முழு விடுதலை என்று முதலில் முழங்கியது கம்யூனிஸ்ட்டுகளே..! – இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்..Part 1
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத அத்தியாயம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல் தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தளகர்த்தர்களாக திகழ்ந்து, தொழிற்சங்கங்களை வழிநடத்தி, தொழிலாளர் வர்க்கத்தை விடுதலைப் போராட்டத்தில் பிரம்மாண்டமான பேரியக்கமாக ஈடுபடச் செய்து, பூரண சுயராஜ்ஜியம் என்ற முழக்கத்தை முதன்முதலில் முழங்கச் செய்து, கம்யூனிச இயக்கத்தை முன்னேறச் செய்த அடிப்படையான இயக்கம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி. இக்கட்சி துவங்கியதன் 50ஆம் ஆண்டு விழா, 1985ல் கொண்டாடப்பட்டது. அதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த ஏடான “மார்க்சிஸ்ட்” (ஆங்கிலம்) ஏட்டில் 1985 அக்டோபர் – டிசம்பர் இதழில், கட்சியின் அன்றைய பொதுச் செயலாளரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. இக்கட்டுரையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு அம்சத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அது எப்படி பங்காற்றியது பற்றியும் விளக்குகிறார் இஎம்எஸ்.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்கம் என்பது 1934 மே மாதம் பாட்னாவில் நடைபெற்ற ஒரு துவக்கநிலை கலந்தாலோசனை சந்திப்பில் உதயமானது என்று சொல்ல முடியும். அந்த சந்திப்பில் ஒரு அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அந்தக்குழுவின் கன்வீனராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் பம்பாயில் (தற்போது மும்பை) காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; தேசிய தலைமையும் தேர்வு செய்யப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்றுக் கொள்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை நான் பெருமையாகக் கருதுகிறேன். காங்கிரஸ்காரர்களை சற்று முன்னோக்கி நகர்த்தி அவர்களில் பலரை முற்போக்குவாதிகளாக இந்த அமைப்பிற்குள்ளேயே மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்கினை ஆற்றுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதை உள்ளபடியே பெருமிதத்துடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ்காரர்களை அப்படி மாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததன் மூலம் 1930களில் ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான வழியும் பிறந்தது. அத்தகைய ஒரு மகத்தான சோசலிச இயக்கத்தின் அரை நூற்றாண்டு முடிகிற தருவாயில் இதை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டி எழுதுவதில் உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருந்து செயல்படுமாறு எனக்கு பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பணியை உளப்பூர்வமாக ஏற்று செயல்பட்டேன். ஏராளமான இனிய மற்றும் கசப்பான சம்பவங்கள் தொடர்பான நினைவலைகள் இன்றும் என்னை நெகிழச் செய்கின்றன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் நடத்திய அத்தகைய போராட்டங்கள்தான் என்னை, காந்தி-நேரு சித்தாந்தத்திலிருந்து மார்க்சிய சித்தாந்தத்திற்கு கொண்டு வந்தது. சில நண்பர்கள் கூடச் சொன்னார்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமானதன் 50வது ஆண்டான 1984ஐ, இந்திய சோசலிச இயக்கம் உதயமானதன் பொன்விழா ஆண்டாக கொண்டாடுமாறு! ஆனால் அத்தகையப் பார்வையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, இந்திய சோசலிச இயக்கத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்தது என்ற போதிலும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்கம்தான் இந்திய சோசலிச இயக்கத்தின் உதயம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய சோசலிச இயக்கமானது அதற்கு முந்தைய காலத்திலிருந்தே துவங்கிவிட்டது. சோசலிச இயக்கத்தின் முன்னோடிகள் இந்தியாவில் சோசலிசச் சிந்தனைகள் உருவானதும் பரப்பப்பட்டதும் 1912ஆம் ஆண்டிலிருந்தே துவங்கிவிட்டது. அந்த காலக்கட்டத்தில் சில மாத இடைவெளிக்குள் இந்தியிலும் மலையாளத்திலும் காரல்மார்க்சின் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டுவிட்டது. இந்தியில் காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூலை மாபெரும் புரட்சியாளரான லாலா ஹர்தயாள் எழுதினார். மலையாளத்தில் ராமகிருஷ்ண பிள்ளை எழுதினார்.
அதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே 1908ல் இந்தியாவின் முதல் தொழிலாளி வர்க்க அரசியல் வேலைநிறுத்தம் நடைபெற்றுவிட்டது. பம்பாய் தொழிலாளி வர்க்கம், மகாராஷ்டிராவிலிருந்து இந்தியாவின் மாபெரும் தலைவராக உயர்ந்த கம்பீரமிக்க தேசியத் தலைவரான பாலகங்காதர திலகர் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை எதிர்த்து பிரம்மாண்டமான அரசியல் வேலைநிறுத்தத்தை நடத்தியது. இந்தியாவில் ஒரு அமைப்பு ரீதியான சோசலிச இயக்கம் உதயமாவதற்கு இந்த இரண்டு முன் நிகழ்வுகளும் அடிப்படை காரணங்களாக அமைந்தன. ஒன்று, அரசியல் ரீதியான உணர்வு பெறாத தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சி; மற்றொன்று மார்க்சியம் தொடர்பான அறிமுகம் கிடைக்கப்பெற்று அதைப் பிரச்சாரம் செய்யும் முனைப்பு. இந்த இரண்டும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உருவாகிவிட்டது. முதலாம் உலகப்போர் முடிந்த உடனே அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான புரட்சிகர எழுச்சிகள் நடந்தன. இந்த எழுச்சிகள், போர்க்குணமிக்க தேசிய விடுதலை இயக்கத்தை அடுத்தடுத்து முன்னோக்கிக் கொண்டு சென்றது. இந்திய விடுதலைஇயக்க வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளி வர்க்கமும், விவசாய வர்க்கமும் போராடிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கங்களும், மகாத்மா காந்தியால் தலைமை தாங்கப்பட்ட கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் ஆயிரம் ஆயிரமாய் அணிவகுக்கத் தொடங்கினர். தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் நடந்தன. மாநகரங்களில் முழு அடைப்பு நடந்தது. பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் இருந்தன. உழைக்கும் மக்களின் அனைத்துத் தரப்பினரும் இவற்றில் அணிதிரண்டனர். இதுவே அந்தக் காலக்கட்டத்தில் நமது தேசத்தின் அரசியல் வாழ்வின் அன்றாட காட்சிகளாக இருந்தன. இந்தப் போராட்டங்கள், போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்க செயல்பாட்டு வடிவமான வேலைநிறுத்தம் என்ற வடிவத்திற்கு உறுதியான முறையில் மாறின. வேலைநிறுத்தங்களை செயல்படுத்துவதற்கான அமைப்புகள் உருவாகின. தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்த கமிட்டிகள் அமைக்கப்பட்டன. சங்கங்கள் உருவான பின்னணியில், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரது சிந்தனைகளை மக்களிடையே குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினரிடையே பிரச்சாரம் செய்வதற்கான இன்னும் திட்டவட்டமான – முறையான ஏற்பாடுகள் உருவாகின.
ஒவ்வொரு அடியிலும் அடக்குமுறையை எதிர்கொண்ட முன்னோடிகள்..
இந்தியாவின் மகத்தான புரட்சிகர இயக்கத்தின் தலைவர் மாவீரன் பகத்சிங்கை குறிப்பிட வேண்டும். அவர் தனது கடைசி நாட்களில் கம்யூனிசத்தை நோக்கி வந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகாக்கள் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
ஆசியாவின் இதர பகுதிகளைப் போலவே இந்தியாவிற்கும் கம்யூனிச, சோசலிசச் சிந்தனைகள் என்பவை ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சி பிரம்மாண்டமாக எழுந்து மாபெரும் புரட்சி நடத்தி மிகப்பிரம்மாண்டமான ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது தொடர்பான ஏராளமான செய்திகளும் தகவல்களும் கிடைக்கப்பெற்றதன் மூலமாகவே வந்தடைந்தன. அப்படி கிடைத்த தகவல்களில் பல, கம்யூனிசத்தைப் பற்றிய அவதூறு கருத்துக்களையும் திரிபுகளையும் கொண்டதாக இருந்த போதிலும் கூட, அப்படி வந்து சேர்ந்த செய்திகளின் மூலமாக கம்யூனிசம் என்ற சிந்தனை இந்தியாவில் பரவியது. மகத்தான தலைவர் மா சே துங்-கின் வார்த்தைகளில் சொல்வதானால், “புரட்சிகர ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்ட தீக்கணைகள் இந்தியாவிற்கு கம்யூனிசம் என்ற செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தது”. போல்ஷ்விக் ரஷ்யாவில் மக்கள் சமூகம் புரட்சிகரமான எழுச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் கதைகள், இந்தியாவில் காங்கிரஸ் தலைமையின் சமசரக் கொள்கைகளால் வெறுப்படைந்தும், விரக்தியடைந்தும் இருந்த காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் முன்பு இரண்டு மாற்றுப் பாதைகளை முன்வைத்தது: ஒன்று, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அவர்களது இந்திய ஏஜெண்டுகளுக்கு எதிராகவும், ஆயுதமேந்திய தனிமனித போராட்டமே தீர்வு என்பது; மற்றொன்று கம்யூனிசம்.
பகத்சிங்..
இங்கே நாம், இந்தியாவின் மகத்தான புரட்சிகர இயக்கத்தின் தலைவர் மாவீரன் பகத்சிங்கை குறிப்பிட வேண்டும். அவர் தனது கடைசி நாட்களில் கம்யூனிசத்தை நோக்கி வந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகாக்கள் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இன்னும் பல போராளிகள் இந்த உலகையே குலுக்கிய ரஷ்யப் புரட்சியால் வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள். புரட்சியின் பூமிக்கு செல்ல வேண்டுமென்று பயணத்தைத் துவக்கினார்கள். பனி சூழ்ந்த இமயமலையையும், கடினமான சமவெளியையும் கடந்து ரஷ்யாவுக்குச் சென்று புரட்சியின் அடிப்படையை அறிந்துவர முயற்சித்தார்கள். இப்படியாக இந்திய மண்ணில் சோசலிசம், கம்யூனிசம் என்ற விதைகள் தூவப்பட்டன.
கம்யூனிஸ்ட் குழுக்களின் தோற்றம்..
இந்தியாவில் சோசலிச இயக்கத்தின் உதயம் என்பது, 1920களுக்கு முன்பிருந்தே முறையாக வரிசைப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு இணையான வளர்ச்சிப்போக்குகள் நடந்தன. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) உதயமானது. துவக்ககால கம்யூனிஸ்ட் குழுக்களும் உதயமாகின. இவை இரண்டும் எத்தகைய சூழலில் நடந்தது என்பது மிக முக்கியமானது. எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள் எப்படியெல்லாம் தடைகளையும் துயரங்களையும் தாண்டி திட்டமிட்டப்பாதையில் நடைபோட்டார்களோ அதேபோலத்தான் இந்தியாவிலும் நடந்தது. இந்தத் தலைவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தலைமுறையினர், அவர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளையும் சவால்களையும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்பதுதான் உண்மை. முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்டுகள். எப்படிப்பட்ட கொடிய நிலைமைகளை எதிர்கொண்டு, போராடி, இந்திய நாட்டில் ஒரு அணிதிரட்டப்பட்ட – ஒருங்கிணைக்கப்பட்ட சோசலிச இயக்கத்தை பின்னாட்களில் உருவாக்குவதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை அந்தக் காலத்தில் செயல்பட்ட எந்தவொரு சோசலிஸ்ட்டும் மறந்துவிட முடியாது. துவக்கக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை இங்கே நான் விவரிப்பதன் காரணம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி செய்த அளப்பரிய பங்களிப்பினை மறுப்பது என்பதல்ல; மாறாக முன்னோடிகள் வகுத்துக்கொடுத்தப் பாதையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தனது பணிகளை முன்னெடுத்துச் சென்றது என்பதை விவரிக்கும் பொருட்டே. நமது முன்னோடிகள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்வதில் பாதிக்கப்படாமல் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது; அவர்கள் பல்வேறு குறைபாடுகளையும் பலவீனங்களையும் சரிசெய்துகொண்டே இயங்க வேண்டியிருந்தது; பிரதானமான பெரிய மாநிலங்களில் கிளைகளை உருவாக்கி அதன்மூலம் ஒரு அகில இந்திய கட்சியாக வளர்த்தெடுக்க முடியாத சூழல் என்பது இருந்தது. இந்த பலவீனங்களும் குறைபாடுகளும் இருந்த போதிலும், கம்யூனிஸ்ட் குழுக்கள், பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வந்தன; காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி பிறப்பதற்கு முன்பே இது நடந்து கொண்டிருந்தது; இந்த கம்யூனிஸ்ட் குழுக்களை இயக்கிய முன்னோடிகள்தான் இந்திய சோசலிஸ்ட் இயக்கத்தின் உண்மையான முன்னோடிகள்; இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மையான முன்னோடிகள். அவர்கள் தாங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்கொள்ள நேர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே மூன்று சதி வழக்குகள் அவர்கள் மீது பாய்ந்தன. பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்ற முக்கியமான சதி வழக்குகள், சுமார் 10 ஆண்டு காலம், இந்திய மண்ணில் கம்யூனிசத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக ஆட்சியாளர்களின் ஒரு திட்டமிட்ட முயற்சியாக மேற்கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்ட்டுகளைப் போலவே நூற்றுக்கணக்கான உறுதிமிக்க தொழிற்சங்க வாதிகளும் முற்போக்கு சிந்தனை கொண்ட காங்கிரஸ்காரர்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டார்கள். அவர்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலேனும் ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் குழுவில் உறுப்பினராக இருந்துகொண்டிருந்தார்கள். அதன் விளைவாக அவர்கள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்…
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்…
அரசியல் ரீதியாகவும் இந்திய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து மிகக்கடுமையான எதிர்ப்பினை -சூழ்ச்சியை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகளின் பணியானது, மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளின் அடிப்படையில் அனைத்து அரசியல் அம்சங்களிலும் பொருத்தி செயல்படுவதாக இருந்தது; எனவே இதை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்திய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கம் செயல்பட்டது. எந்தவொரு காலனி ஆதிக்க, அரைக் காலனி ஆதிக்க அல்லது மற்றொரு நாட்டை சார்ந்திருக்கிற அல்லது மற்றொரு நாட்டிடம் அடிமையாக இருக்கிற நாட்டின் நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை குணாம்சம் என்பது – மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளுடன் செயல்படுகிறவர்களை கடுமையாக ஒடுக்கும் விதமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இத்தகைய சூழலில், இந்த ஒடுக்குமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் தத்துவார்த்த – அரசியல் ரீதியான சிரமங்கள் எழுவது இயல்பு; நாட்டில் இயங்கி வந்த பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் அடிக்கடி சந்தித்து அவர்களுக்குள் தொடர்ச்சியான விவாதத்தை நடத்தினால் மட்டுமே சிரமங்களையும், தவறுகளையும் விரைவாக சரிசெய்துகொள்ள முடியும் என்ற நிலைமையும் இருந்தது. அத்தகைய விவாதம் தொடர்ந்து நடந்தது; பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட திட்டமிட்ட சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் இப்படித்தான் அன்றைய கம்யூனிஸ்ட் குழுக்களின் தலைமை எதிர்கொண்டது.
பல்வேறு கடினமான சூழல்களை எதிர்கொண்ட போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிய குழுக்களாக, ஒருங்கிணையாமல் வெவ்வேறு இடங்களில் செயல்படுபவையாக கம்யூனிஸ்ட் குழுக்கள் இருந்த போதிலும், அவை, ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்க இயக்கமாக முன்னேறுவதை தடுக்க முடியவில்லை; காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களிடையே முற்போக்கு சிந்தனை கொண்ட குழுக்கள் மத்தியில் புரட்சிகர சோசலிசம் என்ற முழக்கமும் அதன் இலக்குகளும் பிரபலமடைவதை தடுக்க முடியவில்லை; இந்தப் பணியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்ற சூழல் இருந்த போதிலும், இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளை கூர்மைப்படுத்தவும் முடிந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலேயே ஒரு அறிக்கை சுற்றுக்குவிடப்பட்டது; பல்வேறு அறிவிப்புகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலேயே பிரதிநிதிகளிடையே வழங்கப்பட்டன. இந்தச் செயல்பாடு, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மெல்ல மெல்ல எழுந்து வருகிறது என்ற செய்தியை – அதன் புரட்சிகர திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்ற செய்தியை காங்கிரசார் மத்தியில் வலுவாக விதைத்தது. காங்கிரசுக்குள் செயல்பட்ட சிறிய எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட்டுகள், தங்களை காங்கிரசுக்குள் இருந்த முற்போக்காளர்களுடன் பிணைத்துக் கொண்டனர்; அதன் மூலம், முழுமையான விடுதலை (பூரண சுயராஜ்யம்) என்ற கருத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும், அதை வெகுமக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லவும் உந்தித் தள்ளும் மகத்தான பணியினை கம்யூனிஸ்ட்டுகள் செய்தனர்.
அனைத்திற்கும் மேலாக, இந்தியாவில் ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்கத்தை உருவாக்கி வளர்த்து கொண்டுசெல்வதில் மற்ற எல்லோரையும்விட கம்யூனிஸ்ட்டுகளே மிகவும் செயலூக்கமிக்கவர்களாக இருந்தார்கள். வெகுமக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர்கள் முன்னின்றார்கள்; அதன் மூலமாக மார்க்சிய – லெனினிய தத்துவத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில் உறுதிமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சிறிய அளவில் இருந்தாலும், இந்த நடவடிக்கைகள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது; ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு பகுதி காங்கிரஸ் தலைவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது; எனினும் அணிதிரட்டப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் ஏற்படுத்திய அந்தத் தாக்கம், காங்கிரஸ் பின்னால் இருந்த வெகுஜனங்களிடையே ஏற்படவில்லை. உண்மையில், அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பலியாகிக் கிடந்தார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட தருணத்தில்தான், காங்கிரசின் தலைமைக்குள் இடது, வலது என்ற பிரிவுகளுக்கிடையே மிகக்கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது; இந்த மோதல் காங்கிரசின் லாகூர் மாநாட்டில் எதிரொலித்தது; இதன் உச்சக்கட்டமாக, அந்த மாநாட்டில் காங்கிரசின் இலக்கு முழுமையான விடுதலையே என்ற தீர்மானத்தை நிறைவேற்ற முடிந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று பிரகடனம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து முதன்மையான மற்றும் அடுத்தக்கட்ட தலைவர்களும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க வாதிகளும் மீரட் சதி வழக்கு விசாரணைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்கள்.
நாடு தழுவிய அளவில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இந்த சதி வழக்கும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளும் 1929-33 என முழுமையாக நான்காண்டு காலம் அடிமுதல் நுனி வரை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன கட்டமைப்பையே கடுமையாக பாதித்தது. அந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மையம் என ஒன்று செயல்பட முடியவில்லை. எனவே இந்த காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கமானது காங்கிரசுடன் முற்றாக எந்தத் தொடர்பிலும் இல்லை என்றும் எனவே அது தேசிய விடுதலை இயக்கத்தில் எந்தவொரு செல்வாக்கும் செலுத்தவில்லை என்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் பிரச்சாரம் செய்யப்படுவது முற்றிலும் அநியாயமானதாகும். புதிதாக பின்னர் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் சில தலைவர்களும் கூட இப்படி பேசினார்கள். அது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 1936ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட, கம்யூனிஸ்ட்டுகள் தேசியவிடுதலை இயக்கத்தில் பங்களிப்பு செய்யவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதை நாம் அப்போதே முற்றாக நிராகரித்து விட்டோம்.
part II link https://tamilmarx.org/?p=474&preview=true