Tamil Marx

சர்வதேசம் தொடர்கள்

தொழிலாளி வர்க்கம் பிளவுபட்டு நிற்பதற்கு நேரமில்லை-பேரா. விஜய் பிரசாத்

தொழிலாளி வர்க்கம் பிளவுபட்டு நிற்பதற்கு நேரமில்லை-பேரா. விஜய் பிரசாத்
  • PublishedJune 21, 2026

“மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. எனவே இடதுசாரி சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை இந்த உலகிற்கு உள்ளது. தொழிலாளி வர்க்கத்திற்குப் பிளவுபட்டு நிற்பதற்கு நேரமில்லை”.

இடதுசாரிகளின் ஒற்றுமைக்கான தேவை என்பது ஏதோ ஆசையல்ல. அது ஒரு திட்டவட்டமான அரசியல் தேவையாகும். முதலாளித்துவ நெருக்கடி தீவிரமாகும் நேரத்திலும், சமத்துவமின்மை, ஏகாதிபத்தியப் போர், சுற்றுச்சூழல் பேரழிவு, ஜனநாயக மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் நிலவும் இக்காலத்தில் இடதுசாரிகள் சிதறி இருப்பது சமூகத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாளி வர்க்கத்தை பலவீனப்படுத்துகிறது. எனவே தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை, தெளிவு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவதே இன்றைய சூழலில் அனைத்து இடதுசாரி சக்திகளின் முதன்மையான கடமையாகும்.

ஆளும் வர்க்கங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இருப்பதால் இந்த ஒற்றுமை அவசியமாகிறது. மூலதனம் நாடுகளின் எல்லைகளைக் கடந்து எளிதாக பயணிக்கிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் ஒன்றுபோல மக்கள் மீதான ஒடுக்குமுறையையும், சிக்கன நடவடிக்கைகளையும் (நலத்திட்டங்களை வெட்டுவது, பொதுத் துறைகளுக்கான முதலீட்டை குறைப்பது அல்லது நிறுத்துவது) நிறுத்து கின்றன. மேலும் பிற்போக்குத்தனமான சித்தாந்தங்கள் சக்திவாய்ந்த ஊடகங்கள் மற்றும் சமூக ஊடங்கள் மூலமாக பரப்பப்படுகின்றன.

சிதறி கிடைக்கிற, குறுங்குழுவாத இடதுசாரி அமைப்புகளால் இந்த மோசமான அதிகாரத்திற்கு எதிராக தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திறமையாக பாதுகாத்துவிட முடியாது. அதுமட்டுமல்ல ஒரு முற்போக்கான திட்டத்தை முன்னெடுப்பது என்பது இன்னும் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். தொழிலாளர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான சுரண்டலை மொத்தமாகத் தான் எதிர்கொள்கிறார்கள். எனவே அவர்களின் [கம்யூனிஸ்ட்களின்]எதிர்வினையும் கூட்டாகவே இருக்க வேண்டும்.

இத்தகைய பார்வையை முன்வைப்பதால் அரசியல் [இடதுசாரிகளுக்கு இடையிலான] வேறுபாடுகள் முற்றிலும் மறைந்துவிடும் என்று எடுத்துக்கொள்ள தேவையில்லை. இடதுசாரிகள் எப்போதும் பல்வேறு மரபுகள், யுக்திகள், செயல்திட்டங்களை கொண்டுள்ளனர். கொள்கைகள், யுக்திகள், மாற்றத்திற்கான திட்டங்கள் குறித்த வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை.

இவை பல நேரங்களில் அவை ஆரோக்கியமானவையாக உள்ளன. தீவிரமான அரசியல் கேள்விகளுக்கு விவாதங்கள் தேவை. ஆனால் அத்தகைய கருத்து வேறுபாடுகள் ஒரு தரப்பு முடங்கி போவதற்கோ அல்லது இருதரப்பினரது அழிவிற்கோ அடிப்படையாக அமைந்துவிடக் கூடாது. தொழிலாளி வர்க்கத்தின் தொடர் போராட்டத்தைக் களைத்து விடாமல், வேறுபாடுகளுடன் இருந்தாலும் இணைந்து முன்னேறுவது என்பதற்கான செயல் வடிவங்களைக் கண்டறிவதே தற்போதைய பணியாகும்.

முற்போக்கு இயக்கங்களின் வரலாறு முழுமையான சித்தாந்த உடன்பாட்டை விட, செயல்பாட்டில் காட்டும் ஒற்றுமையே பெரும்பாலும் உறுதியானதாக இருக்கிறது என ஒரு முக்கியமான பாடத்தைக் நமக்கு சொல்லித் தருகிறது. தொழிலாளர்கள் போராட்டகளின் மூலமே கற்றுக்கொள்கிறார்கள். தனியார்மயமாக்கலுக்கு எதிராக, பாசிசத்திற்கு எதிராக, போருக்கு எதிராக, தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, அல்லது நில உரிமை, ஊதியம் உயர்வு, வீடு கேட்டும், கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டு இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைந்து போராடும்போது அவர்கள் வெற்றிகளை மட்டுமல்ல, மக்களிடையே நம்பிக்கையையும் தான் கட்டியெழுப்புகிறார்கள். வெகுஜன இயக்கங்கள், தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து தனிமைப்படுத்தும் முடிவற்ற வாதப் பிரதிவாதங்களைவிட இந்த ஒன்றுபட்ட கூட்டுப் போராட்டங்களே அரசியல் தெளிவை உருவாக்கும்.

குறுங்குழுவாதம் (Sectarianism) மக்களைப் பலவீனப்படுத்துகிறது. இடதுசாரி அமைப்புகள் தங்களை வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட தோழர்களாகப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் முதன்மை எதிரிகளைப்போல நடத்தும்போது, அதனால் பயனடைபவர்கள் முதலாளித்துவ மற்றும் பிற்போக்கு சக்திகள் மட்டுமே.

இந்த முடிவற்ற பிளவு சாதாரண மக்களைக் குழப்புகிறது, இடதுசாரிங்களுடன் அவர்களின் பங்கேற்பைச் சோர்வடையச் செய்கிறது. மேலும் அரசியல் மீதே ஒரு விரக்தியை உருவாக்குகிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு இடையே தங்களின் அமைப்பின் நலன்களை பாதுகாக்கும் போட்டிகள் தேவையில்லை. அவர்களுக்குத் தேவை கூட்டு அதிகாரத்தை முன்னெடுக்கும் திறன் கொண்ட ஆயுதம் மட்டுமே.

எனவே, ஒரு முதிர்ந்த இடதுசாரி அரசியலுக்கு கருத்து வேறுபாடுகளில் ஒழுக்கம் தேவைப்படுகிறது. விவாதங்கள் எங்கு தேவையோ, எங்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்கால உத்திகளை தெளிவுபடுத்த வேண்டுமோ அங்கு மட்டுமே அந்த விவாதம் நடக்க வேண்டும். ஆனால் அதுவே இடதுசாரிகளுக்கு இடையேயான நிரந்தரமான பகிரங்கமானப் போராக மாறக் கூடாது. ஒரு இடதுசாரிகளுக்கு இடையிலான திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான வேறுபாடுகளை தீவிரமாகவும் அதேநேரத்தில் பொறுமையுடனும் அணுக வேண்டும். அவற்றோடு அப்படி எழுகின்ற கருத்து வேறுபாடு மக்களின் ஒற்றுமையையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கிறதா அல்லது அதற்கு தடையாக இருக்கிறதா என்று எப்போதும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அதாவது எளிமையானதாக சொல்லவேண்டுமெனில் இடதுசாரிகள் தங்களது செயல்பாட்டில் ஐக்கிய முன்னணியாக இருக்க வேண்டும். தேவைப்படும்போது மட்டுமே கருத்து வேறுபாடு விவாதம் இருக்க வேண்டும்.

இடதுசாரிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த முன்னணி (United front) என்பது மிக முக்கியமான தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இது பல்வேறு இடதுசாரி அமைப்புகள் தங்களின் அரசியல் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டே, உடனடிப் போராட்டங்களை நோக்கி ஒன்றிணைந்து செயல்பட அனுமதிக்கிறது. இத்தகைய ஒற்றுமை சித்தாந்த வேறுபாடுகளை அழிக்காது. அது அமைப்புகளுக்கு இடையேயான சிறுபோட்டியை விட தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கே முன்னுரிமை தருகிறது. தொழிலாளர்கள் தங்களின், கூட்டு வலிமையைக் காணும்போதே நம்பிக்கையைப் பெறுகிறார்கள். அதுவே பிளவுகளைக் காணும்போது நம்பிக்கை பெறுவதில்லை.

இன்று இடதுசாரிகள் இந்த பொறுப்புணர்வை தீவிரமாக மீட்டெடுக்க வேண்டும். ஒவ்வொரு அமைப்பும், கட்சியும், சங்கமும், இயக்கமும் தன் செயல்பாடுகளை உழைக்கும் மக்களின் அரசியல் கல்வி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமைக்கு பங்களிக்கிறதா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த ஒற்றுமையின் நோக்கம் என்பது ஒரே மாதிரியான சீரான தன்மை இருக்க வேண்டும் என்பதல்ல. கூட்டுப் போராட்டம் மட்டும் தான் அதன் நோக்கம். இத்தகைய ஒற்றுமை இல்லையெனில், நமது காலத்தில் இப்போது உருவாகியுள்ள நெருக்கடிகளானது முதலாளித்துவத்திற்கும் பிற்போக்குத்தனத்திற்கும் சாதகமானதாக மட்டுமே இருக்கும். அந்த ஒற்றுமை இருந்தால் தான், ஒரு ஜனநாயகம் கொண்ட, சோசலிச மற்றும் மனிதாபிமானம் மிக்க எதிர்காலத்திற்கான சூழல் உருவாகும்.

மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. எனவே இடதுசாரி சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை இந்த உலகிற்கு உள்ளது. தொழிலாளி வர்க்கத்திற்குப் பிளவுபட்டு நிற்பதற்கு நேரமில்லை.

 

பேராசிரியர் விஜய் பிரசாத்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *