முழு விடுதலை என்று முதலில் முழங்கியது கம்யூனிஸ்ட்டுகளே..! – இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்..Part 2
புதிய சகாப்தத்திற்கு விதை போட்ட சோவியத் ஒன்றியம்.
எப்படியிருப்பினும், உலகளாவிய முறையில் ஒரு சகாப்தத்தையே புரட்டி போடும் விதமாக நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளால் இந்தியாவில் காங்கிரசின் பின்னால் திரண்டிருந்த வெகுமக்களும், இதர ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஈர்க்கப்பட்டனர். அந்த சமயத்தில் உலக முதலாளித்துவ பொருளாதாரமானது மிக மிக ஆழமான நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்எதிராக சோவியத் ஒன்றியத்தின் முதலாவது ஐந்தாண்டு திட்டம் மிகவும் வெற்றிகரமான முறையில் அமலாக்கப்பட்டு, புதிய சகாப்தத்தை துவக்கி வைத்தது. சோசலிசத்தின் கோட்பாடுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்தும், சோசலிச தத்துவம் என்ன என்பது குறித்தும் பொருளாதார அறிஞர்களால் விவாதிக்காமல் இருக்க முடியவில்லை; அதேவேளை, அந்த கோட்பாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பரிசோதித்து பார்க்கப்பட்டன; அப்படி பரிசோதித்த போது, நெருக்கடியின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு மாற்றாக, ஒரு உயரிய தத்துவம் சோசலிசம் என்பது நிரூபணம் ஆவதை கண்டார்கள். இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதை பார்த்து, எதிர்காலத்தில் இந்திய நாடும், இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரைபடத்தை தங்கள் மனதில் உருவாக்கிக் கொண்டார்கள். அது நடக்க வேண்டுமானால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை தூக்கியெறிந்து, நாடு சுதந்திரமடைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் உணர்ந்தார்கள். இந்த கருத்துக்கள், மார்க்சிய – லெனினிய சித்தாந்தங்களை சுற்றி வலம்வந்து கொண்டிருந்த காங்கிரசின் பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே, ஆர்வத்தையும் வேட்கையையும் தூண்டியது. மார்க்சிய – லெனினியத்தின்பால் அவர்களை ஈர்த்தது. அவர்களது மனக் கண்களை திறந்தது. இது, காங்கிரசின் அகில இந்திய தலைவர்களும், இடதுசாரி பாதையை நோக்கி திரும்பும் விதமான சிந்தனைகளை விதைத்தது; அது அவர்களின் பேச்சுக்களில், அறிவிப்புகளில் பிரதிபலித்தது. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் நேரு ஆற்றிய தலைமை உரையே அதற்கு சான்று.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீவிரமடைந்த போராட்டம்.
இந்த காலகட்டத்தில் இந்தியாவிற்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் வேகமெடுத்தன. எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன. அனைத்தும் உறுதிமிக்க, போர்க்குணமிக்க எழுச்சிகள். ஏனென்றால் இந்த முறை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை பார்க்கும் பார்வை மாறியிருந்தது. முன்பைவிட தற்போது அதற்கான நீண்டகால இலக்கும், நடைமுறை உத்திகளும் வகுக்கப்பட்டு களமிறங்கினார்கள். 1930 ஆம் ஆண்டு எழுச்சிமிகு உப்புச் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 1932 – 33 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது சட்டமறுப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கங்களில் இரண்டு முக்கியக் கூறுகள் இருந்தன. இந்த மாபெரும் இயக்கங்களுக்கு தேசிய அளவில் மகாத்மா காந்தியால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அரசியல் சிந்தனையை கொண்டவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது உண்மை. ஆனால் ஒருபுறத்தில் இந்த சிந்தனை கொண்ட, நாடாளுமன்ற ஆட்சிமுறையை ஆதரிப்பவர்களும், மறுபுறத்தில் காந்தியின் சித்தாந்தம், திட்டம் மற்றும் கொள்கைகளோடு கடுமையாக முரண்பட்ட தீவிர மற்றும் முற்போக்குவாத காங்கிரசாரும் களத்தில் நின்றார்கள். நாடாளுமன்ற ஆட்சிமுறை தொடர்பாக தனக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு என்று கூறிய காந்தி, எனினும் அந்த சிந்தனை கொண்டவர்களுக்கு தனது ஆசிகள் உண்டு என்றும் கூறினார். இந்த அடிப்படையில் காங்கிரசின் உயர்மட்ட தலைமையின் ஒரு பகுதியினர் இந்த சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு, ஒருவித மாயையில் சிக்கியிருந்தனர். மறுபுறத்தில், 1930 – 32 ஆண்டுகளில் நடந்த இந்த சத்தியாகிரகப் போராட்டங்களில் நாடு முழுவதும் தொழிலாளர் வர்க்கம் நடத்திய மாபெரும் வேலைநிறுத்தங்களும், இதர வடிவங்களிலான பெருவாரியான மக்கள் பங்கேற்ற நேரடி இயக்கங்களும் இந்த சத்தியாகிரகங்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன. இந்தப் போராட்ட அனுபவங்கள், தொழிலாளர் வர்க்கத்தை மேலும் மேலும் அணிதிரட்டுவதற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் கண்டறியும் வேட்கையை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கியது. இப்படியாக அவர்கள், கம்யூனிசத்தையும் சோசலிசத்தையும் நோக்கி வரத் துவங்கினார்கள்.
1934 மே மாதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 1934 அக்டோபரில் பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காந்தி தலைமையிலான நாடாளுமன்ற திட்ட ஆதரவாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாடும், மோதலும் ஏற்பட்டது. காந்தியின் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் தலைமையில் இருந்த வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தலைமையேற்றனர். மற்றவர்களுக்கு சோசலிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்ட இடதுசாரிகள் வழிகாட்டிகளாக இருந்தார்கள். இந்த தருணத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி பிறக்கத் துவங்கிவிட்டது என்று கூறலாம். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே “ஆளும் குழு”விற்கு எதிராக, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது “எதிர்க்கட்சித் தலைவர்” என்ற நிலையில் இருந்து செயல்பட்டது. காந்தியவாதிகள், நாடாளுமன்றவாதிகள் மற்றும் இதர வலதுசாரிகள் காங்கிரஸ் கட்சிக்குள் “ஆளும் குழு”வாக இருந்தார்கள். கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்தவரை, பல்லாண்டு காலமாக நடந்து கொண்டிருந்த மீரட் சதி வழக்கிலிருந்து இப்போதுதான் நிபந்தனைகளின் பேரில் வெளியில் வந்திருந்தனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமாவதற்கு சற்று முன்பு பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் ஒன்றாக இணைந்து, மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமையின் கீழ் செயல்பட துவங்கியிருந்தன என்ற போதிலும், அந்த சமயத்தில் நிலவிய சூழலின் பின்னணியில், புதிதாக அமைக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மையமானது தலைமறைவாகவே செயல்பட வேண்டிய நிலைமை இருந்தது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்திருந்தது. எனவே, இந்த குறிப்பிட்ட தருணத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரிகளின் துரித வளர்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட முடியவில்லை..
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘ஏன் சோசலிசம்?’
நாம் ஏற்கெனவே விவரித்தபடி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரசுக்குள் ஏற்பட்ட – மேலே கூறப்பட்ட நிகழ்வுப் போக்குகளின் பின்னணியில் உதயமானது. இதற்கான முதல் முன் தயாரிப்பு மாநாடு 1934 மே மாதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பாட்னாவில் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எனும் புதிய கட்சியை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் பம்பாயில், காங்கிரஸ் மாநாடு நடப்பதற்கு சற்று முன்பு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இந்த இரண்டு அமர்வுகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும், அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் சோசலிஸ்ட்டுகள் தரப்பில் நடத்தப்பட வேண்டிய போராட்டத்திற்கான தயாரிப்பாகவே இருந்தது. இப்படியாக, காங்கிரஸ் முன்பு எப்படிப்பட்ட பிரச்சனைகளை முன்வைக்க வேண்டுமென்று இடதுசாரிகள் அணுகினார்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் விதத்தில் முயற்சிகள் நடந்தன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமாவதற்கும், அதன் வளர்ச்சிக்கும் அடிப்படையாக ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய “ஏன் சோசலிசம்” என்ற நூல் பிரதான இடத்தை பிடிக்கிறது. இந்த நூல், மிகப் பெரும் எண்ணிக்கையிலான இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களின் கண்களை திறக்கும் விதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த இளைய தலைமுறையினர், இந்திய தேசிய காங்கிரசின் வலதுசாரி தலைவர்களால் பின்பற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் அப்பட்டமான தோல்விகளால் விரக்தி அடைந்திருந்த நிலையில், அவர்கள் ஒரு புதிய பாதையை நோக்கி அணிதிரண்டு கொண்டிருந்த சூழலில் இந்த நூல் வெளியானது.
தனிப்பட்ட முறையில் நானும் அதை உணர்ந்தேன். அன்றைய நாளில் கேரளத்தில் என்னைப் போன்ற இளம் காங்கிரஸ்காரர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘ஏன் சோசலிசம்’ என்ற நூல் ஈர்த்தது. அந்த நூலில், சோசலிசம் என்பது காந்தியிசத்தைவிட உயர்வானது என்பது விரிவான முறையில் கூறப்பட்டிருந்தது. காந்தியிசம், நாடாளுமன்ற பாதை மற்றும் தனிநபர் பயங்கரவாதம்- என மூன்று தத்துவார்த்த அணுகுமுறைகள் காங்கிரசுக்குள் இருந்தன. இந்த நிலையில்தான் ஒரு புதிய தத்துவப் பாதையை எதிர்நோக்கியிருந்த எங்களைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு ஏன் சோசலிசம் என்ற நூல் ஒரு பாடப்புத்தகம் போல கிடைத்தது. உண்மையில் நாடு முழுவதும் ஒரு புதிய தத்துவத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இது ஒரு வெளிச்சத்தை தந்தது.
உண்மையில் சொல்லப்போனால், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நூல், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு அதன் பாதை சோசலிசமே என்று அறுதியிட்டு கூறுவதாக இல்லை. ஏனென்றால் சோசலிசம் என்ற தத்துவமே இறுதியானது என்று அறுதியிட்டு கூறினால், பகுத்தறிவு சிந்தனையும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட காங்கிரஸ்காரர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் வர்க்க மக்களோடு கைகோர்த்துவிடுவார்கள் என்ற எண்ணமும் அதில் அடங்கியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறப்போனால், சோசலிசம் என்பதே இறுதி இலக்கு என்று கூற அந்த நூல் தயாராகயில்லை; மாறாக, நாடு விடுதலை பெறுவதற்கு ஒரு சக்தி வாய்ந்த வழிமுறையாக சோசலிசப் பாதை இருக்கும் என்ற அளவில் மட்டும் அது கூறியது. எனவே இந்த நூல், காந்திய செயல்திட்டமான காதி மற்றும் கிராமத் தொழில்கள், அஹிம்சை வழியிலான எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கி அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தது. மறுபுறத்தில், காங்கிரஸ் தலைவர்களில் வலதுசாரிப் பிரிவினர் முன்வைத்த நாடாளுமன்ற பாதை என்ற சிந்தனைக்கு மகாத்மாவே முழுமையான ஆசிகளை வழங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு சிந்தனையோட்டமான தனிநபர் பயங்கரவாதம் என்பது, நாடு முழுவதும் காங்கிரசுக்குள் இருந்த புரட்சியாளர்களின் குழுக்களால் செயல்படுத்தப்பட்டு கொண்டிருந்தது.
இந்த நடவடிக்கைகளை எதிர்த்த அதேவேளையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்கள் பிரிவினரால் நடத்தப்பட்ட வெகுமக்கள் போராட்ட இயக்கங்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆதரித்தார். ஆனால் மறுபுறத்தில் மகாத்மா காந்தியால் முன்வைக்கப்பட்ட புதிய கண்ணோட்டம், புதிய திட்டம் என்பது காங்கிரஸ் இயக்கத்தை ஒரு போராட்ட குணமிக்க அமைப்பு என்பதிலிருந்து ஒரு அரசியலற்ற சேவா சங்கம் என்ற ஒரு கட்டமைப்பாக மாற்றுவதை நோக்கியும், தேர்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு சக்திமிக்க கட்சியாக இருந்தால் போதும் என்பதை நோக்கியும் கொண்டு செல்வதாக இருந்தது.
மீண்டும் தனிப்பட்ட உணர்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எல்லாம் நிகழ்வுகளையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. எனினும் இரண்டு சம்பவங்கள் எனது அரசியல் சிந்தனையை செழுமைப்படுத்த காரணமாக அமைந்தன. முதலாவது, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கேரள வருகை. 1934 மே மாதம் பாட்னாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முன் தயாரிப்பு மாநாடு நடந்தபிறகு அவர் கேரளாவுக்கு வருகை தந்தார். கட்சியின் அமைப்புக் குழுச் செயலாளர் என்கிற முறையில் வருகை தந்த அவர், அக்டோபரில் நடைபெறவுள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி முதலாவது அகில இந்திய மாநாட்டின் தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தார். இந்த வருகையின் போது அவர் ஆற்றிய உரைகள், எங்களோடு அவர் நடத்திய தனிப்பட்ட முறையிலான விவாதங்கள் ஆகியவை, தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கம் ஆகியவற்றை உருவாக்கி அவர்களை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அடிகோடிட்டு காட்டுவதாக அமைந்திருந்தன. இந்த இயக்கங்கள் இல்லாமல் விடுதலைப் போராட்டத்தை தீர்மானகரமான முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என அவர் உணர்த்தினார். மேலும், காங்கிரஸ் தலைமையின் சமரசக் கொள்கைகளை எதிர்த்து சீரிய முறையில் போராடவும் முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அதேபோல, சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களின் போது நடந்த மாபெரும் வேலைநிறுத்தங்கள், முழு அடைப்புகள் ஆகியவற்றின் அனுபவங்களையெல்லாம் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற போர்க்குணமிக்க வெகு மக்கள் போராட்ட இயக்கங்கள் அரசு நிர்வாகத்தை எப்படி ஸ்தம்பித்து போகச் செய்வதற்கு காரணமாக அமைகின்றன என்ற அனுபவங்களையெல்லாம் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, அதன் அனுபவத்தை மேம்படுத்துவது தான், சக்தி வாய்ந்த பிரிட்டிஷ் ஆட்சியை உடைத்து நொறுக்குவதற்கான ஒரே சிறந்த வடிவம் என்றும் அவர் ஆர்வத்துடன் கூறினார். இந்த பேச்சுக்களின் மூலம், சத்தியாகிரகத்திற்கு மாற்றாக, நாடாளுமன்றப் பாதைக்கு மாற்றாக, பயங்கரவாத வழிமுறைக்கு மாற்றாக, உண்மையான ஒரு மாற்றுப் பாதை இருக்கிறது என்ற தெளிவினை நாங்கள் அடைந்தோம்..
வெற்றிடத்தில் இருந்து இயங்கவில்லை ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
இரண்டாவது ஒரு சம்பவத்தையும் குறிப்பிடவேண்டும். அது 1935ல் பிப்ரவரியில் நடந்தது. நாக்பூரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதலாவது தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு இடையே ஜெயப்பிரகாஷ் நாராயணன் எங்களைப் போன்ற தோழர்களுடன் அவ்வப்போது விவாதித்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற திட்டம் தனக்கு இருப்பதாக தெரிவித்தார். காங்கிரசின் ஒரு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ தலைவரான சர்தார் வல்லபாய் படேலால் பர்தோலியை உருவாக்க முடியும் என்றால், நாம் நம்முடைய சொந்த சோசலிச பர்தோலிகளை ஏன் உருவாக்க முடியாது என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் எங்களிடையே கேள்வி எழுப்பினார்.
(பர்தோலி என்பது குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமம். 1928ல் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக இந்திய விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் அறைகூவல்களில் ஒன்றான சட்டமறுப்பு இயக்கம் நடந்தபோது, பர்தோலியில் இந்த போராட்டத்திற்கு சர்தார் படேல் தலைமை தாங்கினார். பர்தோலி கிராமத்து விவசாயிகள், கடுமையான வரிக் கொடுமையை தாங்க முடியாமல் தவித்தனர். கொந்தளித்தனர். இந்த நிலையில், சட்டமறுப்பு இயக்கம் அறிவிக்கப்பட்டது. படேல் அந்த விவசாயிகளை திரட்டினார். பிரிட்டிஷ் அரசுக்கு வரி கொடுக்க முடியாது என்று பர்தோலி கிராம விவசாயிகள் பகிரங்கமாக அறிவித்து பெரும் போராட்டத்தை நடத்தினர். இது பர்தோலி சத்தியாகிரகம் என பெயர் பெற்றது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதால்தான் சர்தார் படேல் நாடு முழுவதும் பிரபலமடைந்தார்)
இது, வெறுமனே சில பொருளாதாரக் கோரிக்கைகளை முன் வைத்து அவற்றுக்காக போராடுவது அல்ல; மாறாக, இந்திய விவசாயிகளை அவர்களே தங்களது சொந்த அரசாங்கங்களை நடத்தச் செய்யும் அளவிற்கு அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கும் அளவிற்கு நாம் முன்செல்ல வேண்டும் என்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் விளக்கினார். “பிரிட்டிஷ் ராணுவத்தின் பிடியில் உள்ள அதிகார மையங்களை கைப்பற்ற வேண்டும்” என்பதுதான், விவசாயிகளை எந்தப் பாதையில் அணிதிரட்ட வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தை. நான் இங்கே குறிப்பிட்டுள்ள மேற்கண்ட இரண்டு சம்பவங்களும், சோசலிஸ்ட் அகிலத்தின் தலைவர்கள் சோசலிசம் தொடர்பாக கூறிவரும் விளக்கங்கள் மற்றும் “ஜனநாயக சோசலிசம்” என்ற சிந்தனை தொடர்பாக பகிர்ந்துவரும் கருத்துக்கள் போன்றவையெல்லாம் இருந்தபோதிலும், இந்தியாவில் சோசலிசம் என்பது விடுதலை இயக்கத்தின் தலைமைப் பிரதிநிதிகளாக கருதப்படுகிற நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ தலைமையின் நிலைப்பாட்டை எதிர்த்து சவால்விடுவதாக இருக்க வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கருதினார் என்பதை உணர்த்துகின்றன. அவர் காட்டிய பாதை இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களை கவர்ந்திழுப்பதாக இருந்தது. சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரை பின்தொடர்பவர்களாக மாறினர்.
எனினும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அவரது தோழர்களும் ஏதோ ஒரு வெற்றிடத்தில் இருந்து இயங்கத் துவங்கியவர்கள் அல்லர். அவர்களுக்கு முன்பே, தங்களை கம்யூனிஸ்ட்டுகள் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்துகொண்டு, கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையின் கீழ் செயலாற்றிக் கொண்டிருந்த முதல் தலைமுறை இந்திய சோசலிஸ்ட்டுகளின் செறிவுமிக்க அனுபவம் என்பது ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அவரது தோழர்களுக்கு வழிகாட்டியது. இந்த முன்னோடிகள், நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஏகாதிபத்தியத்தால் மிகக்கடுமையாக தடைகள் விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தங்களை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைத்து, நன்கு அணிதிரட்டப்பட்ட ஒரு கட்சியாக மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். மேலும், இந்தியாவில் சோசலிசத்திற்கான போராட்டத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பது தொடர்பான இந்த முன்னோடிகளின் கருத்துக்கள், இந்திய தேசிய காங்கிரசுக்குள் உருவான புதிய குழுவின் கருத்துக்களோடு முரண்பட்டன. மிக முக்கியமான முரண்பாடு அது. காங்கிரஸ் என்பது நிலப்பிரபுத்துவ ஒரு முதலாளித்துவ அமைப்பாக இருக்கிற நிலையில், அது எப்படி சோசலிசத்திற்கான போராட்டத்தின் கருவியாக மாற முடியும் என்ற கேள்வி முன்னுக்கு வந்தது..
Part III Link https://tamilmarx.org/?p=478&preview=true