மோடி அரசை வீழ்த்துவோம்! கல்வியை பாதுகாப்போம்! பகுதி -1
இந்திய கல்விமுறையை நவீனப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான நோக்கமும் கொள்கையும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக் கொள்கையாக உள்ளது. இந்த கல்விக் கொள்கை பொதுக்கல்விக்கு அரசு செலவிடுவதை தவிர்க்கும் அல்லது வலுக்கட்டாயமாக மறுக்கும் விதமாக உள்ளது. பள்ளிக் கல்வியில் புதிய கல்விக் கொள்கை இரண்டு மோசமான விஷயங்களை குறிப்பிடுகிறது.
தேசத்தை பாதுகாப்போம், மோடியின் அரசை வீழ்த்துவோம், கல்வியை பாதுகாப்போம் என்று தேசிய அளவில் 16 மாணவர் இயக்கங்கள் இணைந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாராளுமன்ற நோக்கி பேரணி நடத்ததுகிறோம். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்க்கு அடிப்படையான காரணம் 2014 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆட்சி செய்துவரும் பாஜகவின் மோடி அரசு கல்வியில் மிகப்பெரும் தாக்குதல்களையும் சிறுபான்மையினர் பட்டியல் சமூகத்தினர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உரிமைகளில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையும் கல்வியை மிக விலை உயர்ந்த வணிகப் பொருளாகவும் அதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டுக்கான பொருளாகவும் மாற்றி இந்தியாவில் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பை மறுப்பதும் வேலைவாய்ப்பை குழிதோண்டி புதைப்பதும் பொதுக் கல்வியை முற்றிலுமாக அளிப்பது அரசு கல்வி நிறுவனங்களை தனியாருக்கு தானமாக வழங்குவது கல்வியில் மதவெறுப்புகளை உண்டாக்குவது கல்வியில் சமூக ஒடுக்குமுறைகளை அங்கீகரிப்பது போன்ற பாடக்குறிப்புகளை திணிப்பது என மாணவர் விரோத அரசாக செயல்படுகிறது.
பொதுக் கல்வியின் மீதான தாக்குதல்
இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வியை வழங்க பொதுக்கல்வி மிக முக்கியமானதாகும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு பொதுக்கல்வி முற்றிலுமாக ஒழித்து கட்டுவதே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்தியாவில் பொது கல்விக்காக மாநில ஒன்றிய அரசுகள் இணைந்து ஒதுக்கும் நிதியானது பட்ஜெட்டில் 10 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது ஆனால் பாஜக அரசு 2015-யில்அதிகப்படியாக பட்ஜெட்டில் 4.77% GDP யில் 2.71 % விழுக்காடுதான் ஒதுக்கியது. கொரோனா காலத்தில் இந்த பட்ஜெட் சதவீதமும் குறைக்கப்பட்டது கொரோனாவுக்கு பிறகு எக்கனாமிக் சர்வே ஆப் இந்தியா 2022-23 சுட்டிக்காட்டிய படி கூடுதலாக 2.9 ஜிடிபி-யில் வழங்க வேண்டும் என கூறியது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு கூடுதலாக ஒதுக்காமல் 2020-21 கொரோனா காலத்தில் வழங்கியதை விட 24% அதிகம் எனக்கூறி உண்மையில் பொதுக் கல்விக்கான பட்ஜெட்டை குறைத்துள்ளது மோடி அரசு. இதனால் இந்தியாவில் முழுவதும் உள்ள மத்திய, மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய யுஜிசியின் மானியங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் யுஜிசியின் மானியங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் உதவி தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைமுறை செலவுகளுக்கும் பேராசிரியர் ஊதியம் வழங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டடு பல்கலைக்கழகங்கள் தேர்வு விடுதி உள்ளிட்ட கட்டணங்களை பல மடங்கு உயர்த்துகிறது. புதிய பல்வேறு பாடப்பிரிவுகள் முழுக்க முழுக்க சுயநிதி பாட பிரிவாக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக அரசு பல்கலைக்கழகமாக இருந்தாலும் கூட மாணவர்கள் கல்விக்கென கூடுதலாக செலவிட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு என்பது மறுக்கப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை 2020
இந்தியாவில் பல்வேறு காலங்களில் கல்விக்கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2020 முழுமையாக கல்வியை வணிகமயமாக்குவதும், வகுப்புவாதத்தை பாடத்திட்டமாகவும், மத்தியத்துவப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய கல்விமுறையை நவீனப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான நோக்கமும் கொள்கையும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக் கொள்கையாக உள்ளது. இந்த கல்விக் கொள்கை பொதுக்கல்விக்கு அரசு செலவிடுவதை தவிர்க்கும் அல்லது வலுக்கட்டாயமாக மறுக்கும் விதமாக உள்ளது. பள்ளிக் கல்வியில் புதிய கல்விக் கொள்கை இரண்டு மோசமான விஷயங்களை குறிப்பிடுகிறது.
- பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் ப்ரோக்ராம் (PPP) அதாவது அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவனங்களுக்கு தத்து கொடுப்பது இது அரசு பள்ளிகளை தனியாருக்கு தரைவார்க்கும் செயலாகும். கோத்தாரி கமிஷன் ஆறு முதல் 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாய கல்வியை வலியுறுத்துகிறது. இதுவே கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அரசு பள்ளிகளை தனியாருக்கு வழங்குவதன் மூலம் கல்வி உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போக செய்கிறது. பாஜக அரசு. உதாரணமாக ராஜஸ்தானில் மட்டும் 225 பள்ளிகள் பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் ப்ரோக்ராம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பள்ளிகள் முழுக்க முழுக்க தனியார் நிறுவனக்கள் தான் மேலானமை செய்கிறது. பல பள்ளிகளில் தனியார் பள்ளிகளை போல கட்டனம் வசூலிக்க படுகிறது. சில பள்ளிகள் கேட்பாரற்று கிடக்கிறது. ஆனால் அரசோ இந்த பள்ளிகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்துவது இல்லை.
- பள்ளிகள் இனைப்பு புதிய கல்விக் கொள்கை மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகள் அல்லது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமையில் உள்ள பள்ளிகளோடு இணைத்து விட வேண்டும் என கூறுகிறது. இதன் விளைவாக மத்திய பிரதேச அரசு 20 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடியிருக்கிறது. மகாராஷ்டிரா அரசு 20-க்கும் குறைவாக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் 13 ஆயிரத்து 95 பள்ளிகளில் மூட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் குறைவாக உள்ள காரணத்தை கூறி பள்ளிகளை மூடுவதால் மலை கிராமம் மற்றும் கிராமப்புற மாணவர்கள் ஆரம்பக் கல்வி பெறுவது மறுக்கப்படுகிறது. .மேலும் 3 மற்றும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மாணவர்களின் இடைநிற்றலை அதிகப்படுத்தும். புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்தின் விளைவு 2018- 19 நாடு முழுவதும் 10 லட்சத்து 83 ஆயிரத்து 678 ஆக இருந்த அரசு பள்ளிகள் 2021-22 காலகட்டத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 386-ஆக குறைந்துள்ளது உத்தரபிரதேசம் மாநிலத்தில் மட்டும் அதிகப்படியாக 26 ஆயிரத்து 274 பள்ளிகளையும் மூடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
85 விழுக்காடு பள்ளிகள் அரசு பள்ளிகளாக இருக்கும் நேரத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் 78.6 விழுக்காடு தனியார் உயர்கல்வி நிறுவனங்களாகும். 78.6 விழுக்காடு உள்ள தனியார் நிறுவனங்களில் 65.2 விழுக்காடு முழுக்க முழுக்க சுயநிதி கல்வி நிறுவனங்களாக உள்ளது. வெறும் 13.4 விழுக்காடு மட்டும் அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களாக உள்ளது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாகி இருப்பது நவ தாராளமய பொருளாதாரக் கொள்கைகளில் மிகக் கொடூரமான விளைவுகள். மேலும் இவற்றை நூறு விழுக்காடு தனியார் நிறுவனங்களாக மாற்றும் நோக்கத்தை புதிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது. உதாரணமாக உயர்கல்வி நிதி நிதி நிறுவனம் (HEFA) அமைப்பை புதிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது இதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் மானியங்களை நிறுத்திவிட்டு மானியங்களுக்கு பதிலாக கடனாக வழங்கும் இந்த உயர் கல்வி நிதி நிறுவனம். மேலும் வழங்கிய கடன்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்கலைக்கழகங்கள் திரும்ப செலுத்த வேண்டும் அப்படியானால் உயர் கல்விக்கு என்று அரசு நிதி எதுவும் வழங்காது கடன்தான் வழங்கும். இதனை ஈடுகட்ட பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமே கூடுதல் கட்டணத்தை வசூலிப்பார்கள். ஏற்கனவே இந்த நடைமுறையை பின்பற்றும் அமெரிக்காவில் 4.5 கோடி மாணவர்கள் கடனாளிகளாகவும் சராசரி ஒரு மாணவனுக்கு அமெரிக்க மதிப்பில் 30000 டாலர் (ரூ.24,93,901 இந்திய மதிப்பில்) கல்விக்கடன் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த நடைமுறை இந்தியாவிலும் அமலானால் இங்குள்ள மாணவர்களுக்கும் இதே நிலைமைதான் வரும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்திருக்க கூடிய மோடி அரசாங்கம் மாணவர்கள் கல்வி கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறுகிறது. இதன் மூலம் கல்வியை வணிகம் ஆக்கி மாணவர்களை கடனாளியாக்குவது. கார்ப்பரேட் பெருமுதலாளிகளை உலகப் பணக்காரர்கள் பட்டியலில் வளர்த்து விடுவதான் இந்த கல்விக் கொள்கையின் நோக்கம்.
(தொடரும்…)
கட்டுரையாளர்: தெள. சம்சீர் அகமது (மாநில தலைவர், இந்திய மாணவர் சங்கம்)