Tamil Marx

தமிழ் நாடு தொழிலாளர் பிரச்சனைகள்

திண்டாடும் திருப்பூர் பனியன் தொழில்!-வே.தூயவன்

திண்டாடும் திருப்பூர் பனியன் தொழில்!-வே.தூயவன்
  • PublishedSeptember 22, 2026

மூலப் பொருட்களின் வரலாறுகாணாத விலை உயர்வு காரணமாக, திருப்பூர் பனியன்தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. இந்தியாவின் மற்ற பல பனியன் உற்பத்தி மையங்களில் பாலிஸ்டர், செயற்கை நூல் இழை உற்பத்தி கணிசமாக நடைபெற்று வருகிறது. எனினும் திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்த வரை மிகப் பெரும்பான்மையாக பருத்தி நூலை மையப்படுத்தி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

நூல், சாயப்பொருள் விலை உயர்வு!

2026-ஆம் ஆண்டில் பருத்தி நூல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரை நூல்விலை கிலோவுக்கு 109 ரூபாய் அதிகரித்துள்ளது. இது ஏறத்தாழ 60 சதவிகித விலை உயர்வு ஆகும். நூல் விலை மட்டுமின்றி பனியன் ஆடைகளுக்கு வண்ணம் ஏற்றக்கூடிய சாயப் பொருட்களின் விலையும் 40 சதவிகிதம் வரை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.

சாயப் பொருட்களின் விலை உயர்வுடன் சாயம் ஏற்றும் கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் சாய ஆலைகள் உரிமையாளர் சங்கம், வெள்ளை மற்றும் லேசான நிறங்களை வண்ணம் ஏற்றுவதற்கான கட்டணத்தை கிலோவிற்கு ரூ. 7,  நடுத்தரவண்ணங்களை சாயம்ஏற்றுவதற்கு கிலோவுக்கு ரூ. 15, அடர் வண்ணம்சாயம் ஏற்றுவதற்கு கிலோவுக்கு ரூ. 25 என்ற விகிதத்தில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

ஜாப் ஒர்க், உதிரி பாகங்கள் விலை அதிகரிப்பு

பனியன் ஆடை உற்பத்தியில், மூலப்பொருளான பருத்தி நூலும், வண்ணங்கள் சாயமேற்றுவதும் அடிப்படையான பணிகள் ஆகும்.இது தவிர காம்பேக்ட்டிங், க்யூரிங், ரைசிங், எம்பிராய்ட ரிங் உள்ளிட்ட பல்வேறு ஜாப் ஒர்க் பணிகளும்பின்னலாடை தயாரிப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தான், மூலப் பொருட்கள் விலைஉயர்வுடன், உதிரி பாகங்கள் விலை உயர்வும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வினால் ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை அதிகரித்துள்ளனர். ஒரே கூரையின் கீழ் செயல்படக்கூடிய பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்தவிலை உயர்வில் ஓரளவு தாக்குப் பிடிக்க முடியும். சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள், தங்களிடம் நடைமுறை மூலதனம் போதுமான அளவு இல்லாவிட் டால், இந்த விலை உயர்வைஎதிர்கொள்ள முடியாது. ஏற்கெனவே கணிசமான நிறுவனங்கள் வங்கிக் கடன்கள்தனியார் நிதி நிறுவன கடன்களை வாங்கித் தான் தொழில் செய்து வருகின்றனர்.

ஆர்டர்களை முடிக்க முடியாத நெருக்கடிமூலப் பொருட்களின் விலை உயர்வும், ஜாப் ஒர்க் கட்டண உயர்வும் மொத்தத்தில் பின்னலாடைகளின் உற்பத்திச் செலவை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. இது ஏற்றுமதிதொழிலை பொறுத்தவரை, முன்கூட்டியே உத்திரவாதப்படுத்தப்பட்ட ஆர்டர்களை, ஒப்புக்கொள்ளப்பட்ட, கட்டுப்படியான விலையில் உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களை செய்து முடித்தால் தான் நிறுவனத்தின் நம்பிக்கையை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், தங்கள் லாபத்தை குறைத்தோ, அல்லது உற்பத்தி விலைக்கோ தயாரித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன. விலை உயர்வினால் ஆர்டர்களை செய்து முடிக்க முடியாத நிறுவனங்கள் உற்பத்தியைக் கைவிட்டு, மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படு கின்றன.

சிறு, குறு, நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், முன்கூட்டியே விலைநிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும், மூலப் பொருட்களின் விலைஉயர்வுக்கு ஏற்ப தங்கள் பனியன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளன.தற்போது அத்தியா வசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தி ருப்பதுடன், மக்களின் வாங்கும் சக்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், உள்நாட்டு பனியன் விற்பனையும் கடுமையாக சரியக்கூடிய அச்சுறுத்தல்உள்ளது.

மொத்தத்தில் இந்த விலைவாசி உயர்வினால் பனியன் தொழில் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன்,தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது. பல சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படக்கூடிய அபாயமும் உள்ளது.

4 ஆயிரம் நிறுவனங்கள் மூடல்

குறிப்பாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் திருப்பூர் மண்டல ஆணையாளர் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில், மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டநிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு பிஎப் பிடித்து வந்தன. இதில் ஏறத்தாழ நான்காயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறினார். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வு உற்பத்தி செலவு அதிகரிப்பு அதற்கு ஏற்ப நிறுவனங்கள் நிதி வசதி இல்லாமல் கடன் வலையில் சிக்குவது, கடனை செலுத்த முடியாமல் திவால் ஆகி மூடப்படக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன என்பது அடிப்படையான காரணமாகும்.

ஒன்றிய – மாநில அரசுகளின் உடனடி தலையீடு தேவை!

இதற்கு ஒன்றிய – மாநில அரசுகள் கொள்கை ரீதியாகஆதரவு அளிப்பது இன்றி யமையாத தேவையாக உள்ளது. மூலப்பொருள் விலைஉயர்வை சீராக வைத்தி ருப்பதற்கும், அனைத்து கட்டணங்களும் உயராமல் நிலைத்தன்மையில் இருப்ப தற்கும், நிறுவனங்களுக்கு எளிய முறையில் நிதி வசதி கிடைப்பதற்கும், சந்தையை ஊக்கப்படுத்துவதற்கு அரசுகள் பொருத்தமான கொள்கைகளை வகுக்க வேண்டும். ஆனால் ‘ஆத்ம நிர்பார் பாரத்’, என சுய சார்புள்ள இந்தியாவை உருவாக்கப் போவதாக கூறும் இந்திய அரசு, தாராளமய கொள்கையை அமல்படுத்தி வருகிறது. அதாவது விலை நிர்ணயத்தில், அதை கண்காணிப்பதில் எந்த தலையீடும் செய்வதில்லை, விலைஉயர்வைக் கட்டுப்படுத்துவதில்லை என்ற நிலைபாட்டுடன் அரசு செயல்படுகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப் பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து, அந்நிய செலாவணியும் சரிந்து, இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்து, மக்களின் உண்மைஊதியமும் குறைந்து உள்ளது. இந்த நெருக்கடியின் கோரத் தன்மையை காட்டக்கூடிய முதன்மையான உதாரணமாக வந்தாரை வாழவைக் கும் (?!) திருப்பூர் உள்ளது.

 

வே.தூயவன் பத்திரிகையாளர்.

இக்கட்டுரை முதலில் 22/செப்/2026 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியானது.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *