Tamil Marx

இந்தியா

வெற்றித் தோல்விகளை தீர்மானிக்கும் வாக்குகள் நீக்கம்

வெற்றித் தோல்விகளை தீர்மானிக்கும் வாக்குகள் நீக்கம்
  • PublishedSeptember 3, 2026

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (Special Intensive Revision – SIR) கீழ்  தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 19.4 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவதற்காகக் குறித்துவைக்கப்பட்டுள்ளனர். இதில் 40.7% பேர் முஸ்லிம்களாவர்.

இது சாதாரண எண்ணிக்கை அல்ல அந்த 15 தொகுதிகளிலும் வெற்றி தோல்விகளை தீர்மானிக்க கூடிய வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

மேலும் 2023 ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த எண்ணிக்கையில் நீக்கப்படப்படப்போகும் வாக்காளர்களின் எண்ணிக்கை தோராயமாக 46.1% ஆகும்.

சபர் நிறுவனம் (Sabar Institute) மற்றும் அரசியலமைப்பு பாதுகாவலர் அமைப்பு (Constitutional Guardians Forum) ஆகியவை நடத்தியுள்ள ஆரம்ப கட்ட பகுப்பாய்வின்படி, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட உள்ளவர்களில் 40.7% பேர் முஸ்லிம்களாவர். 2023 சட்டமன்றத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுமார் 89% ஆகும்.

தற்போது ஹைதராபாத்தின் 15 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 4,094 வாக்குச்சாவடிப் பகுதிகளில் 1,941,444 வாக்காளர்கள் நீக்கப்படுவதற்காகப் பட்டியலிடப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பான்மையானோர், அதாவது 69.3% பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களாகவும், 17.5% பேர் “கண்டறிய முடியாதவர்கள்/இல்லாதவர்கள்” (Untraceable/Absent) எனவும், 5.1% பேர் இறந்தவர்கள் எனவும், 5.1% பேர் வேறு இடத்தில் “ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள்” எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் மீதே ஆவணங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்திக்கொள்ளும் சுமை சுமத்தப்படுகிறது.

பல தொகுதிகளில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2023 சட்டமன்றத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, மலக்பேட்டையில் 1,32,024 வாக்குகள் பதிவாகின . அங்கு 1,47,799 நபர்களின் வாக்குகள் நீக்கப்பட உள்ளன. யாகுத்புராவில் 1,40,434 வாக்குகள் பதிவாகியுள்ளது. அங்கு 1,54,982 வாக்குகள் நீக்கப்பட உள்ளன.

இந்த முரண்பாடுகள் காரணமாக வாக்குகள் நீக்கம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மொத்த நீக்கங்களில் பெண்கள் 47.8% ஆக உள்ளனர். நீக்கப்பட உள்ள முஸ்லிம் வாக்களர்களில் 49.5% பேர் பெண்கள் ஆவர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் துல்லியமின்மை நிலவுகிறது என நாடு முழுவதும் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. போட்டியிடும் தொகுதிகளில் பாஜக தனது வெற்றியை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ஆயிரக்கணக்கான வாக்காளர்களை நீக்குகிறது குறிப்பாக முஸ்லிம் வாக்காளர்களை நீக்குகிறது. வாக்காளர்கள் தங்கள் வாக்கை தக்கவைத்துக் கொள்ளவும் உறுதிப்படுத்திக்கொள்ளும் நடைமுறைகளை மிகக்கடுமையாகவும் சுமை மிகுந்ததாகவும் தேர்தல் ஆணையம் மாற்றி வைத்துள்ளது என கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *