன. வாரனாசி தொகுதியில் பின்னடைவில் இருந்த பிரதமர் எப்படி வென்றார் என்பது தங்களுக்கு தெரியும் என அதிருப்தி கொண்ட பா.ஜ.க. தலைவர்களே அம்பலப்படுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் மாதவபுரா எனும் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன என எதிர்கட்சி தலைவர் ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவையெல்லாம் தேர்தல் முறைகேடுகள் பரவலாக நடந்துள்ளதை தெளிவு படுத்துகின்றன. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யார்? ஏன் நீக்கப்பட்டனர்? என்பதை கூறத்தேவை இல்லை என ஆணையம் ஆணவத்துடன் கூறியது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த விவரங்களை 4 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என ஆணையத்தை பணித்துள்ளது. இந்த விவரங்கள் மேலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும்வய்ப்பு உண்டு.
எனினும் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு உதவி செய்கிறது எனும் நிலை மாறி பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டாளியாக பரிணமித்துள்ளது. இந்திய ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்பு சட்டத்துக்கும் இது மிக ஆபத்தானது. இதனை தடுக்கும் பெரும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது.
அ. அன்வர் உசேன்