Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

இனக்  கல்வியின் மாற்றமும் முன்னேற்றமும்-அ.பாக்கியம்

இனக்  கல்வியின் மாற்றமும் முன்னேற்றமும்-அ.பாக்கியம்
  • PublishedMarch 11, 2026

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற புதிய ஜனநாயக புரட்சி வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசு தோழர் மாசேதுங் தலைமையில் நிறுவப்பட்டது. அதுவரையில் இருந்த இனச் சிறுபான்மையினருக்கான கல்வி முறை என்பது, மத கருத்துக்களாலும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தாலும் நடத்தப்பட்டது. ஆட்சியில் இருந்த நிலப்பிரப்புத்துவ அரசமைப்புகளும் தங்களது நலன்களுக்கு ஏற்ற வகையிலும், தங்களது சித்தாந்தங்களை உயர்த்தி பிடிக்கக் கூடிய முறைகளிலும் சிறுபான்மை மக்களின் கல்வி கட்டமைப்பை உருவாக்கியது மட்டுமல்ல பயன்படுத்தவும் செய்தார்கள்.

ஒருங்கிணைப்பின் முகவராக இனக்கல்வி

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டவுடன் நாடு முழுவதும் கல்வி முறையை ஒழுங்குபடுத்தியதின் ஒரு பகுதியாக இனச் சிறுபான்மை மக்களின் கல்விக்கும் அதிக முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே  கொடுத்தது. அதற்கான நிறுவன அமைப்புகளை வலுவான முறையில் ஏற்படுத்தியது. இதன் காரணமாக சில நூற்றாண்டுகளாக தொடர்ந்து சீன இனச் சிறுபான்மை மக்களின் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி வந்த மத அடிப்படையிலான கல்வி முறைகள் செல்வாக்கு இழக்க ஆரம்பித்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை இந்த செல்வாக்கு இருந்ததும், அதன் பிறகு படிப்படியாக சீன மக்கள் குடியரசின் முயற்சியினால் கல்வி மதச்சார்பற்ற கல்வியாக மாற்றப்பட்டது என்பதையும் அறிய முடியும்.

இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கான முயற்சியின் மூலமாக,  அது வரையிலான, தேசிய இனங்களுக்கு இடையிலான மோதல்களை தவிர்ப்பதும், வரலாற்று ரீதியாக தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்த இனக் குரோதங்களை குறைப்பதும் கல்வியின் நோக்கமாக மாற்றினார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் பெரும்பான்மை இனமான ஹான் இனத்திற்கும் இனச் சிறுபான்மை மக்களுக்குமான ஒற்றுமை மேலோங்கியது. இந்த ஒற்றுமையின் மிகப்பெரும் முகவராக கல்வி செயல்பட்டது. தற்காலம் வரை கல்வி என்பது இன சிறுபான்மை மக்களின் ஒற்றுமைக்கு அடித்தளமாக இருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை மக்களுக்கான கல்வி கொள்கை உருவாக்கிய பொழுது மேலே குறிப்பிட்ட அம்சங்களுடன் கல்வி என்பது எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதற்கான மிக முக்கியமான கருவியாகும் என்பதையும், கம்யூனிஸ்ட் கட்சி வழிநடத்துகிற புரட்சிகரமான செயல்முறைகளுக்கும் சோசிலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்கும் கல்வி வழி வகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சீன மக்கள் குடியரசு கல்விக் கொள்கையை வடிவமைத்தது.

மதிப்பீடுகளும் முதற்கட்ட முயற்சிகளும்.

இனச் சிறுபான்மை கல்விக்கான தேசிய மாநாடு நடத்துவதற்கு முன்பான சில முயற்சிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. நிலைமைகளை முதற்கட்டமாக ஆய்வு செய்து இனச் சிறுபான்மை கல்விக்கான மூன்று முக்கிய அம்சங்கள் இருப்பதை அறிந்து கொண்டார்கள்.

முதலாவதாக, ஹான் இனம் தவிர மற்ற 55 இன சிறுபான்மையினர்கள் சீனாவில் இருந்தது மட்டுமல்ல, ஒவ்வொரு இனச் சிறுபான்மையினருக்கும் அதன் சொந்த கலாச்சார பண்புகள் வேரூன்றி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்தார்கள். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அதிகமாக வாழுகின்ற இனச் சிறுபான்மையினர் மத்தியில் வேறு பல சிறிய இனக்குழுக்களும் வாழுகின்றனர். குறிப்பாக ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் இன இஸ்லாமிய மதத்தை வழிபடக்கூடிய மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதே நேரத்தில் இந்த மாகாணத்தில் 13-க்கும் மேற்பட்ட சிறிய இனக் குழுக்கள் வேறுபட்ட கலாச்சாரம், மொழிகள், மதங்கள் ஆகியவற்றுடன் நீண்ட காலமாக வாழ்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்தார்கள். குறிப்பாக இங்கு வாழக்கூடிய இனக்குழுக்களில் ஏழு இனக்குழுக்கள் முஸ்லிம் மதத்தை கடைபிடிக்க கூடியவர்கள். இந்த ஏழு இனக் குழுக்களில் ஐந்து இனக் குழுக்கள் துருக்கிய மொழியை பேசுவார்கள். மூன்று இனக் குழுக்கள் சீனாவின் மேன்டரின் மொழியை பேசக்கூடியவர்கள். ஒரு நாடு அல்ல, ஒரு நாட்டில் உள்ள மாகாணமே பன்மொழி பேசக்கூடிய மக்களைக் கொண்ட இனச் சிறுபான்மை மாகாணமாக இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்தனர்.

இரண்டாவது அம்சம் இனச் சிறுபான்மை மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்ற விஷயத்தை கணக்கில் எடுத்தார்கள். இவர்களின் வாழ்வாதாரம் கடுமையான இயற்கை அமைப்புகளாலும், தொலைதூர எல்லைப் பகுதிகளில் இருப்பதினாலும், பலவீனமான வரலாற்று தளங்களையும், கல்வி முறைகளுக்காக எந்த கட்டமைப்பும் இல்லாத சூழ்நிலையில் அதாவது பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டனர்.

மூன்றாவதாக இனச் சிறுபான்மையினர் இதுவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை சிறிதளவுக்கூட பெறக்கூடிய நிலையில் இல்லை. மேலும் தங்களின் பாரம்பரியமான கலாச்சாரத்தை பாதுகாக்க கூடிய நிலைமையிலும் இல்லாமல் இருந்தனர்.

நான்காவது இங்கு இருக்கக்கூடிய பல இன குழுக்கள் அவர்களுக்கு என்று பேச்சு வழக்கு மொழிகளை பயன்படுத்தினாலும் அவற்றுக்கான வரிவடிவங்கள் இல்லை. கல்வி கற்பதற்கான ஆகப்பெரும் தடையாக இது நீடித்தது.

முதலில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசும் பேச்சு வழக்குகளுடன் இருக்கக்கூடிய மொழிகளுக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கும் பணியில் இறங்கினார்கள். அது மட்டுமல்ல ஏற்கனவே வரிவடிவத்தில் போதுமான அளவிற்கு வளர்ச்சி அடையாத எழுத்துக்களையும் சீர்திருத்தி மேம்படுத்தக்கூடிய பணியில் இறங்கினார்கள்.

இக்காலத்தில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பொதுவான பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். வாய்ப்பு கிடைக்கக்கூடிய முறையில் வாசிப்புகளை மேம்படுத்துவதும், எழுத்தறிவை கற்றுக் கொடுப்பதும், கணிதம், எண் கணிதம் போன்றவற்றை கற்பிக்கக் கூடிய முறையிலும் கல்விப் பணியை தொடங்கினார்கள். இனச் சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் பரந்த மேய்ச்சல் நிலப்பகுதிகளில் வாழ்ந்தார்கள். எனவே இவர்கள் வாழக்கூடிய பகுதிகளுக்கு சென்று கல்வி போதிக்கக்கூடிய முறையில் ஆரம்ப கட்ட நடமாடும் பள்ளிகளை உருவாக்கினார்கள். இவற்றுடன் கூடவே குளிர்கால பள்ளிகள் மற்றும் இரவு நேர பள்ளிகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் அமைத்தது. இந்த முயற்சியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்யக்கூடிய முறையிலும் முறையான கல்வியை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி அரசும் கட்சியும் நகர்ந்தது.

முதல் தேசிய மாநாடும் அதன் அமலாக்கமும்.

இனச் சிறுபான்மையினர் கல்வி குறித்த தேசிய மாநாடு 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 9 நாட்கள் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெரிய தேசிய இனங்களைச் சேர்ந்த 126 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதினால் இந்த மாநாடு அதிக முக்கியத்துவத்தை பெற்றது. சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை அமைப்பின் துணைத் தலைவரும், சீன அறிவியல் அகாடமியின் தத்துவம் மற்றும் அறிவியல் துறையின் கல்வியாளராகவும், 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு முதல் கல்வி அமைச்சராகவும், அதன்பிறகு உயர் கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய மா லூசுன் இந்த மாநாட்டில் இனச் சிறுபான்மை மக்களுக்கான கல்வி அமைப்பை பற்றிய விரிவான தீர்மானங்களையும், திட்டங்களையும் முன்மொழிந்தார்.

இவரது அறிக்கையின்படி இனச் சிறுபான்மையினருக்கான கல்வி முறையில் இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனை என்பது, போதுமான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாதது, தேசத்தின் மறு கட்டமைப்பை உருவாக்கக்கூடிய முயற்சியில் தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள் இல்லாததும், அதைவிட மேலாக தொழிலாளி வர்க்க குழந்தைகளின் கல்வியை தடுக்கக்கூடிய முறையில் அமைந்திருந்த தொடக்கப் பள்ளிகள் ஆகியவையே இனச் சிறுபான்மை மக்கள் கல்வி பெறுவதில் உடனடி தடையாக உள்ளது என்றார். அது மட்டுமல்ல புதிய கல்வி முறைகள் இனச் சிறுபான்மையினர் மத்தியில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும், அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவையும் உருவாக்கக்கூடிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் மாநாடு முடிவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து இனச் சிறுபான்மை மக்களுக்கான கல்விப் பணியை பலப்படுத்துவதற்காக நிர்வாக அமைப்புகள் விரிவுபடுத்தப் பட்டது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய முறையில் பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டது. இங்கே மிகவும் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களை உரிய மரியாதையுடனும் அவர்களுக்கு கல்வியின் மீதும், நாட்டின் மீதும் நம்பிக்கை ஏற்படக்கூடிய முறையில் அணுக வேண்டும் என்று வழி காட்டப்பட்டது. அதே நேரத்தில் தேசிய இனங்களுக்கான சிறப்பு அம்சங்களை, மொழி, கலாச்சாரம், அவர்களின் பொருளாதார உற்பத்தி போன்றவற்றை வளர்க்க வேண்டும் என்றும் செயல் திட்டத்தில் கொண்டுவரப்பட்டது.

இந்த மாநாட்டின் முடிவின் மங்கோலியர், கொரியர், உய்கூர், கசாக், திபெத் ஆகிய இனக்குழுக்கள் மத்தியில் உள்ள எழுத்து வடிவம் கல்வி கற்பதற்கு தேவையான அளவில் இருந்தது. இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தப் பகுதிகளில் தொடக்கநிலை பள்ளிகளும், இடைநிலைப் பள்ளிகளும் அனைத்து பாடங்களையும் அவர்களின் தாய் மொழியிலேயே கற்பிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஜின் ஜியாங் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் புரட்சி வெற்றி பெறுவதற்கு முன்பாகவும், முதல் கல்வி மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவும் உள்ளூர் மொழியிலேயே கல்வி கற்பிக்கக் கூடிய நடவடிக்கையில் இறங்கினார்கள். இத்துடன் கூடவே புதிய கல்வி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற முறையில் நெகிழ்வான கொள்கையாக அமலாக்கப்பட்டது. இந்த பன்மைத்துவ மொழிக் கொள்கை இனச் சிறுபான்மை மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது. இக்காலத்தில் உலகிலேயே மிகவும் நெகிழ்வான கொள்கையாகவும் இந்த கல்விக் கொள்கை கருதப்பட்டது.

சீன மக்கள் குடியரசின் இடைக்கால அரசியல் அமைப்பின் 53வது பிரிவில் இனச் சிறுபான்மை கல்வி குறித்த கீழ்க்கண்ட வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டது. இனச் சிறுபான்மை பகுதிகளில் உள்ளூர் சுயாட்சி முறைகளை உருவாக்குவது மட்டுமல்ல சிறுபான்மை இன குழுக்கள் தங்கள் மொழிகளை வளர்த்துக் கொள்ளவும், தங்களின் மரபுகள், பழக்க வழக்கங்களையும், மத நம்பிக்கைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் அல்லது சீர்திருத்திக் கொள்ளவும் முழு சுதந்திரம் இருக்கிறது என்ற அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் இன சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புதிய நிர்வாகத்தையும் நிறுவியது மட்டுமல்ல புதிய சமூகத்தை உருவாக்குவதற்கான இலக்கையும் தீர்மானித்தார்கள்.

இரட்டைப்பள்ளி அமைப்புகள்

ஒரே மாகாணத்தில் பல்வேறு இன குழுக்கள் வாழும் இடங்களில் இரட்டை பள்ளி அமைப்புகளை உருவாக்கினார்கள். முதல் வகை தேசிய இனப் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டது. இவை இனச் சிறுபான்மை மக்களின் தாய் மொழியை பயிற்று மொழியாக கற்பிக்கின்ற பள்ளிகளாகும். இந்தப் பள்ளிக்கூடங்களில் சிறுபான்மை மக்களின் இலக்கியம், அவர்களின் பாரம்பரிய வரலாறு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது. இதற்கான பாட புத்தகங்களை உருவாக்குவதற்கான சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் பாடபுத்தகங்களை வெளியிட்டது. இந்தப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாட புத்தகங்களில் சிறுபான்மையினரின் கதைகள், புராண கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்களின் வீரசெயல்கள் போன்றவற்றை அறிமுகப்படுத் தினார்கள்.

இரண்டாவது வகை ஹான்சியாவோ என்று அழைக்க கூடிய பள்ளியாகும். இந்தப் பள்ளிக்கூடத்தில் சீன மொழி மூலமாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இனச் சிறுபான்மை மக்கள் இந்த மொழியின் மூலமாக பாடங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் இந்தப் பள்ளியிலும் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஒட்டுமொத்த சீன தேசத்தையும் அதன் கல்வி அமைப்புகளிலும் ஒரு பகுதியாக இனச் சிறுபான்மை மாணவர்கள் தங்களை உட்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளாக இது அமைந்தது.

இந்த மாகாணங்களில் வாழுகின்ற பெரும்பான்மை ஹான் சீனர்கள் சிறுபான்மை மக்களின் மொழியை கற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இனச் சிறுபான்மை தேசிய பள்ளிகளிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கும் இணைந்து வாழ்வதற்குமான ஒரு சூழலை இது உருவாக்கியது. சீனப் பள்ளியில் படிக்கும் இனச் சிறுபான்மையினர் வெளியில் சென்று பணியாற்றுவதற்குமான வாய்ப்பு கிடைத்தது. இவை தவிர இனச் சிறுபான்மை வாழக்கூடிய மாகாணங்களில் சிறப்பு கல்வி நிறுவனங்களையும் இன பல்கலைக்கழகங்கள் அல்லது தேசிய இனங்களுக்கான பல்கலைக்கழகங்கள் போன்றவற்றையும் ஆரம்பித்தார்கள்.

சிறுபான்மை மாணவர்களுக்கு உயர் கல்வியில் சேர்வதற்காக முன்னுரிமைக் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. சிறுபான்மை மாணவர்கள் வாங்கி இருக்கக் கூடிய மதிப்பெண்களில் கூடுதல் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு உயர்கல்விக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

இனக் கல்வியின் முதல் பொற்காலம்

1949 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை சீனாவின் இனச் சிறுபான்மை மக்களின் இனக் கல்விக்கான முதல் பொற்காலம் என்று அழைக்கிறார்கள். 1949 ஆம் ஆண்டு 12 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மத்தியில் கல்வி அறிவு பெற்றவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தனர். 1957ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 சதவீதம் முதல் 40 சதவீத வரை அதிகரித்தது.

1950ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மை மாகாணங்களில் 45 தொடக்கப் பள்ளிகளும் எட்டு இடைநிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தது. இது மிக மிக குறைவான எண்ணிக்கை ஆகும். 1965 ஆம் ஆண்டு அதாவது 16 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மூன்று மடங்காகவும் மேல்நிலைப்பள்ளி சேர்க்கைகளில் 8.5 மடங்கும் அதிகரித்தது. கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை நான்கு மடங்கை விட அதிகமாக இருந்தது. இதே காலத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இனச் சிறுபான்மையினர் தேசிய நிறுவனங்களும் நிறுவப்பட்டது.

1947ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெறுவதற்கு இரண்டு ஆண்டு களுக்கு முன்பு உள்  மங்கோலியா (மங்கோலியாஎன்பது தனி நாடு) தன்னாட்சி பகுதி நிறுவப்பட்டது. 1947ஆம் ஆண்டில் முழு பிராந்தியத்திலும் 4 இனச் சிறுபான்மை நடுநிலைப் பள்ளிகளும், 377 தொடக்கப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. மேற்கண்ட 4 நடுநிலைப் பள்ளிகளிலும் 524 மாணவர்களும் 26 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். 377 தொடக்க பள்ளிகளில் 22,600 மாணவர்களும் 912 இன சிறுபான்மை ஆசிரியர்களும் இருந்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வழிகளில் மக்களிடம் சென்று களப்பணியில் ஈடுபட்டு மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். 1956 ஆம் ஆண்டு இன சிறுபான்மை தன்னாட்சி பிரதேசமான உள் மங்கோலியாவில் மட்டும் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1449 என்ற அளவில் உயர்ந்தது. அதாவது 2.8 மடங்கு அதிகரித்தது. நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு 2.5 மடங்கு அதிகரித்தது. மாணவர்களின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.

1966ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மையினர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை உள் மங்கோலியாவில் 2805 என்று அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 1956-ஐ விட 93.6 சதவீதம் அதிகமாகும். மாணவர்களின் எண்ணிக்கையும் 2,23,400 என்ற அளவில் அதிகரித்தது இது மேற்கண்ட ஆண்டுகளுடன் ஒப்பிடுகிற பொழுது 82.2 சதவீதம் அதிகமாகும். இனச் சிறுபான்மையினரின் இடைநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 4.1 மடங்கு உயர்ந்து 72 என்ற அளவில் இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையும் 26,300 என உயர்ந்தது. இனச் சிறுபான்மை தொடக்கப்பள்ளி  ஆசிரியர்களின் எண்ணிக்கை 1651 ஆகவும், இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 12 000 என உயர்ந்தது. 1956 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது 2.2 மடங்கு மற்றும் 1.45 மடங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

சீனப் புரட்சிக்குப் பிறகு, நீண்ட கால வரலாற்றில் இனச் சிறுபான்மை மக்கள் கற்று வந்த கல்வியில் அடிப்படை மாற்றங்கள் உருவானது. மதசார்பற்ற கல்வியும், அறிவியல் பூர்வமான கல்வியும் முன்னிலைப்படுத்தப்பட்டு பிற்போக்குத்தனமான அம்சங்கள் பலவீனப்படுத்தப்பட்டது.

 

அ.பாக்கியம்

 

 

Written By
Bakkiam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *