தனிப்பட்ட முரண்பாடுகளால் சட்டமன்றத்தில் புறந்தள்ளப்படும் மக்கள் நலன்-மோகனவள்ளி
ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கம் மக்களின் நலனைப் பாதுகாப்பதும், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதே ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி பொதுநலனுக்காக செயல்பட வேண்டியது அவசியம். ஆனால் பல நேரங்களில் அரசியல் கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட மோதல்கள் மற்றும் அதிகாரப்போட்டிகள் காரணமாக மக்கள் நலன், இளைஞர் நலன் மற்றும் அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் அடிப்படையிலான விவாதங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
சட்டமன்ற விவாதங்கள் மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் மேடையாக இல்லாமல் அரசியல் குற்றச்சாட்டுகளின் அரங்கமாகவும் தனிப்பட்ட தாக்குதல்களின் இடமாகவும் மாறியுள்ளது. இதனால் பொது மக்களின் தேவைகள் உரிய கவனத்தைப்பெறாமல் தவறுகின்றன. இதன் மிக முக்கியமான நீண்ட கால பிரசனைகளுக்கு போதிய நேரம் ஒதுக்கி விவாதிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றன.
மக்கள் நலன் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
குடிநீர், சுகாதாரம், கல்வி, வீடு, சாலை வசதி, போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகள் அரசின் தொடர்ச்சியான கவனத்தை எதிர்பார்க்கின்றன. ஆனால் அரசியல் மற்றும் தனிப்பட்ட முரண் காரணங்களால் சட்டமன்றத்தில் நடத்தப்படும் வார்த்தை மோதல்கள் மக்களின் நலனை பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன. இதனால் அதிகம் அல்லது விரைந்து கவனம் செலுத்தப்பட வேண்டிய பல பிரச்சனைகள் போதிய கவனம் இன்றி கடந்து செல்லப்படுகின்றன.
இளைஞர் நலன், வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படைத் திட்டங்கள்:
தமிழகத்தின் மிகப்பெரிய பலம் அதன் இளைஞர் சக்தியாகும். தரமானக்கல்வி, திறன்மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மற்றும் காலமுறை அரசு வேலைவாய்ப்புகள் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமான ஒன்றாகும். வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் தாமதமாவதும் வாக்குறுதிப்படி இல்லாமல் போவதும், தேர்வு மற்றும் நியமன செயல்முறைகள், திறன்மேம்பாட்டுத் திட்டங்கள் காலம் தாழ்த்தபடுவது போன்ற சூழல்களால் இளைஞர்களிடம் ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில் இந்தப் பிரச்சனைகள் சட்டமன்றத்தில் அதிக ஆவணம் பெறுவதில்லை மற்றும் போதிய அளவு பேசு பொருள் ஆவதில்லை.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியானது சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், குடிநீர் வசதி, மின்சாரம், விவசாயத்திற்கு கொடுக்கும் ஆதரவு மற்றும் சமூக பாதுகாப்புத்திட்டங்களின் தரத்தைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. இத்திட்டங்கள் அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படாமல் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் எந்தக் கட்சியின் திட்டம் என்பதைக் காட்டிலும் மக்களுக்கு எவ்வாறு பயன்தருகின்றன என்பதைப் பொறுத்தே செயல்படவேண்டும்.
மக்கள் நலத்திட்டங்களை முறையாக அமலாக்க அரசியல் கட்சிகள் இடையே நல்லுறவும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்கள் தரமாக செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுக்கண்காணிப்பு திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். நலத்திட்டங்கள் அமலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி, மாநிலத்தின் வளர்ச்சிக்கான போட்டியாக மாற வேண்டும். மக்கள் நலனைப் பாதிக்கும் மோதலாக இருக்கக்கூடாது.
அநாகரிகப் பேச்சு அரசியல்
அரசியல் என்பது மக்கள் நலன், சமூக முன்னேற்றம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் அடிப்படை செயல்முறையாகும். கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் விவாதித்து மக்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் சமீப காலங்களில் கொள்கை விவாதங்களைக் காட்டிலும் தனிநபர் தாக்குதல்கள், அவதுாறுகள், தரக்குறைவான சொற்கள் மற்றும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. இது உண்மையான அரசியல் விவாதத்தை விட்டு விலகி உணர்ச்சிகளைத் துாண்டும் நோக்கத்துடன் அமைகிறது.
ஒரு திட்டத்தில் உள்ள நன்மை, தீமைகளை விமர்ச்சிப்பதை விட தனிநபர் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தற்போதைய காலகட்டத்தில் கவலையளிக்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது.
தவறானத் தகவல்கள் மற்றும் வதந்திகள் வேகமாகப் பரவுதல்:
- ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தங்களது பொறுப்பை உணராமல், அநாகரிகமான பேச்சுகளுக்கும், தனிநபர் தாக்குதல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதைத் தவிர்த்து மக்கள் நலன் சார்ந்த விவாதங்களையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிறுத்த வேண்டும்.
- உண்மைச் சரிபார்ப்பு மற்றும் பொறுப்பான முறையில் செய்திகள் வெளியீடுவது அவசியமாக இருக்க வேண்டும்.
- அரசியல் விவாதங்களில் அனைவரும் நாகரிகமான மொழியைப் பயன்படுத்த வேண்டும்.
- வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.
- கருத்து வேறுபாடுகளை கவனமான வார்த்தைகளுடன் வெளிப்படுத்த வேண்டும்.
- ஆதாரப்பூர்வமான விமர்சனங்களையும் மாற்றுத் தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும்.
- பொதுமக்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
பொதுமக்களும் உணர்ச்சிவசப்படாமல் தாங்கள் பார்க்கும் தகவல்களை ஆராய்ந்து சரியா தவறா என முடிவு செய்ய வேண்டும். வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை ஆதரிக்க கூடாது. சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும். கொள்கை, செயல்திறன் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்து அரசியல் தலைவர்களை மதிப்பிட வேண்டும்.
அநாகரிகப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி:
இத்தகைய அநாகரிக பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு, அரசியல் கட்சிகளுக்கு நடத்தை விதிமுறைகள் வகுக்க வேண்டும். ஜனநாயக மதிப்புகள் குறித்து கல்வி மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். எனவே, சட்டமன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அங்கு நடைபெறும் விவாதங்கள், உறுப்பினர்களின் நடத்தை மற்றும் மொழிநடை அனைத்தும் நாகரிகம், பொறுப்பு மற்றும் ஜனநாயகப் பண்புகளை பிரதிபலிக்க வேண்டும்.
மக்களுக்கு முன்மாதிரி:
சட்டமன்ற நிகழ்வுகளை முழு நேரலையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கவனிக்கின்றனர். கொள்கைகள், மக்கள் நலன், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம் போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற வேண்டும். தனிநபர் தாக்குதல்கள் மற்றும் தரக்குறைவான வார்த்தைகள் விவாதத்தின் தரத்தை குறைக்கின்றன.
அங்கு மரியாதையான பேச்சும் ஒழுக்கமான நடத்தையும் காணும்போது தான் அது சமூகத்திற்கே நல்ல எடுத்துக்காட்டாக அமையும்.
கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தின் இயல்பான அம்சமாக இருந்தாலும், அவை மரியாதையுடனும் ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் மாண்பை உயர்த்தும்.
மக்கள் நம்பிக்கை:
நாகரிகமான சட்டமன்ற நடவடிக்கைகள் தான் மக்களிடையே அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கையை அதிகரிக்கும். குழப்பம், கூச்சல் மற்றும் ஒழுங்கீனங்கள் மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும். மரியாதையான மொழிநடை, எதிர்கருத்துகளைக் கேட்கும் மனப்பான்மை, ஆதாரப்பூர்வமான விவாதங்கள், நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்துதல், தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து கொள்கை மற்றும் மக்கள் பிரச்சனைகளிலிருந்து விமர்சனங்களை முன் வைத்தல் போன்றவைதான் மக்கள் நல அரசியலின் நோக்கமாக இருக்கும்.
ஆனால் தேவையற்ற அநாகரிகமான பேச்சுக்களும், தனிநபர் தாக்குதல்களும் இளைஞர்களிடம் தவறான அரசியல் பண்பாட்டை உருவாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
தேர்தலுக்குப் பிறகு பல நேரங்களில் கட்சிகளுக்கிடையே கொள்கைப் போட்டியை விட ஈகோச் சண்டைகள், பழிவாங்கும் அரசியல், தலைமைப் பெருமிதம், அதிகாரப் போட்டி போன்றவை அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் விளைவாக மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
வாக்காளர் மனதை ஈர்க்கும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. சில நேரங்களில் அவை உண்மையான கொள்கை அடிப்படையிலான வாக்குறுதிகளாக இருக்கும். சாமானியனுக்கு இந்த வாக்குறுதிகள் முதலில் நம்பிக்கையைத் தருகின்றன. ”இனி என் வாழ்க்கை மாறலாம்,” “என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கலாம்,” “வேலை கிடைக்கலாம்,” “விவசாயம் காப்பாற்றப்படலாம்” என்று மக்கள் எண்ணும் நேரத்தில் நடைமுறை சிக்கல்கள், நிதி பற்றாக்குறை, நிர்வாக தாமதம் என்ற காரணங்கள் பல சொல்லப்படுவது மக்கள் மனதில் எதிர் மறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
இங்கு ஈகோ என்பது வெறும் தனிநபர் விஷயம் மட்டுமல்ல. அது அதிகார மனநிலை, மாற்றுக் கருத்தை மதிக்காத மனநிலை ஆகியவற்றையும் குறிக்கிறது. இப்படியான அரசியல் சூழல் நல்லாட்சியையும் மக்கள் நலனையும் பாதிக்கிறது.
சாமானியன் அரசியலைக் கோட்பாட்டு விளையாட்டாகப பார்ப்பதில்லை. சாமானியர்களுக்கு அரசியல் என்பது வாழ்க்கையோடு நேரடியாக இணைந்த ஒன்று. நல்ல பள்ளி, மருத்துவமனை, சாலை, பேருந்து, மின்சாரம், குடிநீர், வேலை, பாதுகாப்பு, உணவு ஆகியவற்றின் மூலம் தான் சாமானியர்களுக்கு அரசியல் புலப்படுகிறது. எனவே, மக்களுக்கு அரசியல்வாதிகளின் பேச்சும் செயல்பாடும் கண்ணியத்திற்குரியதாக இருக்க வேண்டும்.
ஈகோச் சண்டைகள் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?
நல்ல திட்டங்கள் மற்றும் நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறது. அதனால் அரசியல்வாதிக்கள், மக்கள் பிரதிநிதிகள் மக்கள் வாழ்நிலையிலிருந்து தங்களின் செயல்பாட்டை துவக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இடைப்பட்ட கருத்து முரண்பாடுகள், மக்கள் நல அரசியலை நோக்கியதாக இருக்க வேண்டும். அரசியல் என்பது வெற்றுப்பேச்சு அல்ல. அது வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் உள்ளது. அது செயல்பாட்டிற்கான அடித்தளமாகும்.
- மு. மோகனவள்ளி, திண்டுக்கல்.
1 Comment
அருமையான பதிவு