Tamil Marx

சர்வதேசம்

பிரான்சில் இடதுசாரிகளை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் மக்ரோன்

பிரான்சில் இடதுசாரிகளை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் மக்ரோன்
  • PublishedAugust 31, 2024

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள் முடிந்த பிறகும் அதிக இடங்களை பெற்றுள்ள இடதுசாரிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை ஏற்பதற்கு, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகள் அதிக இடங்களை வென்ற பிறகு, பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தை இம்மானுவேல் மக்ரோன் கலைத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த தேர்தலில் இடதுசாரிகள், முற்போக்கு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கினர்.  இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் முதல் கட்டத்தில் லீ பென்னின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியான தேசியப் பேரணி கட்சி முன்னணியில் வந்தது. 

இதனால், அடுத்த கட்டத் தேர்தலில், அதிதீவிர வலதுசாரிக்கட்சியை வெற்றி பெற விடக்கூடாது என இடதுசாரிகளின் மக்கள் முன்னணியும், மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சியும் ஒரு உடன்பாட்டுக்கு வந்து மூன்றாம் இடத்திலுள்ள தங்கள் வேட்பாளர்களை வாபஸ் வாங்கிக்கொண்டு வாக்கு சிதறுவதை தவிர்த்தனர். இதன் காரணமாக தேசிய பேரணி கட்சி பெரும்பான்மை வெற்றியை அடைய இயலவில்லை.

இடதுசாரிகளின் கூட்டணியே அதிக இடங்களை பெற்றது. எனினும் தனிப் பெரும்பான்மை இல்லாததால் இக்கூட்டணியால் ஆட்சி அமைக்க இயலவில்லை. இந்நிலையில் தேசிய அரசு அமைக்கலாம் எனவும் அதிக இடங்களை வென்றுள்ள இடதுசாரிகள் கூட்டமைப்பில் இருந்து பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கருத்துக்கள் வந்தன.

ஆகஸ்ட் 23 – 26 ஆகிய நாட்களுக்கு இடையே அனைத்துக் கட்சிகளின்  நாடாளுமன்றப் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து, புதிய மக்கள் முன்னணி (NFP) முன்வைத்த பிரதமர் வேட்பாளரான லூசி காஸ்டெட்ஸை நியமிக்க மக்ரோன் மறுத்துவிட்டார். தேசிய பேரணி கட்சி, இடதுசாரிகள் பங்கேற்கும் அமைச்சரவையை ஏற்கவே முடியாது என கூறியுள்ளது.

இது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் எனவும், அதிக இடங்களை வென்ற இடதுசாரிகள் கூட்டணி முன்னிறுத்துகிற நபரையே பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் தேர்தல் முடிந்து 2 மாதங்களாக ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதற்கு மக்ரோனுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

மக்ரோன் மற்றும் லீ பென் ஆகிய இருவரின் கட்சியும் இடதுசாரிகள் கையில் சிறிதளவு அதிகாரம் கூடச் சென்று விடக்கூடாது என திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. 

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *