ஒழுக்கம் யாருக்கானது?-எரன்
பசியின் காரணமாக ஒரு ஏழை மனிதன் உணவைத் திருடுகிறான். அவன் ஒழுக்கக்கேடானவன், தண்டனைக்குரியவன் என்று அழைக்கப்படுகிறான். ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள வரிகளைச் செலுத்தாமல் தவிர்க்கிறது. ஆனால் அது நிதி திட்டமிடல் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு தொழிலாளி உடல் மற்றும் மனச்சோர்வால் சரிந்து விழுகிறான். அவன் வலிமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறான். ஒரு நாடு கோடிக்கணக்கான குடிமக்களை மருத்துவமும் சுகாதாரமும் வாங்க முடியாத நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று புகழப்படுகிறது. இந்த முரண்பாடு தற்செயலானது அல்ல, இது கட்டமைப்பு ரீதியானது.
வாழ்க்கையில் வெற்றி பெற நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது என்ன? “நேர்மையாக இருங்கள், கடினமாக உழையுங்கள், ஒழுக்கமாக இருங்கள், எதையும் குறை சொல்லாதீர்கள், எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நகருங்கள்” என்பதே. ஆனால் என்னுடைய கேள்வி ஒன்றுதான். நிலையான, பாதுகாப்பான வாழ்க்கை இல்லாதவர்களிடம் மட்டும் ஏன் ‘ஒழுக்கம்’ வலியுறுத்தப்படுகிறது?
எதார்த்த உலகம்
உலக சமத்துவமின்மை அறிக்கை 2026-ன் படி, உலக மக்கள்தொகையில் மேல்மட்டத்தில் உள்ள பத்து சதவீதத்தினர் மொத்த உலக வருமானத்தில் பாதிக்கும் மேற்பட்டதைக் கையில் வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கீழ்மட்டத்தில் உள்ள ஐம்பது சதவீத மக்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள். மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதத்தினர் மட்டுமே உலகின் பெரும் செல்வங்களை தம்வசம் வைத்திருக்கிறார்கள்.
இதன் பொருள் தெளிவானது, உலகில் செல்வம் இல்லை என்பதோ, போதிய அளவில் இல்லை என்பதோ உண்மையல்ல. இருக்கும் செல்வம் சமமாக பகிர்ந்து கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
ஆக, உலகில் செல்வம் ஏராளமாக இருந்தாலும், மக்கள் வாழ்க்கையில் பாதுகாப்பின்மை தொடர்கிறது என்றால், வறுமை என்பது தலைவிதி அல்ல. அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது — ஒரு சமூகக் கட்டமைப்பின் விளைவு.
இன்னமும் கூட ஒழுக்கம் என்பது ஏழ்மையில் உள்ளவர்களை நோக்கியே போதிக்கப்படுகிறது. பெரும் முதலாளிகளை நோக்கி “கொஞ்சம் சேர்த்தால் போதுமானது, கடுமையாக உழைத்து சம்பாதியுங்கள்” என்று யாரும் சொல்வதில்லை. ஒழுக்கம், அறநெறி பற்றிய ஆலோசனைகள் எப்போதும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அன்றாடம் ஓடிக்கொண்டிருப்பவர்களிடமே அறிவுறுத்தப்படுகின்றன.
இந்திய எதார்த்தம்
இந்தியாவில் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்தான உணவு, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் போன்ற அடிப்படைச் சேவைகள் கிடைக்காத இருபத்திமூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பல்பரிமாண ஏழைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சுமார் தொண்ணூறு சதவீதம் தொழிலாளர்கள் நிலையற்ற ஒப்பந்தங்கள், ஓய்வூதியமின்மை, வேலைப் பாதுகாப்பின்மை என முறைசாரா துறையில் உள்ளனர். படித்துப் பட்டம் பெற்ற கோடிக்கணக்கான இளைஞர்கள் போதிய ஊதியமுள்ள வேலையின்றி தவிக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் முயற்சியின்மையா? சோம்பேறித்தனமா? ஒழுக்கமின்மையா? மூன்றுமே அல்ல.
வறுமை, நல்லொழுக்கம், அதன் சுமை
சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான வறுமை குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கடுமையான வறுமை குறைந்திருந்தாலும், இந்தியாவில் ஆறு பேரில் ஒருவர் இன்னும் சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் போன்ற அடிப்படைச் சேவைகள் கிடைக்காத ஏழையாகவே உள்ளார்.
கோடிக்கணக்கானவர்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருநூற்றெழுபது ரூபாய்க்கும் குறைவாகவே வாழ்கிறார்கள். இது எந்த ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் போதுமானதன்று. இத்தகைய நிலையில் மக்களை நேர்மையாக இருக்கச் சொல்வது, கண்ணியமாக வாழ ஊக்குவிப்பதல்ல — துன்பத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு தந்திரம்.
வீட்டு வாடகை, உணவு, வேலை என்று தினமும் நிச்சயமற்ற நிலையில் காலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் ஒருவரிடம் சொல்லப்படுவது என்ன?
சூழலைப் பொறுத்து அமைதியாக இரு. அறத்தோடு இரு. ஒழுக்கத்தோடு இரு. நம்பிக்கையோடு இரு.
ஆனால் நம்பிக்கை வருமானத்தை மாற்றாது. பொறுமை சுகாதாரத்தை மாற்றாது. நேர்மை வேலைப் பாதுகாப்பை உறுதி செய்யாது.
வாழ்க்கை நிலையற்றதாக இருக்கும்போது, நமது தேர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. பசியுள்ளவர் வசதியானவரைப் போல் ஒழுக்கமாக நடந்துகொள்ள முடிவதில்லை. கடனில் மூழ்கும் தந்தை, சேமிப்பு வைத்திருக்கும் வசதியானவரைப் போல் கணக்கிடுவதில்லை. வேலை நீக்கத்திற்குப் பயந்து முழுக் குடும்பத்தையும் தாங்கும் தொழிலாளி, பொருளாதாரப் பாதுகாப்பானவரின் மன நிலையையும் வாய்ப்புகளையும் கொண்டிருப்பதில்லை. ஆனால் சமூகம் இவ்விருவரையும் ஒரே அளவுகோலால் மதிப்பிடுகிறது. இதுதான் இந்தச் சமூகத்தின் குருட்டுத்தனமான வியாக்கியானம்.
பொருளாதாரப் பாதுகாப்பின்மையின் உளவியல் விளைவு
பொருளாதார உறுதியற்ற தன்மை அளவிடக்கூடிய உளவியல் விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறைந்த வருமானத்திற்கும் அதிக பதட்டம், மனச்சோர்வு, நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவற்றிற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மனச்சோர்வையும் பதட்டத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பு உயர் பிரிவினரை விட மிகவும் அதிகம். ஏனென்றால் உயிர் வாழ்தலுக்கான அன்றாட மன அழுத்தம் ஏற்கனவே உள்ள சுமையை இன்னும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் தற்கொலைகளில் அதிர்ச்சியூட்டும் அளவிலான பகுதியினர் கடுமையான நிதி அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். பலர் மாதத்திற்கு எட்டாயிரத்து முன்னூறு ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் மாத வருமானத்தில் கிட்டத்தட்ட இருபது சதவீதத்தை சிகிச்சைக்காக செலவிடுகின்றன. இதனால் அவர்கள் வறுமைக்குள் இன்னும் ஆழமாக தள்ளப்படுகிறார்கள்.
இது ஒரு தனிமனிதரின் பலவீனம் அல்ல. இது உளவியல் வழியாக வெளிப்படும் பொருளாதார அழுத்தம். தொடர் பொருளாதார அழுத்தத்தில் சிக்கித்தவிக்கும் ஒருவரின் வாழ்க்கை முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் அவரது குணமோ, அணுகுமுறையோ, பலவீனமோ அல்ல — அது ஒரு கேடான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் விளைவு.
இங்கு நாம் எழுப்ப வேண்டிய கேள்வி:
“எந்த வகையான பொருளாதாரம் இந்த அழுத்தத்தை உருவாக்குகிறது?”
ஆனால் மாறாக, “உன் மனம் ஏன் வலிமையாக இல்லை?” என்று நாம் கேட்கும்போது, பிரச்சினைகளின் மூலக்காரணங்களை ஆராயாமல், ஒரு கேடான கட்டமைப்பின் தோல்வியை தனிமனிதரின் பலவீனம் என்று எளிதாக முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
ஒழுக்கத்தை ஆயுதமாக்குதல்
மேலே சொல்லப்பட்டவை ஏன் நீடிக்கின்றன? ஏனென்றால் ஒழுக்கத்தால் சமத்துவமின்மையை நிலை நிறுத்தவும் நியாயப்படுத்தவும் முடியும்.
தனிநபர்கள் தங்கள் கஷ்டங்களுக்கு தாங்களே காரணம் என்று நம்பினால், அவர்கள் பின்னணியில் உள்ள பொருளாதார ஏற்பாடுகளைக் கவனிக்க மாட்டார்கள், கேள்வி கேட்க மாட்டார்கள். ஒரு தொழிற்சாலையில் லாபம் வராததற்கான பழியை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டால், அவர்கள் வேலை இழப்பு பயத்தில் இன்னும் கடினமாக உழைப்பார்களே தவிர, பிரச்சினையின் மூலத்தை சிந்திக்க மாட்டார்கள். வேலையின்மை தங்கள் திறமையின்மை என்று இளைஞர்கள் நம்பினால், அவர்கள் போட்டியிடுவார்கள், விமர்சிக்க மாட்டார்கள், கேள்வி கேட்க மாட்டார்கள்.
இதனால் ஒழுக்கம் என்பது, சமூகக் கட்டுப்பாட்டுக்கான கருவியாகவும், வெளி உலகின் மீதுள்ள கோபத்தை தன்னை நோக்கியே திருப்பிவிடும் முறையாகவும், பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் கேடயமாகவும் மாறிவிடுகிறது.
மறைக்கப்படுவது என்ன?
பொருளாதாரம் வாழ்க்கை நிலைமைகளை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணி. ஆனால் மக்களிடையே இது தான் எப்போதாவது அரிதாக விவாதிக்கப்படுகிறது.
கீழ்மட்டத்தில் உள்ள தொண்ணூறு சதவீத உழைப்பாளிகளின் ஊதியங்கள் தேக்கமடைந்து, பாதுகாப்பின்மை பரவும்போது, மேல்மட்டத்தில் உள்ள வசதிபடைத்தவர்களின் செல்வம் அதிகரிக்கிறது. வீட்டு விலைகள் வருமானத்தை விட வேகமாக உயர்ந்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. மருத்துவச் செலவுகள் மலைத்தோற்றமளிக்கும்போது, பொதுச் சேவைகள் பலவீனமாக இருக்கும்போது குடும்பங்கள் கடனில் மூழ்கிவிடும்.
இந்தச் சேவைகள் அனைத்தும் ஒரு அரசு தன் குடிமக்களுக்கு உறுதி செய்ய வேண்டிய உரிமைகளும் கடமைகளும். ஆனால் ஒரு அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அது முதலாளிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கும். மக்கள் நலனெல்லாம் லாபவெறி முதலைகள் தின்றது போக எஞ்சிய மீதிம் மட்டுமே.
ஆயினும்கூட, ஒழுக்கப் பிரசங்கம் இந்த விசயங்களை கணக்கில் கொள்ளாமல், தனி நபர்களைக் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி தனிமைப்படுத்துகிறது. யாரோ சிலரின் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்புக்குள் உயிர் வாழும் நிலைமைகளுக்கு, அவர்கள் மட்டுமே பொறுப்பு என்று அவர்களை நம்ப வைக்கிறது.
அதன் விளைவாக மக்கள் அணிதிரண்டு கேள்விகேட்பதற்குப் பதிலாக, அமைதியான சகிப்புத்தன்மையை வரவேற்கிறது. தனக்கு இழைக்கப்படும் அனைத்து துன்பங்களையும் அநீதிகளையும் சகித்துக்கொண்டு வாழ்பவனை “பிழைக்கத் தெரிந்தவன்” என்று புகழ்கிறது. வறுமையிலும் நேர்மையாக இருப்பவரை “இரும்பு மனிதன்” என்று போற்றுகிறது. “துன்பப்படுவதை போற்றுதலுக்கு உள்ளாக்குகிறது.”
வெளி உலகிலிருந்து மட்டுமல்லாமல், கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், குடும்பம் என அனைவரிடமிருந்தும் அன்னியப்படுத்தப்பட்டு, பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்க வைக்கப்பட்டு, தினம் தினம் போராட்டமாக வாழும் பெரும்பான்மையான நாம் மட்டும் ஏன் ஒழுக்கம், நேர்மை, சகிப்புத்தன்மை, பொறுமை என பலவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்? நேர்மை, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவை ஏன் வறுமையோடு இணைந்தே இருக்க வேண்டும்?
இதைச் சொல்வதன் நோக்கம் ஒழுக்கத்தையும் நெறிமுறைகளையும் குறை சொல்வதல்ல. ஒழுக்கமும் நெறிமுறைகளும் மனித இனத்திற்கு அவசியமானவை. ஆனால் அவற்றின் கருத்தியலை முதலாளித்துவம் எவ்வாறு தனக்குச் சாதகமாக பயன்படுத்துகிறது என்பதை அம்பலப்படுத்துவதே இந்தக் கேள்விகளின் நோக்கம்.
ஒழுக்கத்தின் அர்த்தத்தை மீட்டெடுத்தல்
நேர்மை, ஒழுக்கம், பொறுப்பு — இவை அனைத்திற்கும் உயரிய மதிப்புகள் உண்டு. ஆனால் அவற்றின் அர்த்தம் ஒருவரின் சமூகப் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து மாறுகிறது.
உயிர் வாழ்வது என்பது, தன்னை மட்டுமல்லாமல் தன்னைப் போல் கோடிக்கணக்கான உழைப்பாளிகளையும் ஒடுக்கிச் சுரண்டும் அதிகாரத்திற்குக் கீழ்படிவதைச் சார்ந்திருக்கும்போது, ஒழுக்கம் அதிகாரத்திற்கான வற்புறுத்தலாக மாறும். பாதுகாப்பின்மை என்பது, சுற்றி நிலவும் அநீதிகளுக்கு எதிராக மௌனம் காப்பதை கட்டாயப்படுத்தும்போது, பொறுமை அடிபணிவின் மறு பெயராக மாறும். அதிகாரத்தின் மீதான பயம் நடத்தையை வடிவமைக்கும்போது, நன்னடத்தை சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
ஆகவே, ஒழுக்கத்திற்கு முதலில் சுதந்திரம் தேவை. சுதந்திரத்திற்கு பொருளாதாரப் பாதுகாப்பு தேவை. உணவு, தங்குமிடம், சுகாதாரம், நிலையான வாழ்வாதாரம் இல்லாமல் ஒழுக்கம் என்பது தன்னார்வமானதாக இருக்கவே முடியாது. அது சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு விதித்துள்ள விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
கம்யூனிசம் விடுதலை முழக்கம் மட்டுமல்ல அது ஒரு யுக்தி
பிரச்சனை கட்டமைப்பு ரீதியாக இருந்தால், தீர்வும் கட்டமைப்பு ரீதியாக இருக்க வேண்டும் கம்யூனிசம் அடிப்படையான ஒன்றை முன்மொழிகிறது. எந்த ஒரு மனிதனின் உயிர் வாழ்வும் சந்தை ஏற்ற இறக்கங்களை சார்ந்திருக்கக் கூடாது.
- சுகாதாரம் ஒரு உரிமை — வணிகப் பொருளல்ல.
- கல்வி ஒரு உரிமை — சலுகையல்ல.
- வீடு ஒரு குடும்பத்தின் உரிமை — கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யும் வாய்ப்பல்ல.
- வேலை வாய்ப்பும் வேலைப் பாதுகாப்பும் சமூகப் பொறுப்பு.
இந்த நிலைமைகள் உறுதி செய்யப்படும்போது தான் ஒழுக்கம் ஒவ்வொருவரிடமும் இயல்பாக வருகிறது. ஒருவரை பயமுறுத்தி நேர்மையாக இருக்க வேண்டிய காட்டாயம் ஏற்படுவதில்லை. பொறுப்பும் சுமையாக மாறுவதில்லை.
உண்மையான கேள்வி
எனவே மையக் கேள்விக்குத் திரும்புவோம். வாழ்க்கையைக் கூடப் பாதுகாக்க முடியாத மக்களிடமிருந்து ஏன் ஒழுக்கம், நேர்மை, பொறுமை இருக்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறது?
அரசும் அதன் சமூகமும் நேர்மையை விரும்பினால், முதலில் நீதியை உறுதி செய்ய வேண்டும். ஒழுக்கத்தை விரும்பினால், முதலில் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
அரசும் அதன் சமூகமும் மக்கள் பொறுப்பான குடிமக்களாக இருக்க வேண்டும் என விரும்பினால், முதலில் அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளை உறுதி செய்ய வேண்டும்.
இவற்றை எதையுமே உறுதி செய்யாமல், செல்வந்தர்களுக்கான அரசும் அதன் கட்டமைப்பும், குடிமக்களுக்கு ஒழுக்கப் பாடம் எடுப்பார்களேயானால், ஆப்பிள் மரத்தை நட்டுவிட்டு மாங்காய் காய்க்கவில்லை என்று கோபப்படுவதற்கு ஒப்பானதே.
முடிவாக
பொருளாதாரப் பாதுகாப்பில்லாத ஒழுக்கம் எளிதில் உடையக்கூடியது. ஒழுக்கத்தையும் நேர்மையையும் நன்னெறிகளையும் உண்மையிலேயே மதிக்கும் ஒரு சமூகம், அவை சுதந்திரமாக செழித்து வளரக்கூடிய நிலைமைகளை உருவாக்க வேண்டும். இல்லையெனில் அவை எல்லாம் ஏற்கனவே நிலைத்து நிற்க போராடுபவர்கள் மீது போடப்படும் எடைமிகுந்த சங்கிலியாகத்தான் இருக்கும். அந்தச் சங்கிலி கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டுமே தவிர போற்றப்படக் கூடாது.
ஆகவே அனைத்தையும் ஏற்றுக்கொள், பொறுமையாகவே இரு , மனதை சீர்படுத்திக்கொள் என்கிற குருட்டுத்தனமான அறிவுரைகளைப் புறந்தள்ளிவிட்டு, நாகரீகம் அடைந்த காலத்திலிருந்தே மனிதர்கள் சமூகமாகத்தான் இயங்குகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு மனித சமூகம் சந்திக்கும் எதுவுமே தனிப்பட்ட பிரச்சினையல்ல, அது சமூகம் சார்ந்தது என்று புரிந்து கொண்டு ஒட்டுமொத்த மனித இனத்தின் அவல நிலைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.
அதன் முதற்கட்டமாக, தவறென்று படும் எல்லாவற்றையும் நோக்கியும் “ஏன்?” என்ற கேள்வியை கேட்கத் தொடங்குங்கள் தோழர்களே.
“மனிதர்களின் இருப்பை தீர்மானிப்பது அவர்களின் உணர்வுகள் அல்ல, மாறாக அவர்களின் சமூக இருப்பே அவர்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.”
– கார்ல் மார்க்ஸ்
கட்டுரையாளர் : எரன்.