Tamil Marx

சர்வதேசம் தொடர்கள்

ஏழை நாடுகளில் ஐக்கிய முன்னணி-பேரா.விஜய் பிரசாத்

ஏழை நாடுகளில் ஐக்கிய முன்னணி-பேரா.விஜய் பிரசாத்
  • PublishedJuly 5, 2026

முன்னாள் காலனித்துவ நாடுகளில் ‘ஐக்கிய முன்னணி’ (united front) என்ற கருத்தாக்கத்தின் வரலாறு என்பது, காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம், புரட்சிகர தேசியவாதம் மற்றும் ஏகாதிபத்தியம் குறித்த மார்க்சிய விவாதங்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாததாகும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒரு அடிப்படைப் பிரச்சினையை எதிர்கொண்டன: முதன்மையாகத் தொழில் துறை முதலாளித்துவத்தால் அல்லாமல், மாறாகக் காலனியாதிக்கம், நிலப்பிரபுத்துவம், இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தால் ஆட்சி செய்யப்பட்ட நாடுகளில் சோசலிசப் புரட்சி எவ்வாறு உருவாக முடியும்?

இந்தக் கேள்விக்கான முதன்மைப் பதில்களில் ஒன்றாக ‘ஐக்கிய முன்னணி’ என்ற கோட்பாடு உருவெடுத்தது. இது கம்யூனிஸ்ட் அகிலத்தின் (Comintern – காமின்டர்ன்) அனுபவங்கள், காலனியாதிக்க எதிர்ப்புப் புரட்சிகள் மற்றும் ‘தேசிய விடுதலை மார்க்சிய’ (National Liberation Marxism) கோட்பாட்டின் மூலம் பரிணாம வளர்ச்சியடைந்தது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில், ஐக்கிய முன்னணி என்பது காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் மற்றும் தேசியவாத சக்திகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு யுக்தியின் அடிப்படையிலான கூட்டணியாக மாறியது. இதன் வரலாறு, உலகின் இப்பகுதிகளில் நிலவிய புரட்சிகர அரசியலின் படைப்பாற்றல் மற்றும் முரண்பாடுகள் இரண்டையுமே வெளிப்படுத்துகிறது.

தேசிய விடுதலை மார்க்சியம்

தேசிய விடுதலை என்பது, ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட சமூக-பொருளாதார அமைப்பு தனக்கு நேர்ந்த வரலாற்று ரீதியிலான மறுப்பை (negation) தூக்கி எறியும் நிகழ்வாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு மக்களின் தேசிய விடுதலை என்பது அந்த மக்களின் வரலாற்று ஆளுமையை (historical personality) மீண்டும் பெறுவதாகும். அது தான் மீதான ஏகாதிபத்திய ஆதிக்கத்தை அழிப்பதன் மூலம் மீண்டும் வரலாற்றிற்குள் திரும்புவதாகும்.”

கோட்பாட்டின் ஆயுதம் – அமில்கார் கப்ரால்

1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சியின் பின்னணியில் தான் ஐக்கிய முன்னணி என்ற கோட்பாடு உருவானது. சோசலிசக் கட்சிகள் பிளவுபட்டுக் கிடப்பதையும், அதே நேரத்தில் முதலாளித்துவ அரசுகளும் எதிர்புரட்சிச் சக்திகளும் இன்னும் பலமாக இருப்பதையும் போல்ஷிவிக்குகள் உணர்ந்தனர். கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாநாடுகளில் (1921-1922), கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் அரசியல் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராடுவதற்கு கம்யூனிஸ்ட் அல்லாத தொழிலாளர் அமைப்புகளுடன் தற்காலிகக் கூட்டணிகளை (tactical alliances) உருவாக்குமாறு ஊக்குவிக்கப்பட்டன.

இந்த ‘ஐக்கிய முன்னணி’ ஆரம்பத்தில் முக்கியமாக ஐரோப்பாவிற்காகவே வடிவமைக்கப்பட்டது, அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் பிற்போக்குத்தனம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக சமூக ஜனநாயகத் தொழிலாளர்களுடன் ஒத்துழைக்க முயன்றன. இருப்பினும், காலனியாக உள்ள நாடுகளுக்கு வேறு பகுப்பாய்வு தேவை என்பதை அகிலம் விரைவில் உணர்ந்துகொண்டது. ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய-காலனித்துவப் பிரச்சினை குறித்த விளாடிமிர் லெனினின் எழுத்துக்கள், காலனித்துவ விடுதலையை உலகப் புரட்சியின் மையப் புள்ளியாக மாற்றியதன் மூலம் மார்க்சியக் கோட்பாட்டை மறுவடிவமைப்பு செய்தன. ஏகாதிபத்தியம் உலகை ஒடுக்கும் நாடுகள் மற்றும் ஒடுக்கப்படும் நாடுகள் என பிரித்துள்ளது என்றும், காலனிகளில் உள்ள புரட்சிகர இயக்கங்கள் சோசலிசத்தின் இயல்பான கூட்டாளிகள் என்றும் லெனின் வாதிட்டார்.

1920 இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தனித்தனியாக ஒழுங்கமைக்கும் அதே வேளையில், காலனித்துவ நாடுகளில் உள்ள முதலாளித்துவ-ஜனநாயக (bourgeois-democratic) விடுதலை இயக்கங்களை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். இதுவே பிற்காலத்தில் ‘தேசிய விடுதலை மார்க்சியம்’ என்று அழைக்கப்பட்டதன் தத்துவார்த்த தொடக்கமாகும்.

தேசிய விடுதலை மார்க்சியம் என்பது ஒரு தனித்துவமான கோட்பாடாக இருக்கவில்லை, மாறாகக் காலனியாட்சியின் கீழ் ஏகாதிபத்திய எதிர்ப்பு, வெகுஜன தேசியவாதம் மற்றும் சோசலிசம் நோக்கிய மாற்றத்தை ஒன்றிணைத்த ஒரு பரந்த யுக்தியின் மரபாகும். தேசிய விடுதலை மார்க்சியத்திற்குள் நீடித்த ஒரு முக்கியமான பதற்றம் என்னவென்றால், காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ‘தேசிய முதலாளித்துவத்தின்’ (national bourgeoisie) பங்கு பற்றியதாகும். ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாடு நாட்டின் வளர்ச்சியை முடக்கும் இடங்களில், உள்நாட்டு முதலாளித்துவத்தின் சில பிரிவினர் அந்த ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்க்கக் கூடும் என்பதை காலனி நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அங்கீகரித்தன.

இருப்பினும், காலனியாதிக்க எதிர்ப்பு மார்க்சியவாதிகள் அந்த வர்க்கங்கள் [முதலாளித்துவ] கட்டமைப்பில் நிலையற்ற கூட்டாளிகள் என்றும் எச்சரித்தனர். தேசிய முதலாளித்துவம் இரண்டு தன்மையைக் (dual character) கொண்டிருப்பதாக மாவோ விளக்கினார். அதாவது அவர்களால் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க முடியும், அதே நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சுயமாக அணிதிரல்வதைக் கண்டு அவர்கள் பயப்படவும் செய்வார்கள். எனவே, ஐக்கிய முன்னணிக்கு ஒரு நுட்பமான சமநிலை தேவைப்பட்டது. கம்யூனிஸ்டுகள் காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பரந்த கூட்டணிகளை உருவாக்க முயற்சித்த அதே வேளையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் அரசியல் சுதந்திரத்தை வலியுறுத்தினர். இந்த சிக்கல் வெறும் தற்காலிக உத்தி சார்ந்தது அல்ல, வரலாற்று ரீதியானது: தேசிய விடுதலை என்பது சமூக மாற்றத்தில் முடியுமா, அல்லது சுதந்திரம் என்பது உலகளாவிய முதலாளித்துவத்துடன் பிணைக்கப்பட்ட ஒரு புதிய உயர் வர்க்கத்தின் ஆட்சிக்கு வழிவகுக்குமா?

புதிய ஜனநாயகம்

காலனித்துவ, அரை-காலனித்துவ மற்றும் அரை-நிலப்பிரபுத்துவ சமூக வடிவத்தை ஒரு சுதந்திரமான, ஜனநாயக சமூகமாக மாற்றுவது முதல் படி. இரண்டாவது, புரட்சியை முன்னோக்கி எடுத்துச் சென்று சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். தற்போது சீனப் புரட்சி முதல் படியை எடுத்து வைக்கிறது.

புதிய ஜனநாயகத்தைப் பற்றி மாவோ

காலனித்துவ நாடுகள் தொழில் வளர்ச்சியடைந்த ஐரோப்பாவிலிருந்து வேறுபட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன என்ற புரிதலிலிருந்தே தேசிய விடுதலை மார்க்சியம் வளர்ந்தது. காலனி நாடுகளில் முதன்மையான முரண்பாடு மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையே மட்டும் இருக்கவில்லை, மாறாக ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கும் தேசிய விடுதலைக்கும் இடையே இருந்தது. எனவே, புரட்சிகரப் போராட்டமானது பல சமூக வர்க்கங்களை ஒன்றிணைக்கும் ஒரு பரந்த காலனியாதிக்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றோடு இணைந்து செல்ல வேண்டியிருந்தது. காலனித்துவப் பகுதியில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஐக்கிய முன்னணியை வெறும் தற்காலிக உத்தியாகப் பார்க்காமல், காலனித்துவ ஆட்சியை வீழ்த்த வல்ல ஒரு வரலாற்று கூட்டமைப்பாகப் (historical bloc) பார்த்தனர்.

இந்த உத்திக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனா மிக முக்கியமான உதாரணமாக மாறியது. 1920களில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CPC), அகிலத்தின் வழிகாட்டுதலின் கீழ், சன் யாட்-சென்னின் தேசியவாத குவோமின்டாங்குடன் (KMT) கூட்டணி வைத்தது. இந்த ‘முதலாவது ஐக்கிய முன்னணி’ பிராந்திய ஆயுதக் குழுக்களை (warlords) தோற்கடிப்பதையும் அன்னிய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டது. இந்த கூட்டணி, தேசிய விடுதலையும் சோசலிசப் புரட்சியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை என்ற அகிலத்தின் நம்பிக்கையைப் பிரதிபலித்தது.

இருப்பினும், 1927 இல் சியாங் கே-ஷேக்கின் குவோமின்டாங் (KMT) கட்சி ஷாங்காயிலும் பிற இடங்களிலும் கம்யூனிஸ்டுகளைக் கொடூரமாகப் படுகொலை செய்தபோது இந்தக் கூட்டணி வன்முறையோடு முறிந்தது. இந்த பேரழிவு, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தேசியவாத சக்திகளுக்குக் கீழ் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சர்வதேச கம்யூனிச இயக்கங்களுக்குள் தீவிரமான விவாதங்களுக்கு வழிவகுத்தது. பாட்டாளி வர்க்க அமைப்புகளைத் தேசியவாத இயக்கங்களுக்குள் கரைத்துவிடுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த ஒரு தீர்க்கமான எச்சரிக்கையாக அந்த 1927 நிகழ்வுகள் மாறின.

இந்தத் தோல்வி இருந்தபோதிலும், சீனப் புரட்சி பின்னர் காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ உலகில் ஐக்கிய முன்னணியின் மிகவும் பிரபலமான உதாரணங்களில் ஒன்றை உருவாக்கியது. மாவோ ஒரு அரை-காலனித்துவ மற்றும் விவசாய சமூகத்துக்கு ஏற்ப மார்க்சியத்தை அமலாக்கம் [refomulate] செய்தார். சீனாவில் புரட்சிக்கு நான்கு வர்க்கங்களின் கூட்டமைப்பு தேவை என்று மாவோ வாதிட்டார்: தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு முதலாளித்துவவாதிகள் (petty bourgeoisie) மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் தேசிய முதலாளித்துவத்தின் பிரிவினர். ஜப்பானின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரின் போது (1937-1945), சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குவோமின்டாங்குடன் ‘இரண்டாவது ஐக்கிய முன்னணியை’ உருவாக்கியது, அதே நேரத்தில் விவசாயிகளிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தியது. மாவோவின் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ (New Democratic Revolution) என்ற கருத்து தேசிய விடுதலை மார்க்சியத்தின் மையமாக மாறியது. ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான ஒரு பரந்த தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகே சோசலிசம் உருவாக முடியும் என்பதே அதன் சாரம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த அணுகுமுறை பிரபலமாகி ஏழை நாடுகள் முழுவதும் பரவலாகப் பரவியது. காலனியாதிக்கத்தை எதிர்த்த இயக்கங்களின் தலைவர்கள் மார்க்சியக் கருத்துக்களைத் தேசியவாதத்துடன் அதிகளவில் முறையில் இணைத்தனர். வியட்நாமில், ஹோ சி மின் மற்றும் இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி பிரெஞ்சு காலனியாதிக்கத்திற்கு எதிராகவும், பின்னர் அமெரிக்காவின் போருக்கு எதிராகவும் ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கின. 1941 இல் தொடங்கப்பட்ட ‘வியட் மின்’ (Viet Minh) அமைப்பில் கம்யூனிஸ்டுகள், விவசாயிகள், அறிவுஜீவிகள் மற்றும் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தேசியவாத சக்திகள் இடம் பெற்றிருந்தனர். ஹோ சி மின், லெனினின் காலனித்துவ விடுதலைக் கோட்பாட்டை வியட்நாமிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கையாண்டார். ஏழை நாடுகளில் கம்யூனிசம் என்பது பெரும்பாலும் தேசியவாதத்தின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள வடிவமாக எவ்வாறு மாறியது என்பதை வியட்நாம் புரட்சி நிரூபித்தது.

ஆப்பிரிக்காவில், காலனித்துவ மற்றும் ஆக்கிரமிப்பு ஆட்சிகளுக்கு எதிராகப் போராடிய விடுதலை இயக்கங்களுக்குள் ஐக்கிய முன்னணி அரசியல் உருவானது. ஏகாதிபத்திய சுரண்டலைப் புரிந்துகொள்வதற்கான பகுப்பாய்வு சூத்திரத்தை மார்க்சியம் வழங்கிய அதே வேளையில், வெகுஜன அணிதிரட்டலுக்கான உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அரசியல் மொழியைத் தேசியவாதம் வழங்கியது. கினியா-பிசாவின் [guinea -Bissau] அமில்கார் கப்ரால், அங்கோலாவின் அகோஸ்டின்ஹோ நெட்டோ மற்றும் மொசாம்பிக்கின் எடுஆர்டோ மாண்ட்லேன் போன்ற தலைவர்கள் தேசிய விடுதலையைச் சமூக மாற்றத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதினர்.

விடுதலை இயக்கங்கள் மக்களின் கலாச்சாரம் மற்றும் விவசாய வாழ்க்கையில் வேரூன்றி இருக்கும் அதே வேளையில் வர்க்க உணர்வையும் உருவாக்க வேண்டும் என்று கப்ரால் வாதிட்டார். விடுதலை முன்னணி என்பது ஒரு இராணுவ அமைப்பாகவும், அதே நேரத்தில் ஓர் அரசியல் கல்வி புகட்டுவதாகவும் மாறியது. தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புப் போராட்டமும் ஐக்கிய முன்னணி மரபுகளைப் பிரதிபலித்தது. ,தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) தனது தென்னாப்பிரிக்க சுதந்திரத்திற்கான பாதை (1962) என்ற ஆவணத்தில் ‘ஒரு குறிப்பிட்ட வகையான காலனியாதிக்கம்’ (colonialism of a special type) என்று குறிப்பிட்டது. அந்த காலனியாதிக்கத்திற்கு எதிராக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC), தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP), தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பரந்த கூட்டணிகளை உருவாக்கின.

மார்க்சிய-லெனினியம் மற்றும் காலனியாதிக்க எதிர்ப்புக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், ‘தேசிய ஜனநாயகப் புரட்சி’ (National Democratic Revolution) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது. சோசலிச மாற்றத்திற்கு முன்பாக நிறவெறி மற்றும் வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சியை வீழ்த்துவது ஒரு அவசியமான கட்டம் என்று இந்த உத்தி முன்மொழிந்தது. 1955 ஆம் ஆண்டின் ‘சுதந்திர சாசனம்’ (Freedom Charter) ஜனநாயக, தேசியவாத மற்றும் சோசலிசத்தை அமைப்பது தொடர்பான விருப்பங்களை ஒன்றிணைத்து இந்த பரந்த கூட்டு அரசியலை வெளிப்படுத்தியது.

இதே போல லத்தின் அமெரிக்காவில், ஐக்கிய முன்னணி வெவ்வேறு வடிவங்களை எடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பாலும் பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முற்போக்கு தேசியவாத பிரிவுகளுடன் கூட்டணி வைப்பதை வலியுறுத்தும் அகிலத்தின் உத்திகளையே பின்பற்றின. இருப்பினும், 1959 ஆம் ஆண்டின் கியூப புரட்சி அந்த கண்டம் முழுவதும் புரட்சிகர சிந்தனையை மாற்றியமைத்தது. பிடல் காஸ்ட்ரோ மற்றும் ‘ஜூலை 26 இயக்கம்’ (July 26 Movement) ஆகியவை, ஒரு பாரம்பரிய தொழில் துறை பாட்டாளி வர்க்கம் இல்லாமலேயே கொரில்லா போரும் தேசியவாத புரட்சியும் சோசலிசத்தை நோக்கி தீவிரமடைய முடியும் என்பதை நிரூபித்தன. கியூபா லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் போராட்டங்களை இணைக்கும் ‘மூன்று கண்டங்களின் ஒற்றுமையின்’ (tricontinental solidarity) அடையாளமாக மாறியது.

1966 இல் ஹவானாவில் நடந்த மூன்று கண்டங்களின் மாநாடு (Tricontinental Conference), ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணிகளின் உலகளாவிய வரலாற்றில் ஒரு உச்சக்கட்டமாக அமைந்தது. காலனியாதிக்கம், முதலாளித்துவம் மற்றும் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைக்க ஏழை நாடுகளைச் சேர்ந்த புரட்சிகர இயக்கங்கள் அங்கு கூடின. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க மக்களின் ஒற்றுமை அமைப்பு (OSPAAAL) தேசிய விடுதலையில் வேரூன்றிய ஒரு சர்வதேசப் பார்வையை முன்வைத்தது. இது பாரம்பரிய ஐரோப்பிய மார்க்சியத்திலிருந்து தெற்குலக நாடுகளை மையமாகக் கொண்ட புரட்சிகரப் பார்வையை நோக்கிய ஒரு தீர்க்கமான மாற்றமாகும். ‘மூன்றாம் உலக நாடுகள்’ [வளரும் நாடுகள்] என்பது பின்தங்கிய நிலையின் செயலற்ற பகுதியாகப் பார்க்கப்படாமல், ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியின் முதன்மைப் போர்க்களமாகக் கருதப்பட்டது.

தேசிய விடுதலை மார்க்சியம் அரபு புரட்சிகர இயக்கங்கள் மீதும் தாக்கம் செலுத்தியது. பாலஸ்தீனத்தில், பாலஸ்தீன விடுதலையிற்கான மக்கள் முன்னணி (PFLP) போன்ற அமைப்புகள் மார்க்சியத்தைக் காலனியாதிக்க எதிர்ப்புத் தேசியவாதத்துடன் இணைத்தன. எகிப்தில், கமல் அப்தெல் நாசரின் அரபு சோசலிசம் அரசு நடத்தும் வளர்ச்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பான்-அரபு (ஒன்றுபட்ட அரபு) ஒற்றுமையை ஊக்குவித்தது. பல தேசியவாத அரசாங்கங்கள் கச்சிதமான மார்க்சிய அரசாங்கங்களாக இல்லாவிட்டாலும், அவை காலனித்துவ சார்புநிலைக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் அறிவுஜீவிகளிடையே கூட்டணிகளை நாடியதன் மூலம் ஐக்கிய முன்னணி அரசியலின் கூறுகளைப் பகிர்ந்து கொண்டன.

வரம்புகள்

நவ-காலனியத்தின் சாராம்சம் என்னவென்றால், இதற்கு உட்பட்ட [நவ-காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட] ஒரு நாடு கோட்பாட்டளவில் சுதந்திரமானதாகவும், சர்வதேச இறையாண்மைக்கான அனைத்து வெளிப்படையான அடையாளங்களையும் கொண்டதாகவும் திகழ்கிறது. ஆனால் உண்மையில், அதன் பொருளாதார அமைப்பும் அதன் மூலம் அதன் அரசியல் கொள்கையும் வெளியிலிருந்துதான் [ஏகாதிபத்திய நாடுகளால்] வழிநடத்தப்படுகின்றன.

நவ-காலனியாதிக்கம்: ஏகாதிபத்தியத்தின் இறுதி கட்டம் — குவாமே நக்ருமா

இந்த முரண்பாடுகள் சுதந்திரத்திற்குப் பிறகு தற்செயலாகத் தோன்றிய பலவீனங்கள் அல்ல, மாறாக ஐக்கிய முன்னணி திட்டத்திற்குள்ளேயே பொதிந்திருந்தவையாகும். இருபதாம் நூற்றாண்டு முழுவதும், தேசியவாதம் சமூகப் புரட்சிக்கான ஒரு கருவியாக மாற முடியுமா அல்லது அது இறுதியில் புதிய ஆளும் வர்க்கங்களை நிலைநிறுத்த மட்டுமே பயன்படுமா என்று காலனியாதிக்க எதிர்ப்பு மார்க்சியவாதிகள் விவாதித்தனர். பிரான்ட்ஸ் ஃபனான் தனது பூமியின் பாவப்பட்டவர்கள் (The Wretched of the Earth) எனும் நூலில், பின்-காலனித்துவ முதலாளித்துவம் (postcolonial bourgeoisie) என்பது பெரும்பாலும் ஒரு இடைத்தரகர் வர்க்கமாகவே மாறுகிறது என்றும், அதன் வரலாற்றுச் செயல்பாடு சமூகத்தை மாற்றுவது அல்ல, மாறாக உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கிற்குள் இருக்கும் சார்புநிலையை நிர்வகிப்பது மட்டுமே என்றும் எச்சரித்தார்.

புதிதாக சுதந்திரம் பெற்ற பல நாடுகளில், தேசிய விடுதலை அரசியல் ரீதியாக வெற்றியடைந்தது, ஆனால் சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையின் பொருளாதாரக் கட்டமைப்புகள் பெரும்பாலும் அப்படியே நீடித்தன. நிலப்பிரபுத்துவம், தரகு முதலாளிகள் (கம்ப்ராடோர்) உயர் வர்க்கம், அன்னிய மூலதனம் மற்றும் இராணுவச் சார்புநிலை ஆகியவற்றின் தொடர்ச்சி, ஆழமான சமூக மாற்றம் இல்லாத அரசியல் இறையாண்மையின் வரம்புகளை வெளிப்படுத்தியது. எனவே, ஐக்கிய முன்னணியின் வரலாற்றை வெறும் காலனியாதிக்க எதிர்ப்பின் வெற்றிக் கதையாக மட்டும் புரிந்து கொள்ள முடியாது, மாறாகத் தேசியவாதம், வர்க்கப் போராட்டம் மற்றும் முதலாளித்துவத்தின் உலகளாவிய கட்டமைப்புகளுக்கு இடையே தீர்க்கப்படாத பதற்றங்களின் வரலாறாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான உறவு ஒரு தொடர்ச்சியான பிரச்சனை ஆகும். பல சந்தர்ப்பங்களில், சுதந்திரம் அடைந்தவுடன் தேசியவாதம் மட்டும் பேசிய தலைவர்கள் இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கினர். சுதந்திரத்திற்குப் பிந்தைய அல்ஜீரியாவின் வரலாறு அல்லது 1965 இல் இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட விதம் ஆகியவை இந்தக் கூட்டணிகளின் பலவீனத்தை நிரூபித்தன. கம்யூனிஸ்டுகள் சில சமயங்களில் வர்க்கப் போராட்டத்தைத் தேசியவாதத்திற்கு அதிகமாகக் (அடிபணிந்து விட்டனர்] கீழ்ப்படுத்திவிட்டனர் என்றும், இதனால் காலனித்துவத்துக்கு பிறகு முதலாளித்துவ வர்க்கங்கள் சமூக உறவுகளை மாற்றியமைக்காமல் தங்கள் அதிகாரத்தை ஒருங்கிணைக்க முடிந்தது என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

காலனித்துவத்துக்கு பின் உருவான பல அரசாங்கங்கள் நிலச் சீர்திருத்தம், அரசுடைமையாக்கள் மற்றும் மக்கள் நல திட்டங்கள் என சோசலிசத்தால் ஈர்க்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை ஏற்றுக்கொண்டன. ஆயினும் இந்த நாடுகள் பெரும்பாலும் சர்வாதிகார மற்றும் அதிகாரத்துவ நாடுகளாக மாறின. தேசிய விடுதலை என்பது வெகுஜனங்களிடமிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு தரகு முதலாளித்துவத்தின் ஆட்சியாக சீரழியக்கூடும் என்று ஃபனான் [frantz fanon] எச்சரித்தார். ஃபனானைப் பொறுத்தவரை, உண்மையான விடுதலைக்கு வெறும் அரசியல் சுதந்திரம் மட்டும் போதாது, சமூகப் புரட்சி தேவை.

ஐக்கிய முன்னணி உத்தியின் மைய முரண்பாடு தேசியவாதத்திற்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையிலான உறவில் இருந்தது. சோசலிசத்திற்கு முன்பாக தேசிய விடுதலை நடக்க வேண்டும் என்று வாதிட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகள் சில நேரங்களில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இயக்கங்களைத் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினருடனான கூட்டணிகளுக்குக் கீழ்ப்படிந்தன. இந்த உத்தி காலனித்துவ ஆட்சியை வீழ்த்தியது. அதே வேளையில், சுதந்திரத்திற்குப் பிறகு உள்ளூர் ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவ மற்றும் உயர்வு தாழ்வுடன் இருந்த சமூகக் கட்டமைப்புகளைப் பாதுகாத்து தங்கள் அதிகாரத்தை ஒருங்கிணைக்கவும் அனுமதித்தது. பல சந்தர்ப்பங்களில், இடதுசாரிகளின் முன்னாள் கூட்டாளிகளே பின்னர் கம்யூனிஸ்ட் மற்றும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கினர்.

ஐக்கிய முன்னணி உலகளாவிய முதலாளித்துவத்தின் கட்டமைப்பு ரீதியான ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டது. காலனித்துவ ஆட்சிக்கு பிறகு உருவான பல அரசுகள் அரசாங்கத்தின் நேரடி முதலீடுகள் மூலமான வளர்ச்சியைப் பின்பற்றியதுடன் சோசலிச முழக்கங்களைப் பயன்படுத்திய போதிலும் பொருளாதார ரீதியாக சர்வதேச சந்தைகள், அன்னிய மூலதனம் மற்றும் பனிப்போர் ஆதரவு ஆகியவற்றையே சார்ந்திருந்தன. சோவியத் யூனியனின் நெருக்கடியும் நவதாராளவாத உலகமயமாக்கலின் எழுச்சியும் இந்த பலவீனங்களை அம்பலப்படுத்தின. உலகளாவிய பொருளாதார ஒழுங்கையே மாற்றியமைக்காமல், பல தேசிய விடுதலைத் திட்டங்கள் புதிய வடிவங்களிலான சார்புநிலைக்குள் உறிஞ்சப்பட்டன, இது ஏகாதிபத்தியத்தைத் தாண்டிச் செல்வதற்கான ஒரு வழியாக வெறும் தேசியவாதத்தின் வரம்புகளை வெளிப்படுத்தியது.

ஒரு வரலாற்றுத் திட்டம்

மேற்குலக நாடுகளில் ஐக்கிய முன்னணியின் வரலாறு மார்க்சியத்தின் மறுவடிவமைப்பையே வெளிப்படுத்துகிறது. காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் அனுபவங்கள் மூலம், மார்க்சியம் அதன் ஐரோப்பிய தோற்றத்தைத் தாண்டிச் சென்று, தேசியவாதம், விவசாயிகளை அணிதிரட்டுவது மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டது. காலனித்துவப் பிரச்சினை குறித்த அகிலத்தின் ஆரம்பகால விவாதங்கள் தத்துவார்த்த அடித்தளத்தை அமைத்தன, ஆனால் சீனா, வியட்நாம், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு உலகின் புரட்சிகரத் தலைவர்கள் இந்த யோசனைகளை நடைமுறையின் மூலம் மறுவடிவமைத்தனர். சோசலிசத்திற்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்திற்கும் இடையிலான இந்த சந்திப்பிலிருந்தே தேசிய விடுதலை மார்க்சியம் உருவானது. எனவே, இந்த வளமான மார்க்சிய மரபை ‘ஐரோப்பிய மையவாதம்’ (Eurocentric) என்று அழைப்பது முற்றிலும் நகைப்புக்குரியதாகும்.

இறுதியில், ஐக்கிய முன்னணி என்பது வெறும் ஓர் அரசியல் உத்தி மட்டுமல்ல. தெற்குலக நாடுகளில் அது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை முறியடிப்பதையும், கூட்டு இறையாண்மையின் புதிய வடிவங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திட்டமாக மாறியது. சுரண்டல், சார்புநிலை மற்றும் உலகளாவிய சமத்துவமின்மைக்கு எதிராக பல்வேறு சமூகச் சக்திகளை ஒன்றிணைக்க இயக்கங்கள் முயலும் இடங்களில் எல்லாம் அதன் மரபு இன்றும் உயிர்ப்புடன் வாழ்கிறது.

– பேரா.விஜய் பிரசாத்,

ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமையன்று தொடர் 4 வெளியாகும்…

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *