Tamil Marx

சர்வதேசம் மத்திய கிழக்கு

ஈரான் போர் வளரும் நாடுகளுக்கானது-பிரபாத் பட்நாயக்

ஈரான் போர் வளரும் நாடுகளுக்கானது-பிரபாத் பட்நாயக்
  • PublishedMarch 27, 2026

 அமெரிக்கா நடத்தி வரும் போர்  ஈரானுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளரும் தெற்குலக நாடுகளுக்கும் அவர்களின் பொருளாதாரத்திற்கும் எதிரானது. இந்தப் போரில் ஈரான் வென்றாலும் தோற்றாலும் தெற்குலக  அது சர்வதேச அரசியலில் எதிரொலிக்கும்.

ஈரான் வென்றால் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வளரும் நாடுகளின் போராட்டத்திற்கு ஊக்கம் தரும். ஒரு வேலை தோற்றால் வெனிசுலாவில் செய்தது போல எந்த நாட்டில் எப்போது வேண்டுமானாலும் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆட்சியை கவிழ்கலாம் பிற நாட்டு தலைவர்களை கொலை செய்யலாம் என அமெரிக்காவின்  துணிச்சல் மேலும் அதிகமாகும்.

இது பற்றி ‘பிரேக் த்ரூ நியூஸ்’ (Breakthrough News) தளத்தின் ‘டிஸ்பாட்சஸ்’ (Dispatches) நிகழ்ச்சியில் ரானியா காலெக், மார்க்சிய பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக்கிடம் எடுத்த பேட்டியின் தமிழாக்கம்.

ரானியா காலெக்: ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகிறது. போரில் ஈரான் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடுவதன் மூலம் எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைத்து உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ஈரான் உலகப் பொருளாதாரத்தையே ஒரு போர்க்களமாக மாற்றுகிறதா? இந்த போர் உத்தி ஈரானுக்குச் சாதகமாகச் செயல்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

பிரபாத் பட்நாயக்: ஈரானுக்கு வேறு வழியில்லை என்றுதான் நான் நினைக்கிறேன் . அமெரிக்கா தனது ராணுவத்திற்காக ஒரு டிரில்லியன் டாலர் செலவிடுகிறது, ஆனால் ஈரானின் செலவோ சுமார் 8 பில்லியன் டாலர் மட்டுமே . அதாவது அமெரிக்காவின் செலவு ஈரானை விட 120 மடங்கு அதிகம். எனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து செய்யக்கூடிய ராணுவ நடவடிக்கைகளுக்கு ஈரானால் இணையாக ஈடுகொடுக்க முடியாது. அந்த நிலையில், ஈரான் இப்போது செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் உலக நாடுகளுக்கு ஒரு செய்தியைச் சொல்வதுதான். இந்தப் போர் தொடர்ந்தால் நீங்கள் பெரும் ஆபத்தில் இருப்பீர்கள், எனவே அமெரிக்காவையும் இஸ்ரேலையும் போரை நிறுத்தச் சொல்லுங்கள்”. இதுதான் ஈரானின் கையில் இருக்கும் மிக முக்கியமான ஆயுதம்.

ரானியா காலெக்:  ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 10% வரி விதிக்கப் போவதாக ஈரான் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 73 பில்லியன் டாலர் வரை அவர்களுக்குக் கிடைக்கலாம், இது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்கவும் போரினால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்யவும் உதவும். இது ஒரு புத்திசாலித்தனமான உத்தி போலத் தோன்றுகிறது, இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பது குறித்து உங்கள் கருத்து என்ன?.

பிரபாத் பட்நாயக்: அது ஒரு பக்கம் இருந்தாலும், எண்ணெய் கப்பல்களை சீன நாணயமான ‘யுவான்’ (Yuan) மூலம் பணம் செலுத்தச் சொல்வது டாலரின் ஆதிக்கத்தை அகற்றும் ஒரு முயற்சியாகும். இது உடனடியாக அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், இதற்கு ஒரு அடையாள மதிப்பு உண்டு. ஆனால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதை விட இஸ்ரேல் ஈரானின் எரிவாயு வயல்களைத் தாக்கியதும், அதற்குப் பதிலடியாக ஈரானும் மேற்காசியாவில் உள்ள எண்ணெய் வயல்கள் எரிசக்தி நிலையங்களை தாக்குவது அதிக கவலைக்குரிய விஷயமாகும். இது தொடர்ந்தால் உலக எண்ணெய் விநியோகம் நீண்ட காலத்திற்குப் பாதிக்கும். இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே தற்கொலைக்குச் சமமான ஒரு பேரழிவாகும். இஸ்ரேல் இப்போது கட்டுக்கடங்காமல் செயல்படுகிறது. இஸ்ரேல் ஈரானின் தலைவர்களைக் கொல்வது மற்றும் போரைத் தீவிரப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. இது மிகவும் அச்சமூட்டுகிறது.

ரானியா காலெக்: இஸ்ரேல் தெற்கு ஈரானில் உள்ள எரிவாயு வயல்களைத் தாக்கியது. ஈரான் உடனடியாகப் பதிலடி கொடுத்து வளைகுடா நாடுகளின் எண்ணெய் கட்டமைப்புகளை தாக்குவதாகக் கூறி, கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ட்ரம்ப் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறார் . மேற்காசிய நாடுகளில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் அழிக்கப்படுவது உலகின் எதிர்காலத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?.பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள, பல ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்ட இந்தக் நிறுவனங்களின் கட்டமைப்புகள் ஒரே இரவில் சரி செய்ய முடியாது. இது உலகச் சந்தைக்கு என்ன மாதிரியான பாதிப்பைக் கொடுக்கும்?.

பிரபாத் பட்நாயக்: ஹோர்முஸ் நீரிணை தற்காலிகமாக மூடப்பட்டால், போர் முடிந்தவுடன் நிலைமை சீராகிவிடும். இப்போது எண்ணெய் விலை உயர்வதற்குப் பற்றாக்குறையை விட, பற்றாக்குறை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் (speculation) காரணம். ஆனால் எண்ணெய் வயல்கள் தாக்கப்பட்டால், அது நம்மைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும், அது பெரும் பேரழிவாகும். இதஉ நடக்க ட்ரம்ப் வாய்ப்பு தர மாட்டார் என்று நம்புவோம். எண்ணெய் விலை உயர்ந்தால் அது மற்ற எல்லாப் பொருட்களின் விலையையும் உயர்த்தும் (பணவீக்கம்), இது ஏற்கனவே நடக்கத் தொடங்கிவிட்டது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் 84% எண்ணெய் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்குத்தான் செல்கிறது. இந்தியாவில் ஏற்கனவே சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவுகள், உரங்களின் விலை ஆகியவை உயர்ந்தால் அது உலகளாவிய உணவுப் பஞ்சத்திற்கும் வழிவகுக்கும்; இது மிகவும் மோசமான நிலையை நோக்கி தள்ளும்..

ரானியா காலெக்: அமெரிக்க அதிகாரிகள் இந்த சூழல் தங்களைப் பாதிக்காது என்று கூறுகிறார்கள் . பெட்ரோல் விலை உயர்வது குறித்து ட்ரம்ப் பேசும்போது, “எதிர் கால லாபத்திற்காகச் சிறிய வலி இது தாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார். அமெரிக்கா அதிக எண்ணெய் உற்பத்தி செய்வதால் தங்களுக்குப் பாதிப்பில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஈரானின் இந்த பொருளாதார அழுத்தம் அமெரிக்காவை எப்படிப் பாதிக்கும்?.

பிரபாத் பட்நாயக்: அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 125 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கர்கள் பெட்ரோல் விலை உயர்வை மிகவும் முக்கிய பிரச்சனையாகப் பார்ப்பார்கள். இது வரும் தேர்தல்களில் ட்ரம்ப்பின் செல்வாக்கைக் குறைக்கலாம், இதனால் அவர் போரை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகலாம். அமெரிக்காவிடம் சொந்த எண்ணெய் இருப்பு இருந்தாலும், விலை உயர்வு என்பது அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய பிரச்சனையாகும் .

ரானியா காலெக்: இது வெறும் எண்ணெய் மட்டுமல்ல, உரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலையையும் பாதிக்கும் . இது அமெரிக்க விவசாயிகளையும் பாதிக்கும் அல்லவா?. 

பிரபாத் பட்நாயக்: ஆமாம், அமெரிக்க விவசாயிகள் ஏற்கனவே உரங்கள் விலை உயர்வது பற்றி புகார் கூறி வருகிறார்கள். விலைவாசி உயரும்போது ட்ரம்ப் மீதான அதிருப்தி அதிகரிக்கும் . அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தவர்கள் இப்போது பலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாறத் தொடங்கியுள்ளனர். எனவே விலைவாசி உயர்வு ட்ரம்ப்பை போரை விரைவாக முடிக்கத் தூண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ரானியா காலெக்: தெற்குலக நாடுகள் (Global South) இதனால் எப்படிப் பாதிக்கப்படும்?.

பிரபாத் பட்நாயக்: தெற்கு நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி குறையும், இது ஒரு உலகளாவிய பொருளாதார மந்தநிலையை (Recession) உருவாக்கும். அமெரிக்காவால் டாலரை அச்சிட்டுத் தனது பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும். ஆனால் தெற்குலக நாடுகளின் நாணய மதிப்பு டாலருக்கு எதிராக வீழ்ச்சியடையும். இந்தியாவில் இப்போது ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ந்துள்ளது. இதனால் இறக்குமதி செலவு அதிகரித்து பணவீக்கம் கூடும். கடனை அடைக்க தெற்குலக நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தங்கள் கனிம வளங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், இது அந்நாடுகளில் மேலும் வறுமையை உண்டாக்கும்.

ரானியா காலெக்: வளைகுடா நாடுகளின் நிலை என்ன?. சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் அமெரிக்காவின் நண்பர்களாக இருந்தாலும் இப்போது பாதுகாப்பற்ற உணர்வில் இருக்கிறார்கள். 

பிரபாத் பட்நாயக்: போர் காரணமாக துபாய், அபுதாபி போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் மக்கள் செல்வது குறைந்துவிட்டது. அங்குள்ள தொழிலாளர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பத் துடிக்கிறார்கள். எண்ணெய் வளம் இருந்தாலும், அந்த நாடுகளும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும்.

ரானியா காலெக்: இஸ்ரேல் பொருளாதாரம் பற்றி உங்கள் கருத்து என்ன? 

பிரபாத் பட்நாயக்: இஸ்ரேல் முதல் முறையாகப் போரின் பொருளாதார வலியை இப்போது உணர்கிறது.அதன் விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுகின்றன, மக்கள் பதுங்கு குழிகளில் இருக்கிறார்கள். ஆனாலும் 80% இஸ்ரேல் மக்கள் போரை ஆதரிக்கிறார்கள். அவர்கள் (பாலஸ்தீனம், லெபனான், சிரியா, துருக்கியை ஆக்கிரமித்து அமைக்கப்படும்) ‘அகண்ட இஸ்ரேல்’ (Greater Israel) திட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். எனவே பொருளாதாரக் காரணங்களுக்காக இஸ்ரேல் போரை நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை.

ரானியா காலெக்: இந்தியா சந்திக்கும் பாதிப்பு பற்றிச் சொல்லுங்கள். 

பிரபாத் பட்நாயக்: இந்தியா முன்பு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியது, ஆனால் ட்ரம்ப்பின் அழுத்தத்தால் அதைக் குறைத்தது. இந்தியாவில் இப்போது சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடுதான் அதிகம், அது கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

ரானியா காலெக்: சீனா போன்ற நாடுகள் டாலரை விட்டு வெளியேறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

பிரபாத் பட்நாயக்: சீனா தனது சொத்துக்களை டாலரில் இருந்து மற்ற வடிவங்களுக்கு மாற்றி வருகிறது. இப்போதைக்கு டாலரின் ஆதிக்கத்தை யாராலும் உடனடியாக வீழ்த்த முடியாது என்றாலும், 30 நாடுகளுக்கு மேல் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால் அந்த நாடுகள் டாலரைத் தவிர்த்துத் தங்களுக்குள் வர்த்தகம் செய்யத் தொடங்கும் . இந்தப் போர் அந்த மாற்றத்தை வேகப்படுத்தும்.

ரானியா காலெக்: இது அமெரிக்கப் பேரரசின் பலவீனத்தையே காட்டுகிறது. பிரிட்டன் அதன் காலனி நாடுகளில் இருந்து செல்வத்தைச் சுரண்டியது. அமெரிக்காவிற்கு நேரடி காலனிகள் இல்லை, ஆனால் உலகம் முழுவதும் 900 ராணுவ முகாம்கள் உள்ளன. வெனிசுலா மற்றும் ஈரானின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் துடிப்பதற்குக் காரணமும் இதுதான். ஈரானின் வெற்றி அல்லது தோல்விதான் உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். 

பிரபாத் பட்நாயக்: ஆம், ஈரானின் எதிர்ப்பு தெற்குலக நாடுகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கும். ஈரானுடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்தால், அது மற்ற நாடுகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும்.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *