Tamil Marx

சர்வதேசம்

சோசலிசத்தின் மீதான நம்பிக்கை அமெரிக்காவில் வளர்கிறது -சம்சீர் அகமது

சோசலிசத்தின் மீதான நம்பிக்கை அமெரிக்காவில் வளர்கிறது -சம்சீர் அகமது
  • PublishedNovember 7, 2026

2025 அமெரிக்க நியூயார்க் மேயர் தேர்தலில் சோஹ்ரான் மம்தானியும் தற்போதைய இடைக்கால தேர்தலில் செனட்டராக அப்துல் எல்-சயீதும் பெற்றுள்ள வெற்றிகள் அமெரிக்க அரசியலில் வெறும் தேர்தல் வெற்றிகள் மட்டுமல்ல. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் பரவிய இஸ்லாமிய வெறுப்பு, முஸ்லிம்கள் மீதான சந்தேகம் மற்றும் மத அடிப்படையிலான அரசியலுக்கு மத்தியில் உருவாகியுள்ள முக்கியமான அரசியல் மாற்றத்தின் அடையாளங்கள் ஆகும்.

9/11 தாக்குதலுக்கு பிந்தைய இஸ்லாமிய வெறுப்பு

2001 செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா அறிவித்த ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ உலக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பயங்கரவாத அமைப்புகளின் செயல்களுக்கும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான வேறுபாடு மறைக்கப்பட்டு, முஸ்லிம்கள் என்றாலே சந்தேகத்திற்குரியவர்கள் பயங்கரவாதிகள் என்ற பார்வை வளர்க்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் முஸ்லிம் மக்கள் பாகுபாடு, கண்காணிப்பு மற்றும் மதவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டனர்.
இந்த வரலாற்றில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கும் முக்கியப் பங்கு உண்டு. 1979 முதல் 1989 வரையிலான ஆப்கானிஸ்தான் போரில் சோவியத் ஒன்றியம் தலையிட்ட காலத்தில், அதற்கு எதிராகப் போரிட்ட முஜாஹிதீன் ஆயுதக் குழுக்களுக்கு அமெரிக்கா பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. வழியாக நிதி, ஆயுதம் மற்றும் பயிற்சி உதவிகளை வழங்கியது.
2010ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக முஜாஹிதீன் படையை உருவாக்கி, பயிற்சி அளித்து, ஆயுதங்களையும் நிதியையும் அமெரிக்கா வழங்கியதாகக் குறிப்பிட்டார். ஒசாமா பின்லேடனையும் அந்தச் சூழலில் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பனிப்போர் காலக் கொள்கைகள், பாகிஸ்தானின் தலையீடு மற்றும் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போர் ஆகியவை பிற்காலத்தில் தாலிபான் அமைப்பு வளர்வதற்கான சூழலை உருவாக்கிய காரணிகளில் அடங்கும். இந்த வரலாற்று முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் இஸ்லாமிய வெறுப்பு அரசியலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக அமெரிக்கா தன்னை முன்னிருத்தினாலும் , அந்நாட்டின் சாதாரண மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். செல்வம் ஒரு சிறிய பகுதியினரிடம் குவிவதும், மறுபுறம் அடிப்படைத் தேவைகளுக்காகப் பெரும்பான்மையான மக்கள் போராடுவதும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கிய முரண்பாடாக உள்ளது.
அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 3.45 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். மேலும், 2.67 கோடி மக்களுக்கு ஆண்டு முழுவதும் மருத்துவக் காப்பீடு கிடைக்கவில்லை. அமெரிக்க பெடரல் ரிசர்வின் 2025 குடும்பப் பொருளாதார ஆய்வின்படி, 27 சதவீத மக்கள் தங்கள் பொருளாதார நிலையைச் சமாளிப்பதில் சிரமப்படுவதாகக் கூறியுள்ளனர். அவர்களில் 8 சதவீதம் பேர் வாழ்க்கையை நடத்துவதே கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 28 சதவீதம் பேர் முந்தைய ஆண்டைவிடத் தங்கள் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டு வாடகை உயர்வு, மருத்துவச் செலவு, கல்விக் கடன், குறைந்த ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பின் நிலையற்ற தன்மை ஆகியவை மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. இந்தச் சூழல்தான் அனைவருக்கும் மருத்துவம், மலிவான வீடுகள், தரமான பொதுக் கல்வி, தொழிலாளர் உரிமைகள் மற்றும் செல்வந்தர்களுக்கு நியாயமான வரிவிதிப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் மாற்று அரசியலுக்கான தேவையை அதிகரித்துள்ளது.

சோஹ்ரான் மம்தானி: ஜனநாயக சோசலிசத்தின் வெற்றி

2025ஆம் ஆண்டு நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று, 2026 ஜனவரி 1 ஆம் தேதி பதவியேற்ற சோஹ்ரான் மம்தானி, தன்னை வெளிப்படையாக ஜனநாயக சோசலிஸ்ட் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். மலிவான வீடுகள், வாடகைக் கட்டுப்பாடு, வேகமான மற்றும் இலவசப் பொதுப் பேருந்துகள், அனைவருக்கும் குழந்தைப் பராமரிப்பு வசதி, தொழிலாளர் உரிமைகள் ஆகியவை அவரது அரசியலின் முக்கிய திட்டமாக உள்ளது.
நகரத்தின் வளர்ச்சி பணக்காரர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் மட்டுமே பயனளிக்கக் கூடாது. அந்த நகரத்தை உருவாக்கும் தொழிலாளர்கள், குடியேறிய மக்கள் மற்றும் சாதாரண குடும்பங்களுக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்க வேண்டும் என்பதே அவரது அரசியல் பார்வை. செல்வந்தர்களுக்கு வரி விதித்து மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி திரட்ட வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு அமெரிக்காவின் வழக்கமான அரசியல் அணுகுமுறைக்கு மாற்றாக அமைந்துள்ளது.

அப்துல் எல்-சயீத்: முற்போக்கு இடதுசாரி அரசியலின் வெற்றி

தற்போது முடிந்துள்ள அமெரிக்க இடைத்தேர்தலில் மிச்சிகன் மாநில செனட் தொகுதியில் வெற்றி பெற்ற அப்துல் எல்-சயீத், அமெரிக்க செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளார். எகிப்த்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர், பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, பெருநிறுவனங்களின் அரசியல் செல்வாக்கைக் கட்டுப்படுத்துதல், தொழிலாளர்களின் குடும்ப வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரித்தல் ஆகியவை அவரது முக்கிய அரசியல் நிலைப்பாடுகளாக உள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது முஸ்லிம் அடையாளத்தை முன்வைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. அவற்றுக்கு மத்தியிலும் அவர் பெற்ற வெற்றி முக்கியமானது.

இங்கு ஒரு வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். மம்தானி தன்னை ஜனநாயக சோசலிஸ்ட் என்று அடையாளப்படுத்துகிறார். எல்-சயீத் அந்த அடையாளத்தைப் பயன்படுத்தவில்லை; அவர் முற்போக்கு இடதுசாரிக் கொள்கைகளை முன்னெடுப்பவர். இருவரின் அரசியல் அடையாளங்களும் வேறுபட்டாலும், பொருளாதாரச் சமத்துவம், பொதுச் சேவைகள் மற்றும் பெருநிறுவன ஆதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளில் ஒற்றுமைகள் உள்ளன.

அப்துல் எல்-சயீதின் வெற்றியை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக்குவது அவருக்கு எதிராகச் செலவிடப்பட்ட பிரம்மாண்டமான தேர்தல் நிதியாகும். தேர்தல் நிதிப் பதிவுகளின்படி, அவருக்கு எதிராகப் பல்வேறு வெளிப்புற அரசியல் குழுக்கள் மொத்தம் 154.4 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளன. இந்திய மதிப்பில் இது சுமார் ₹1,464 கோடி! இதில் இஸ்ரேலுக்கு ஆதரவான AIPAC அமைப்புடன் தொடர்புடைய United Democracy Project உள்ளிட்ட குழுக்களின் செலவுகளும் அடங்கும். இவ்வளவு பெரிய பணபலத்தையும், மத அடையாளத்தை முன்வைத்து நடத்தப்பட்ட வெறுப்புப் பிரச்சாரங்களையும் எதிர்கொண்டு அவர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும் பணமும் அரசியல் செல்வாக்கும் மட்டுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்க முடியாது; மக்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட அரசியலுக்கும் வெற்றி கிடைக்க முடியும் என்பதை அவரது வெற்றி உணர்த்துகிறது.

அமெரிக்காவில் இடதுசாரி அரசியலின் வளர்ச்சி

பெர்னி சாண்டர்ஸ் போன்ற தலைவர்கள் முன்னெடுத்த ஜனநாயக சோசலிசக் கருத்துகளும், அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் உள்ளிட்ட இளம் தலைவர்களின் அரசியல் செயல்பாடுகளும் அமெரிக்காவில் மாற்று அரசியலுக்கான விவாதங்களை வலுப்படுத்தியுள்ளன. குறிப்பாக இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடியேறிய மக்களிடையே பொருளாதாரச் சமத்துவம், மருத்துவ உரிமை, கல்வி மற்றும் சமூகநீதி குறித்த கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
மம்தானியின் ஜனநாயக சோசலிச அரசியலும், எல்-சயீதின் முற்போக்கு அரசியலும் இந்த வளர்ச்சியின் முக்கிய வெளிப்பாடுகளாக உள்ளன. அவர்களின் வெற்றிகள் அமெரிக்காவின் பொருளாதார அமைப்பை உடனடியாக மாற்றிவிடாது. ஆனால், பெருநிறுவனங்களின் லாபத்தைவிட மக்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அரசியலுக்கு மக்கள் ஆதரவு வளர்ந்து வருவதைத் தெளிவுபடுத்துகின்றன.
இந்த வெற்றிகளை இரண்டு முஸ்லிம் தலைவர்களின் வெற்றியாக மட்டும் சுருக்கிவிட முடியாது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிந்தைய இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு மத்தியில், மத அடையாளத்தைத் தாண்டி மக்கள் நலன், பொருளாதாரச் சமத்துவம் மற்றும் சமூகநீதியை மையமாகக் கொண்ட இடதுசாரி அரசியல் அமெரிக்காவில் வளர்ந்து வருவதன் முக்கிய அடையாளங்களாக இவற்றைப் பார்க்க வேண்டும்.

– சம்சீர் அகமது, மாநில செயலாளர் இந்திய மாணவர் சங்கம்.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *