Tamil Marx

இந்தியா தொழிலாளர் போராட்டங்கள்

தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் காரணமா?-ஹிஷாம்

தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் காரணமா?-ஹிஷாம்
  • PublishedJanuary 30, 2026

சமீபத்தில் (29 ஜன 2026) ஒரு பொது நல வழக்கு விசாரணையில் இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் “தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ளன; இதன் விளைவாக ஆலைகள் மூடப்படுகின்றன” என பேசியுள்ளார்.

இத்தனை ஆண்டுகாலமாக தொழிலாளர்களை சுரண்டி கொழுத்த நிறுவனங்களும் முதலாளிகளும் உருட்டிய அதே முத்துக்களையே தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உருட்டியுள்ளார். ஒரு வழக்கின் எல்லையைத் தாண்டி, தொழிலாளர் இயக்கங்களையே குற்றவாளிகளாக்கும் அவரது கூற்று உண்மையில் ஏற்கத்க்கதே அல்ல. அதற்காக நாம் அப்படியே கடந்து சென்று விடமுடியாது.

தொழில்துறை வரலாறு என்ன சொல்கிறது?

இந்தியாவின் தொழில்துறை வரலாறு ஒன்றை தெளிவாகக் காட்டுகிறது: ஆலை மூடல்களின் பிரதான காரணம் தொழிற்சங்கங்கள் அல்ல. மாறாக, பொருளாதாரக் கொள்கைத் தோல்விகள், அரசு அல்லது நிறுவனத்தின் நிர்வாகத் தவறுகள், சந்தை மாற்றங்கள், சுற்றுச்சூழல் குற்றங்கள் மற்றும் வரி–நிதி சிக்கல்களே முக்கிய காரணங்களாக உள்ளன.

ஏன் நிறுவனங்கள் மூடப்பட்டன? 

சுற்றுச்சூழல் குற்றமும் நீதிமன்ற உத்தரவும்:

தமிழ்நாட்டில் கோவை சிறுமுகையில் இயங்கிய விஸ்கோஸ் ஆலை 2001-ஆம் ஆண்டு. ஆனால் அதை எந்த ஒரு தொழிலாளியோ தொழிற்சங்கமோ மூடவில்லை. தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என உருட்டிய நீதிபதியின் அதே நீதி மன்றம் தான் மூட உத்தரவிட்டது.

ஏன் ?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் பவானி ஆற்றையொட்டி அந்த ஆலை சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. பாலியஸ்டர், பருத்திக்கு அடுத்தபடியாக அதிகளவில் ஆடை தயாரிக்கப் பயன்படுவது ரேயான் நூலிழை. இந்த ஆலையில் யூக்களிப்டஸ் மரங்கள் மூலமாகமரக்கூழ் தயாரித்து அதிலிருந்து Viscose staple fibre எடுக்கப்பட்டு, ரேயான் நூலிழை உற்பத்தி செய்யப்படும். இதன் உற்பத்திக்குக் கார்பன்-டை- சல்பைடு உள்ளிட்ட வேதிப் பொருள்களும் பயன்படுத்தப்பட்டன.

சுற்றுச்சூழல் விதிகளை முறையாக பின்பற்றாததால் கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலந்ததால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுவாசக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டனர்.ஆலையில் பணி புரிந்த தொழிலாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. புற்றுநோய் தாக்கமும் அதிகம் இருந்தது. ஆலையிலிருந்து அதிகளவில் கலந்திருந்த கந்தகம் கலந்திருந்த கழிவுநீரை அந்த ஆலைக்குப் பின்னால் ஓடும் பவானி ஆற்றில் விட்டனர். இதனால், பவானி ஆறும் நாசமானது.

பவானி ஆற்றில் விஷக்கழிவுகளை வெளியேற்றியது, பழமையான மாசுபடுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது, தொடர்ந்து சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டது போன்ற காரணங்களால், 2001-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அது மூடப்பட்டது. இங்கு தொழிற்சங்கங்களை குற்றம் சாட்டுவது சுற்றுச்சூழல் நீதியை நீதிமன்றமே மறுப்பதற்குச் சமம்.

உரிமைப் போராட்டமும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பும்

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் உதிரிபாகம் தயாரிப்பு நிறுவனமான பிரிக்காலிலும் (Pricol) இதே நிலை. இந்த ஆலையில் CITU இல்லை. சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடந்த போராட்டத்துக்குப் பிறகு 300 தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டனர். ஆனால் தொழிற்சாலை தீர்ப்பாயம் அந்த நடவடிக்கையை ரத்து செய்தது. நிறுவனம் மூடப்படவில்லை; தொழிலாளர்களின் உரிமைகளே சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டன.

சந்தைத் தோல்வியின் விளைவு

சென்னையில் இயங்கிய ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் நிறுவனமும் மூடப்பட்டது, இதற்கு காரணம் சந்தைத் தோல்வி தான். அதிக விலை, குறைந்த செயல்திறன், பழமையான தொழில்நுட்பம், வெளிநாட்டு அனுமதி பெறுவதில் சிக்கல்கள் ஆகியவை தான் அந்நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தன. இதை தொழிற்சங்கங்களின் மீது சுமத்துவது நாட்டின் மோசமான அல்லது தவறான பொருளாதார கொள்கையின் உண்மைகளை மறைப்பதாகும்.

இந்திய தொழிலாளர் இயக்கத்தின் அடையாளம்

பின்னி மில் போராட்ட வரலாறு இந்திய தொழிலாளர் இயக்கத்தின் அடையாளம். 1921–24 போராட்டங்களின் விளைவாகவே இந்தியாவின் முதல் தொழிலாளர் சட்டம் உருவானது. அந்த பின்னி மில் நிதி நிர்வாகக் கோளாறுகள் , பழைய இயந்திரங்கள், முதலாளிகளின் பொறுப்பற்ற தன்மை ஆகிவையே இந்நிர்வாகம் வீழ மிக முக்கிய காரணம்.தொழிற்சங்கங்கள் அல்ல.

இந்த இடத்தில் முதாலாளிகளின் தவறுகள், அரசின் முறையற்ற கவனிப்புகள் உள்ளிட்ட உண்மையான தவறுகளை நீதிபதியால் பகிரங்கமாக பேச முடியுமா?

வரி சிக்கலும் உலக சந்தை வீழ்ச்சியும்

சென்னை நோக்கியா ஆலையின் மூடலும் இதற்குச் சிறந்த உதாரணம். 15,000 கோடி ரூபாயைத் தாண்டிய வரி சிக்கல்கள், DTAA சர்ச்சைகள், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள், உலக சந்தை வீழ்ச்சி மற்றும் மைக்ரோசாஃப்ட் உடனான மோதல்கள் ஆகியவையே அந்த நிறுவனம் மூடிவிட்டு ஓடுவதற்கு காரணங்கள்.

அந்த நிறுவனத்தில் பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்து தங்கள் கை உள்ளிட்ட உடல் பாகங்களை இழந்தும், பாதுகாப்பான வேலை சூழல் போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தும் குரல் எழுப்பிய தொழிலாளர்களைக் குற்றம் சாட்டுவது சட்ட விதிகளின் படி எப்படி சரியாகும்?.

ஃபாக்ஸ்கான் – ஃபோர்டு அனுபவங்கள்

ஃபாக்ஸ்கான் (2015) மற்றும் ஃபோர்டு (2019–2021) நிறுவனங்கள் வணிகத் தோல்வி மற்றும் உலகளாவிய மறுசீரமைப்புகளால் வெளியேறின. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இந்த நிறுவனங்களில் எல்லாம் தொழிற்சங்கங்கள் இருந்ததால், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடும் செட்டில்மெண்ட்டையும் அந்த நிறுவனங்களிடம இருந்து பெற முடிந்தது.

இது போன்ற தொழிலாளர் பிரச்சனையில் தொழிற்சங்கங்களின் அழுத்தம் போராட்டம் இன்றி labour court அல்லது அரசு நேரடியாக தலையிட்டு தொழிலாளர்களுக்கு நியாயமான இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த வரலாறு உண்டா?

மாருதி–சுசூகி, குர்காவ் (ஹரியானா) – 2019

மாருதி–சுசூகி, நிறுவனத்தின் உற்பத்தி ஹரியானா குர்காவிலிருந்து மணேசர் மற்றும் குஜராத் நோக்கி மாற்றப்பட்டது. இதற்கு தொழிற்சங்கம் காரணமல்ல; தங்களின் லாபத்திற்காக நிறுவனங்கள் உற்பத்தி–செலவு மறுசீரமைப்பு என்ற பெயரில் வேறு பகுதிக்கு ஓடின.

அரசுத் தரவுகள் என்ன கூறுகின்றன?

அரசுத் தரவுகளே தொழிற்சங்கங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன. தொழிலாளர் பணியகத்தின் (Labour Bureau) அறிக்கைகளின்படி, தொழில்துறை வழக்குகள் மற்றும் தகராறுகள் 2006 முதல் 2014 வரை ஆண்டுக்கு சராசரியாக 354 இருந்தன. ஆனால் 2015 முதல் 2023 வரை இந்த எண்ணிக்கை 76 ஆகக் குறைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் வெறும் 30 தொழில்துறை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தொழிற்சங்கங்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்றால், தொழில்துறை வழக்குகள் இவ்வளவு குறைந்தது எப்படி?. இந்த எப்படி விளக்கப்படும்? நீதிபதி சூர்யா காந்த் விளக்குவாரா?

அரசமைப்புச் சட்ட உரிமையும் ஜனநாயகப் பொறுப்பும் 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் Article 19(1)(c) தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறது. அந்த உரிமையையே தொழில்துறை வீழ்ச்சிக்கான காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதியே சித்தரிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா?

IT & வங்கித் துறை பணிநீக்கங்கள்

இந்த விவாதம் தொழிற்சாலைகளில் மட்டும் முடிவடையக் கூடாது. கடந்த ஆண்டுகளில் IT மற்றும் வங்கித் துறைகளில் லட்சக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாகவோ எந்த போராட்டமுமோ இன்றி தான் வேலை இழந்தார்கள்.

இவர்கள் எங்கே கணக்கில் வருகிறார்கள்? எத்தனை நிறுவனங்கள் உரிய இழப்பீடு வழங்கின? பெரும்பாலும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தப்பட்டன; தொழிலாளர்கள் தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஜனநாயகத்தை மீட்க வேண்டிய தருணம்

வேலைவாய்ப்புகள் குறைந்து, ஊதியங்கள் சுருங்கி, செல்வம் அம்பானி, அதானி போன்ற சில கோடீஸ்வரர்களிடம் மட்டும் குவியும் நிலையில் இந்தியா ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்கிறது. இத்தகைய சூழலில், தொழிற்சங்கங்களையே குற்றம் சாட்டும் உச்ச நீதிமன்றத்தின் கருத்து, நீதித்துறையின் சமூகப் பொறுப்பை பற்றிய கேள்விகளை மேலும் அதிகமாக எழுப்புகிறது.

உச்ச நீதிமன்றம் போன்ற அரசமைப்புச் நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகளின் அடிப்படையிலான பொறுப்புணர்வான பார்வை. இந்நிலையில், இப்போது மக்கள் உண்மைகளை உணர்ந்து, ஒன்றிணைந்து, தங்களுடைய உரிமைகளையும் ஜனநாயகத்தையும் மீட்க வேண்டிய தருணம் இது.

கடந்த ஆண்டு தமிழ் நாட்டில் நடத்த சாம்சங் தொழிலாளர் போராட்டத்தின் போது, ஆளும் தரப்புகளும் கார்ப்பரேட் ஊடகங்களும் “தொழிற்சங்கம் வந்தால் ஆலை மூடப்படும்” என்ற பொய்யான பயத்தை திட்டமிட்டு பரப்பின. ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்க உரிமையை வென்று, நிர்வாகத்துடன் ஊதிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்தார்கள். அதாவது அரசாங்கமே முன்வந்து நிர்வாகத்தை செய்ய வைத்திருக்க வேண்டிய ஊதிய உயர்வு, மேம்பட்ட பணிசூழல், அடிப்படை நலன்கள் தொழிற்சங்க தலைமையிலான போராட்டத்த்தின் மூலமாகவே உறுதி செய்யப்பட்டது. எந்த ஆலையும் மூடப்படவில்லை.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் முன்னுதாரணமாக மாறியதன் விளைவாக, சென்னை சுற்றுவட்டார எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் உருவானது. அபோலோ டயர்ஸ், யமஹா மோட்டார்ஸ், காம்ஸ்டார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் தொழிலாளர்கள் சங்கம் அமைத்து, நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளையும் சம்பள உயர்வையும் மீட்டெடுத்தனர். இது தெளிவாக காட்டுவது ஒன்றுதான். தொழிற்சங்கங்கள் தொழில்துறை ஜனநாயகத்தின் அடிப்படை.

IT மற்றும் நிதித் துறைகளில் “downsizing” என்ற பெயரில் லட்சக்கணக்கான ஊழியர்கள் கட்டாயமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமேசான், TCS, CTS, இன்ஃபோசிஸ் போன்ற பெரிய நிறுவனங்களே இதில் ஈடுபட்டுள்ளன. இது நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு தடையல்லவா? வேலைவாய்ப்புகளை குறைப்பதே வளர்ச்சியா?

உழைப்பைச் சுரண்டி லாபம் ஈட்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி எளிதாகத் தப்பிக்கின்றன. வேலை இழந்து தெருவில் நிற்பவர்கள் சாதாரண மக்கள். இதற்கிடையில், புதிய தொழிலாளர் சட்டங்கள் (New Labour codes ) நூறு ஆண்டுகளாக தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளை சிதைக்கின்றன. இந்நிலையில் நீதித்துறையின் நிலைப்பாடு என்ன? இந்த கேள்விகள் ஆட்சி அதிகாரிகளுக்கானவை மட்டுமல்ல — பொது சமூகமே சிந்தித்து எதிர்வினையாற்ற வேண்டிய கேள்விகள்.

-ஹிஷாம்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *