Tamil Marx

தமிழ் நாடு

நடிகர்களை அரசியலுக்கு ஆயத்தமாக்கும் நற்பணி மன்றங்களின் பங்கு சமூகத்தில் என்ன?

நடிகர்களை அரசியலுக்கு ஆயத்தமாக்கும் நற்பணி மன்றங்களின் பங்கு சமூகத்தில் என்ன?
  • PublishedFebruary 4, 2024

ரசிகர்களின் விழிப்புணர்வற்ற கதாநாயக வழிபாடு இருக்கும் வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். திரைப்பட நடிகர்களை ரசிப்பதன் வரம்பையும், சமூக அரசியல் உண்மையில் செயல்படும் விதத்தையும் பற்றி ரசிகர்களிடம் முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகள் ஒரு அர்த்தமுள்ள உரையாடலைத் தூண்டுவதன் மூலம் இதை மாற்ற முடியும்.

ஒரு நடிகரை ரசிப்பவர்கள் தன்னைப் போலவே உள்ள மற்ற நபர்களுடன் இணைந்து கொள்வதற்காக ரசிகர் மன்றங்களில் இணைகிறார்கள். மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை சில வரிச் சலுகைகளுக்காவும், சமூக செயல்பாடுகளுக்காகவும் நற்பணி மன்றங்களாக நடிகர்கள் மாற்றுகிறார்கள்.

இது போன்ற மன்றங்களில் செயல்படும் ரசிகர்கள் கண் தானம் செய்வது, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குவது, தனது ஆஸ்தான நடிகர்களின் பிறந்த நாளில் உணவு வழங்குவது போன்றவற்றை சமூக சேவை என்று செய்கிறார்கள். ரசிகர் மன்றங்களின் மாநில தலைமையில் இருந்து மாவட்ட தலைமைகளுக்கு நடிகரின் பிறந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்கள் தரப்படுகிறது. நடிகர்களின் நற்பணி மன்றகளுக்கு கீழ் இயங்கும் வர்த்தக அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, இளைஞரணி, தொழில் நுட்ப அணி என்று அனைத்து அணிகளுக்கும் வேலைகள் தரப்படுகிறது. இந்த ரசிகர் மன்றங்களை ஆராயும்போது இதில் துடிப்புடன் செயல்படுபவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக உள்ளது தெரியவருகிறது.

இதுகுறித்து நற்பணி மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், நான் மாணவர் அணியில் செயல்படுகிறேன். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் ஒன்று அல்லது இரண்டு திரை அரங்கங்கள் பொறுப்பாக பிரித்து தரப்படும். அதில் எனது நடிகரின் திரைப்படம் வரும்பொழுது பேனர்கள், பிளக்ஸ், திரையரங்க அலங்காரம் என்று அனைத்தும் நம் பொறுப்பே. அந்த அரங்கத்திற்குள் வைக்கும் ஒவ்வொரு பேனர்களுக்கும் வாடகை தர வேண்டும். மாவட்ட தலைமை பேனர் வைத்தால் நமது அணி வைக்கும் பேனருக்கு வாடகை குறைக்கப்படும். ஒவ்வொரு திரைப்படத்திற்காக வைக்கப்படும் ஒரு பெரிய பேனருக்கு குறைந்தது ரூ.பத்தாயிரம் முதல் வாடகை வசூலிப்பார்கள். பேனர்கள் அடிக்க செலவாகும் தொகை, தட்டி கட்டுவதற்கு செலவாகும் தொகை, அதை வைப்பதற்கான ஆள் கூலி என்று ஒட்டுமொத்தமாக அந்த அணியின் சார்பில் பெரும் தொகை செலவழிக்கப்படும், என்றார். அதற்கான செலவுகளுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, பெரும்பாலும் நம் பொறுப்பில் இருக்கும் திரையரங்கத்தில் ரசிகர் காட்சி நமக்குத்தான் ஒதுக்கப்படும். குறைந்தது ஒரு டிக்கெட்டுக்கு 400 ரூபாய் என்று அடிப்படையில் ஒரு காட்சியில் மொத்த டிக்கெட் விலையை முன்கூட்டியே நான்கைந்து பேர் இணைந்து எங்கள் சொந்த செலவில் வாங்கி விடுவோம். திரையரங்க இருக்கைகளுக்கு ஏற்ப ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஒரு காட்சிக்கான செலவாகும். மற்ற ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட் ரூ.500 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்து இதில் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து அந்த செலவுகளை செய்வோம் என்றார்.

மேலும், நடிகர்களின் பிறந்தநாளுக்கு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குவது, மதிய உணவு வழங்குவது என்ற ஏகப்பட்ட செலவுகள் இருக்கும். அதற்கெல்லாம் மீதி பணம் இருந்தால் செலவழிக்கப்படும். பெரும்பாலும் நமது கையில் இருந்து செலவு செய்வதாகவே இருக்கும், என்றார். தலைமையில் இருந்து பணம் வருமா என்று கேட்டதற்கு, போஸ்டர் ஓட்டுவது போன்ற சிறிய வேலைகளுக்கு சொற்பத்தொகை வரும். அவர்கள் பெரும்பாலும் கடன் வாங்கி எதுவும் செய்ய வேண்டாம், கையில் இருக்கும் தொகையை வைத்து செலவு செய்யுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் பெரும்பாலும் கடன் வாங்க வேண்டிய நிலைமைதான் இருக்கும் என்று கூறினார்.

இதுபோல் சொந்த செலவு செய்வதற்கான காரணத்தைக் கேட்டதற்கு, அடுத்தக் கட்ட பொறுப்பு கிடைப்பதற்கு இந்த வேலைகள் தான் உதவும். மாநில, மாவட்ட கூட்டங்களில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பேசப்படும். நற்பணி மன்ற இயக்கங்கள் அரசியல் இயக்கமாக மாறும்பொழுது நமக்கு கட்சி பதவிகள் வரும் என்ற எதிர்பார்ப்பில் தான் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறோம், என்றார். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் பொழுது பேனர் சரிந்து ரசிகர் மரணம், நடிகரின் பேனருக்கு பால் ஊற்றும் போது தவறி விழுந்து ரசிகர் மரணம். என்று பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நடிகர்கள் ஏதேனும் உதவி செய்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. மேடை ஏறும்போது உங்கள் குடும்பத்தை கவனியுங்கள், பின்பு என்னை ரசியுங்கள் என்று பேசுவார்கள். திரைக்குப் பின்னால் ரசிகர் மன்ற பணிகள் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்று மாநில தலைமையிடம் கேட்டுக் கொள்வார்கள்‌. அவ்வப்பொழுது ரசிகர் சந்திப்புகள் நடத்தி தங்களின் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வார்கள்.

2005ஆம் ஆண்டில் ரசிகர் மன்ற செலவுகள் தொடர்பாக விஜயகாந்த் மற்றும் வருமானவரித் துறையினருக்கு இடையே நடந்த வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கது. ரசிகர் மன்றங்களுக்கு செலவிடும் தொகையை வரிச்சலுகைக்காக நடிகர்கள் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக வருமான வரித் துறை கேள்வி எழுப்பியது. “பிரபல சினிமா கலைஞர்கள் தங்களது ரசிகர்களை ஊக்குவித்து, புதிய படங்கள் வெளியாகும் நேரத்தில் உடை, உணவு போன்றவற்றுக்கு கணிசமான தொகை செலவழிக்கிறார்கள். மேலும் ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து பராமரிப்பது அனைவரும் அறிந்ததே. சினிமா துறையில் நடிப்பது போன்றே அவர்களின் ரசிகர் மன்ற செயல்பாடுகளும் தொழில்முறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இல்லை என்று கருத முடியாது! என்று நீதிமன்றம் கூறியதுடன், வருமான வரித்துறையின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதாவது, ரசிகர் மன்றத்திற்காக நடிகர்கள் செலவிடும் தொகையும், அவர்களது நடிப்புத் தொழிலை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு பகுதியாகவே இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது பெரும்பாலான திரைநடிகர்கள் தங்கள் வருமானத்திற்குக் கட்ட வேண்டிய வரியைக் கணக்கிடும்போது, முழுமையான விலக்குகளைப் பெறுவதற்கு தங்கள் ரசிகர் மன்றங்களின் செலவுகளுடன் காட்டுகிறார்கள். அனைத்திலும் வியாபார நோக்கோடு சொந்த சுயநலத்திற்காக, ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக நடிகர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, தங்கள் சினிமா மார்க்கெட்டிங்கை தக்க வைத்துக் கொள்ளவும், விரிவுபடுத்தவும் பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வருவதாகக் கூறுவது தொடர் கதையாக உள்ளது. இது பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் அள்ளும் பெரிய வர்த்தக நடவடிக்கையாகவும் அமைந்திருப்பதை பாமர ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விழிப்புணர்வு இல்லாத ரசிகர்கள் நிலை பரிதாபமானதாக உள்ளது. உங்கள் நடிகர் ஏன் அரசியலுக்கு வருவதாக சொல்கிறார், அவர் என்ன செய்து விடுவார் என்ற இயல்பான கேள்விக்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை. ஆனால் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது எங்கள் நடிகர் வரக் கூடாதா? என்ற எதிர்கேள்வியே பதிலாக தருகின்றனர்.

ரசிகர்களின் விழிப்புணர்வற்ற கதாநாயக வழிபாடு இருக்கும் வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். திரைப்பட நடிகர்களை ரசிப்பதன் வரம்பையும், சமூக அரசியல் உண்மையில் செயல்படும் விதத்தையும் பற்றி ரசிகர்களிடம் முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகள் ஒரு அர்த்தமுள்ள உரையாடலைத் தூண்டுவதன் மூலம் இதை மாற்ற முடியும்.

கட்டுரையாளர்; லிவின்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *