Tamil Marx

சர்வதேசம்

21 ஆம் நூற்றாண்டில் தரவு மூலதன கொள்ளை-சேது சிவன்

21 ஆம் நூற்றாண்டில் தரவு மூலதன கொள்ளை-சேது சிவன்
  • PublishedJuly 8, 2026

கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலர்கள், மைக்ரோசாஃப்ட் 17.5 பில்லியன் டாலர்கள், அமேசான் 35 பில்லியன் டாலர்கள் என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தரவு மையங்கள் அமைக்க முதலீடுகளை கொட்டிக்கொண்டிருக்கின்றன.

அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 2035-க்குள் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 480 ஏக்கர் நிலத்தில் அதானி-கூகுள் கூட்டு இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மைய வளாகத்தை கட்டி வருகிறது.

இந்தியாவில் தரவு மையங்கள் அமைக்கும் பணிகள் சில ஆண்டுகளாக வேகம் எடுத்து வருகின்றன. இதை ஊக்குவிக்க மோடி அரசு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 21 ஆண்டு வரி விலக்கு அறிவித்துள்ளது. 2026-27 பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தரவு மையங்கள் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 வரை வரி சலுகை அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த பிறகுதான் அதானி குழுமம் தரவு மையங்களில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அரசு கொள்கையும் கார்ப்பரேட்டுகளின் லாப நோக்கும் கைகோர்க்கும் முதலாளித்துவ இயல்பின் நேரடி வெளிப்பாடு இது.

இந்த “முதலீடு” உண்மையில் யாருக்கு லாபம்? யாருக்கு சுமை?

நவீன காலத்தின் டிஜிட்டல் தொழிற்சாலை

தரவு மையங்கள் (Data Centers) வெளியிலிருந்து பார்க்க சாதாரண கட்டிடங்களே. ஆனால் அந்தக் கட்டிடங்களுக்குள் லட்சக்கணக்கான கணினி சேவையகங்களை (Servers) வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கும் பிரம்மாண்டமான கட்டமைப்பு இருக்கிறது.

நாம் கூகுள் டிரைவில் சேமிக்கும்போது, யூட்யூபில் வீடியோ பார்க்கும்போது, வாட்ஸ்ஆப்பில் படம் அனுப்பும்போது, செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்கும்போது இணையத்தில் செய்யும் ஏறக்குறைய அனைத்து செயல்பாடுகளும் இந்தத் தரவு மையங்களில்தான் செயலாக்கப்படுகின்றன. இவ்வாறு இணைய வழியாக தொலைவில் இருக்கும் தரவு மையங்களில் தரவுகளை சேமித்து பயன்படுத்திக்கொள்ளும் இந்த முறையே மேகக்கணிமை (Cloud Computing) என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக சர்வதேச சந்தையில் முக்கிய வர்த்தகப் பொருளாக இருப்பது கச்சா எண்ணெய்தான். ஆனால் இன்றைய உலகப் பொருளாதாரத்தில் தரவுகள் புதிய வகை கச்சா எண்ணெயாகவும், செயற்கை நுண்ணறிவு அந்த எண்ணெயை சுத்திகரிக்கும் ஆலையாகவும் உள்ளன. இதனை ஏன் கச்சா எண்ணெயுடன் ஒப்பிடுகிறோம் என்றால், சர்வதேச அளவில் யார் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே அனைத்துத் துறைகளிலும் ஆதிக்க சக்தியாக விளங்குகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த கச்சா எண்ணெய்க்காக அமெரிக்கா நடத்தி வரும் போர்களும் இனப்படுகொலைகளும் நாம் அறிந்தவையே.

மார்க்ஸ் “உற்பத்திக் கருவிகளின் உரிமை” என கூறினார். இன்று தரவுகளும் அதன் பகுதியாக மாறி வருகிறது. எனவே இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் யார் தரவு மையங்களை கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள் தான் செயற்கை நுண்ணறிவு, மேகக்கணிமை உள்கட்டமைப்பு, எதிர்கால உற்பத்தியை கட்டுப்படுத்தும் சக்தியாக மாறுவார்கள். இதனால் தான் தற்போது உலகம் முழுவதும் தரவு மையங்களை அமைக்கவும் அதற்கான சந்தைகளைக் கண்டுபிடிக்கவும் போட்டி அதிகரித்து வருகிறது.

2026 ஜூன் மாத நிலவரப்படி உலகம் முழுவதும் 11,600-க்கும் மேற்பட்ட தரவு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. பெரும்பாலான தரவு மையங்கள் அமெரிக்காவில் அமைந்துள்ளன. அங்கு 4,300-க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. ஐரோப்பா இரண்டாவது பெரிய மையமாகத் திகழ்கிறது. இங்கிலாந்தில் 540-க்கும் மேற்பட்ட தரவு மையங்கள் உள்ளன. ஜெர்மனியில் 520-க்கும் மேல், பிரான்சில் 390-க்கும் மேல் உள்ளன. ஆசிய கண்டத்தில் சீனாவில் 360-க்கும் மேலும், இந்தியாவில் 300-க்கும் மேலும் தரவு மையங்கள் உள்ளன.

18-ஆம் நூற்றாண்டு தொழிற்புரட்சி காலத்தில் நூற்பாலைகளும் இரும்பு ஆலைகளும் எப்படி மூலதனக் குவிப்பின் அடிப்படையாக இருந்தனவோ, அப்படியே இன்று தரவு மையங்கள் டிஜிட்டல் மூலதனக் குவிப்பின் உள்கட்டமைப்பாக “நிலையான மூலதனம்” (Fixed Capital) ஆக செயல்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துபவர்கள் மட்டுமே உலகின் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறார்கள்.

2026 பட்ஜெட்: சட்டப்பூர்வ கார்ப்பரேட் கொள்ளை

2026 பட்ஜெட் பாஜக அரசின் உலக மூலதனத்திடம் சென்று சரணடையும் செயலின் ஆபத்தான அத்தியாயமாகும். இந்தியாவில் தரவு மையங்கள் இயக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நீண்டகால வரி விலக்கு வழங்குவதன் மூலம், அரசு கார்ப்பரேட் கொள்ளையையும் டிஜிட்டல் காலனியாதிக்கத்தையும் சட்டரீதியான நடைமுறையாக மாற்றியுள்ளது.

இந்த வரி விலக்கு முடிவு ‘முதலீட்டு ஊக்கம்’ அல்ல. இது இந்தியாவின் நிலம், மின்சாரம், நீர், மக்களின் தரவுகள் மற்றும் வரிப்பணம் ஆகியவற்றை அமேசான், கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஏகபோக நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் செயல்” என தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறை ஊழியர்களின் சங்கமான UNITE இதனை கடுமையாகக் கண்டிக்கிறது.

இந்த நிறுவனங்கள் இந்தியர்களின் தரவுகளை எடுத்துக்கொண்டு இந்திய மக்களின் மின்சாரத்தையும் நீரையும் பயன்படுத்தி அனைத்துச் செயல்களையும் செய்கின்றன. ஆனால் இதனால் உருவாகும் மதிப்பும் லாபமும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்தியர்களின் தரவுகளை தனியார் நிறுவனங்கள் கையாளும் போது அது தேசிய பாதுகாப்பை, தரவு இறையாண்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.எனவே தரவு மையங்களில் அரசே போதிய முதலீடு செய்யாவிட்டால் இந்தியா ஒட்டச் சுரண்டப்படும்.

அபரிமித மின் நுகர்வு: மக்கள் தலையில் விழும் சுமை

தரவு மையங்கள் ஆயிரக்கணக்கான கணக்கீடுகளைச் செய்யும் சக்திவாய்ந்த சிப்களைப் பயன்படுத்துகின்றன. இவை மிக அதிக மின் நுகர்வு கொண்டவையாக இருகின்றன.

ஒரு ஹைப்பர்ஸ்கேல் தரவு மையத்தில் குறைந்தபட்சம் 5,000 சர்வர்கள் இருக்கும். இது ஆண்டுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை நுகரும்.

சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA) தகவல்படி, 2024-ல் தரவு மையங்கள் சுமார் 415 டெராவாட் மணி நேரம் மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன. இது உலகளாவிய மின் விநியோகத்தில் சுமார் 1.5 சதவீதமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது ஆண்டுக்கு சுமார் 15 சதவீதம் வளர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 945 டெராவாட் மணி நேரமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. (1 டெராவாட் மணி நேரம் என்பது 100 கோடி யூனிட் மின்சாரம் — இது சுமார் 50 லட்சம் வீடுகளுக்கு ஒரு மாதம் மின்சாரம் வழங்குவதற்கு சமம்.)

இந்தியாவின் தரவு மையங்கள் தற்போது 10 முதல் 15 டெராவாட் மணி நேர மின்சாரம் நுகர்கின்றன. இது 2030 ஆம் ஆண்டிற்குள் 40 முதல் 45 டெராவாட்-மணி நேர மின்சாரமாக உயரும். ஒன்றிய மின்சார ஆணையத்தின் (CEA) 20-ஆவது ஆய்வறிக்கையின்படி, 2026-27 நிதியாண்டில் உள்நாட்டின் உச்சகட்ட மின் தேவை 277.2 கிகாவாட் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்தத்தில் 1-2 சதவீதம் என்பது 2.77 முதல் 5.54 கிகாவாட் வரை ஆகும். (1 கிகாவாட் மின்சாரம் என்பது 100 கோடி வாட் மின்சாரமாகும்.)

இந்தியாவில் தற்போது தரவு மையங்கள் தங்கள் மின்சாரத் தேவையில் வெறும் 25 முதல் 30 சதவீதம் மட்டுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்கின்றன. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல் என மாறி வரும் சூழலில், இந்தியா நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களையே பெரும்பாலும் பயன்படுத்துகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கட்டாயமாக்கும் விதிகள் இல்லாத நிலையில், இந்த போக்கு காலநிலை மாற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும்.

கார்ப்பரேட்டுகளுக்கு தாராளம்: தாகத்தில் மக்கள்

அதிக மின்சாரம் பயன்படுத்தப்படும் போது அதிக வெப்பம் உருவாகும். தரவு மையங்களில் இந்த வெப்பத்தை கட்டுக்குள் வைக்கவும் தணிக்கவும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் இந்த மையங்கள் நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றன.

செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலை சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது. சில பகுதிகளில் இந்த உயர்வு 9 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இந்த வெப்பத்தின் விளைவுகள் 10 கிலோமீட்டர் தூரம் வரை உணரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை “தரவு வெப்பத் தீவு விளைவு” (Data Heat Island Effect) என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலகளவில் தரவு மையங்களைச் சுற்றி வாழும் 34 கோடி மக்கள் இந்த வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் டிஜிட்டல் நிலைத்தன்மை ஆலோசனை அமைப்பின் அறிக்கையின்படி, ஒரு தனி 100 மெகாவாட் ஹைப்பர்ஸ்கேல் தரவு மையம் ஆண்டுக்கு சுமார் 250 கோடி லிட்டர் தண்ணீரை நுகரக்கூடும். இது 80,000 மக்களின் ஒரு வருட தண்ணீர் தேவைக்கு இணையானதாகும்.

இந்தியா உலகிலேயே கடுமையான நீர் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்று. கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் வாழும் இந்த நாட்டில் தரவு மையங்களின் நீர் நுகர்வு 2025- இல் 15,000 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்ட்து. இது 2030-க்குள் 35,800 கோடி லிட்டராக உயரும் என மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் 5 கிகாவாட் தரவு மைய கட்டமைப்பு இயங்கும்போது, தினமும் 3 லட்சத்து 75 ஆயிரம் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படும்.

இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட தரவு மையங்கள் நீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. விசாகப்பட்டினம் மாவட்டம் ஆந்திரப் பிரதேசத்திலேயே குறைந்த நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதி. 2026 ஏப்ரல் மாத நிலவரப்படி அங்கு 2.12 TMC மட்டுமே உள்ளது. இந்த நிலையிலும் கூகுளின் 1 கிகாவாட் தரவு மைய வளாகம் அங்கு கட்டப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் கூகுளின் மூன்று வளாகங்கள் ஒவ்வொன்றும் தினமும் 50 லட்சம் லிட்டர் நீரை நுகரும் என அரசாங்க ஆவணங்களே தெரிவிக்கின்றன.

விசாகப்பட்டினம் கூகுள் தரவு வளாகத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ஆவணத்தில் செயல்பாட்டுக் கட்டத்தில் எவ்வளவு நீர் பயன்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. கூகுளிடம் ஆந்திரப் பிரதேசத்தில் நீர் நுகர்வு திட்டங்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கும் பதில் வரவில்லை.

2021 இல் அமெரிக்காவில் தரவு மையங்கள் 62,000 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தியது. 2024-ல் இந்தியாவில் தரவு மையங்கள் 15,000 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தியன. 2025 இல் உலகம் முழுவதும் அமேசான் தரவு மையங்கள் 950 கோடி லிட்டர் தண்ணீரை நுகர்ந்துள்ளன.

இந்தியா இந்தத் திசையில் மிக வேகமாக நகர்கிறது. இந்த நிறுவனங்கள் எதுவும் தங்களது நீர் மற்றும் மின்சாரப் பயன்பாட்டை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. பல நாடுகளில் இதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கட்டாய சட்டங்களும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் சட்டத்திலேயே “ரகசியக் காப்பு விதியை” வைத்துள்ளன. தரவு மையங்களின் நீர் மற்றும் மின் நுகர்வு தகவல்கள் “வணிக ரகசியம்” என்ற பெயரில் மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இதே அபாயம் இருக்கிறது.

அறிவுசார் ஏகபோகம்

மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள், மெட்டா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் “அறிவுசார் ஏகபோகம்” (Intellectual Monopoly) என்ற புதிய சுரண்டல் வடிவத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

பல்கலைக்கழகங்களில் பொது நிதியால் நடந்த ஆராய்ச்சிகள், கட்டணமின்றி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் (Open-source) ஆராய்ச்சிகள், கோடிக்கணக்கான மனிதர்கள் இணையத்தில் உருவாக்கிய தரவுகள் இவை அனைத்தையும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது தனியுரிமைச் சொத்தாக மாற்றி லாபம் ஈட்டுகின்றன.

ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் இந்தியர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களின் எழுத்துகளை, உரையாடல்களை படித்து பயிற்சி பெற்றன. ஆனால் அதிலிருந்து உருவான இலாபம் ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே போகிறது. அது மட்டுமல்ல இலவசமாக வழங்கப்பட்ட அறிவை வைத்து வளர்ந்த அந்த நிறுவனங்களிடம் இருந்து நமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் நாம் பணம் கட்ட வேண்டும். அந்த நிறுவனங்கள் இப்போது வரி சலுகை, இந்தியர்களின் நிலம், நீர், மின்சாரம், தரவு, உழைப்பு என அனைத்தையும் எடுத்துக்கொள்கின்றன.

“முதலீடு” என்ற பெயரில் நிலப்பறிப்பு

“பறிமுதல் மூலம் செய்யப்பட்ட மூலதனக் குவிப்பு” (Accumulation by Dispossession) . அதாவது உழைக்காமல் அதிகாரத்தின் மூலம் நிலம் உள்ளிட்ட வளங்களை ஆக்கிரமித்து தனது சொத்தைப் பெருக்கி, அதை முதலீடு செய்து மேலும் மேலும் பெருக்கும் வேலை இது. உலகம் முழுவதும் அப்படித்தான் பெரும் முதலாளிகள் சொத்து சேர்த்தனர். தற்போதும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் அரசின் துணையுடன் இதையே செய்கின்றன.

இந்தக் கார்ப்பரேட் ஆக்கிரமிப்பிற்கு மக்கள் கையை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. அமெரிக்காவின் வர்ஜீனியாவில் 15,000 ஆண்டுகளுக்கும் மேலாக பமுன்கி ஆற்றங்கரையில் வாழும் பழங்குடி மக்கள் தரவு மையங்கள் தங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் கிணறுகள் வறண்டு போய்விட்டதாகப் போராடுகிறார்கள். அங்கு 2025 ஆம் ஆண்டு மட்டும் 25 தரவு மையத் திட்டங்கள் மக்கள் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் மாற்று வழி: திட்டமிட்ட பொருளாதாரத்தின் சான்று

உலக நாடுகள் எதிர்கொள்ளும் இதே சவாலை சீனா முற்றிலும் வேறு விதத்தில் கையாள்கிறது. 2022 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான சீன அரசு “கிழக்கத்திய தரவு, மேற்கத்திய கணக்கீடு” (Dongshu Xisu) திட்டத்தின் கீழ் தரவு மையங்களை வளம் குறைந்த கிழக்கு மாகாணங்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறைந்த மேற்கு மாகாணங்களுக்கு மாற்றியது. அதேநேரத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய மாகாணங்களை மேம்படுத்தும் இலக்கையும் ஒரே நேரத்தில் நிர்ணயித்துக்கொண்டது. தரவு மையங்களுக்கு தேவையான மின்சாரத்தில் சுமார் 80 சதவீதத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறவேண்டும் என கட்டாய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2026 மே மாதம் சீனா உலகிற்கு ஒரு முன்மாதிரியை வழங்கியது. காற்றாலை ஆற்றலில் கடலுக்கு அடியில் இயங்கும் உலகின் முதல் தரவு மையத்தை துவங்கியது. அதிக வெப்பமடையும் தரவு மையங்களை குளிர்விக்க கடல் நீரையே பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் நுகர்வு அங்கு பூஜ்ஜியமாகிறது. வழக்கமான தரவு மையங்களை விட இதற்கு மின்சார நுகர்வு 22.8 சதவீதம் குறைவு, நிலப் பயன்பாடும் 90 சதவீதம் குறைகிறது. மக்களின் வளங்களை சூறையாடாமல் உலகிற்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கி உள்ளது கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான சீனா.

கம்யூனிஸ்டுகள் தொழில்நுட்பத்திற்கு எதிரானவர்களா?

மனிதகுலத்தின் கூட்டு உழைப்பை எளிதாக்கும் “உற்பத்தி சக்திகளின்” வளர்ச்சி முற்போக்கானது. தொழில்நுட்பம் மனிதர்களை கடுமையான உடல் உழைப்பிலிருந்து விடுவித்து அவர்களின் படைப்பாற்றலை வளர்க்க பயன்பட வேண்டும். இதன்படிதான் கம்யூனிஸ்டுகளும் தொழில்நுட்ப வளர்ச்சி அமைய வேண்டும் என கோருகிறார்கள்.

 

தொழில்நுட்ப வளர்ச்சி வேண்டும். அதேநேரம் அதைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்களின் நிலம், மின்சாரம், நீர் சுரண்டக்கூடாது. செயற்கை நுண்ணறிவை காட்டி வேலை நீக்கம் செய்யக்கூடாது. மாறாக தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைத்து, நிறுவனங்களின் அதிக லாபத்தில் முறையாக ஊதிய உயர்வை வழங்கி, அவர்களின் வாழ்க்கை மேம்படவும் திறன் வளரவும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

நமது கோரிக்கைகளும் கோஷங்களும் தொழில்நுட்பம் வேண்டுமா? வேண்டாமா? என்பதல்ல. இந்தத் தொழில்நுட்பம் யாருடைய கட்டுப்பாட்டில், யாருடைய நலனுக்காக, நிறுவப்படுகிறது என்பதே.

வளர்ச்சி என்ற பொய்யின் நிஜமுகம்

“முதலீடு வருகிறது, வேலை வாய்ப்பு உருவாகும்” என்று அரசு தரவு மையங்களை விளம்பரப்படுத்துகிறது. ஆனால் இது அப்பட்டமான பொய்.

தரவு மையங்களில் செய்யப்படும் முதலீடு மிக அதிகமாக இருக்கும். ஆனால் உருவாகும் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். ஒரு ஹைப்பர்ஸ்கேல் தரவு மையம் கட்டுமானம் முடிந்தவுடன் நூறுக்கும் குறைவான அல்லது சற்று அதிகமான தொழிலாளர்களை மட்டுமே நியமிக்கும். இது முதலீட்டிற்கு ஏற்ப வேலை வாய்ப்பு உருவாகாத வேலையற்ற வளர்ச்சி.

ஒரு உண்மையான பொது நலன் சார்ந்த வரிக்கொள்கை என்றால் சாதாரண மக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் நிவாரணம் கொடுக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியத் தொழிலாளர்கள் குடும்பம் நடத்தத் தடுமாறும்போது, வேலையின்மை உயரும்போது, பொதுத்துறை நிறுவனங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் அவற்றை அழிவுப்பாதையில் தள்ளும்போது இதே அரசு பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 21 ஆண்டு வரி இல்லாமல் செயல்பட உத்தரவாதம் வழங்குகிறது. இது “வளர்ச்சிக்கான” கொள்கை அல்ல. முதலாளித்துவ வர்க்கக் கொள்கை.

இயற்கையிலிருந்து மூலப்பொருட்களை எடுத்து மீண்டும் இயற்கைக்குத் திரும்பக் கொடுக்காமல், முதலாளித்துவ உற்பத்தி இயற்கை சுழற்சியையே துண்டிக்கிறது என காரல் மார்க்ஸ் கூறினார். விவசாயிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் குடிக்க நீர் இல்லை; ஆனால் கார்ப்பரேட் தரவு மையங்களுக்கு கோடிக்கணக்கான லிட்டர் நீர் உண்டு. இந்தியத் தரவுகளை பயன்படுத்தி ஈட்டப்படும் லாபம் கார்ப்பரேட்டுகளுக்கு போகிறது. இதனால் உருவாகும் தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, காலநிலை மாற்றப் பேரழிவு ஆகியவை ஏழை எளிய இந்திய மக்களின் தலையில் மட்டுமே விழுகின்றன. இதனைத்தான் அமெரிக்கச் சமூகவியலாளர் ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் (John Bellamy Foster) “வளர்சிதை மாற்ற முறிவு” (Metabolic Rift) என்று குறிப்பிட்டார்.

இந்திய மக்களின் நிலம் பறிக்கப்படுகிறது. அவர்களுக்குச் சொந்தமான நீர் உறிஞ்சப்படுகிறது. மின்சாரம் கொள்ளையடிக்கப்படுகிறது. மக்களின் தரவுகளை அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட், அதானி, ரிலையன்ஸ் போன்ற ஏகபோக நிறுவனங்கள் லாபம் பார்க்க எடுத்துக்கொள்கின்றன. மின் கட்டண உயர்வு, நீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் மாசு, காலநிலை மாற்ற பேரழிவுகளின் பாதிப்புகள், வேலையின்மை ஆகிய அனைத்தும் உழைக்கும் மக்கள் தலையில் மட்டுமே சுமத்தப்படுகின்றன.

“டிஜிட்டல் இந்தியா” என்பது இந்தியர்களுக்கான டிஜிட்டல் இந்தியாவாக இருக்க வேண்டும். வெளிநாட்டு ஏகபோகங்களுக்கான சுரண்டல் மண்டலமாக இருக்கக்கூடாது. இந்தத் தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளின் மீதான கட்டுப்பாட்டை ஒரு சில பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களிடம் விட்டுக்கொடுத்தால், இது 21-ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் காலனியாதிக்கமாகவே மாறும்.

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான வரி சலுகைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்திய வளங்களை பயன்படுத்தி ஈட்டும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக்கணிமை லாபங்களுக்கு முற்போக்கு வரி விதிக்க வேண்டும். (லாபம் அதிகரிக்க அதிகரிக்க, வரியின் விகிதமும் அதிகரிக்கும்) மின்சாரம் மற்றும் நீர் பயன்பாட்டிற்கு கட்டாய வரம்புகளுடன் கூடிய கட்டாய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.

 

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலையும் ஏகபோகத்தையும் கட்டுப்படுத்த, தரவு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் அரசாங்கமே பொது முதலீடு செய்ய வேண்டும். மேலும் இந்தியர்களின் தரவுகளின் தவறான பயன்பாட்டை தடுக்க வலுவான தரவு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

 

— சேது சிவன்

 

குறிப்பு : மேகக்கணிமை – கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஒருவர் தனது தரவுகளை சொந்தக் கணினியிலோ அல்லது மொபைலிலோ சேமித்து வைக்காமல், இணையத்தின் (Internet) உதவியுடன் தூரத்தில் எங்கோ இருக்கும் ஒரு பொதுவான சேவையகத்திலிருந்து (Server) பெற்றுப் பயன்படுத்துவதாகும். கூகுள் போட்டோஸ், கூகுள் டிரைவில் சேமிப்பது துவங்கி டவுண்லோட் செய்யாமல் இணையத்தில் படம் பார்கிறோமே இந்த மேகக்கணிமை உதவியால் தான் நடைபெறுகிறது. இந்த வேலைகள் எல்லாம் தரவு மையங்களில் தான் நடைபெறுகிறது.

 

2026 ஜூலை 8 அன்று தீக்கதிர் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம் இது. 

Written By
shethu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *