Tamil Marx

தமிழ் நாடு

சட்டமன்றத்தில் திசைதிருப்பப்படும் மக்கள் பிரச்சனைகள்

சட்டமன்றத்தில் திசைதிருப்பப்படும் மக்கள் பிரச்சனைகள்
  • PublishedJune 24, 2026

சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் வழக்கம் போலப் பேசி முடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரது உரைகளை உங்களில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருக்கக்கூடும்.

ஆனால், இரு தரப்பிலும் பஞ்ச் வசனங்களும், ரீல்ஸ் கன்டென்ட்டுகளும், ஸ்கிரிப்ட் உரைகளும் நிறைந்திருந்ததே தவிர, ஏழை எளிய மக்களின் நியாயமான, உணர்வுபூர்வமான பிரச்சனைகள் எதைப் பற்றியும் அங்கு விரிவான விவாதங்கள் நடக்கவில்லை.

சட்டமன்றத்தை இப்படி ஒரு அரசியல் மேடையாக அணுகுவதுதான் இங்குள்ள கட்சிகளின் காலம் காலமான வரலாறு. இடதுசாரி (கம்யூனிஸ்ட்) கட்சி எம்.எல்.ஏ-க்களின் உரைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனைகளைப் பேசும் இடமாக இல்லாமல், அரசியல் பேசும் மேடையாகவே மாற்றப்பட்டுள்ளது ஒரு மோசமான அனுபவமாகும்.

பஞ்ச் வசனங்களால் திசைதிருப்பப்படும் அடிப்படைப் பிரச்சினைகள்!

எதிர்க்கட்சித் தலைவர் மின்வெட்டுப் பற்றிப் பேசினாலும், அதில் ஏழை எளிய மக்கள் அன்றாடம் படும் துயரங்கள் என்ன? அதனை அரசு எப்படிச் சரிசெய்யப் போகிறது அல்லது என்ன செய்ய வேண்டும் எனப் பொறுப்புடன் விவாதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஆளுங்கட்சியினரைக் கலாய்க்கும் வகையிலும், விமர்சிக்கும் வகையிலுமே அவரது உரை அமைந்திருந்தது. சட்டமன்றத்தை இப்படிப்பட்ட அரசியல் மேடையாகப் பயன்படுத்தக் கூடாது என்ற புரிதல் எதிர்க்கட்சிக்கு வேண்டும்.

அதேபோல், “எங்கள் கூட்டணியில் இருந்து, எங்கள் உடன்பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று, எங்கள் தயவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் பேசியது ஏற்புடையதல்ல.

மறுபுறம், முதல்வர் விஜய்யின் பேச்சும் இதே பாணியில்தான் அமைந்திருந்தது. குறிப்பாக, தனது உரையை முடிக்கும்போது அவர் கூறிய ‘அப்பாவை காணவில்லை’ என்ற குட்டிக்கதை, சமூக ஊடகங்களில் மிக மோசமான விவாதங்களை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்ற பெயரில், ‘கணவனைத் தேடும் மனைவி’ என மற்ற கட்சிகள் தரம் தாழ்ந்த பிரச்சாரங்களைச் செய்யத் தொடங்கிவிட்டன.

இன்று ஒட்டுமொத்தத் தமிழக அரசியலும், ஊடக விவாதங்களும் இந்த ‘குட்டிக்கதை-எதிர்வினைகளுக்குள்’ சுருங்கிவிட்டன. ஒரு பக்கம் உதயநிதி பேச்சையும் மறுபுறம் விஜய் பேச்சையும் ரீல்ஸ்களாக பதிவிட்டு அவர்களது ரசிகர்களும் ஆதரவாளர்களும் புலங்காகிதம் அடைந்துகொண்டுள்ளனர்.

நியாயமாக, வேலையின்மை, மின் வெட்டு, தனியார் மயம், நீட் தற்கொலைகள், மாநிலத்தின் நிதி நிலை, தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலன், சாதி ஆணவப்படுகொலைகள், பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் விவாதப்பொருளாக மாறி, அதற்கு அரசு என்ன தீர்வு தரப்போகிறது என்ற கேள்வி தான் சட்டமன்றத்திலும் அதனைத்தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் எழுந்திருக்க வேண்டும். ஆனால், இரு பிரதான தலைவர்களும் பொறுப்பின்றி நடந்துகொண்டதால், இன்று ஒட்டுமொத்தச் சூழலும் திசைதிருப்பப்பட்டுள்ளது.

சொல்வது ஒன்று; செய்வது ஒன்று – இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?

முதலாளித்துவக் கட்சிகளின் வழக்கமான செயல்பாட்டு முறை இதுதான் என்பதை நாம் இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு தொழிலாளர் பிரச்சினைகள், துப்புரவுத் தொழிலாளர்கள் துயரங்கள், வேலைவாய்ப்பின்மை என அத்தனைக்கும் கடந்த கால தி.மு.க/ அதிமுக அரசுக்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த கால ஆட்சியில் நிலவிய கடுமையான வேலையின்மை, தொழிலாளர் விரோதப் போக்குகள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு போன்ற, மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட நேரடித் தாக்கங்களே, தற்போது த.வெ.க ஆட்சி அமைப்பதற்கான மிக முக்கியமான காரணங்களுள் ஒன்றாக பார்க்க வேண்டியுள்ளது.

வேலையின்மை குறித்தும், தொழிலாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் உரிமைகள் குறித்தும் தற்போதைய முதல்வர் தேர்தலுக்கு முன்பாக பேசியவர் தான். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த அரசு என்ன செய்துள்ளது? தமிழகத்தின் 14 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார்மயம் (Privatization) செய்யும் ஆபத்தான நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது.

தொழிலாளர் நலனில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகக் கடந்த காலத்தில் தி.மு.க அரசு எப்படிச் செயல்பட்டதோ, அதேபோலத்தான் தற்போதைய த.வெ.க அரசும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது எவ்வித அக்கறையும் இன்றிச் செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கும் முதலாளிகளுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து, உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றிலடிக்கும் இந்தச் செயல்பாட்டில் எங்கே உள்ளது மாற்றம்?

இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?

மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு…

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி, தங்களின் முதலாளித்துவ அரசியலைத் தக்கவைத்துக்கொள்வதுதான் இந்த இரு கட்சிகளின் உத்தியாக உள்ளது. எனவே, உண்மையாகவே மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை மீட்க வேண்டும் என்ற உண்மை நோக்கத்தோடு வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திற்குள் சென்றுள்ள எம்.எல்.ஏ-க்கள், இந்த விமர்சனங்களை நேர்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரீல்ஸ் அரசியலையும், திசைதிருப்பல்களையும் செய்யாமல், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நல்ல வாழ்க்கைக்காகவும் சட்டமன்றத்திற்குள் சரியான பாதையில் பயணிக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்!

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *